சங்ககாலத்திலிருந்து இன்று வரை பொருட்வயப்பிரிவு ஒரு நிரந்தர வாழ்வியல் சிக்கல். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்தப்பிரிவு அதிகமாகி உள்ளதாக நினைக்கிறேன். இயக்குனர் ராம் இந்தப்பாடலில் அதை அழகாக காட்சிபடுத்தியுள்ளார். காட்சிகள் கவிதைகளாகும் பல தருணங்கள் இந்தப்பாடலில் உள்ளன. என்றைக்குமே எனக்கு சலிக்காத ஒரு பாடல். இந்தப்பாடலில் மற்றும் படத்திலும் ராம் மற்றும் செல்லம்மா இருவரும் தந்தை மகளாகவே மாறியிருப்பார்கள்.
இந்தப்பாடலில் வருகிறமாதிரி சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து அய்யாவுடன் காடு மேடெல்லாம் சுற்றி இருக்கிறேன். கம்பியில் அமர்ந்தால் பின்புறம் வலிக்கும். அதற்காக ஒரு ஆரஞ்சு நிற தேங்காய்ப்பூ துண்டு மடித்து வைப்பார். நாள்முழுதும் சைக்கிளில் கொல்லிமலையடிவாரம்,வயல்பாதைகளில் சுற்றி இருக்கிறோம். இந்த மாதிரி சைக்கிளில் அமர்வது கோழியின் சிறகிற்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதை ஒத்தது. இந்தப்பாடலிற்கு முன் ராம் சில வசனங்களை சொல்வார்.
சைக்கிளில் தந்தையுடன் அதிகம் பயணித்த பிள்ளைகளும்,அந்த அளவு ஆரோக்கியமாக இருந்த தந்தைகளும் பாக்கியவான்கள் என்று எனக்குத்தோன்றும். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் இரண்டு ஊர் தாண்டி பள்ளிக்கு சைக்கிள் மிதிக்க வேண்டும். நான் பெரியபிள்ளையானதும் ஒருமாதம் சைக்கிள் மிதிக்க வேண்டாம் என்று அய்யா கொண்டு வந்து விடுவார். அவரும் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால் காலையில் அவசரமாக டி.வி.எஸ் 50 டியில் கொண்டு வந்து விட்டு விட்டு சாயுங்காலம் சைக்கிளில் வந்து நிதானமாக அழைத்து செல்வார். அந்த ஒரு மாதப்பயணம் இன்னும் மறக்கவில்லை. கதைகள்,வழியில் உள்ள மரங்கள்,அவர் பள்ளிக்கு சைக்கிள் இல்லாமல் நடந்து சென்ற நினைவுகள்,கல்கியின் சிறுகதைகளை கதைகளாக சொல்வது என்று அவரும் நானும் நன்றாக ஒரு புரிதலுக்குள் இருந்த காலகட்டம். அற்புதமான பரஸ்பர ப்ரியம் நிறைந்த அனுபவம் என்று இப்போது தோன்றுகிறது. வீட்டில் சைக்கிளை நிறுத்தும் போது அவருக்கு லேசாக மூச்சுவாங்கும். உடனே அடுத்த பத்தாவது நிமிடம் அவர் ட்யூசனிற்கு கிளம்பிவிடுவார். அப்போது அவருக்கு வயது நாற்பத்து நான்கு.
Comments
Post a Comment