எழுத்தாளர் கா.சிவா அவர்களுக்கு அன்பும் நன்றியும். சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை.
பூமுள் கதைகள்- கமலதேவியின் "குருதியுறவு" நூலை முன்வைத்து
திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் இடையே கொல்லிமலைக்கு அருகே வசித்துவரும் கமலதேவியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "குருதியுறவு". இந்நூலில் முன்னுரை, என்னுரை, ஆசிரியர் குறிப்பு எதுவுமில்லாமல் பதினேழு கதைகள் உள்ளன. பின்னட்டையில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி எழுதியுள்ள குறிப்பிலிருந்துதான் ஆசிரியரைப் பற்றிய சிறிய அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஆசிரியையாக பணியாற்றுபவராக இருக்கக் கூடும் என்று சில கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது.
பதினேழு கதைகளில் "வேலி" என்ற ஒருகதை மட்டும் மிகுபுனைவாகவும், "குன்றத்தின் முழுநிலா" கதை வரலாற்றுக் கதையாகவும், "ராதேயன்" புராணக் கதையாகவும் உள்ளன. மற்ற கதைகளெல்லாம் யதார்த்த வாழ்வை உரைப்பதாக உள்ளன.
இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை அது போன்ற வெம்மையில்லை. பனிமூட்டம் போல மென் தண்மையுடன் தழுவி மயக்குகிறது.
ஊசல், ஓயாஅலை, கோணங்கள் ஆகிய கதைகள் ஆசிரியர் பயிற்சி பெறும் இளையவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை காட்டுகிறது. ஓயாஅலை கதை உயிரை மாய்த்துக் கொள்ளத் தோன்றும் தருணத்தைப் பற்றிப் பேசுகிறது. சிறுமியின் தற்கொலை முயற்சியொன்றை இளவயதினர் எதிர் கொள்ளும்போது அடையும் பதட்டம் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டவர் மறுபடி அநேகமாக முயற்சி செய்யமாட்டார் என்று ஏற்கனவே முயன்று தோற்றவர் கூறுகிறார். தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது என்பதை யாரால் உறுதியாகக் கூறமுடியும். "கோணங்கள்" கதை ஆண் பெண் நட்பின் நாடகங்கள் மற்றும் பாவனைகளை அழகாகக் காட்டுகிறது. உடன் பயில்பவர்கள் நட்பாகவா காதலுடனா அல்லது வேறு எம்மாதிரியான நோக்கத்துடன் பழகுகிறார்கள் என்று புரியாமல் தடுமாறுவது இயல்பாக உள்ளது.
"புலன் விசாரணை" கதை ஐம்புலன்களின் செயல்பாட்டை, ஒன்றையொன்று சார்ந்து செயல்படும் விதத்தை ஆராய்கிறது. மணம் எப்படியெல்லாம் மனதை ஆட்டுவிக்கிறது என்று காட்டுகிறது. "மணம் என்று நினைத்தது கண்களைப் போலவோ, தொடுகையைப் போலவோ, கேட்டலைப் போலவோ அல்ல. அது கணம் தோறும் சூழலுக்கும், நினைவிற்கும், மனத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மாய ஓட்டம் நடத்தும் மாயம்" என்று மனம் மணத்தைப் பற்றி எண்ணுவதை கூறுவது கதையின் மையமாக உள்ளது.
"பூமுள்" கதையில் மனதைத் தைக்கும் மெல்லிய பூமுள்ளைப் போன்ற எளிய சொற்களோ பார்வையோ வாழ்வை எப்படி உரு மாற்றுகிறது என்பதைக் கூறுகிறது. இக்கதையை இத்தொகுப்பின் முக்கியமான கதையென நான் கருதுகிறேன். முதல் கணவனுக்குப் பிறந்த மகளுடன் மறுகணவனுடன் வாழ முற்படும் பெண்ணின் மனவோட்டத்தை நேர்த்தியாக விவரிக்கிறது இக்கதை.
"சுண்டக்காய்" கதை சிறு செடியினால் ஏற்படும் பெரும் சண்டையை விவரிக்கிறது. மிகச் சிறிய விசயம் என்று கடந்துபோகாமல் அதை பெரிதாக்கி மக்கள் படும்பாட்டை கூறும் கதைக்கு தலைப்பு இரண்டு வகையில் மிகப் பொருத்தமாய் உள்ளது.
"சீர்" கதை அண்ணன் மேல் பாசம் கொண்ட தங்கையின் மனவோட்டத்தையும் அதற்காக அவள் செய்யும் செயலை நியாயப்படுத்தி "கண்டுபிடிக்க கடவுளா வரப்போறான். கையெடுத்துக் கும்பிட்னு வேண்டின கடங்காரன் எங்க்கஷ்டத்தப் பாத்துட்டு சும்மா இருக்கானே" என்று கடவுளைப் பழிக்கிறாள். தங்கைகள் அண்ணன்மேல் கொண்டிருக்கும் நேசத்தை சில சொற்களிலேயே காட்டிவிடுகிறார் ஆசிரியர்.
"குன்றத்தின் முழுநிலா" கதை தந்தை இறந்த பிறகான பாரியின் மகள்களின் ஒருநாளைக் காட்டுகிறது. அனைத்து வேந்தர்களாலும் மறுக்கப்படும் மகள்களை கண்டு பரிதவிக்கும் கபிலரின் உணர்வுகளையும், மகள்கள் தந்தையின் நினைவுகளோடு கலங்காமல் உரையாடுவதையும் இயல்பாக எழுதியுள்ளார். முல்லைக்கு தேரைக் கொடுத்ததற்கு பாரி கூறும் காரணம் மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இக்கதையை வாசிக்கும் போது, மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதி ஜெயஸ்ரீயால் தமிழாக்கம் செய்யப்பட்ட "நிலம் பூத்து மலர்ந்த நாள்" நாவலிற்குள் இருப்பதாகவே தோன்றுகிறது.
"ராதேயன்" கதையில் மகாபாரத ராதை, கண்ணனிடமும் கர்ணனிடமும் கொண்டுள்ள உணர்வுகளைக் காட்டுகிறது. இருவருமே ராதையின் மேல் பெரும் பற்றுக் கொண்டவர்கள்தானே. இக்கதை வாசிக்க இனிய அனுபவத்தைத் தருகிறது. சிதைக்கிறதா அல்லது காக்கிறதா என விவாதிக்கப்படும் அரசமரம் சிறப்பான படிமமாக விரிந்து பரவுகிறது.
மொத்தமாக இக்கதைகளை வாசிக்கும் போது வண்ணதாசன் கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மென்மையான பொருள் மயக்கத்தை ஏற்படுத்தும் மொழி கதையின் மீது ஒரு வெண்திரையை போர்த்தியிருக்கிறது. சற்று நிதானித்துப் பார்த்து அறியக் கோருகிறது.
சில கதைகளில் பாத்திரங்களின் பெயர் மட்டுமே கூறப்படுகிறது. யாருக்கு யார் என்ன உறவென யோசித்துக் கண்டறியும்போது கதை முடிந்துவிடுகிறது. முதல் இரண்டு பத்திகளுக்குள் உறவுகளை ஒரு வரியில் கூறிவிட்டால் கதையில் ஒன்றுவதற்கு வாசகனுக்கு எளிதாக இருக்குமெனத் தோன்றுகிறது. மற்றொன்று, வரலாறு, புராண, மீபுனைவு உள்பட எல்லாக் கதைகளும் ஒரே மாதிரியான மொழியிலும் வடிவிலும் உள்ளதால் மொத்தமாக வாசிக்கும்போது லேசாக அயர்ச்சி ஏற்படுகிறது.
கமலதேவியின் கதைக் கருக்கள் மெல்லிய உணர்வுகளை மையமாக கொண்டதாக உள்ளன. இக்கதைகளின் பேசுபொருள், வெளியே குருதி வழியும் வாள்களுடன் பெருங் கலவரங்கள் நடக்கும் போது, உள்ளே, பூவின் முள்ளால் மேனி சிவந்துவிட்டதை பற்றி புகாரளிப்பது போல் தோன்றினாலும், இவையும் முக்கியமானவைதான். வெளியே தெரியும் வழியும் குருதி பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இந்த மெல்லிய அகக் காயங்களைப் பற்றி எழுதுவதற்கு நுண்ணுணர்வும் மென்மனமும் வேண்டும். இதை கமலதேவி சிறப்பாக எழுதுகிறார். இத்தொகுப்பை வாசித்து முடிக்கும்போது மனம் சற்றுநேரம் உள்நோக்கிப் பார்த்தபடி அமைதியாக இருக்கிறது. இன்னும் பலப்பல பூமுள் கதைகளை எழுத, அவருக்கு வாழ்த்துகள்.
கா. சிவா
Comments
Post a Comment