Skip to main content

அகமும் புறமும் : 20

   2023  மே 1   வாசகசாலை இணையஇதழில் வெளியான கட்டுரை: அகமும் புறமும் நிறைவு

  காதலெனும் ஔி

கவிதை:1

மாவென மடலும் ஊர்ப பூவெனக்

குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங்காழ் கொளினே

குறுந்தொகை : 14

பாடியவர் : பேரெயின் முறுவலார்

திணை : குறிஞ்சி

தலைவன் கூற்று.

நற்றிணை, குறுந்தொகை,கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன.

மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம். ஒரு தலைக்காதல் பொருந்தாக்காம வகையை சேர்ந்தது. 


தலைவி தன் காதலை ஏற்காத நிலையிலோ அல்லது தலைவியின் இல்லத்தார் தன் காதலை ஏற்காத போதோ தலைவன் மடலேறுகிறான். என்றாலும் உடன்போக்கு என்ற வழக்கம் உள்ளதால் குடும்பத்தாரின் ஏற்புக்காக தலைவன் மடலேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்கிறேன். 

தலைவன் பனைமரத்தின் கருக்கு ஓலையால் செய்யப்பட்ட குதிரையில் ஊர் மன்றிற்கு வருகிறான். சிறுவர்கள் அந்தக்குதிரையை இழுத்து வருவது மடலேறுதலின் வழக்கம்.  தலைவன் தான் விரும்பும் தலைவி யார் என்று ஊருக்கு அறிவிக்கிறான். அவளை பழித்துக்கூறுகிறான். தலைவன் தான் விரும்பும் பெண்ணை எவ்வகையிலாவது அடைவதற்காகவே மடலேறுகிறான். இது இழிவிற்கு உரியது என்ற குறிப்பு சங்கப் பாடல்களிலேயே உள்ளது.

கவிதை: 2


காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பரிவுதலை வரினே 

குறுந்தொகை :32

தலைவன் கூற்று.

தலைவனின் மனநிலையை அள்ளூர் நன்முல்லையார் இந்தப்பாடலில் கூறுகிறார். கையறு மாலையும் என்ற சொல் தலைவனின் தவிப்பை, எந்தக்காரணத்தாலோ கைக்கூடாத காதலின் துயரத்தை உணரச்செய்கிறது. காலையும் பகலும் கையறு மாலையும் நள்ளிரவும் விடியலும் மட்டுமல்ல எப்பொழுதும் காதலுக்கான பொழுதே என்கிறான்.இந்த வரிகளை வாசிக்கும் போது எவ்வளவு ஆழமான மனஅழுத்தம் [டிப்ரஷன்] என்று தோன்றியது. இது போன்ற மனநிலையில் தன்னை மாய்த்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது இயல்பு தான் இல்லையா? தலைவி அல்லது குடும்பத்தார்  தலைவன் மடலேறியும் காதலை ஏற்கவில்லை என்றால் அடுத்ததாக வரைபாய்தலுக்கு செல்கிறான். உயரமான இடத்திலிருந்து குதித்து தற்காலை செய்து கொள்ளுதல். வரை என்றால் மலை. மலையிலிருந்து கீழே விழுதல் அல்லது வரையாடு ஏறக்கூடிய மலையுச்சிக்கு சென்று கீழே பாய்ந்து உயிரை விடுதல் என்றும் பொருள் கொள்ளலாம். 

இதில் உள்ள சுயவன்முறை நம்மை தொந்தரவிற்கு உள்ளாக்குவது. பனை மரக்கருக்கில் செய்த குதிரை மீது அமய்ந்து வருவதே உடலை புண்ணாக்கும் செயல்.

இந்த மனநிலை இன்னும் மாறவில்லை. எழுதும் இந்த நிமிஷத்தில் கூட எங்கோ ஒருவன் இரத்தத்தில் மடல் எழுதி கொண்டிருக்கலாம்.  காதல் தற்கொலைகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.


எங்கள் பக்கத்துவீட்டு செல்வகுமாருக்கு  உடற்பயிற்சிகள் மீது அபார ப்ரியம். நான் காலைசூரியனை காண்பதற்காகவோ,படிப்பதற்காகவோ,தேநீருடனோ மாடிக்கு செல்லும் போது அவர்களுடைய சிறிய மச்சில் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பான்.

“அப்படியே கொஞ்ச நேரம் நடக்கனுக்கா..இவ்வளவு சீக்கரம் எழுந்திருச்சாலும் ஒடம்ப மெயின்டெயின் பண்ண மாட்டிக்கிற,” என்று கைமுஷ்ட்டியை மடக்கி காண்பிப்பான். அவன் என்னை சரியான சோம்பேறி என்று நினைத்திருக்கக்கூடும். அவன் பேச்சில் அடிக்கடி அந்த கேலி வெளிப்படும். அவன் நடக்கும் குழந்தையாக இருக்கும்போது நான் ஏழாம்வகுப்பு  படித்தேன். அப்போதே எங்களால் அவனை தூக்கி இடுப்பில் வைக்கமுடியாது.  நல்ல எடையுள்ளவன். வளர வளர அந்த எடையை உடற்பயிற்சியால் வலுவாக மாற்றியிருந்தான்.

உடல் வலுவிற்குரிய முரட்டுத்தனம், அசட்டு தைரியம் அவனிடம் உண்டு. ஒரு முறை அவன் அம்மா திட்டியதற்காக மாடியில் இருந்து குதித்துவிட்டான். கீழே மணல் கொட்டப் பட்டிருந்ததால் உயிர்தப்பினான். 

பெரும்பாலானவர்களைப் போல அவனும் கல்லூரி வயதில் ஒரு பெண்ணை  காதலித்தான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தாள். ஊரில் வலுவான சொந்தங்களும், பணமும் படைத்த குடும்பம் அது. அந்தப்பெண்ணை பற்றி நண்பர்களிடம் இவன் பேசியது அவளின் அண்ணனின் காதுக்கு எட்டியதும் அவன் இவனை கடைவீதியில் அடித்தான். அந்தப் பெண் வீட்டில் என்ன சொன்னாள்,இவனிடம் அவளுடைய அண்ணன் என்ன சொன்னான் என்பதெல்லாம் புரளிகள். உண்மையில் நடந்தது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

இவன் யாருக்கும் தெரியாமல் இரவில் அரளிவிதையை தின்றுவிட்டு படுத்துவிட்டான். இப்படி எழுதும் போது இது அன்றாடமான விஷயமாகி விடுகிறது. ஆனால் உயிரை மாய்த்துக்கொள்வது அத்தனை எளிய விஷயமா ? அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும்  அவனுடைய அம்மாவும், அத்தையும் அவன் உடலை தொட்டு தொட்டு பதறியதை மறக்கவே முடிவதில்லை. இளம் மகனின் உடலும், பேச்சும்,சிரிப்பும் போல ஒரு தாய்க்கு அமுதம் வேறெதுவும் இல்லை. அண்டை வீடான  எனக்கே கூட அவ்வப்போது சில காலைகளில்  மாடியில் அவன் உடற்பயிற்சி செய்வது நினைவிற்கு வந்தால் அந்த நாளே சோர்வாகும். வளமான உடல் இயற்கையின் அரும் கொடை. அது தாய்க்கு உரியது. அதை அழிக்க உரியவருக்கே கூட உரிமையில்லை என்று சொல்வேன். ஆனால் இதை எல்லாம் பொருட்டில்லாமல் ஆக்கக்கூடிய ஒரு உயிரியல் மர்மம் காதலில் உள்ளது.

அவனுடைய மனநிலை சங்கத்தலைவனின் மடல் ஏறும் மனநிலையை ஒத்தது. அவள் அவனை  காதலித்தாளா? என்று தெரியவில்லை. ஒரு வேளை காதலிக்கலாம் என்ற எண்ணத்திலும் இருந்திருக்கலாம். ஒரு பெண் சாலையில் தன்னை கடந்து செல்வதைக்கூட காதல் என்றும், திரும்பிப்பார்ப்பதை [சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கழுத்து வலி வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஊர்ப்பக்கங்களில் பேருந்தில் சென்று படிக்கும் பிள்ளைகள் ஒருபக்கமாகவே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது] தன்னை பார்ப்பது என்று புரிந்து கொள்வது, இயல்பாக சிரிப்பதையெல்லாம் இந்தப்பயல்கள் காதல் என்று பிழையாக புரிந்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டாள் என்று இப்படி செய்து தற்கொலை கொள்கிறார்கள் அல்லது அந்தப் பெண்ணை பழி சொல்கிறார்கள். அவளின் படிப்பு பாதியில் நின்று போவது குறித்தோ,அவசர திருமணம் நடப்பது குறித்தோ காதலுக்கு எதற்கு அக்கறை.

ஆனால் சங்ககால பழக்க வழக்கம் நம்மை தொடர்வதை அன்றைய இறப்பு சடங்குகளில் கண்டேன். இறுதியாக செல்வகுமாருக்கு எருக்கம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. முன்னரே பையன்கள் வயல்காடுகளில் சேகரித்த எருக்கம் மலர்களை திண்ணையில் வைத்து சிறு குவியலாக குவித்தார்கள். பக்கத்துவீட்டு அத்தை ஊசிநூல் கொண்டு மாலையாகத் தொடுத்திருந்தாள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து அன்றிலிருந்து இன்றுவரை ஒருத்தி நேசத்திற்காக உயிர்விடுதல் நடந்து கொண்டே இருக்கிறது. விரும்பாத பெண்ணை கட்டாயப்படுத்துவதற்கும், அதற்கு மேல் சென்று அவள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தவும், அவளை தெருவில் தூற்றுவதும்,சமூக அலருக்காக மிரட்டி பணிய வைப்பதற்கும் மடலேறுதலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் மேற்குறிப்பிட்ட காலையும் பகலும் கையறுமாலையும் பாடலில் அள்ளூர் நன்முல்லை சொல்வது தலைவனின் உண்மையான காதல்துயரம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எந்தவித உயர்வு தாழ்வும் இன்றி இயற்கை அளித்திருக்கும் அரிய உணர்வு காதல். அதே நேரத்தில் எளிய, மிக மிக இயல்பான உணர்வும் அதுதான். வைரங்கள் மலைகளில் புதைந்து கிடப்பதாலோ, மண்ணில் மனிதர் கைகளில் இருப்பதாலோ அதற்கு ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை. வைரத்தின் உன்னதமும் மதிப்பும் அது கொண்ட ஔி தான். காதலும் கூட அப்படியானது தானே?

கவிதை : 1


காதல் தீவிரமானால்,

பனைமட்டையை குதிரையாக்கி 

அதில் ஏறி ஊருக்குள் செல்வார்கள்,

எருக்கம் பூவின் மொட்டுகளை

மலையாக்கி தலையில் சூடுவர்,

தெருவாசிகளின் கேலிகளுக்கு

கவலை கொள்ளமாட்டார்கள்,

நிறைவேறாத போது

இதற்கும் மேலும்

என்ன வேண்டுமானாலும் செய்வர்.


கவிதை: 2


காலை பகல் ,

கைவிடப்பட்ட மாலை,

ஊர் தூங்கும் நள்ளிரவு,

விடியல் 

என்று வேளை பார்த்து

வருவது காதல் இல்லை.

மடலேறி 

தெருவிற்கு வந்து

அவளை பழித்தல்

எனக்கும் பழி.

அதே போன்று

அவளைப் பிரிந்து வாழ்தலும்

 எனக்கு பழியே.


அகமும் புறமும் தொடரை இருபது கட்டுரைகளுடன் முடித்துக்கொள்கிறேன். காலம் அமையுமாயின் பின் ஒரு சந்தர்ப்பத்தில் அகமும் புறமும் இரண்டாவது பாகமாக  தொடரலாம். இதுவரை இந்தத் தொடரை வாசித்தவர்களுக்கும்,வாசித்து தங்கள் எண்ணங்களை  என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்தத்தொடர் எனக்கு பல புதிய வாசகர்களை பெற்று தந்தது குறித்து மகிழ்கிறேன். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.






Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...