நினைவு நாளான 16 ம் தேதி எழுதி இன்றுதான் வெளியிட முடிந்தது.
இன்று கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நினைவுநாள். ஏனோ இறப்பிற்கு பின் கவிஞர்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார்கள்.
என் படுக்கையின் கைத்தொடும் இடத்தில் கவிதை புத்தகங்கள் இருக்கின்றன.
விழித்ததும் கவிஞர் தேவதேவனோ,பிரான்சிஸோ,சங்கக்கவிதைகளோ இன்னும் யார் யாருடைய கவிதை வரிகளையோ தான் முதலில் வாசிக்கிறேன். வரிகள் எல்லாம் மறந்து விடுகின்றன. ஆனாலும் ஆழத்தில் எங்கோ சென்று அதன் உணர்வு நிலைகள் மட்டும் என்னை ஆள்கின்றன என்று நினைக்கிறேன். என்னால் ஒரு வரியைக்கூட திருப்பி சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். என்னுடைய பதினாறாவது வயதிலிருந்து கவிதைகளை வாசிக்கிறேன்.
என் தங்கையின் திருமணத்தன்று காலையில் வாசிக்க முடியவில்லை. அனைவரும் அயர்ச்சியில் உறங்கும் இரவில் ,கழிவறையின் முன்பிருந்த சிறு வெளிச்சத்தில் கவிதை வாசித்தேன். எதிர்பாராத விதமாக அன்று பிராசிஸ்ஸின் கவிதை புத்தகம் தான் கையில் அகப்பட்டது.
யாரவன்?
அலகில் காலம்
காலில் பூமி
வாலில் வானம்
தோளில் சிறகு
நாவில் இசை
கண்ணில் ஓளி
சின்னஞ்சிறு கிளையில்
மின்னல் தனிமையில்
பறவைபோல் ஒருவன்
ஏறக்குறைய இறைவன்.
இதோடு இன்னும் சில வாசித்தேன். கவிஞனும் ஏறக்குறைய இறைவன் தான் என்று இன்று தோன்றுகிறது. என்னை பொருத்தவரை கவிதை வாசிப்பு அந்தரங்கமானது. சிறுவயதிலிருந்து வாசிக்கும் போது ஒரு எல்லையில் கவிதையில் நமக்கான பிடி கிடைக்கும்.
ஒரு காட்டுமரம் வளர்வதைப்போல தான் கவிதை வாசிப்பும். மிகத்தொடக்க நிலையில் யாராவது கைக்காட்டலாம். அவ்வளவு தான்.
என் பதினாறு வயதில் நானாகவே கவிஞர் வைரமுத்து புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்தேன். இரண்டு ஆண்டுகள் வைரமுத்துவின் அத்தனை புத்தகங்களையும் வாசித்திருந்தேன். இப்போது வைரமுத்துவிடமிருந்து விலகி வந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்றாலும் கூட அவர் காட்டியது தான் எனக்கு கவிதை வாசிப்பிற்கான ருசி.
அது போல பிரான்ஸிஸை நான் கல்லூரி நூலகத்தில் கண்டு கொண்டேன். செய்தித்தாளில் அவர் எனக்கு பாடலாசிரியாகத்தான் முதலில் அறிமுகமானார்.
பின் அவரை நீண்ட நாட்கள் கழித்துதான் வாசிக்கத்தொடங்கினேன். அவர் கவிதைகளில் வரும் இயேசு எனக்கு மிக முக்கியமானவர். ஒரு கட்டத்தில் அவரின் கவிதைகள் அனைத்துமே சிலுவையில் அறையப்பட்ட துயரத்தை தரவல்லவையாக உணரமுடியும்.
துயரங்கள் அல்லது துயரம் தரக்கூடிய 'தெளிவு' என்று ஒன்று உண்டு. கவிஞன் துயரங்களில் கிடந்து உழன்று அலைகழிபவன். ஆனால் வாசிப்பவனுக்கு ஔியை அருள்பவன்.
பவளப்பழி
அவரைச் சிலுவையில் அறைந்தார்கள் என்று
பொய் சொல்கிறார்கள்
அவர்தான் அவரைச் சிலுவையில் அறைந்து கொண்டார்
அவருக்கு முள்முடி சூட்டினார்கள் என்று
பொய் சொல்கிறார்கள்
முள்முடியை அவர்தான் சூட்டிக் கொண்டார்
அவரை சவுக்கால் விளாசினார்கள் என்று
பொய் சொல்கிறார்கள்
அடுத்தவன் கையால் அவர்தான் தன்னையே அடித்துக்கொண்டார்
அவரது சிவப்புஅங்கியைப் பறித்துக்கொண்டார்கள் என்று
பொய் சொல்கிறார்கள்
அவர்தான் அதைக் கிழித்துப் பங்கிட்டார்
நம்பத் தயங்குகிறவர்கள்
நான் பொய் சொல்கிறேன் என்று கருதினால்
பதில் சொல்லுங்கள்
அவரை அவர்களா உயிர்த்தெழச் செய்தார்கள்?
இந்தக்கவிதை நான் ஐ.சி.யூ விலிருந்து வீட்டிற்கு வந்த நாளில் வாசித்தேன். பெரிசா எதுவும் இல்லை. சும்மா ஒருநாள் தான். உடல் வலிகளுக்காக அங்கே சென்று படுக்க வேண்டியிருந்தது. அப்பல்லோ ஐ.சி.யூ வில் படுத்துக்கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்தவள் நானாகத்தான் இருப்பேன். மருத்துவரைப் [Dr.Jos Jasper] பார்த்து சிரித்தவளும் நானாக இருக்கக்கூடும். வீல்ச்சேரை பார்த்து அலறி அடித்து 'நானே நடந்து போயிக்கறேன்' என்று எழுந்து நடந்து மருத்துவரின் பேரன்பையும்,அழகான பார்வையையும் [அப்படி பார்த்தார்] பெற்றவளும் நானே என்று நினைத்துக்கொள்வதில் எந்தப்பிழையும் இல்லை.
நமக்கு துயரம் என்றால் காதல் தான் என்ற பிழையான புரிதல் உண்டு. வாழ்க்கை எவ்வளவு சிடுக்கானதோ..அத்தனை சிடுக்கான துயரங்கள் உண்டு.
நான் ப்ரான்ஸிஸின் கவிதைகளை காதல் என்ற தளத்திலிருந்து மாற்றி வைக்கிறேன். அதை 'அன்பின் துயரம்' என்று புரிந்து கொள்கிறேன். அந்தத்துயரம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிடமும் உள்ளது. உப்பை போல. அன்பு உப்பாவதால் தான் அது தாகமாகிறது. தாகமே ருசியாகி வாழ்வாகிறது.
கண்ணீரின் சுவை. இரத்தத்தின் சுவை. வாழ்வின் சுவை.
ப்ரான்சிஸ்சின் வரிகளை அத்தகைய துயரை கடந்து ருசியை அடையும் வழியாக நான் கொள்கிறேன்.
கவிஞன் தன் வரிகளின் என்றும் இருக்கிறான். ப்ரான்சிஸை வணங்குகிறேன்.
Comments
Post a Comment