ஆலய சிற்பங்களின் நிர்வாணம்

         ஆலயசிற்பங்களின் நிர்வாணம்

     [சதீஸ்குமார் சீனிவாசன் கவிதைகள்]


நாம் சில புத்தகங்களை விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் தான் கவனித்து வாங்குகிறோம். ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் சதீஸ்குமாரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்தாலும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்டவுடன் தான் 'உன்னை கைவிடவே விரும்புகிறேன்' கவிதைத் தொகுப்பை வாங்கினேன்.

தலைக்குப்புற விழுந்த மாதிரி தான். புத்தகத்தை அங்கங்கே திருப்பியவுடன் முகத்தில் அடித்து வெளியே தள்ளிவிட்டது. சாமிஅறையில் அமர்ந்து வாசிப்பதே வழக்கம் என்பதால் கைநீட்டும் இடத்தில் இருந்த குட்டிகிருஷ்ணரின் அருகில் வைத்துவிட்டேன். முகநூல் கணக்கு இல்லை என்பதால் நிசப்தனை எனக்கு அறிமுகம் இல்லை.

இந்த மாத புத்தக பட்ஜெட்டில் 160 ரூபாய் [அஞ்சல் செலவு உட்பட] வம்பாய் வீணாக  போச்சு என்ற எண்ணம் மறுபக்கம்.


அனைத்தும் சேர்ந்து 'டிப் டிப் டிப்' தொகுப்பை பற்றிய நினைவேக்கமாக மாறிவிட்டது.  இன்னமும் அது டெடி பொம்மைக்கு அருகில் தான் இருக்கிறது. 

ஒரு வாரமாக இந்த புத்தகத்தை கிருஷ்ணனின் பக்கமிருந்து எடுக்காமலே இருந்ததால் அம்மா கடுப்பாகி,'ஒரு எடம் விடாம புத்தகத்தை கலச்சு போட்டு வச்சா ...சாமி பக்கத்துலயுமா' என்று திட்டிக் கொண்டிருந்தார். ஆனால் எடுக்கவும் சொல்லமாட்டார். அவருக்கு இப்போது வாசிப்பு வழக்கம் இல்லை என்பதால் புத்தகம் தப்பித்தது. 

நேற்று காலை மெல்லிய ஜன்னல் வெளிச்சம் விழுந்திருந்த புத்தகத்தை பார்க்கும் போது 'கோயில் சிற்பங்கள்' சட்டென்று மனதில் தோன்றின. மிக இளம்வயதில் முதன்முதலாக நாம் அவற்றை கவனிக்கத் தொடங்கும் போது ஏற்படும் சங்கடமும்,பதற்றமும்,அருவருப்பும்,அதற்கும் அப்பால் அவற்றை தவிர்க்கும் நினைவு வந்தது. அடிக்கடி அதே கோயில்களுக்கு செல்லும் போது சிற்பங்களின் கால்களை,கால் சிலம்புகளை கவனிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக இடை, கச்சை ஆடைக்குப்பின் முகஅழகும் ,கண்ணழகும் ,கையழகும் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும். பின் அந்த சிற்பம் முழுதுமே நமக்கு அழகாகும். 

அது போல சிலபுத்தகங்களை நாம் ஏற்றுக்கொள்ள ஒரு சாக்கு கிடைத்தால் தான் அதை எடுக்கமுடியும். கோயில் கோபுர சிற்பங்கள் என்ற எண்ணம் வந்ததும் 'உன்னை கைவிடவே விரும்புகிறேனை' கைகளில் எடுத்தேன். 

தொகுப்பின் முதல் கவிதை 'ஒரு கண்டு கொள்ளாத காதல் கவிதை'. ஒருபக்கம் காதல், மறுபக்கம் கண்டுகொள்ளாமை. இந்தக்கவிதையிலிருந்து படிப்படியாக  தீவிரமடைந்து சங்க இலக்கியம் சொல்லும் பசலை படர்தல் எல்லை வரை செல்கிறது. பசலை படர்தல் என்று உன்னதமாக்கி வைத்திருப்பதன் நாட்டார் வடிவமா இந்தக்கவிதைகள் என்று தோன்றியது. பசலை படர்தலை சங்கஇலக்கியம்  பெண்ணுக்கு உரியதாக்குகிறது. இத்தொகுப்பில் ஆணிற்கு உரியதாகியுள்ளது.

பல கவிதைகள் ஒரு நொதித்த புதைகுழி போன்ற கடுமணம் உடைய கவிதைகள். இந்த சேறு அதில் விழுபவரை தன்னுள் இழுந்து புதைக்காமல் விடாது என்றும் தோன்றியது. மண்ணை ஈரமாக்கி அதில் விழும் உதிரிகளுடன் மண்ணும் நொதித்து புளித்து சகதியாகி தெளியாமல் போன மானுட காட்டின் புதை குழி. காடு செழிக்கவே மழையும் வெயிலும் மண்ணும். ஆனால் மண்ணும், நீரும், வெயிலும் சில சமயங்களில் அதீதமாகி முக்குணங்களும் திரிந்து போகின்றன. 

அம்மா உன் முலை தெரிகிறது

சேலையை சரி செய்துகொள்

நள்ளிரவில்

மகனென்ன தாயென்ன?

என்று ஒரு கவிதை. வரம்பற்ற கவிதைகள் என்ற தலைப்பில் இதுபோல அக்காக்கவுக்கும் கவிதை உண்டு. மனம் போகிற அந்த எல்லையை கவிஞன் தன் ஆளுமையை அழித்து முன்வைக்கிறான். அந்த புதைகுழியின் சாற்றை நோக்கித்தான் காட்டின் பெரும் விருட்சங்களின் வேர்கள் மண்ணுக்கடியில், தொலைவில் எங்கிருந்தோவெல்லாம் நீள்கின்றன.

அதே இந்த எல்லையில்,

குட்மார்னிங்

                       குட்மார்னிங்

குட்நைட்

                      குட்நைட்

பேச அவ்வளவே இருக்கிறது 

என்று மண்ணில் விழும் முதல் மழை போன்று அத்தனை குழந்தை தன்மையுடன் உள்ளது. 

இந்த நொதித்த கெடுமண கவிதைகளுக்கு அடுத்த பக்கமே,


அங்கே

ஆகாயத்தில் ஒன்றுமில்லை

பிறகேன் பார்க்கிறாய்

பிறகேன் பார்க்கிறாய்

எல்லாவற்றிற்கும்

காரணம் வேண்டும் உனக்கு

உனக்குத் தெரியுமா

இப்படித்தான்

நாசமாகிப்போகத் தொடங்கினோம்

என்ற மிக மெல்லிய ஈரக்கவிதை உள்ளது. 

உடனே கவிஞர் சாந்தமாகி விட்டோமோ பதைத்திருக்க வேண்டும்.


யட்சியை அடைய முடியாது

பிரார்த்திக்க மட்டுமே முடியும்

தேவி என

தேவி என

பிரார்த்தித்தே செத்துப் போ

என்று எழுதுகிறார். இதில் உள்ள இரு நிலைகளை கவனிக்க வேண்டும்.

யட்சி / தேவி

கவிதையின் தொடக்கத்தில் யட்சி என்று பாய்பவர் இரண்டு வரிகளில் தேவி என்று சரண் அடைவதை காணலாம். இந்த இருநிலைகள் சதீஸ்குமாரின் இந்த தொகுப்பு முழுவதுமே உள்ளது. மிகுந்த விசையுடன் இருபக்கமும் ஆடும் ஊஞ்சல். உளவியலில் இதற்கு ஒரு பெயர் உண்டு. ஆனால் இங்கு குறிப்பிடுவது கூடாது. கவிதைக்கு எந்த கோட்பாடுகளும் இல்லை. அது தூய ஆத்மா. அதனாலேயே சதீஸால் இத்தனைக்கு பீபத்ஸ உணர்வுள்ள கவிதைகளை நம் பார்வைக்கு வைக்க முடிகிறது. புனைவெழுத்தாளர் இனிப்பிட்ட மாத்திரையை தரும் போது கவிஞன் கசப்பை கசப்பாகவே தருகிறான். அது ஒவ்வாமையானதாக இருப்பதும் இயல்பே. 

அதற்காக பீபத்ஸ உணர்வை கொண்ட அனைத்து எழுத்திற்கும் தலையாட்ட முடியாது. சதீஸிடம் உள்ளது ஒரு உண்மையான தீவிர அலைகழிப்பு நிலை. அவர் அங்கேயே நின்றிருந்தார் என்றால்  நாமும் 'நமக்கென்ன... எழுதறத எழுதுமய்யா' என்று நகர்ந்து கொள்ளலாம். ஆனால் அது அங்கிருந்து  நகரும் திசை கவனத்திற்கு உரியது.

'சாவின் மன்றாட்டம்'

என் சாவு உன்னை வருத்தமடையச் செய்யுமா?

ஆமாம் மிகவும் வருந்துவேன்

இனி நிம்மதியாகச் சாவேன்

என்று கவிதை தன்னை ஒப்புக்கொடுக்கிறது.

சொல் தான் முதலில் எரிந்தது

நீ தந்தது சொல்

நான் தந்ததும் சொல்

முதலில் சொல்தான் எரியத்தொடங்குகிறது

பிறகு

அதன் பிறகு

வலது கையால்

பாதி வெந்த இடது கையை எடுத்து

புடைத்தெழுந்த நெஞ்செலும்பை

நாமே அடித்துக்கொண்டு அடங்கிப்போனோம்

என்று தாண்டவம் ஆடுகிறது. இங்கு திரிபுரம் எரித்த சக்தியின் நிலமாகிறது கவிதை. சக்தியுடன் வலபாகத்தி்ல் தானும் எரிகிறது. இந்த துன்புறுதல் ஆங்கார நிலையில் இருந்து அடுத்ததாக,

'புரிந்து கொள்ளமுடிகிறது

ஆனால்

அதை ஏற்கத்தான்

சங்கடமாக இருக்கிறது'

என்று சாந்தம் கொள்கிறது.

இங்கிருந்து அடுத்ததாக....


பொம்மையைக் காணவில்லையென

இரவு முழுக்க அழுது கொண்டிருந்தாள்

காலையில் வேறொரு பொம்மையை 

வாங்கி வந்திருந்தான் அண்ணன்

ஒரு கணத்தில் பாப்பா தன் பழைய ஒழுங்குகளுக்குத் திரும்பி

குதூகலிக்கத் தொடங்கியிருந்தாள்

எனக்குக் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது

சொல் மகளே

இவ்வளவு எளியதுதானா ஒன்றை மறப்பது?

..........

.....

'ஆமாம் வேற என்ன செய்ய அப்பா: என்றவளைத் 

தோளில் தூக்கி 

அவ் ஞானத்தை எனக்களி மகளே எனத் தவமிருந்தேன்


என்ற இடத்தை வந்து நிற்கும் சதீஷை புன்னகையுடன் பார்க்கிறேன். பல  பக்கங்களை முழுமையாக வாசிக்காமல் திருப்பினேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நாங்கள் சுற்றி சுற்றி ஆலய சிற்பங்களை பார்க்கும் போது கோபுரத்திற்கு மேலே சிறகு விரித்து அங்குள்ள சிற்பங்களை காண கவிஞனுக்கு கண்களிருக்கிறது. ஆனால் எத்தனை பெரிய கோபுரமானாலும் கருவறையில் தான் தெய்வங்கள் கண்திறக்கின்றன. சதீஸின் கவிதைகள் வாயில் கோபுரங்களின் சிற்பங்களை கடந்து கருவறை நோக்கி நகர்வதை காணமுடிகிறது. 

கவிஞரின் ஆண்களும் பெண்களும் 'மாறி மாறி' [கவிதையின் தலைப்பு] ஆடும் தெய்வவிளையாட்டின் அகங்காரங்களும், அலட்சியங்களும், வேட்கையும்,கண்ணீரும்,கனவும்,மகிழ்ச்சியும்,பழிவாங்குதல்களும்,ரணங்களும் நிறைந்த இந்தக்கவிதைகளில் மீண்டும் தொடங்கும் ஆட்டங்களும் உள்ளன. இதையே நம் முன்னவர்கள் லீலை என்கிறார்கள்.

காற்றில் வரையும் விரல்கள்

மொழிகளற்று தவித்தன

மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்

இன்னொரு செடியில்

இன்றுதான் பூக்கத் தொடங்கினேன்

மல்லிகையாக

ரோஜாவாக 

பிச்சியாக

ஆனால்

காகிதப்பூ மலர்ந்திருக்கிறது

என்றார்கள்.

நான் மீண்டும் மண்ணுக்குள் திரும்பினேன்

மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்

மொழியற்றே தவித்தன விரல்கள்

விலக்கிக்கொள்ளப்பட்ட

கைகளின் விரல்கள்

இப்படித்தான்

அந்த மாலையை கடந்தேன்.

இது நான் முதன்முதலாக வாசித்த சதீஷின் கவிதை. ஜெ தளத்தில் வெளியாகி இருந்தது. இதை வாசித்தப்பின் ஜெ விற்கு எழுதிய கடிதத்தை இப்படி முடித்திருந்தேன்.

'கவிதையில் காற்றில் வரையும் விரல்களுக்கு காற்றே மொழியென...விரல் என தொடுகை என சதீஸ் வந்தடையக்கூடிய இடம் உள்ளது. இலையில் நடுங்கும் பனியை தன்வயப்படுத்தும் சூரியனுக்கு மிகஅருகில் வந்துவிட்டார் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல எழுதிக்கடத்தல். 
புகையில்லாமல் இந்தப்படத்தை மனதில் வரைந்து பார்க்கிறேன். மிக அழகான மஞ்சள் பூ வொன்று தெரிகிறது'



விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதிற்காக கவிஞர் சதீஸ்குமார் சீனிவாசனுக்கு வாழ்த்துகளும் அன்பும் மகிழ்ச்சியும்.





            



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்