ஏப்ரல் ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை
பதி
கிணறு வெட்டுவதற்கு நீரோட்டம் பார்க்க சென்ற போடி நாயக்கர் தாத்தா பின்மதிய நேரத்தில் அந்த குறுக்கு சந்தில் நுழைந்து தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அந்தசந்தில் இருந்த ஐந்தாறு வீட்டுப் பெண்களில் யார் அவரிடம் பேசுவது என்று தயங்கினார்கள். பணம் இல்லாத கொடுமையிலும் இந்தக்கிழவர் கட்டினவளை வைத்திருந்த இருப்பு இந்த சந்தில் உள்ள ஆண்பிள்ளைகளுக்கு சாவல் விடுவது மாதிரிதான். தினமும் யார் வீட்டிலாவது அவர் பெயர் அடிபடும்.
“கல் ஒட்டர்தான்…மனுசன் பொண்டாட்டிய எப்படி வச்சிருக்காரு. தொண்ணூறு வயசிலயும் காலையில சாணி கரைச்சு வாசல் தெளிக்கிறாரு…தண்ணியெடுத்து வைக்கிறாரு…”என்று தெருப்பெண்கள் தங்கள் வீட்டில் சலித்துக் கொள்வார்கள். இந்த சந்தில் உள்ள வீடுகளில் தனக்கென நிலமில்லாத, சரியான வேலையில்லாத, சொந்த வீடில்லாதவர் தாத்தா மட்டும்தான்.
இந்த பழையகாலத்து ஓட்டுவீட்டிற்கு அவர் வாடகைக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இது வயலில் குடியிருக்கும் செங்காணியப்பனின் வீடு. எலிகளாலும், பெருக்கான்களாலும் வீடு அழிகிறது என்று வாடகைக்கு விட்டிருந்தார். முன்னால் இருக்கு ஓடுவில்லை ஓட்டமும், உள்முற்றமும், ஒரு ஜலதாரியும் இவர்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது. உள்ளிருந்த ஓடுவில்லை வீடு எப்போதும் பூட்டிக்கிடக்கும்.
இவர்கள் வாடகைக்கு வந்த புதிதில் சந்தில் உள்ள யாருக்கும் அத்தனை பிடித்தமாக இல்லை. என்றாலும் செங்காணியப்பனின் மௌனத்தற்கு பின்னிருக்கும் அரக்கனை அறிந்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தார்கள். ஆனால் யாரும் முகம் கொடுத்து பேசாமலிருந்தார்கள். தெலுங்கு கலந்த தமிழும் கல்ஒட்டர் என்ற அடையாளமும் அவர்களை விலக்கி வைத்தது.
தாத்தாவிடம் முதலில் வயசுப்பிள்ளைகள் தான் பேசின. காதுகளில் வெள்ளைக் கடுக்கனும், கால்களில் தேய்ந்து போன வெள்ளித்தண்டைகளும், எப்போதும் வெற்றிலை மெல்லும் வாயும், நல்ல உயரமான தோற்றமும், சிவந்த நிறமும் வெண்ணிற தாடியுமாக தாத்தா வசீகரமானவர். அதை எல்லாம் விட பெண்பிள்ளைகள் வாசல் தெளிக்கும் காலைப்பொழுதில் அவரும் வாசல் தெளிப்பதும்,அந்த அவ்வா எழுந்து செருப்பை மாட்டிக்கொண்டு பொதுக்கழிப்பிடத்திற்கு செல்வதும் இதுவரை அவர்கள் அன்றாடத்தில் காணாத நிகழ்ச்சி. பெண்பிள்ளைகள் அவரிடம் பேசத்தொடங்கியதால் அம்மாக்கள், மாமியார்களாக இருப்பவர்கள் பேசத்தொடங்கினார்கள். அதன் பின் பசங்கள் என்று மெதுவாக அவர்களில் ஒருவராக ஆனார்.
பேத்திகளில் யாருக்கோ எப்போதோ பள்ளியில் கொடுத்த பழைய இலவச சைக்கிள் ஒன்றை தனக்காக வைத்திருந்தார். அதை தினமும் துடைத்து எண்ணெய் போடுவார். ஊருக்குள் எங்கு சென்றாலும் சைக்கிள்தான். புறா நடப்பதைப்போல தத்தி தத்தி ஓட்டுவார். அல்லது தள்ளிக்கொண்டு வருவார். காலையில் ஆற்றில் குளித்துவிட்டு வந்து சட்டை வேட்டியை காயப்போடும் போது வெயில் எழுந்திரிக்கும் நேரமாகியிருக்கும். அவர் வெள்ளையைத் தவிர வேறு எதையும் உடுத்துவதில்லை.
புரட்டாசி மாதம் பிறந்துவிட்டால் தாத்தா வேறு ஆளாகிவிடுவார். சனிக்கிழமையானால் நெற்றியில் நீண்ட ராமம் இட்டுக்கொண்டு விரதம் இருப்பதை பார்த்து அவரை பிடித்துப்போன ஐம்பது வயதிற்கு மேலான அம்மாக்கள் அவரை, “ அப்பா..அப்பா,’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
எத்தனை கஸ்ட்டத்திலும் காசு புரட்டி அவ்வாவின் சர்க்கரை நோய்க்காக துறையூர் மருத்துவரிடம் அழைத்து செல்வார். சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை மடித்து மென்றபடி திண்ணையில் அமர்ந்திருக்கும் அந்த அவ்வாக்கிழவி மிதப்பாகத்தான் இருக்கும்.
“நமக்கெல்லாம் வயவஞ்சி, காசு பணமிருந்து என்னத்துக்கு…கிழவியாட்டம் நல்ல புருஷன கட்டனும்…”என்று கிழவி யாரிடமாவது பொருமலை வாங்கிக்கொண்டு சாவகாசமாக வேடிக்கை பார்த்தபடி இருக்கும்.
தாத்தா நீரோட்டம் பார்க்க,மண்தன்மை சொல்ல,ஊற்று பார்க்க என்று எதாவது சில்லரை வேலைகளுக்கு செல்வார். ரேசன் சாமான்களை கருத்தாக வாங்கி வைத்துவிடுவார். விறகு எங்குக் கிடைத்தாலும் வாங்கி வந்து வாசலில் போட்டு வைப்பார். மெதுவாக சாயங்காலமாக பிளந்து போடுவார். இன்னுமும் விறகுஅடுப்பு மட்டுமே இருக்கும் வீடு அது.
சாயங்காலமானால் டீக்கடைக்கு தூக்கு போகினியுடன் கிளம்பிவிடுவார். பின் வெற்றிலை மென்றபடி இருவருக்கும் திண்ணையில் பேச்சுதான். இடையில் சிரிப்பும். என்ன தான் பேசுவார்கள் என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். பெண்களாக பேசிக்கொள்ளும் போது தாத்தா பழக்கவழக்கங்களில் ராமபிரானின் குணம் என்று அவ்வா சொல்லும்.
தாத்தாவிற்கு அடுத்த தலைமுறையில் ‘கள்’ குடும்பத்திற்குள் நுழைந்தது. அடுத்ததாக சாராயம், இன்று கடைத்தண்ணி என்று மூன்று தலைமுறை பிள்ளைகள், பேரன்களை தாத்தாவிற்கு பிடிக்காமல் போனது. இந்த சந்தில் வீடு கிடைத்ததும் தாத்தா ஆசையாக வந்தார் என்று ஒருநாள் அந்த அவ்வா சொன்னது.
ஆறுமாதத்திற்குள் சிறிது சிறிதாக ஆண்களும், பையன்களும் தாத்தாவிடம் சகஜமானார்கள். இருந்தாலும் தாத்தா அளந்துதான் பேசுவார். கிணறுவெட்டு,ஆழ்குழாய் கிணறு துளையிடுதலுக்கு என்று தாத்தாவை வேலையிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
“சும்மா வா நாய்க்கரே…நீ வந்து தண்ணிவர வரைக்கும் ஆளா அங்க நில்லு…எத்தன தலமுறையா தண்ணி பாத்து நிக்கிற ஆளு நீ…உனக்குக்குன்னு குடுக்கற காச சாமிக்கு வைக்கிறதா நெனச்சு குடுப்போம். நீயும் குடும்பத்த ஓட்டனுமில்ல,” என்று தாத்தாவை அதட்டி அழைத்து சென்றார்கள்.
பயல்கள் தங்கள் வயல்களில் கிடக்கும் மரம்மட்டைகளை கொண்டு வந்து தாத்தாவீட்டுத் திண்ணையில் போடுவார்கள். சில நாட்களில் முரண்டு பிடித்து வழிகொடுக்காத விறகுடனும், வழிபிடிக்காது நழுவும் கத்தியுடனும் போராடும் அவரிடமிருந்து வாங்கி பிளந்து போடுவார்கள்.
இதுவரை யார் வீட்டிற்குள்ளும் அவர்கள் நுழைந்ததில்லை. யாரும் அவர் வீட்டிற்குள்ளும் நுழைந்ததில்லை. எல்லாம் வாசலோடு மட்டும்தான். அந்த சந்தில் மதிஅக்காதான் முதல் ஆளாக சோறாக்கிவிட்டு வயலுக்கு செல்வாள். அக்கா கிளம்பும் வரை தாத்தா வீடு திறக்காமலிருந்தால் சத்தம் வைப்பாள்.
“யப்பா…என்னா இன்னிக்கு தூக்கம் பலமா? மேலுக்கு முடியலையா?” என்று கேட்டு சோற்றை கிண்ணத்தில் போட்டு திண்ணையில் வைத்துவிட்டு செல்வாள்.
எழுபது வயதாகிய பொற்கிழி அம்மாள் தான் நாயக்கரை இங்கு குடிவைக்கக் கூடாது என்று குறியாக இருந்தவள். அவளே மாறிப்போனதுதான் சந்தில் எல்லோருக்கும் ஆச்சரியம்.
“நல்ல சோறு தின்னா இதுகள விட்டுட்டு திங்க முடியல. ஆயிஅப்பன வுட்டுட்டு திங்கறாப்ல மனச அறுக்குது,”என்று அவள் ருசித்து தின்பவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு திண்ணையில் வைத்துவிட்டு தாத்தாவை அழைப்பாள்.
தாத்தாவிற்கு பேத்திகள் அதிகம். வரிசையாக எதாவது ஒரு பேத்தி வந்து சென்றபடி இருப்பாள். அவருடைய அண்ணன் தம்பி பேத்திகளும் இதில் அடக்கம். தாத்தாவுக்கு ஏழெட்டு அண்ணன் தம்பிகள். இன்று ஒருவரும் இல்லை. காளியாம்பட்டியிலிருந்து இந்த ஊருக்கு பிழைப்பிற்காக ஐந்து உடன்பிறந்தாரோடு வந்தாராம். சுற்றி உள்ள கிராமங்களில் அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று தாத்தாவின் வம்சம் இங்கு கல்ஒட்டர் வேலைகளை செய்கிறார்கள். இந்தத் தலைமுறை பசங்கள் வேறு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கல்உடைப்பதற்காக தாய்தகப்பன் வெளியூர் சென்று தங்கும் போது பேத்திகள் இங்கு வந்து விடுவார்கள். தாத்தா பெண்பிள்ளைகளின் சிக்கல்களை நன்றாகத் தெரிந்தவர். கடையில் விசாரித்து வயிற்றுவலி மாத்திரையிலிருந்து நாப்க்கின் வரை வாங்கி வந்துவிடுவார்.
தம்பி பேத்தியின் பேத்தியான அந்த சிறுபெண் பெரியவளாகி இரண்டு மாதங்கள் சென்று தாத்தாவீட்டில் விடப்பட்டிருந்தாள். அந்தப்பிள்ளைக்கு வயிற்றுவலி வந்தால் சந்தில் அத்தனை பேருக்கும் தெரிந்துவிடும். அந்த அளவிற்கு அடம் செய்வாள். அவ்வா ‘நாங்க பாக்காததா…தாங்கிப்பிடிக்க ஆளிருந்தா பிள்ள ஏங்கி ஏங்கி அழுவுமாம்’ என்று கண்டுகொள்ளாது. மற்றப் பெண்கள் ‘என்னன்னாலும் இந்த கூத்தா கட்டுவா’ என்று சிரிப்பார்கள். அவர் மட்டும் சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை என்றே சொல்லிக் கொண்டிருப்பார். சோடா வாங்கிவரவும், தின்பண்டங்கள் வாங்கித் தரவுமாக அன்று முழுதும் கூடவே இருப்பார்.
இந்தமுறை அவரின் மகன்வீட்டு பேத்தியின் மகள் வந்து பத்துநாட்களுக்கு மேலாக தங்கியிருந்தாள். அவளின் முகம் அத்தனைக்கு சுரத்தாக இல்லை. நல்ல அழகுப்பெண். தினமும் தாத்தா நட்சத்திரங்களை பார்த்தபடி வாசல் தரையில்அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவளின் புருஷன் சரியில்லை என்பதால் வந்துவிட்டாள் என்று இரண்டு நாட்களில் சந்து முழுவதும் தெரிந்துவிட்டது. ஒரு மாதம் கழித்து கட்டைப்பையில் துணிகளுடன் அவள் கிளம்பிச் சென்றாள்.
அவள் சென்ற அன்று இரவு பெண்கள் தாத்தாவிடம் பேச்சுக்கொடுத்தார்கள்
எதிர்வீட்டு ஜெயா அத்தை,“எதாவது கஸ்ட்டன்னா எங்கக்கிட்ட சொல்லக்கூடாதா? தாயா பிள்ளையா பழகுறோன்னு சொல்றது சும்மா பேச்சுக்குன்னு நெனச்சியாப்பா,”என்றாள்.
“என்னத்த சொல்றது…இந்தப்பிள்ளைய கட்டிக்குடுத்த எடம் சரியில்ல…ரெண்டு வருஷமா சச்சரவா கெடக்கு. அதான் துணி கடைக்கு வேலக்கு போறேன்னுச்சுன்னு அனுப்பியாச்சு,’
“அவங்க வூட்ல கேட்டா என்ன சொல்றது,”
“ பாண்டுல கையெழுத்து போட்டு கோர்ட்டுக்கு அனுப்பியாச்சு,”
“இத்தன வருஷம் நீங்க ஒன்னா இருக்கீங்க. சின்னப்பிள்ளைகள பிரிச்சிவிடலாமா?”
அவர் ஆவேசமாக, “பொம்பளப்பிள்ளைய கால் செருப்பா நெனக்கிறவனோட எதுக்கு வாழனும்…தாலிய கழட்டி வச்சிருன்னு சொல்லி தான் கடைக்கு அனுப்பியிருக்கேன். சொந்த ஊர்ல ஒருப்பய இருக்கான். நாஞ்சொன்னா அவன் வேணான்னு சொல்லமாட்டான். எம்மவனாலதான் இந்தப்பிள்ள பொழப்பு சீரழிஞ்சு கெடக்கு ,” என்றார்.
யாரும் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியானார்கள்.
மகள் வீட்டிற்கு அவ்வா செல்லும் நாட்களில் வாசலை பார்த்தபடி அமர்ந்திருப்பார். தாத்தாவிடம், “அவ்வா மேல் என்ன அம்புட்டு பாசம் என்று கேட்டால் ,” வெற்றிலை வாயுடன் சிரிப்பார்.
“விவரம் தெரியாத வயசுலயே கல்யாணம் பண்ணிட்டாங்க…சின்னப்பிள்ளைன்னே பாத்து பழகிருச்சு. என்னதுன்னு சொல்லத் தெரியல,” என்பார்.
ஒருவாரமாக தாத்தா இல்லாத நேரமாக மகன் குடித்துவிட்டு வந்து தெலுங்கில் திட்டிக் கொண்டேயிருந்தார். கோபமாக, திமிராக பேசுகிறார் என்று இரண்டாவது நாளே புரிந்துவிட்டது. அவர் வந்தால் சந்தில் அனைவரும் பதட்டமானார்கள்.
ஒருநாள் பொம்மன்மாமா அவர் கழுத்தப் பிடித்து, “உங்கப்பன் இந்தம்மாளை எப்பிடி வச்சிருக்காப்பிடி…பிள்ளையா பெறந்த நீ என்னடா இந்த பேச்சுபேசற…பேசற எழவும் புரியல. தாத்தன் இல்லாட்டி நீ பெத்தப் பிள்ள என்னைக்கோ செத்து போயிருக்கும். இனிமே இந்த அம்மாவ பேசறத பாத்தேன் உம்மென்னிய திருகி போட்ருவேன்…”என்று தெருவில் தள்ளியதிலிருந்து அவருக்கு மட்டும் பயமிருந்தது.
இன்று மதியத்திற்கு மேல் கிழவி அரளி விதையை தின்றிருந்தது. பேரன் பேத்தி மகள் என்று இருபது ஆட்கள் வந்து கசகசவென்று பேசியபடி கிழவியை தூக்கி சென்று விட்டார்கள்.
“குப்பம்மா எங்கியாம் போனுச்சா…”என்று வாசலில் நின்று தாத்தா கேட்டார். யாரும் எதுவும் சொல்லவில்லை. தாத்தா நான்கு முறை அக்கம் பக்கம் கேட்டிருந்தார். மணி அத்தை மெதுவாக, “யப்பா…மதியானம் சோறு தின்னியா,”என்றாள்.
“மதியான சோறு இன்னும் திங்காமையா…ஆச்சும்மா. குப்பம்மா எதாச்சும் சொல்லிட்டு போனுச்சா. எங்க போனாலும் சொல்லாம போவாதே…”
“யப்பா…அம்மா…மவங்கிட்ட சத்தம் போட்டுக்கிட்டு அரளிவிதைய தின்னுருச்சு…”
சட்டென ஆட்கள் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள். தாத்தா நம்பாமல் மணிஅத்தையை உற்றுப் பார்த்தார்.
“ஆமாப்பா…உங்க சாதி சனமெல்லாம் வந்து வண்டியில வச்சு கொண்டு போயிருக்கு…எம்மவன் வண்டியில நீ போறியா…”
தாத்தா திண்ணையில் அமர்ந்தார்.
“யோவ் நாய்க்கரே…நீ வா. நாம போலாம்…”என்று பொம்மன் மாமா வண்டியுடன் வந்தார்.
“ஒன்னும் ஆவாது…நீ எந்திரி…”
தாத்தா மறுத்தபடி தலையாட்டினார்.
“சரி விடு. நானு போய் என்னான்னு பாத்துட்டு வரேன்…நீ வச்சிருந்த இருப்புக்கு கெழவம்மா இப்டி செஞ்சுருக்கப் பிடாது. விடு …இந்த தெருவு கண்ணே உம்மேலதான். திருஷ்ட்டி கழிஞ்சுருச்சுன்னு வச்சுக்கோ. அம்மா வந்துரும்….முதல்ல உம்மவன என்ன சங்கதிடான்னு போடுற போடுல இனிமே இங்க வரக்கூடாது அவன்,”என்று வண்டியை கிளப்பினார்.
தாத்தாவின் தலை தானே ஆடியது. பக்கத்துவீட்டு விஜயாஅக்கா வம்பாக ஒரு டம்ளர் பாலை குடிக்க வத்தாள். இருட்டும் நேரத்தில் திண்ணையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். நாங்கள் யாராவது ஒருவர் வரமாட்டார்களா என்று தெருக்கோடியை பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிழவி உயிருடன் திரும்பவில்லை. காலையில் எழுந்து சென்ற தாத்தாவும் அதன் பின் திரும்பவில்லை. இருபது நாட்களுக்குப் பிறகு யாரோ ஒருவர் வீட்டு சாமான்களை எடுத்து செல்ல வந்தார். தாத்தா காளியாம்பட்டியில் பூர்வீக வீட்டில் இருப்பதாக சொன்னார்.
“ஒருபைசா கடன் இல்லாத மனுசன். நூறு அம்பது கைமாத்து வாங்குனாக்கூட ஒருவாரத்துக்குள்ள தந்துருவாரு,” என்றபடி பொம்மன் மாமா வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
சரிந்து கிடந்த மண்வீட்டின் ஓரத்தில் தாத்தா ஒரு சாக்கை தரையில் விரித்து படுத்திருந்தாராம்.
“நாய்க்கரு எம்மூஞ்சிப் பாத்து பேசல. மனுசன் ஒடம்பு குழஞ்சு போயிட்டாரு. ஊருக்கு வரியான்னு எப்பிடி கேக்றது…கிழவம்மாவே இல்ல. பேரன் ஒருத்தன் பக்கத்துவூட்லயே இருக்கான். சோறு போட்டு காடு சேத்துறேன்னு சொல்றான். நம்ம என்ன சொல்லமுடியும்? வாங்கிட்டு போன பன்னையும் ரொட்டியையும் பக்கத்துல வச்சிட்டு வந்துட்டேன்,”என்றார்.
மீண்டும் அந்த வீடு பூட்டிக்கிடக்கிறது. செங்காணியப்பனும் இதே போலத் தான் ஆனால் இளம் வயதில் மனைவியை இழந்து இங்கு இருக்க முடியாமல் வயலுக்கு கிளம்பினார். மீண்டும் அந்தத் திண்ணைகளில் புழுதி படர்கிறது. தாத்தா கொண்டு வந்து போட்டிருந்த காய்ந்த மரக்கிளை ஒன்று திண்ணையில் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கே இரண்டுநாட்களாக கிச் கிச் சத்தம். அந்தக் கிளையின் கவட்டை பகுதியில் இரண்டு குருவிகள் வைக்கோல் தாள்களை கொண்டுவந்து கூடு வைத்திருந்தன. ஒரு குருவி கிளையில் தத்தி நடந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. இன்னொன்று பறந்து பறந்து திரும்பி வந்து கொண்டிருந்தது.
அதிகாலையில் முடக்கு கிணற்றின் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தவர்கள் அந்தக்கூட்டைப் பார்த்து பெருமூச்சு விட்டார்கள். மதிஅக்கா யாருக்கோ சொல்வதைப்போல குடத்தை இடுப்பில் வைத்தபடி கூட்டை பார்த்து,” ரெண்டுபேருமா கூட்ட கட்டியாச்சுல்ல…குஞ்சு பொரிச்சுட்டு தான் இங்கருந்து போனும்…”என்றாள். கிச் கிச் என்று ஒரு குருவி சத்தமிட்டபடி கிளையில் மாறி மாறி அமர்ந்தது. எங்கிருந்தோ இன்னொன்று பதறி பறந்து வந்தது.
“உஞ்சோடிய நாங்க ஒன்னும் செய்யலப்பா…ஒரு கையகல ஒடம்பு இல்ல. இதுக்கெல்லாம் என்னா வேகம் வருது,”
“இந்த வூட்டு கிழவிக்கு ஒரு வெளக்கு போட்டு நம்ம பந்தக்கடன கழிச்சிறலாம். எந்நேரமும் வயக்காட்டுல, வூட்லன்னு நெனப்பாவே இருக்கு,”என்றபடி மணிஅத்தையும் வந்து நின்றாள்.
“அதெப்படி நாம என்ன ஒறவு முறையா…முப்பது நாள் கழியட்டும். இந்தத்திண்ணையிலேயே வெத்தலபாக்கு வச்சி விளக்கேத்தி வழியனுப்பி விட்றலாம்,”
அந்த மாதிரி மனுசரை இனிமே எங்க பாக்கறது என்றபடி அங்கிருந்து சென்றார்கள்.
திண்ணையில் குருவிகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க வானம் வெளுக்கத் தொடங்கியது
Comments
Post a Comment