மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் இந்தக்கட்டுரை மனதை சஞ்சலமாக்குகிறது.
http://vallinam.com.my/navin/?p=5673
அணி நிழற்காடு
உலகம் முழுவதுமே இது போன்ற அழித்தல்கள் நடைபெறுகின்றன. ஒருமுறையேனும் தன்னை சுற்றியுள்ள இயற்கை அழிக்கப்படுவதை பார்த்தவர்களுக்கு இந்த பதட்டம் புரியும். நேசித்த ஒரு மரம் வெட்டப்படுவதை, புயலில் அடியோடு சாய்வதை கண்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். எங்கோ நடப்பதல்ல இது. என்னென்னவோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கண்ட மரங்கள் ஒரு நாளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.
மனிதனால் காட்டிற்குள் இருக்க முடியாமல் தான் வீடுகட்டிக்கொண்டான். நமக்கு காட்டினுள் நிற்க, அங்கே போராடி வாழ முடியவில்லை. அதிலிருந்து பாதுகாப்பு சுவரை உண்டாக்கிக் கொண்டோம். அதனுள் ஔிந்து கொள்வது நமக்கு நிம்மதி. ஆனால் நம் மனம் காட்டை விழைவது. அதனால் மீண்டும் அதை நோக்கி சென்று.. சென்று... திரும்பி வருகிறோம்.
அதையும் வேவ்வேறு காரணங்களை முன் வைத்து அழிப்பது எந்த வகையில் அறம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் இயற்கையின் ஒரு சிறு அங்கம். இயற்கை என்பது நமக்காக, நம் பயன்பாட்டிற்கானது மட்டுமல்ல.
இது போன்ற அலையாத்தி காடுகளை ஏன் அழிக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்திருந்தால் அந்த முயற்சி முளையிலேயே மறைந்திருக்கும். தேவை என்ன என்பதில் தெளிவு இருந்திருக்கலாம்.
வாழ இடமே இல்லாமல் காட்டை அழிக்கிறோமா?
உணவிற்காக விவசாயம் செய்ய நிலமில்லாமல் காட்டை அழிக்கிறோமா?
ஒரு உயிர் சூழல் என்பது அத்தனை எளிதான ஒன்றாக நமக்கு ஆகிவிட்டதா?
ஒரு காட்டை அழிப்பது என்பது காட்டை அழிப்பது மட்டும் தானா?
நாம் சுற்றிப்பார்க்க, பொழுது செலவு செய்வதற்காக ஒரு உயிர்சூழலை அழிக்க வேண்டுமா?
பின்விளைவுகள் பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் இயற்கையை அழிக்கும் முடிவுகளை எடுக்கலாமா?
வள்ளுவர் ஒரு நாட்டின் அரண் என்ன என்று இப்படிக்கூறுகிறார்.
'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்'
பொருள்: மணி போல தெளிந்த நீரும்,வெட்ட வெளியான நிலமும்,மலையும்,அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண்.
இந்த அலையாத்திக்காடுகளை இப்படியே அதன் இயல்பு மாறாமல் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அவசியம் பன்முகம் கொண்டது. நாட்டின் பாதுகாப்பு,காட்டில் உள்ள அலையாத்தி மரங்கள் அந்த இடத்திற்கு தரும் பாதுகாப்பு,அது தரும் உயிர் வளி என்று பலகாரணங்கள்.
ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் பாதையை,சின்னஞ்சிறு மின்மினிகள் ஔிர்ந்து உலவும் அவற்றின் வாழ்விடத்தை 'நாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்' எந்தவித அறமும் இன்றி எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொள்வதற்கு பெயர் என்ன?
அந்த மரங்களும்,மின்மினிகளும்,சிற்றுயிர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழப்பிறந்தவை. அவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதை பற்றிய குற்ற உணர்வோ,அறமோ,மனசான்றோ அல்லது அவற்றின் மீதான சிறிய அளவிலான அன்போ அவற்றை காக்கட்டும்.
Comments
Post a Comment