நன்றி:எழுத்தாளர் முனைவர் பா.சரவணன்.
‘புனைவுலகில் ஜெயமோகன்’ என்ற நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை
மனஅலைகள் மீட்டும் முரசம்
கமலதேவி, எழுத்தாளர்.
(வெளியீடு - எம்.ஜெ. பப்ளிஷிங் ஹவுஸ், விலை – 400, தொடர்புக்கு - 9943428994.)
‘வெண்முரசை வாசிப்பது’ என்பது, அதன் அளவிற்கே மிக நீண்ட கனவு. இதைப் போன்ற ஒரு மாபெரும் படைப்பை, அது எழுதப்படும் காலத்திலேயே அதன் கர்த்தாவுடன் இணைந்து வாசிப்பது நமக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பு.
அதைப் பற்றி எதைச் சொன்னாலும் அது அதன் கர்த்தாவின் மொழியிலேயே அமையும். அந்தப் போக்கிலேயே சென்றால் நம்முடைய திசையைக் கண்டுகொள்ளலாம். எனக்கு, ‘வெண்முரசை வாசிக்கும் அனுபவம்’ என்பது, பச்சைமலை மற்றும் கொல்லிமலையை அனுதினமும் காண்பதை ஒத்த அனுபவம். வெவ்வேறு தொலைவிலிருந்து, வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு பொழுதுகளில் பார்ப்பதற்கு ஒப்பானது.
பச்சைமலைத்தொடரின் ஏதோ ஒரு குன்றில் உதித்து, கொல்லிமலைத் தொடரின் ஏதோ ஒரு குன்றின் பின்னால் மறையும் சூரியனின் ஔியில் இரு மலைத்தொடர்களையும் காண்பதைப் போன்றது. முழுநிலவின் குளிர்வெளிச்சத்தில், மழைநாளில், கோடையில், வசந்தத்தில் என்று பலவாகக் காட்சியளிக்கும் மலைத்தொடர்களைப் போன்றது ‘வெண்முரசு’.
காலமறியாக் காலத்திலிருந்து இன்று வரை அங்கேயே நிற்கும் மலைத்தொடர்கள் போல என்றுமிருக்கும் பாரதக்கதைதான் என்றாலும் வெண்முரசில் அது ஒவ்வொரு நாளும் வெவ்வேறானது.
காலையொளியில் மலைத்தொடர்களுக்கு மேலே மிதக்கும் ஒற்றை மேகத்துண்டு அதன் ஒரு குட்டிச்சிகரத்தை வேறொன்றாக்கிவிடும். வெண்முரசில் விசித்திரவீரியன், விதுரரின் அன்னை சிவை, பானுமதி, அசலை, துச்சளை, பூரிசிரவஸ், போரில் யானை மீதமர்ந்து வரும் பால்ஹீகர் போன்றவர்கள் தங்களின் நிழலால் அம்மலையில் ஏதோ ஒருபகுதியில், நான் இதுவரை கண்டிராத நிழல்காட்சிகளாகப் படர்கிறார்கள்.
சட்டென்று வீட்டின் முன்னிருக்கும் மின்கம்பத்தின் மீது, எதிர்வீட்டு மச்சின் காரைமதில் விளிம்பில், அதற்கு அப்பால் ஏரிக்கரை பெரிய புளியமரத்தில் அமரும் ஒருபறவையின் பின்னால் அந்த மலை மேலும் அழகாகும். சான்றுக்குக் காந்தாரியின் கனிந்த தாய்மை. ஒலியில் பிள்ளைகளை இனம் கண்டுகொண்டு, தொடுதலில் திளைத்து பெருகும் கங்கை. அவள் தொடும் நிலமெல்லாம் அவள் நிலமே.
ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவியங்கள் மனத்தில் ஆழப்பதிந்தவை. மணலில் பதித்த கண்ணனின் காலடித்தடங்களைப் பார்த்தபடியே அதே மணலில் குனிந்து அமர்ந்திருக்கும் பதின்வயது ராதை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்ட வேழம், குருதி வண்ண ஆடைபறக்க நடக்கும் அம்பை, வெள்ளைப்புடவை முகம் மறைக்க அமர்ந்திருக்கும் குந்தி, சிறுவன் அர்ஜூணனின் பின்னால் நின்று வில்லில் அவன் கையைப் பற்றி அம்புபூட்டி நிற்கும் துரோணர், ராதையின் மடியில் அமர்ந்திருக்கும் கண்ணன் என்று நீண்ட வரிசை உண்டு.
என் மனத்திலேயே கிடந்து ஊறிக்கொண்டிருக்கும் ஓவியம் என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்வேன். நாடிழந்து வனம்புகுந்த தர்மருடன் உரையாடிய பின் விடைபெற்றுத் திரும்பி நடக்கும் இளைய யாதவர் பின்புறத்திலிருந்து தர்மரின் பார்வையில் வரையப்பட்டது.
எனக்குள்ளே ‘வெண்முரசு’ காட்சிகளாக விரிந்து கிடப்பதை இதை எழுதும் பொழுது உணர்கிறேன். அந்தக் காட்சிகள் அந்த இடத்தின் உணர்வுகளுடன் இணைந்திருக்கின்றன.
படித்துறையில் துரியோதனனும் பீமனும் ஒருவரையொருவர் கடந்து செல்லும் சித்திரம். இனிமேல் இருவரும் ஒருவனை ஒருவன் அணைத்துக்கொள்ளவே போவதில்லை என்ற உணர்வின் முன்னால் நிற்கும் மங்கலான பிம்பம். மிகத் துல்லியமாக அந்த இடத்தின் வெறுப்பும் தவிப்பும் ஆங்காரமும்கூடத் தெரிகின்ற உயிர்ப்பிம்பம்.
அதேபோல காசி படித்துறையில் மெல்லிய இருளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் கிருஷ்ண - பானுமதி சித்திரம். போர்க்களத்தில் கர்ணன் - துரியோதனர் சந்திப்பு. தன் ராஜ்ஜியக் கனவுகள் மீது பிடிப்பு குறையும் காலத்தில், மழை வருவதற்கு முன் பெரும்புழுக்கத்தில் அறைக்குள் படுத்திருக்குச் சத்யவதி. முதன்முதலாகக் குந்தியை ஓரமாக மரத்தின் பின்னணியில் இருந்து காணும் விதுரர் என்று நீள்கிறது.
எனக்கு ‘வெண்முரசு’ நாவலை வாசித்தது ஓர் ஆன்மிக அனுபவம்தான். பழைய வகை வீடுகளில் ‘நெத்தி முட்டுச் சுவர்’ என்று ஒன்றுண்டு. வாசல்படி நிலைக்காலின் மேற்பகுதி. அது குடிசைகளில் வலுவான நீண்ட மரத்தடிகளால் செய்யப்பட்டதாக இருக்கும். காரைவீடுகளிலும் அது உயரம் குறைவாகத்தான் இருக்கும்.
நான் அதில் தாத்தாக்கள் ஒருமுறைக்கூட இடித்துக்கொண்டு பார்த்ததில்லை. அய்யாக்கள் வசம் மீறி இடித்துக்கொள்ளும் தருணங்கள் உண்டு. இருந்தாலும் அடிவசமாக விழாத ஆழ்ப்பிரஞ்ஞை இருக்கும். ஏதோ ஒரு யோசனையில் அப்படியாகிவிடும். தேய்த்துக்கொண்டு புன்னகையுடன் சாமாளித்துக் கொள்வார்கள். அம்மாக்கள் எப்பொழுதுமே இயல்பாக அரைஅடி குனிந்தே கடப்பார்கள்.
ஆனால், நமக்கு ‘மடார்’ அடிதான். பொறி கலங்கிவிடும். அப்படியான வாழ்க்கைத் தருணத்தில், உடலும் மனமும் ஸ்தம்பித்து நின்ற என் வாழ்வின் பகுதியில் காலையில் முதலில் தோன்றும் எண்ணம், ‘ஏன் பொழுது விடிகிறது?’ என்பதுதான். அந்தக் காலக்கட்டத்தின் ஓர் அசுரபொழுதின் மயக்க வெளிச்சத்தில் மானசாதேவி முன் அமர்ந்து கதைகேட்கத் தொடங்கினேன். மெதுமெதுவாக என் நாட்களின் முதல் பரவசமாகிய ‘வெண்முரசு’ நாவல் ‘நெத்தி முட்டுச் சுவரு’க்கு அப்பால், உள்வாசலில் விரியும் மிகப் பெரிய ஆகாசத்தைக் காட்டியது.
நாவலில் சொற்களாக மட்டுமே மனத்தில் நிற்பவை உண்டு. இப்பொழுது உடனே கேட்கக் கூடியது என்றால், கர்ணனை நோக்கிய, “பெரியீந்தையே… பெரியீந்தையே” என்ற கௌரவ மைந்தர்களின் ஆயிரமாயிரம் அழைப்புகள்.
சிறுவயதில் வயல்பாதையில் தனியாகச் செல்லும்போது எதிரே உயர்ந்து நிற்கும் கொல்லிமலையும் பறவைகளின் அரவமும் தண்ணீரின் சலசலப்பும் தனித்தனியாக மிரட்டும். தெய்வாதீனமாக யாராவது முன்னால் தெரிந்தால் ஓடிச்சென்று இணைந்துகொள்வதைப் போல எதிர்பாராத திருப்பத்தில் ‘வெண்முரசு’ நாவலைக் கண்டுகொண்டேன். கந்தமாமலை அருகில் உடல்வெந்து நிற்கும் யுதிஷ்டிரரும் உடல் மன நிலைகுழைதலுக்குப் பின்னர் தன் வில் விஜயத்தை எடுக்கும் கர்ணனும் மனத்திற்கு அணுக்கமானவர்கள்.
மனத்தில் நீலநிற ஆடையுடன் அணித்தேரில் இருந்து இறங்கி விஜயை நடக்கிறாள். எந்த நாவலில், எந்த அத்தியாயத்தில், என்ன சந்தர்ப்பதில், எதற்காக என்று நினைவில்லை. அழகின் ரூபமாக, தேவியின் வடிவாக மட்டுமாக இருக்கிறாள்.
அணியாபரணங்களுடன் கர்ணன் சிதையில் படுத்திருக்கிறான். இருளில் ஔிரும் நிலவு என. சூரியமைந்தனை மெல்ல மெல்ல மாற்றும் விதியின் தற்செயலின் ஆட்டக்களத்தின், அனைத்துக் கட்டங்களிலும் அவன் தண்ணொளி குறையாது நிற்கிறான். முதன்முதலில் சிறுமியாகக் கேட்ட பாரதக்கதையிலிருந்து ‘வெண்முரசு’ நாவல் வரை கர்ணன் மீதுள்ள ஔி மாறவே இல்லை.
போர் நடந்து கொண்டிருக்கும்போது துச்சளை துரியோதனனைச் சந்திக்க வருகிறாள். தடுக்க இடையில் வரும் துச்சாதனனிடம்,
“நீ அருகில் வந்தால்… கை என் மீது பட்டால் கழுத்தறுத்து இக்கணமே இறப்பேன்”
என்கிறாள். அக்கணம் உடைந்து அழுது தரையில் அமரும் துச்சாதனனைக் கண்டு இரங்காத மனது யாருடையது என்று எனக்கு வியப்பாகவே இருக்கிறது. கர்ணனிடம் போர்க்களத்தின் பாடிவீட்டில் கொஞ்சிப்பேசும் குந்தியின் மீது எழும் ஒவ்வாமையும் அந்த நேரத்தில் புன்னகைக்கும் கர்ணனின் முகமும் எட்டாத உயரத்தில் பறக்கும் ‘வெண்முரசு’ நாவலை நாம் நடக்கும் பாதைக்குக் கொண்டுவந்து விடுகின்றன. ‘வெண்முரசு’ நாவலை வாசிக்கும்போது, சில இடங்களில் அபத்தமாகச் சிரித்திருக்கிறேன். ‘சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்த கதை மகாபாரதம்’ என்ற நாட்டார் மொழி உண்டு. அதுமாதிரி நிறைய இடங்கள் உண்டு என்றாலும் துரோணரின் எரியாஸ்திரத்தை எதிர்கொள்ள இயலாது எரிந்து கொண்டே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வரும் அர்ஜூணன். ‘ஏன்?’ என்று அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்தமலை சிலபொழுதுகளில் மிக அருகிலும் சில பொழுதுகளில் விலகியும் நிற்கிறது. நம் பார்வைக்கு மலைகள் மாயங்கள் காட்டி விளையாடும். ஆனால், எப்போதும் அதே இடத்திலிருக்கும். ‘வெண்முரசு’ நாவலை வாசிக்கும் ஆண்டுகளில் மனத்திற்கு மிகமிக அப்பால் எங்கோ என்றும் மிக அணுக்கமாகவும் இங்குதான் என்றும் இருந்திருக்கிறது.
மிகத் தொடக்கத்தில் சித்ராங்கதன், அம்பை போன்றவர்கள் எங்கோ மிக அப்பால் புராண கதாப்பாத்திரங்களாகவே தெரிவார்கள். ஆனால், கர்ணனோ, கண்ணனோ அப்படியில்லை என்ற மாயம் இருந்து கொண்டிருக்கும். அதே மாயம் வாசிக்கும் நேரத்தில் உடனிருக்கும் கதாப்பாத்திரம் பின்னர் அப்பால் எங்கோ தொலைவில் சென்றுவிடும். எப்பொழுதும் அணுக்கத்திற்கு என்றே சில உண்டு; கர்ணனைப் போல.
யுத்த துவக்கத்தில் யுதிஸ்ட்டிரர் போல போரில் இறப்புகளைக் கண்டு மனம் பதறிக்கொண்டே இருக்கும். எனக்கு வழக்கமாக ஒருநாளிற்கு ஒருமுறையாவது உணவின் ஏதோ கவளத்தையோ, ஒரு மிடறு திரவத்தையோ வயிறு எதிர்க்கும். சிறிய வயதில் ஏற்பட்ட நோயினால் உணவின் மீது உண்டான உளவியல் ஒவ்வாமை அது. அது மாதிரியான முகபாவம் வெண்முரசில் வன்முறைகளை வாசிக்கும் போது சட்டென்று முகத்தில் வந்துவிடும்.
குருஷேத்திரப் போர்க்களக் காட்சிகள் இடம்பெறும் ஒவ்வொரு அத்யாயத்தையும் வாசிக்க வாசிக்கத் தொடக்கத்தில் ஒருவன் பெயர் வருகிறதென்றால், ‘சரி… இன்றைக்கு இவன் கதை முடிந்தது’ என்று தெரிந்துவிடும். பின் நிதானமாக அவனின் தனித்தன்மையைத் தெரிந்து கொள்வதுடன், இணைந்து அவனுடன் போர்க்களத்தில் குதிரையில் சுற்றலாம். அந்த அளவிற்கு இறப்புகளும் வன்முறையும் அன்றாடமாகிய நாட்களை நினைத்து இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது.
இறப்புகளும் மாபெரும் சரிவுகளும் துயரங்களும் அவமானங்களும் ஏக்கங்களும் இழப்புகளும் துரோகங்களும் தோல்விகளும் இருந்தாலும் அதை விஞ்சி நிற்கும் மாபெரும் கனவுகளையும் கொண்டது வெண்முரசு. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான கனவுகள் கொந்தளித்து நுரைக்கும் களம் இது.
மாபெரும் நாவல்கள் முடிவில் உண்டாக்கும் மனவெறுமைக்கு மேல் மீண்டும் புதிதாய் எதுவோ பிறக்கிறது. அது, ‘வாழ்க்கை மீதான விரிந்த பார்வைக்குப் பின்னால் தெரியும் அன்றாடத்தின் ருசி’ என்று நினைக்கிறேன். ‘நம்மைச் சூழ்ந்துள்ளவற்றைப் பற்றிய பிரஞ்ஞை மற்றும் பிரபஞ்சமாக நிற்கும் மாபெரும் தற்செயல் மீது நமக்குள்ள பதட்டம் குறைகிறது’ என்று எனக்குத் தோன்றுகிறது.
விரிந்த இந்திய நிலச்சித்திரம் மற்றும் அதன் அளவிற்கே விரிந்த சிந்தனைகள், பண்பாடு உருவாகி வரும் சூழல், மக்களின் வாழ்க்கை, அரசியல், யுத்தங்கள், தத்துவங்கள், யுகமாற்றம் என்று ‘வெண்முரசு’ நாவல் எண்திசைகளில் இருந்து வீசும் காற்றால் மீட்டப்படுகிறது. இதில் நன்மை அளவிற்கே தீமைக்கும் இடமளித்து வெகு இயல்பாக அதை விசாரிக்கிறது. நன்மைக்குள் உறைந்திருக்கும் தீமையை வேர்வரை தோண்டி எடுக்கிறது. அது, ‘இலக்கியம் என்ற செயலுக்கான நியாயம்’ என்று நினைக்கிறேன்.
அந்தியில் பறவைகள் கூடு திரும்பும்போது தூரத்துப் பார்வைக்கு அவ்வளவு நீண்ட மலைத்தொடரைக் கண்முன்னால் கடந்து சென்று மறையும் தோற்றம் தெரியும். நான் தினமும் லயிக்கும் காட்சி அது. கடந்ததா என்று கேட்டால் கண்களின் சாட்சிப்படி பறந்து கடந்து சென்றதுதான். மனத்திற்குத் தெரியும் சின்னஞ்சிறு பறவையால் அந்த நேர அவகாசத்தில் கடக்கமுடியாத தொலைவு என்று.
வாழ்க்கை இன்னும் ஓரிருமுறை ‘வெண்முரசு’ நாவலை வாசிக்கும் வாய்ப்பைத் தரும் என்று நம்புகிறேன். நம் ஊரில் பழைய வழக்கம் ஒன்றுண்டு. குழந்தை பிறந்தவுடன் முதன்முதலாகத் தந்தை சேனை வைப்பது. தேன் துளியைத் தன் உப்புச்சுவை படிந்த விரல்களுடன் தந்தை நாவில் தடவும் தருணம். பிள்ளைகளுக்கு அதுதான் ‘முதல் முலை’ என்று எனக்குத் தோன்றும். இனிப்பின் அடியில் உறையும் துவர்ப்போ, துவர்ப்பினடியிலிருந்து மேலெழுந்து வரும் இனிப்போ அது. அது நம் உப்புச்சுவையுடன் இணைகிறது. வாழ்வின், பண்பாட்டின், தத்துவத்தின் சுவை. அதுமாதிரியான ‘சேனைத்தேன்’ போன்றது ‘வெண்முரசு’ நாவல்.
இந்தக் கட்டுரைகளில் ‘வெண்முரசு’ நாவலின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் தன் வாசிப்பை தொகுத்து எழுதியிருக்கிறார் சரவணன். எந்த ஒரு படைப்பிற்கும் இது போன்ற மீள்பார்வை அல்லது தொகுத்துப் பார்த்தல் அந்த நூலை நம் நினைவுத்தளத்தில் கையாள்வதற்கு அவசியமாகிறது.
‘வெண்முரசு’ போன்று பரந்து திசையெங்கும் கிளைவிரிக்கும் ஆலமரம் போன்ற படைப்பிற்கு இது மாதிரியான கட்டுரைகள் வாசித்து எழுதியிருக்கும் சரவணன் அவர்களுக்கே அவரின் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ள உதவியிருக்கும். ஒட்டுமொத்தமாக நாவலை அணுகுவதற்கு இது போன்ற கட்டுரைகள் அவசியம் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல, இது வாசித்த படைப்பைப் பற்றி மற்றவருக்கு சொல்வதற்கான சிறந்த வழியும்கூட.
‘வெண்முரசின் ஒவ்வொரு பகுதியையும் வாசித்து, பின்னர் அவற்றைத் தொகுத்து எழுதுவது’ என்பது, எளிதான காரியம் இல்லை. அடுத்தடுத்து மனம் வாசிப்புக்குத் தாவிக் கொண்டிருக்கும்போது அதைத் தள்ளிவைத்துவிட்டு மனத்தைக் கட்டுரைக்கு அளித்து, எழுதியிருக்கிறார் சரவணன்.
பெரிய படைப்புகளைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளும் அதற்குரிய கவனத்தை, உழைப்பை, நேரத்தைக் கோரி நிற்பவை. அதை அவற்றுக்கு முழுமனத்துடன் அளித்திருந்தால் மட்டுமே இத்தனை கட்டுரைகளையும் எழுதியிருக்க முடியும்.
வாசிப்பவர்கள் அனைவரும் புத்தகங்களைக் குறித்து எழுதுவதில்லை. அந்தவகையில், ‘வெண்முரசின் வாசகி’ என்ற நிலையில் இந்த நூலிற்காகச் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்வதில் மகிழ்கிறேன். இந்நூல் புதுவாசகர்களுக்கு ‘வெண்முரசு’ நாவல் பற்றிய நல்ல அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன். வெளியீடு - எம்.ஜெ. பப்ளிஷிங் ஹவுஸ், விலை – 400, தொடர்புக்கு - 9943428994.
குறிப்பு -
‘வெண்முரசு’ உலகின் மிகப் பெரிய நாவல். மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெயமோகன் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். இவரைப் பற்றிய அவதூறான விமர்சனங்கள் தமிழில் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவரின் படைப்புகளைப் பற்றிய கறாரான மதிப்பீடுகள் மலையாளத்தில்தான் எழுதப்பட்டுள்ளன.
ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவல் பற்றி விரிவாகக் கட்டுரைகளை எழுதியவர் ‘எழுத்துலகத்தேனீ’ டாக்டர் ப. சரவணன். இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் வெண்முரசு பற்றித் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புனைவுலகில் ஜெயமோகன் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ‘வெண்முரசு’ ஓவியர் ஷண்முகவேல் ஓவியங்களை வரைந்துள்ளார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ந. பிரியா சபாபதி, கமலதேவி, விமர்சகர்கள் சுபஸ்ரீ, இரம்யா ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
இந்த நூல் டாக்டர். ப. சரவணன் ‘வெண்முரசு’ நாவலுக்கு உருவாக்கிய வரைபடம். ஒட்டுமொத்தமாக ‘வெண்முரசு’ நாவலைத் தொகுத்துக் கொள்ள, அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. ‘கூகிள் எர்த்’ வரைபடம்போல. அதைப் பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கி சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின்னர் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான். – ஜெயமோகன், எழுத்தாளர்.
இந்தப் புத்தகத்தைத் திருச்சி எம்.ஜெ. பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. விலை – 400, தொடர்புக்கு - 9943428994.
- கமலதேவி, எழுத்தாளர்.
Comments
Post a Comment