Skip to main content

மூச்சே நறுமணமாக

2022 மார்ச்மாத சொல்வனம் இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை.

சிவகாமி நேசன் எனும் இனிமை




பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார்.  அவை ‘மூச்சே  நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 


பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல்,ஒலி,கவித்துவம்,மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான்  அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன். 

நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவனை அழைக்கும் அழைப்பே எத்தனை அன்பானது என்று ஒவ்வொரு வசனத்தை வாசிக்கும் போதும்  தோன்றுகிறது. 

‘உன்னை அறியும் நரகமே மோட்சம்

உன்னை அறியாத மோட்சமே நரகம்

நீ விரும்பாத சுகம் துக்கமே

நீ விரும்பும் துக்கமும் பரமசுகம்

சென்னமல்லிகார்ச்சுனனே…

நீ கட்டிச்சிதைக்கும் பந்தனைகளே

விடுதலை என்றிருப்பேன்’

என்ற அக்கமகாதேவியின் வரிகள் என்ன மாதிரியான நிலை? இத்தனை பெரிய அன்பின் சுமையை மனிதர்கள் மீது வைக்க முடியுமா? கங்கையின் விசையை தலையில் வாங்கிய ஒருவனால் தான் இத்தனை பெரிய அன்பிற்கு பாத்திரமாக முடியும். மற்றவை சிதறிப்போகும் என்று தோன்றுகிறது.


அக்கமகாதேவியின் வரிகள் அடிமுடி அறியவொன்னா ஜோதியை மல்லிகை மலராக்கி அதை நறுமணமாக உணர்கிறது. காற்றில் உள்ள ‘நறுமண அரூபமான ஈசன்’ என்ற படிமம் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மகாதேவி தன் அன்றாடத்தில் இருந்து உவமைகளை  எடுத்துக் கொடுத்து நாம் அறியாத ஒன்றை அறிய வைக்க முயற்சிக்கிறார் அல்லது அவருடைய  தன்னிலையை சொற்களில் வைத்துவிட்டு என்னை புரிகிறதா? என்று நம்மிடம் அல்லது மகாதேவரிடம் கேட்பதைப்போல இருக்கிறது. 

அன்பை எடுத்துரைக்கும் சொற்கள் திரும்பத்திரும்ப அன்பை வெவ்வேறு உவமைகளில் சொல்லிப்பார்க்கிறது. எத்தனை உவமைகள்? காணும் அனைத்தும், உணரும் அனைத்தும் இவருக்கு ஈசனாக இருப்பதால் இவ்வாறு எழுத முடிந்திருக்கிறது.

‘நீருக்குள் இறங்கியிருக்கும் வண்ணான்

தாகித்துச் செத்ததைப் போல

தன்னுள் இருக்கும் மகத்துவத்தை

 அறியாதிருக்கின்றனர் மல்லிகார்ச்சுனனே’


‘பட்டுப்புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி

தன் நூல்களால் தன்னைச்சுற்றி மடிவதைப் போல’


போன்ற உவமைகளை உதாரணங்களாகக் கூறலாம்.


ஆண்டாள்,அக்கமகாதேவி என்று சிலருக்கு மனம் சிந்தனை செயல் எல்லாம் இப்படியானதாக மாறியிருக்கிறது.  எத்தனை பெரிய மானிட அன்பும் குறையுள்ளதே.  ஏனெனில் அது வாழ்வியல் என்ற அன்றாடத்தில் நிலைகொள்வது. அதை  ஏற்க முடியாத சிலமனங்கள் பிரபஞ்சத்தை, இந்த இயற்கையை நோக்கி செல்கின்றன. அதை பற்றிக்கொள்ள ஒரு நாமம் போதுமானதாக இருந்திருக்கிறது.


‘ரத்தினத் தளை என்றாலும் தடை அல்லவா

முத்துவலை என்றாலும் பந்தனம் அல்லவா

தங்கக்கத்தியால் தலையை அறுத்தால் சாகாதிருப்பாரா? 

உலகத்து பூஜை பஜனையில் மாட்டிக்கொண்டிருந்தால்

பிறப்பு இறப்பு விடுமா சென்னமல்லிகார்ச்சுனனே’


‘சென்ற பிறவிகள் என்னவும் ஆகட்டும்

இனி கருணை செய் சென்னமல்லிகார்ச்சுனனே’

என்ற வசனங்கள் மூலம் உலகியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் மனநிலையை கூறுகிறார்.

அன்பாக ஆதல் என்பதே துறவின் முழுநிலையா என்று இந்த நூலை வாசித்ததும் தோன்றியது. அப்படி ஆகமுடியுமா? என்ற கேள்விக்கு அக்கமாகாதேவியின் இந்தவரிகள் வரிகள் நம்முடன் உரையாடுகின்றன.


‘நானற்று நீயாகும் வழியை

பிரபுவே எனக்குக் காட்டு’ என்கிறார்.


‘மனமும் மனமும் உரசி அனுபாவம் பிறந்ததால் சுற்றியிருக்கும் உடல் தன்மைகள் எரிந்தன’

‘சென்னமல்லிகார்ச்சுனனுக்குள் இருப்பவளை

என்னவென்று அழைப்பாய் அம்மா?’

 என்று கேட்பதன் மூலம் தன் நிலை கெட்டு, நாமம் அழிவதை கூறுகிறார்.


‘உலகமே கண்ணான சென்னமல்லிகார்ச்சுனனிடம்

மூடி மறக்க என்ன இருக்கிறது சொல்’

என்ற வசனத்தில் ஆடை துறப்பை கூறி  சாதாரண பெண்ணனான நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். மீண்டும் எனக்கு அதே கேள்வி. இந்த வரிகளை எழுதிய மனம் உணர்ந்தது என்ன?


‘என்னை நான் அறியும் முன்பு எங்கிருந்தாய் தேவனே

பொன்னுக்குள் வண்ணம் போல என்னுள் இருந்தாய்’

என்ற வரிகளில்  கண்டுகொள்ளுதலை,அகம் சட்டென எதைநோக்கியோ விழித்துக்கொள்ளுதலைப் பற்றிக் கூறுகிறார். 

ஆலங்கட்டி கரைதலை பார்க்கலாம். உப்பு கரைதலை பார்க்கலாம் முத்து கரைதலை பார்த்தவர் யார்? என்ன அழகான கரையும் உவமைகள். முத்துக் கரைவதை நாம் நீண்ட நாட்களுக்குப் பிறகே அறியமுடியும். இப்படியான உவமைகள் மூலம் மகாதேவருடன் தான் கரைந்து இல்லாமலானதை பற்றிக் கூறுகிறார்.


‘பெயர் மட்டும் போதும் என்ற நிலை

சிவசிவா சிவசிவா

சிவசிவா சிவசிவா

என்றால் மட்டும் போதாதா ஏழு கோடி மந்திரங்கள் எதற்கு?’

என்ற வசனத்தை வாசிக்கும் போது ஒரு திரைப்பாடல் நினைவிற்கு வந்தது.

என் மனம் கவரும் ஓற்றைப் பேர்!  அதற்கு 

தாள் பணிந்தேன்…தாள் பணிந்தேன்

 என்று ஒரு பாடலில் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும் சென்னமல்லிகார்சுனனே… சென்னமல்லிகார்சுனனே… என்று மகாதேவி விளித்து எழுதும் பொழுதும் அந்த வரி மனதில் வந்து கொண்டே இருந்தது.

மானுடர்க்கென்று பேச்சுபடில் வாழ்கிலேன் என்ற கோதை சொல்லின் இன்னொரு வடிவம் அக்கமகாதேவியின் இந்த வரிகள்…

‘சென்னமல்லிகார்ச்சுனனைத் தவிர வேறெவனும்

நமக்கு முறையல்ல பாரண்ணா’ என்று தன்னிலையை உறுதியாக எடுத்துக்கூறுகிறார்.

கனாக்கண்டேன் தோழீ நான்…என்று நம்மிடம் உள்ள வரிகளைப்போல 

‘அக்கா கேள் நானொரு கனாக்கண்டேன்.. கங்கணம் கையில்க் கட்டீ தீராத ஆட்சதையிட்டு..’போன்ற மணம் சார்ந்த  வசனங்களும் உண்டு.

இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் சிவனிற்காக அக்கமகாதேவி என்ற  மல்லிகை செடியில் மலரும் மலர்கள். அவை காத்திருத்தல் என்ற நிலையால் இனிமை கொள்கின்றன.


‘ஐயனே நீ கேட்டால் கேள் கேட்காவிட்டால் விடு என்று தொடங்கும் வசனத்தில்.. 

என் விண்ணப்பத்தைக் கேள் …..

ஏன் செவிகொள்ள மறுக்கிறாய்

சென்னமல்லிகார்ச்சுனனே?’

என்று மானுட இயல்புகளுக்குள் ஈசனை இழுத்துவிட்டு கேள்வி கேட்கிறார்.


‘நிறைகுடம் ததும்பாது பார்…

முழுக்க அறிந்தது மறக்காது பார்

நீ அருளிய சரணுக்கோ பரம சுகம் பார்’

 என்ற வசனத்தில் அக்கமகாதேவி அழிந்து முழுக்க சிவகாமி ஆகிறார். 

‘நான் நீயான பிறகு யாருக்கு சேவை செய்வேன்,  யாரை நினைப்பேன், யாரை ஆராதிப்பேன், யாரை அறிவேன் …நான் நீயாகும் போது உன்ன மறப்பன்’ என்று ஒரு வசனம் வருகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும் போது மகாதேவி ஒன்றாக கலத்தலில் கூட ஈடுபாடில்லாதவராக தனித்து ஈசனை நினைத்திருத்தலை பேறாக நினைக்கிறார். அது தவறிப்போகுமோ என்ற ஏக்கம் தெரிகிறது . எய்துதல் என்று ஏதுமில்லை. அன்பில் நிலைத்திருத்தல் என்ற நிலையேக்கூட எய்துவதற்கான ஒன்றாக நினைக்கிறாரா? என்றும்  தோன்றுகிறது. 

பிறகு வருத்தத்துடனோ,  உவகையுடனோ  ‘நான் நீயான பிறகு உன்னை மறப்பேன்’ என்று சொல்கிறார். அந்த வரிகளை வாசிக்கும் போது அதுவரை இருந்த கொந்தளிப்பும், அலைகழிப்பும், தள்ளிப்பும் இல்லாமலாகிய சாந்தமான அக்கமகாதேவியை உணர்ந்தேன். எங்கோ ஓர் பாழ்மண்பத்தில் வான் பார்த்து அமர்ந்திருக்கும் ஐயனின் தேவியை மனதில் காணமுடிந்தது. அவரின் இடபாகமான தேவி. 


‘என் தந்தை சென்னமல்லிகார்ச்சுனனே

 என்னைக்கொன்றாலும் 

சரணமெனாமல் உயிர் தரிக்க மாட்டேன்’


‘இல்லறம் என்ற பகை,தந்தையே

பிறவி பிறவியாகத் தப்பாமல் துரத்துகிறது…’


‘குழந்தாய்,இங்கே வா என்று

உன் வடிவைக் காட்டு சென்னமல்லிகார்ச்சுனனே’  போன்ற வசனங்களில் தந்தையே என்று அழைக்கிறார். 

வாசிப்பவர்களுக்கு சட்டென தந்தை என்று சில வசனங்களில் கூறுவதைப்பற்றி திடுக்கிடல் ஏற்படும். இந்த வசனங்கள் அன்பின் உச்சநிலையில் எழுதப்பட்டிருக்கலாம்  என்று கூறுவேன்.

 என் சாதாரண அனுபவத்தில் இருந்து இதை  என்னால் உணரமுடிகிறது. எங்களுடைய தாத்தா இறக்கும்முன்  மூன்றுமாதங்கள்  படுக்கையில் இருந்தார். ‘எங்கய்யாவுக்கு பிறகு மனசார உன்னத்தானே அய்யாவா  நினைச்சிருந்தேன்’ என்று அம்மாச்சி அந்த கடைசிநாட்களில் தாத்தாவின் அருகில் அமர்ந்து அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். 

அன்று இருபத்தி இரண்டு வயது பெண்ணான எனக்கு வியப்பாக இருந்தது. அப்போது அம்மாச்சிக்கு எழுபது வயதிருக்கும். எந்த உறவு என்னவாக ஆகும் என்று யாருக்குத் தெரியும். அது மனதை பொருத்ததல்லவா?

பெண்ணிற்கு மீண்டும் மீண்டும் தந்தையே தேவைப்படுகிறார் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அக்கமகாதேவி உணர்தல் ,காத்திருத்தல், அழைத்தல், சங்கமம் என்ற பல பலநிலைகளைத் தாண்டிய பிறகு மீண்டும் அவருக்கு மல்லிகார்ச்சுனன் தன்னை ‘பெற்றவனாக’ ஆகிறார். பெண்ணென தான் ஏற்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று குழந்தையென கள்ளமற்ற மனத்துடனும், உடலுடனும் தந்தைக்கு முன் வாயில் விரல் வைத்து சிரிக்கும் மழலை என மாறும் நிலை அது. 

மகத்துவமான மெய்யறிதல் நிலைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. மானுடரின் சாதாரண அன்பானது அதன் உச்சத்தில் எய்தும் நிலை ஒன்று உண்டென்றால் அது இதுவாக இருக்கலாம். மீண்டும் வளைந்து சுற்றி வட்டமாகி முதல் நிலையை சேர்தல். அக்கமகாதேவியின் தந்தை மல்லிகார்ச்சுனன்  இந்த பிரபஞ்சத்தையே பெற்றவன் என்பதால் இந்த வசனங்கள் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகளுக்கு பிறகும் நிலைபெற்று உள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கொடி தரையில் படரும். ஒவ்வொரு கணுவும் வேராகும். படர்ந்து பெரிய வலைபோல வளரும். வளர வளர வேராகும் ஒவ்வொரு கணுவிலும் மண்ணின் இனிமை கிழங்காக  மாறியிருக்கும். அந்த வலை போலான கொடிகளை களைந்த பிறகு  கிழங்குகளை அகழ்ந்து எடுக்க வேண்டும். அக்கமகாதேவியின் பக்தி அப்படியானது. அதை உணர்வதற்கு நாம் சில படிகள் ஏறியோ இறங்கியோ செல்ல வேண்டும். ஆனால் இவை கவிதைகளாக உணரப்படும் போது அதன் இனிமையை சட்டென நம்மால் சுவைக்க முடிகிறது.

 மாசி மாத மகா சிவராத்திரிக்கான படையல் அமுதான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அறுவடையாகும் நேரம் இது. விவசாயிகள்  மண்ணை அகழ்ந்து இனிமையை குவித்து வைத்திருக்கிறார்கள். இந்தப் புத்தகம் அது போலத்தான் என்று தோன்றுகிறது. 


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...