2018 ஆகஸ்ட் மாத சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை
தெருவெங்கும் அவளின் நடமாட்டம்
வீட்டைஅடுத்த தென்னைமரத்துத் தெருவில் இப்பொழுதெல்லாம் எட்டுமணிக்கே கதவை சாத்திவிடுகிறார்கள்.இங்கிருந்தே ஆள் நடமாட்டமில்லாதத் தெருவை மாடியிலிருந்து பார்க்கையில், தென்னைமரங்களின் கீற்றுகள் தங்களுக்கு அடியில் தங்கியிருக்கும் இருளைத் தலையாட்டிக் கலைப்பது போல இருந்தது.நித்யா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அனேகமாக மாடிகளில் எவருமில்லை.இந்த வெயில்நாட்களின் துவக்கத்தில் தெருவில் கட்டிலில் படுத்திருக்கும் வயசாளிகளைத்தவிர, மாடிகளில் ஆள்நடமாட்டமே இல்லை.மனித மனதை என்றவென்று சொல்வது.கள்ளமற்று திரிந்த சிறுமிகளின் மனதிலும் பயத்தை ஊன்றி நிறுத்திவிட்டார்கள்.குழந்தைகள் மட்டும் எதுவும் அண்டாத தெய்வங்களாக எப்போதும் போல, அவர்கள் நேரத்திற்கு அழுது சிணுங்கிக் கொண்டிருக்கும் சந்தடிகள் கேட்டன.
குடித்துவிட்டு தெருவில் பெண்களைப் பற்றியே பேசும் குரல்கூட பத்துநாட்களாக கேட்கவில்லை.அவன் குடித்துவிட்டு பேசினானா இல்லை வேண்டுமென்று பேசினானா என்ற ஐயம் தீர்ந்துவிட்டது.
அசையாத கிணற்றுநீரில் விழுந்த கல்லால், நிதானமாக கலையும் நீர் போல அன்று பத்துமணிக்கு மேல் ஊர் அசைந்துகொடுத்துப் பின் பதறியது.மழையில்லா வறல் கோடை.இந்தஊருக்கு கோடை என்பது வாய்க்காலில் நீர்வற்றி ஆற்றில் நீர் குட்டைகளாக இருப்பது வழக்கம்.இந்தக் கோடை ஆற்றுநீரையும் சுண்டவைத்திருந்ததன் உளச்சோர்வு ஊரையே ஒரு சலிப்பாக பீடித்திருந்தது.சிலநரம் ஊரே பெருமூச்சு விடுவது போல ஒருவீசம் காற்று கடந்து போகும்.
ஆட்கள் மந்தமாகக் கிளம்பி ஆடுமாடுகளுக்கு தண்ணீர்காட்டிவிட்டு,வைக்கோல் பிடிங்கிப் போட்டப் பின்னர் வேப்பம்,புங்கை நிழலில் கட்டிவிட்டு, தாங்களும் கொட்டகையில் அயரும் நேரம் அது. அந்த நேரத்தில் காய்ந்த குற்றுகள் நிற்கும் வயல்வெளிகளில் மிதந்து மெல்லிய பொருக்குகள் வெடித்த வாய்க்கால்கள் கடந்து ஊரைஎட்டியது சேதி.
வயலில் இருந்த ஆண்கள் தயங்கி பின்னால்வர,பெண்கள் சேலையை வரிந்தபடி ஓட்டமும் நடையுமாக பெரியசாமிவயலில் இருந்த அந்தவீட்டிற்கு ஓடினர்.
முகப்பில் ஒருஓட்டுவீடு, சற்றுத்தள்ளி இரண்டுதனித்தனி வீடுகளாக களத்தின் கிழக்கு ஓரத்தில் இருந்தன.ஏற்கனவே ஆட்கள் நின்றிருக்கும் ஓசையே இல்லை.நின்றவர்கள் வந்தவர்களில் சின்னப்பிள்ளைகள்,வயசுப்பிள்ளைகளை அதட்டி வீட்டிற்கு விரட்டிவிட்டார்கள்.தயங்கி நின்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
வேம்பு கூட்டத்தை வகுந்துகொண்டு முன்னால் சென்றாள்.விரிந்து கருத்த சுருண்டகூந்தல் நிலைப்படிகளில் விரிந்து வீட்டினுள் கிடக்க, அகன்றுவிரித்த விழிகள் நிலைக்க நிலைப்படிநடுவில் ரேவதியின் தலை, கருஞ்சிவப்பு வழிசலின் மேல் இருந்தது.வேம்புவுக்கு நெஞ்சை குப்பென்று அடைக்க கையை வைத்து அழுத்திக் கொண்டாள்.நீண்ட மல்லிகைச்சரம் அந்தத் தலையில் சிவப்புப்படிந்து குலைந்து கிடந்தது.வெள்ளிக் கிழமை என்று தலைகுளித்திருப்பாள் போல.
வகிட்டில் குங்குமம்,நெற்றிப்பொட்டு,முகத்து மஞ்சள் எதுவும் கலையாமல் இருந்தது.பிள்ளைகள் எங்கே என்று அவள் கண்கள் தேடின.மூன்றாம் வீட்டில் அப்பாயியின் மடியில் மூன்றுமாதப்பிள்ளை கண்மூடி உறங்கியிருக்க,பயல் கையணைப்பில் துவண்டு சாய்ந்திருந்தான்.
தடதடக்கும் நெஞ்ச இறுகப் பற்றியபடி இரண்டாம் வீட்டைப் பார்த்தாள்.பெரியசாமியை படுக்க வைத்திருக்கிறது.பாதங்கள் வெளியேத் தெரிகிறது.அறுத்துப்போட்ட தூக்குக்கயிறு பக்கத்தில் கிடந்தது.காற்றில் வீச்சம் வந்து அங்கிருந்தவர்களின் வயிற்றைப் புரட்டியது.
பெரியவன்,“போலீசுக்கு சொல்லியாச்சு.இப்ப வந்திருவாங்க,”என்று ராஜ்ஹீட்டில் வந்திறங்கிய பெரியப்பாவிடம் சொன்னான்.வாத்தியார் அவனைக் கடந்து சென்றார்.
அவர் பதறும் காலடிகளுடன் அவரின் தம்பியை படுக்கவைத்திருந்த வீட்டின் வாசல்படியில் நின்றார்.படியிலேயே உட்கார்ந்து கொண்டார்.
“கோவக்காரன்னு தானே என் கையிலயே இத்தன வருசம் வச்சிருந்தனே..தனியா இங்க கூட்டிட்டு வந்து மூணுவருஷத்தில என்னத்தடா பொழச்சிட்டீங்க.தூக்குப் போட்டுக்கற ஆளாடா இவன்?”
“என்ன நடந்திருக்கு…என்னத்த பேசறார் பாரு? எல்லாம் அவளால வந்தது,”என்று நடுவுலவன் கத்தினான்.
வாத்தியார் கையை ஊன்றி எழுந்து அந்தவீட்டுவாசலில் நின்று நெஞ்சில் கைகளை வைத்தபடி திரும்பி வந்துவிட்டார்.
“நம்ம வூட்டு வாசப்படியில…நம்மப் பிள்ள…”என்று பேசமுடியாமல் இருமினார்.
கும்பலில் வேகமாக ஒரு பெண்குரலைக் கேட்ட அங்கம்மா, “எம்புருசன் முரடன்தான்.கொலைகாரன் தான்.அதவிட்டுப்புட்டு தப்பா ஒருவார்த்த பேசுனீங்க..மறுபடி ஒருகொலவிழும்,”என்று கத்தினாள்.கூட்டம் அமைதியாகி கிசுகிசுக்கத் தொடங்கியது.
“அங்கம்….கோவப்படாதம்மா.நெலம சரியில்ல சாமி.எதாவது பேசி பழிய இழுத்துவிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.காது கேக்கலன்னு இரு சாமி,”என்றார்.
“கைப்பிள்ள பாலுக்கழுவுது மாமா…நான் என்னப்பண்ணட்டும்.கோவத்துல குடியக் கெடுத்துட்டு போயிட்டான்.என்னயும் தவிக்கவிட்டுடான்.ஆத்தாக்காரி வந்தவழியில இதுகளுக்கும் தாயில்லாத வரமா மாமா?சின்னவன் நேத்து பேசினப்பக்கூட கோவப்படாதப்பா… நான் இன்னும் ஒருமாசத்துல வந்து பாத்துக்கறேன்னான்.அதுக்குள்ள…”என்று கத்தி தன் தொடையில் அறைந்து கொண்டாள்.
“வேணாம் சாமி.ஆத்திரப்படாத….பேசாத,”
அங்கம்மாள் மார்போடு அணைத்திருத்த பிள்ளையை கூட்டத்திலிருந்த ஒருத்தி வாங்கிக்காண்டு சென்றாள்.“வெள்ளிக்கிழம அதுவுமா குளிச்சிட்டு அப்படி இருந்தா.கட்டிவச்சிருந்த பூவ அவக்கிட்ட குடுத்துட்டு மடவாய அடச்சுட்டு வரலான்னு போனேன்.அந்த குடிகெடுத்தவன் வந்துட்டு போற வண்டி சத்தம் கேட்டதும் உங்கதம்பி மோட்டாருக்கிட்ட நிக்குதேன்னு ஓடியாந்தேன்.கன்னுக்குட்டி அவுந்துக்கிட்டு ஓடவும் அதுகேணிக்குள்ள துள்ளிறுமோன்னு தெசமாறிப் போயிட்டேன்,”என்று நெஞ்சில் கைவைத்துத் தேம்பினாள்.
“விதி அப்பிடி இழுத்துக்கிட்டு போன நீ என்ன பண்ணுவ.பத்தடிக்கு ஒருசத்தம் கேக்லப்பா.பின்னாடி சாணியள்ளிப் போட்டுட்டு வந்துபாத்தா பலிக்கொடுத்தப்ல வாசப்படியில,”என்றழுதான் பெரியவன்.
அவனைப் பிடித்து உட்காரவைத்தார்.நடுவுலவன் தண்ணீரைக் கொடுத்தான்.இருமருமகள்களும் பேயடித்த மாதிரி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தார்கள்.
“எழவெடுத்தவள்களா ஏண்டி இப்படி நிக்கறீங்க,”என்ற நடுவுலவனின் குரலால் பதறி நகர்ந்து நின்றார்கள்.
பெரியவன்,“இங்க வாங்க புள்ளைகளா,”என்றான்.
வாத்தியார்,“வாங்க சாமிகளா...பயப்படாதீங்க…நடந்தது நடந்துப்பாச்சு,”என்றதும்,
“மாமா…”என்று அவரை இருபுறமும் கட்டிப்பிடித்துக் கொண்டு எழாதகுரலில் கதறினார்கள்.அவர்களின் பிடியால் ஆடும்உடலில் விழாமல் நின்றார். அந்தப்புறம் இருந்த மூன்றுபையன்களும் ,ஒருபிள்ளையும் பெரியவனிடம் வந்து ஒண்டிக்கொண்டன.
போலீஸ்ஜீப்பின் சத்தம் வயல்பாதையில் தெளிவாகக் கேட்டது.
“தலய ஆட்டுங்க மாமா…அவன்கள இருக்கற கேஸ் எல்லாம் போட்டு உள்ளத் தள்ளீரலாம்,”என்றவனை நாராயணன் கையமர்த்தினார்.ஆடும் தலையோடு கயிற்றுக்கட்டிலின் சட்டத்தைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வெயில் இறங்கிவிட்டதென்றாலும் புழுக்கம் குறையாமலிருந்தது.
“தாண்டிப்போன வயசுல பெத்த ஒத்தப் பொட்டப்பிள்ள....பெத்தவ இல்லாம வளக்கவும் தெரியல,கண்டிக்கவும் முடியலடா.நம்ம பிள்ள மேல தப்பிருக்கையில என்ன பண்ணறது,”
“அதுக்குன்னு இந்தக் கண்றாவியா பெரியப்பா…அவன்கள...ரெண்டு தடியன்களும் அங்கனதான் இருந்திருக்கானுங்க…”
“ஆத்தரப்படாதய்யா..மாப்ள நல்ல மனுசன்.எங்கன கடந்து அல்லாடி ரயிலபிடிச்சு வராறோ,”
“பிள்ளய காவு கொடுத்துட்டு…வெட்டிநாயம் பேசற நீ.நம்ம கும்பல்ன்னா பயம் விட்டுபாயிரும் அந்தப்பயல்களுக்கு.வூட்டபாக்க முடியல நாட்டக்காக்க போயிட்டான்,”
“அவர ஒன்னும் பேசாதய்யா..”
தயங்கிவந்த சாந்தி, “மாமா…இங்கனயே இருந்தா என்ன அர்த்தம்.வாங்க போலாம்.எல்லாம் முடிஞ்சு ஆம்புலன்ஸில கொண்டாறாங்களாம்.சுடுகாட்டு முக்கிட்டியில ஒருக்கா மூஞ்சப் பாத்துட்டு வந்திரலாம்,”என்றாள்.
“நான் வரல,”என்றவரைப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் அனைவரும் தெருவிலிறங்கி நடந்தார்கள்.
நாராயணன் சுவரில் சாய்ந்து கண்களைமூடிக்கொண்டார்.அன்றும் இதே இடத்தில் தான் பேசிக்காண்டிருந்த ,இதே பிரச்சனை அலங்கோலமாகத் தான் முடியும் என்று நினைத்தது நடந்ததை எண்ணி, “அப்படா…அப்பாடா…”என்று வாய்விட்டு அரற்றினார்.
நாராயணன்,“எனக்கு சோறாக்கிப்போட்டுட்டு என்கூட இரும்மா,”என்றார்.
ரேவதி,“அதுக்கு எதுக்கு கட்டிக்கொடுத்தீங்க..”என்றாள்.
மாமா,“திருட்டு நாயே…அப்பா சொல்றாரு.உள்ள உன்ன கட்டினவன் ஒக்காந்திருக்கான்.எகத்தாளமா…”என்றார்.
“எனக்கு பிடிச்சவனிட்ட காசில்லன்னு அப்பாவுக்குப் பிடிக்கல.எங்கப்பா காசு அவருக்கு பிடிச்சருக்கு.நம்மளவிட பத்துவருசம் சின்னப்பிள்ளன்னு படிச்சவருக்கு அறிவு வேணாம்”
“அவருக்கு என்ன கழுத.இப்பதான் முப்பத்தஞ்சி வயசு.எத்தன பிள்ளைகளுக்கு பிடிச்ச ராசா…”
“அப்ப அப்படி பாத்து கட்டியிருக்கனும்.எனக்கும் மனசு…மத்த மண்ணாங்கட்டியெல்லாம் இருக்குல்ல,”
அப்பா முதன்முறையாக அவளை அடித்தார். “தகப்பன் முன்னாடி,தாய்மாமன் முன்னாடி இப்படி பேசறபிள்ளய வளத்திருக்கனே,”என்றழுதார்.
“உங்க ரெண்டு பேர விட்டுட்டு வேற யாருக்கிட்ட சொல்றது,”என்று கத்தினாள்.
உள்ளிருந்து வெளிய வந்த ஆனந்தன், “விவாகரத்து வாங்கிக்கலாம்.மூத்தப்பிள்ளய எங்கிட்ட தரனும்”
“முடியாது..பிள்ளயத்தர முடியாது”
“இல்ல எனக்கு வேணும்.எங்கப்பா கோவத்தில இருக்காரு.அவரப்பத்தி சரியா உனக்குத் தெரியாது.ஜாக்கிரத…அடுத்த லீவுக்கு வரும்போது நம்ம கணக்க முடிக்கலாம்.அதுவரைக்கு இங்க இரு….”என்றபடி ஆனந்தன் கிளம்பினான்.
“என்ன சொல்லியும் கேக்காம இப்படியா போகனும்.எப்படி போய் அப்பன்னு அந்த எடத்துல நிப்பேன். பயமறியாத பிள்ள பொழக்காதுன்னு அன்னிக்கே சொன்னேன்,” என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தார்.
“சத்தமில்லாம சங்க அறுத்துட்டானே பாவி.தன்சங்கையும் சேத்து.கட்டினவன் பொறுத்திருக்க உனக்கென்னடா அத்தன ஆணவம்,”என்று வீட்டிற்குள் கத்தினார்.
தளர்ந்து அமர்ந்தார்.மனதில் அவளின் சிரிப்பும்,துடுக்கும்,மென்பட்டு உடலும் அலையலையாக எழுந்தது.நடுங்கும் கைகளைத் தூக்கிப் பார்த்தார்.தலையை சுற்றிக் கொண்டு வரவும் படுத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து மெல்லிய குளிர் போல ஊரில் இனம் தெரியாத மெல்லிய பதட்டம் ஒருவாரத்திற்கு இருந்தது.ஊர் மெல்ல நிதானிக்க, ஊருக்குள் அவர்கள் தெருவில் குறிகேட்டவும்,இரவில் குடுகுடுப்பைக்காரன் பேச்சைக் கேட்டு காலையில் அவன் வரவுக்காக காத்திருக்கவும்,உடுக்கையடித்து சாமிபார்க்கவுமாக பதட்டம் சலங்கைக்கட்டி ஆடிக்கொண்டிருந்தது.உருமியின் தேய்ந்த பக்கத்திலிருந்து எழும் உறுமல் சத்தம் பகல்பொழுதுகளின் நிம்மதியை குழைத்தது.
“வெள்ளிகிழமை அதுவுமா பிள்ளபெத்த பச்சஉடம்புகாரி தலயை நிலைப்படியில வச்சீங்கள்ளடா…என்ன செய்றேன்னு பாரு.பச்சபிள்ள பாலுக்கும், பறிதவிப்புக்கும் எங்கடா போவீங்க ,”என்று சாமிபார்த்த அன்று வேம்பு நின்றாடி, குதித்து, இறங்கி தெருவில் அதகளம் செய்தாள்.தெருப்பயல்கள் வீட்டைவிட்டு வரவில்லை.பொம்பளையாளுகள்தான் வாசலில் நின்று கண்களை கசக்கினார்கள்.
மாடியில் மெல்லியகாற்றுவரவும் நித்யா நினைவுகலைந்தாள்.நிலவொளியில் தென்னங்கீற்றுகளின் பின்னிருந்து உருண்டவிழிகள்,கருத்த அடர்ந்த சுருண்ட கூந்தலுடன்,ஔிரும் உப்பியகன்னங்களுடன் எழுந்துவந்த ரேவதியின் முகம் “அக்கா…”என்று புன்னகையால் விரிந்தது.
அவள்,“என்னப்பா ,”என்று சொல்லெடுக்கையில், “அங்க என்ன பண்ற நித்யா? ஊரே வெடவெடத்துக் கெடக்கு..தனியா நிக்காத. இங்க வான்னா…சிலையாட்டமா..வா இங்க..”என்ற அம்மாவின் குரலால் கீழிறங்கினாள்.திரும்பினாள் வெறும் இருள்.
“அம்மா….அங்க..”
“வேம்பு தூக்குப் போட்டுகிட்டாளாம்..இப்ப தான்…” என்று அம்மா இறங்கினாள்.நித்யா வியர்த்த உடலுடன் அம்மா பின்னால் இறங்கினாள். அவளுக்கு,“அக்கா,” என்ற குரல் மீண்டும் வருவதற்குள் இறங்கிவிட வேண்டும் தோன்றியது.
வெளிச்சத்திற்கு வந்து தண்ணீர் குடித்து அமர்ந்ததும் வேம்புவுக்கு சைக்கலாஜிக்கலா என்ன ? என்று நித்யா மனதில் தோன்றியது.அதை சொன்னதும் தம்பி, “ என்ன பெரிசா…பயம் தான்,” என்றான்.
“என்ன பயம்?”
“சைக்காலஜி பேச தெரியுதுல்ல…கொஞ்சம் சோசியாலஜியையும் பாரு,”என்றபடி வெளியே சென்றான்.தெருவில் ஆட்கள் அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அடுத்தசந்தில் கார் சத்தம் கேட்டது.எட்டிப்பார்த்த அம்மா, “பத்து நாள்ல்ல கல்யாணம் பண்ணீட்டான்.அங்க பொண்டாட்டிய பறிகொடுத்தவன் பிள்ளைகள வச்சிக்கிட்டு தவிக்கறான்,”என்றபடி ஒருக்கதவை சாத்தினாள்.
“யாரும்மா?”
“உனக்கென்ன பேசாம இங்கயே இரு.மாடிக்குப் போகாத,”என்றபடி இன்னொரு கதவையும் சாத்திவிட்டு வாசலுக்கு சென்றாள்.அந்த நேரத்தில் மின்சாரம் நின்றது.நித்யா தரையில் படுத்து மேலே பார்த்தாள்.நான்கு சுவருக்குள் நடப்பது வீதியில் விரியும் நேரத்தில் பால்நிலாவின் வெளிச்சம் மாடித்தளத்தின் தானியவழி வழியே வட்டமாக வீட்டினுள் விழுந்தது.
உள்ளே வந்த அம்மா, “கரண்ட் பத்தலேன்னா டக்குன்னு வீட்டுக்கரண்ட்ட நிறுத்தி வைக்கறதே பொழப்பா போச்சு,”என்றபடி சார்ஜ்லேம்ப்பை வைத்தாள்.
தெருவிளக்குகள் முழுநிலவு ஔியோடு இணைந்து வீட்டின் இருளுக்கு எதிராக ஜெகஜோதியாய் ஔிர்ந்தன.
Comments
Post a Comment