எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

                      இசையாகி நின்றாய்

புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு.


எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர்.

இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல்.



1.நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிருப்பதாக நினைக்கிறீர்களா?

அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடறது நம்ம நோக்கம் கிடையாது. அதெல்லாம்  கேள்விகளாவே இருக்கும். இந்தத் தலைமுறையில் அந்தக் கேள்விகள் வருது. இந்தத் தலைமுறை ஒருவிதமா எதிர்கொள்கிறது. அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்தறோம். அவங்க பதில் தேடுவாங்க. பதில் கண்டடைதல் என்பது ஒரு முடிவில்லாத செயல்முறை. தத்துவம் ‘நான் யார்?’ என்ற கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கடைசிவரைக்கும் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை! பதில் மாதிரித் தோற்றமுள்ள பதில்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அறிவியல் கேட்கிற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கலாம். ஏன்னா, அதுக்கு பருண்மையான வஸ்துகள் இருக்கு. அதைப் பிளந்துபிளந்து ஊடுறுவிஊடுறுவி ஆதாரத்தன்மையைத் தொட்டு அது பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யும். ஆனால் கலையில் இந்தமாதிரியான கேள்விகள் ஒரு புகைமூட்டம் மாதிரிதான். உருவத்தை வனைய முடியாது. கேள்விகளைக் கடத்தலாம்.

2.ஹிந்துஸ்தானி இசையின் பித்துநிலையை நாவல் முழுக்க இயற்கையுடன் இணைந்த ஒலிகள் மூலம் வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள். இந்த உணர்வுநிலைகள் நீங்கள் அந்த இசையைக் கேட்கும்போதோ அல்லது இசையை உங்கள் மனத்தில்  மீட்டும்போதோ நீங்களே பெற்ற அனுபவங்களா…

தனஞ்செய் முகர்ஜி குரலிசைக்கலைஞன். எல்லாச் சத்தங்களையும் நுட்பமாகக் கேட்பான். நான்  ரசிகன் மட்டுமே. சூழ்ந்துள்ள சத்தங்களுக்கு மத்தியில் இசையைக் கேட்கிறேன். தனஞ்செய்க்குக்  காதுகள் படைக்கப்பட்டதே இசையைக் கேட்கத்தான்!

3.அதை எப்படி எழுத முடிஞ்சது… 

இதையெல்லாம் கற்பனை பண்றதுதானே நம்ம வேலை! இதெல்லாம் யூகம்தான். ஆனால் யூகங்கள் சரியாப் பொருந்தணும். தர்க்கப்பிழை, தர்க்கமுரண் இருந்தா வாசிக்கறவங்க ஒத்துக்க மாட்டாங்க.


4.தலைக்குமேல் மேகங்கள் நிரப்பிவந்த காலவெளி, அலைவளையங்களின் லயம்… இதுபோன்ற காட்சிவர்ணனைகள் நாவலில் வரும்பொழுது இசையைக் கண்முன்னால் காணும் அனுபவமாக உள்ளது. இசை என்ற அரூபப் புலன்அனுபவம் காட்சிஅனுபவமாவது பற்றி…

எழுதும்போது வரும் ‘ மரம்’ என்கிற சொல் முன்னிருத்தும் பருண்மையான பொருளுக்கே,  வாசிக்கிறவர்கள் மனத்தில் முன்னமே இருக்கக்கூடிய கோட்டுருவத்தை விரித்துவிரித்து ஒரு மரமாகத் துல்லியமாக்க வேண்டியிருக்கு. ஒலி என்கிற, ஆளாளுக்கு வேறுபடற விஷயத்தை நான் உத்தேசிக்கறவரைக்கும் விவரிக்கிறேன்.

5.தனஞ்செயன் என்ற மகாகலைஞன் தன்னை அலைக்கழிக்கும் விசைகளைக் கையாளத் தெரியாத வயதிலேயே குடும்பம் மற்றும் குருவின் கைகளிலிருந்து விலகிப்போதல் மட்டும்தான் அவன் வீழ்ச்சிக்கு காரணமா இருக்குமா?

ஊரைவிட்டு வெளியேறிப் போறது ஒரு காரணம். பதின்வயதில் வெளியறுதல் அனைவருக்குமானதுதானே. வேலை, கல்வியின்பொருட்டு நடக்கறதுதானே. இல்லாவிட்டாலும் உணர்வுரீதியான ஒரு விலகல் நடக்கத்தானே செய்யும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்தப் பதின்வயது அப்படித்தானே கடக்கும்.  தானாக புதிதாகத்  திறக்க ஆரம்பிக்கும். இந்த நாவலில் அவன் வெளியேற இசை ஒரு காரணம். அப்படி ஊரைவிட்டு வெளியேறிப் போகிற எல்லாரும் இந்தமாதிரி வீணாகிவிடுவதில்லையே. 

தனஞ்செயைப் பொறுத்தவரைக்கும் அவனுக்கு இயல்பிலேயே ஒரு பிறாண்டல் இருந்துக்கிட்டே இருக்கு. அம்மா, குரு என்று சிலபேரால் கட்டுப்படுத்தி அந்தக் குதிரைமேல் சவாரி செய்யமுடியுது. சிலபேருக்கு அந்தக்குதிரை அவர்களை மீறினதா இருக்கு.

அவன் இப்படி ஆகறதுக்கு சரயூ, பெற்றோர், ஊர், எப்போதுமே அவனுக்குள்ள இருக்கிற தாழ்வுணர்ச்சி என்று அனைத்துமே காரணமா இருந்திருக்கலாம்.

இது எல்லாவற்றிற்கும் மேல், ஒரு வழக்கமான இந்துக் குடும்பத்துல பிறக்கிற அவனுக்கு, விதி காரணம்னு சட்டுன்னு சொல்லிவிடலாம்.

எப்பொழுதுமே இந்த மாதிரி மர்மங்களுக்குள் நுழைய இரண்டுபேர் காத்திருக்காங்க. ஒன்று, கடவுள். மற்றது, அதை முன்னிறுத்தும் மதம். இந்த இரண்டும் தலையிட்டிருந்தால் ஒருவேளை தனஞ்செய்க்கு வேறெதோ நடந்திருக்குமோ என்னவோ.  நடந்து முடிஞ்ச விஷயங்களுக்குக் காரணம் தேடலாம். ஆனால் திடமான உண்மை உள்ளுக்குள் இருக்கு. சில சமயங்களில் அது எழுதினவனுக்கும் தெரியறதில்லை. அந்தப் பாத்திரத்திற்குமேகூடத் தெரியறதில்லை. அது பிடிபடாத ஒன்றாகவே இருக்கு. இதனால் நாவலின் மர்மமும் சுவாரஸ்யமும் அதிகமாகும் வாய்ப்பும் இருக்கு. இதைத்தான் கலையின்  பூடகத் தன்மை என்கிறோம். ஒரு கலைப்படைப்பு எல்லாவற்றையும் திறந்து வைப்பதில்லை. தன் கைக்குள் ஒன்றை ஔித்துவைத்திருக்கிறது. வாசிக்கற சந்தோஷமும் ,மர்மத்தைத் தேடற சந்தோஷமுமாக இரட்டைமகிழ்வு வாசகருக்குக் கிடைக்குது!


6.சிசுவிலிருந்து குழந்தை வளர்வதைப்போல ஒரு கச்சேரியின் வடிவத்தைச் சொல்லியிருப்பீர்கள்… அதைப்பற்றி…

நாவல் மெதுவாகத் தொடங்கி, மந்தமாக நகர்ந்து, வேகமெடுத்து, படீரென்று முடிவைநோக்கிச் சென்றடைகிறது. ஒரு கச்சேரியில், ராக ஆலாபனையில் மெதுவாகத் தொடங்கி முடியறதுவரைக்குமான தன்மையில் நாவலின் வடிவம் இருக்கு என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.

7.பொழுதுகள் மற்றும் வாழ்வில் தான் இருக்கும் நிலை சார்ந்து ராகங்கள் தனஞ்செய்யின் மனத்தில் எழுந்து வருகின்றன. அத்தனை ராகங்கள் பற்றிய குறிப்பு நாவலில் இருக்கிறது. தனஞ்செய் வாழ்வை ஒரு ராகத்துடன் இணைக்கலாம் என்றால் நீங்கள் எந்த ராகத்தைக் கூறுவீர்கள்?


இதற்கு இரண்டு பதில்கள் இருக்கு. 

ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு ராகம் இருக்கு. உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தில் பூபாளராகம் அதிகாலைக்குரியது. ஹிந்துஸ்தானியில் காலை, பிற்பகல், சாயங்காலம், பின்னிரவு, நள்ளிரவுவரை இசைக்கக்கூடியவை என்று வேறவேற ராகங்களைப் பிரிச்சு வச்சிருக்காங்க. அது பாடறவங்களுக்கும் இசைக்கறவங்களுக்கும்தான். இசை கேட்கிற எனக்கில்லை. ஹிந்துஸ்தானியில் மால்கவுன்ஸ் என்ற ராகம் இரவுக்குரியது. அதை நான் காலையில் கேட்கக்கூடாதா என்ன!

எனக்கு எல்லாப் பொழுதுகளும் இசைக்கான பொழுதுகள்தான். எல்லா ராகங்களும் எல்லா வேளைகளுக்குமுரியவைதான். ஆனா இசைக்கலைஞர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கறதா சொல்றாங்க. அப்படிப்பார்த்தா, எல்லாக் கச்சேரிகளும் சாயங்காலம் தொடங்கி இரவு முடிஞ்சுபோகுதே. அப்படின்னா ஒரேவகையான ராகங்களைத்தானே  நாம் கேட்க முடியும் என்கிற குழப்பம் இருக்கு.

தனஞ்செயனைப் பொறுத்தவரை அவன் விதவிதமான பிராயங்களைத் தாண்டிவரும்போது, விதவிதமான பருவங்களைத் தாண்டிவரும்போது, விதவிதமான வேளைகளைத் தாண்டிவரும்போது, விதவிதமான உணர்வுகளுக்கு ஆளாகிறான். கொத்தான ராகங்களைக் கோர்த்த வடிவமான ராகமாலிகை என்பதை அவனுக்கு ஒப்புமையாகச் சொல்லலாம். கமலதேவி கேட்கலேன்னா நான் இப்படி யோசிச்சிருக்க மாட்டேன்! தனஞ்செய் முகர்ஜி ஒரு ராகமஞ்சரி!!



8.இசை மனிதனின் குணத்தை இளக்குவதைப் பற்றி நாவல் முழுக்க இருக்கிறது. ஆனால் அதுவே அந்த இசைக்கலைஞனுக்கு இறுக்கத்தைக் கொடுக்கிறதா…

இதை யூகிக்கத்தான் முடியும். யூகம் எந்த அளவிற்குச் சரி என்கிற உத்தரவாதம் நம்மகிட்டக் கிடையாது. இசைக்கலைஞர்கள் கிட்டத்தான் கேட்கணும்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மதுரையில் ஒரு கோயிலில் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. ஒரு ஐம்பது அறுபதுபேர் உட்கார்ந்து கேட்டோம். வாசித்தவர் முகத்தையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தோய்ந்து வாசித்த ஒரு இடத்தில் எனக்கு ‘மளுக்கு’ன்னு கண்ணீர் வந்தது. இசை கேட்கிறவங்களுக்கு, பொதுவாக இந்தப் பழக்கம் இருக்கும். மனம் நெகிழ்ந்து கண்ணீர் துளிர்க்கும். அன்றைக்கு எனக்கும் அப்படித்தான். ரொம்ப ஆச்சரியமாக, வாசித்தவருக்கும் அந்த இடத்தில் கண்ணீர் துளிர்த்தது போல. கண்களை ஒரு கையால் துடைத்துக்கொண்டார். அப்போது நானும் அவரும் ஒரு புள்ளியில் சந்தித்தோம் என்றுதானே அர்த்தம். அப்போது நாங்கள் இரண்டுபேரே இல்லை.  இரண்டுபேர் ஒரே ஆளா இருந்து ஒரு அனுபவத்தைச் சுவைத்தோம். இது சாத்தியம்.

நீங்க கேட்ட இறுக்கம் பற்றி… கலைஞர்களுக்கு ஆரம்பத்துல ’சரியாப் பாடணும்; சபை முன்னாடி அவமானம் ஏற்படக்கூடாது என்ற பதட்டமும் கவனமும் இருக்கும். மிகப் பெரியமேதைகள் பாடும்போது சர்வசரளமாப் பாடறாங்க. மதுரைமணி அபாரமாான வாய்ப்பாட்டுக் கலைஞர். மிகப் பெரிய வித்வான். கர்நாடக இசையில் முக்கியமானவர். அவர் பாடும்போது கேட்டால், இதையெல்லாம் யோசிச்சிருப்பார்ன்னே தோன்றாது.  அந்த நேரத்துல அவருள் ஏதோ ஒன்று பொங்கிப் பீறிடுது. அதை அவர் என்னிடம் ஒலித்துக் காட்டுகிறார். அவர் மேடையில் பாடுகிறபோது வரிகளைக்கூடமறந்ததுண்டு. பதிவுகள் இருக்கு. அந்த அளவுக்கு ராகத்தோட ஒன்றி இருப்பார். கீர்த்தனை எல்லாம் அவருக்கு இரண்டாம்பட்சம்தான். அந்த ராகம், பாவம், மனோதளம் அதுதான் அவங்களுக்கு முக்கியம். இறுக்கம் இருக்காது. சுவாதீனம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.


9.நம்முடைய ஆதிஉணர்வுகளான வன்மம், காமம், அன்பு போன்றவற்றுடன் இசைக்கு நெருங்கின தொடர்பு உண்டா? சொல்லமுடியாத உணர்வுகளைத்தான் இசையில் இறக்கி வைக்கிறோமா?

எல்லாக் கலைகளுமே அப்படித்தானே. நிகழ்த்துகலைகள், ஓவியம் மாதிரியான காண்கலைகள், வாசிப்பு மாதிரியான மானசீகக் கலைகள் எல்லாமே ஆழ்மனத்துடன் உரையாடுவதற்கான ஒரு தருணம் அல்லது சந்தர்ப்பம்தானே. நிகழ்த்துகலையில், நிகழ்த்தும் கலைஞர் நேரடியாக நம் ஆழ்மனத்துடன் தொடர்புகொள்ள முனைகிறார். புத்தக வாசிப்புபோன்ற கலையனுபவத்தில் நானே என்னுடைய ஆழ்மனத்துடன் உரையாட முயற்சிக்கிறேன். புத்தகம் மற்றும் அதில் பேசப்பட்ட விஷயங்கள் அதற்கு ஒரு முகாந்திரமாக இருக்கு. 

மேல்மனம் இன்னொரு ஆழ்மனத்துடன் தொடர்புகொள்ள முயற்சிக்குது. அல்லது, மேல்மனம் தன்னுடைய ஆழ்தளத்துடனேயே தொடர்புகொள்ள முற்படும் விஷயம்தான் கலை. இதை இசைக்கு மட்டுமானதாக எடுத்துக்கத் தேவையில்லை.

10.நாவல் எழுதிய நாற்பதை ஒட்டிய வயதில் இசை உங்களுக்கு எப்படியானதாக இருந்தது. இன்று அறுபதில்  அது எவ்வாறாக இருக்கிறது, அல்லது எவ்வாறானதாக மாறியிருக்கிறது…

என்னுடைய ஆறேழு வயதில் அப்பாவோட சேர்ந்து கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பித்தேன். பிறகு இருபதுகளில் நண்பர்களுடன் கேட்க ஆரம்பித்தேன். 

இதை இரண்டுவிதமா சொல்லலாம். அப்போது கேட்க ஆரம்பித்த ஆள்தான் இப்போதும் கேட்டுக்கிட்டு இருக்கான். அந்த ஆளுக்கு வயசாகவேயில்லை.

ஆனால், அப்பக் கேட்டஆள் இப்ப இல்லை. ஏன்னா இவனுக்கு இசைநுணுக்கங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டது. குறைந்தபட்சம், கேட்பதை வெளியில் சொல்லும்போது விதவிதமாகச் சொல்லிப்பார்க்கலாம் என்ற தைரியம் வந்திருக்கு. இதே, எட்டுவயதில் தனஞ்செய் முகர்ஜி என்ற ஒரு ஆளே எனக்குள் இருந்திருப்பானா! ஆனால் அப்போது கேட்ட சஹானா ராகத்தின் வடிவத்தைத்தானே இப்பவும் கேட்டுட்டு இருக்கேன். கலை என்பது வயதைப் பொருட்படுத்தாத தளம்; அல்லது, வயதை ரொம்பத் தீவிரமாகப் பொருட்படுத்தக்கூடிய தளம்! இரண்டு பதில்களுமே சரியாத்தான் இருக்கும்!!

உள்ளுக்குள்ள கலை சம்மந்தமான அறிதல் மாறிக்கிட்டே இருக்கும். அது கொடுக்கும் உணர்வெழுச்சி, உணர்வுநிலைகள் பெருமளவு மாறாது.  மோஹன ராகத்தை எப்போது கேட்டாலும் சுரபாவங்கள் அப்படியேதானே இருக்கும்.


11.நாவலில் அபஸ்வரம் பற்றி எழுதியிருப்பீங்க…  ‘விதிமீறல்கள்தான் ஆட்டத்தின் மனிதாம்சம்’ என்று எழுதியிருக்கீங்க. அதைப்பற்றி…

இந்த வரி அந்தக் கலையைக் குறித்துப் பேசுகிற நேரத்தில் பொருத்தமா இருக்கு. மனிதன் தப்பு பண்ணத்தான் செய்வான். ஒரு செயலின் மனிதாம்சத்தைத் தவறுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் அது ஒருபோதும் வெற்றியைத் தராது. வெற்றியை நோக்கிக் கூட்டிச்செல்லாது என்று நினைக்கிறேன்.

12.தனஞ்செயனோட குருவின் நண்பர் ஒரு இடத்தில் தான் பாடியதை நிறுத்தியதற்குக் காரணமாக, ‘எனக்குள் இருந்த தம்பூரா தீடீர்ன்னு நின்னுபோச்சு’ என்று சொல்வார். அதேபோல, தனஞ்செயனுக்கும் ஒருநாள் காலையில் இசையெல்லாம் மறந்துவிடும். முதல்தடவை வாசிக்கும்போது அந்த இடத்தில் புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன். மனத்தைத் தொந்தரவுசெய்து அழவைத்த இடம். இரண்டுநாள் கழித்துத்தான் வாசிக்க முடிந்தது. இசை என்பது மூளை சம்பந்தப்பட்டது மட்டும்தானா என்ற ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. அதை எழுதும்போது நீங்க எப்படி உணர்ந்தீங்க…

இந்த மாதிரியான தருணங்கள் சாதாரண மனிதர்கள் வாழ்விலேயே நடந்துரும். நல்லாப் பழகின சமையலறையில் உப்பு டப்பா மறக்கற மாதிரி. எனக்கும் நடந்திருக்கு. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்றது மறந்துவிட்டதாகத் தோன்றி இருக்கிறது. ஆனால் அதெல்லாம் உடலில் அனிச்சையாகப் பதிவாகியிருக்கும். மனம்தான் மறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும்! ஆனால், அது தண்ணீரை வெட்டுகிற மாதிரிதான். உடனே கூடிடும்!! இந்த மாதிரிக் குறளிகள் மனிதமனத்திற்குள் ஏகப்பட்டது உண்டு.

’தேஜா வூ’ ன்னு ஒரு நிலை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க.  முதன்முதல் தடவையாக நடக்கிற ஒன்று, ஏற்கனவே தத்ரூபமாக நடந்ததாகத் தோன்றும்.  இது மாதிரி எண்ணற்ற குறளிகள் மனத்திற்குள் உண்டு. அதில் ஒன்றை தனஞ்செயன் சார்ந்து பதிவுபண்ணியிருக்கேன். அது உங்களை உணர்வுபூர்வமாகத் தொட்டிருக்குங்கறது எனக்கு சந்தோஷமாக இருக்கு...

13.நமக்கு நாதஸ்வரம் மாதிரி ஒவ்வொரு இடத்திற்கான இசைக்கருவிகள் இருக்கு. ஒரே ராகத்தை வெவ்வேறு கருவிகளில் வாசிக்கும்போது பாவங்கள் மாறுபடறதா நினைக்கிறீங்களா? தம்பூரா, தபலா, ஜலதரங்கம், ஷெனாய், புல்லாங்குழல், ஸாரங்கி என்று நாவல் முழுக்க இசைக்கருவிகள் நிரம்பியுள்ளன… நாவலில் எத்தனை இசைக்கருவிகள் வருகிறது! இவையெல்லாம் வெவ்வேறு இடங்களின், காலங்களின், மனிதர்கள் சார்ந்து, ஒரே ராகத்தின் வெவ்வேறு பாவனைகளைத் தருபவையா…

கண்டிப்பாக மாறும். ஒரு வாத்தியத்தோட தொனிக்கே அதற்கேயான தனித்தன்மை உண்டு. வயலின் மாதிரி, ஹிந்துஸ்தானியில் ஸாரங்கி என்ற தந்திவாத்தியம் உண்டு. வயலினில் இல்லாத ஒரு துக்கம் ஸாரங்கியில் இருக்கிறதாக எனக்குத் தோன்றும். ஸாரங்கியோட இன்னொரு வடிவமான எஸ்ராஜ் என்ற வாத்தியத்தோட ஒலியமைப்பே எதிரொலி மாதிரி இருக்கும். அதில் மேற்சொன்ன துக்கம் பன்மடங்காகப் பெருகிக் கேட்கும். அப்படி வாத்தியம் மாறமாற, ராகத்தின் ஆதாரத் தன்மையின் அழுத்தம் கூடவோ குறையவோ செய்யும். இதெல்லாம் கேட்கிற, வாசிக்கிற ஆளைப் பொறுத்தது.  ஆனால் ராகத்தோட கட்டமைப்பு ஒரேமாதிரியானதுதான். சாருகேசியை எந்த வாத்தியத்தில் வாசித்தாலும் சாருகேசிதான்!!

14.சந்த்தூர் என்ற நூறு தந்திகள் கொண்ட ராஜவாத்தியம் பற்றி எழுதியிருப்பீங்க. அது எனக்கு தனஞ்செயனா தோணுச்சு… ஒரு வாத்தியமா அவனைக் கற்பனை பண்ணினா அது சந்த்தூர்தான்…

ரொம்ப ரசமான வாத்தியம் அது. வாசிக்கறதும் கஷ்டம். தமிழ் சினிமாவில் ஆறு ஓடும்போது, அருவி கொட்டும்போது பின்னாடி கலகலகலன்னு ஒரு ஓசை வரும்.  அது சந்த்தூரோட ஒலிதான்.  அது இந்திய பாரம்பரிய வாத்தியங்களில் ஒன்று. பாரசீகத்திலிருந்து வந்ததாகச் சொல்றாங்க. காஷ்மீர் பாரம்பரியத்துல அதிகமாக இருக்கக்கூடிய வாத்தியம். பழைய வடிவத்திலிருந்து மாறிவந்திருக்கலாம்.  குறிப்பா சிவகுமார் சர்மா என்கிற காஷ்மீரக் கலைஞர் இந்த வாத்தியத்தை மேம்படுத்தியிருக்கார்.

அதன் பழைய பெயர் சததந்த்ரிவீணை. நூறு தந்திகள் கொண்ட வீணை.

உங்களுடைய ஒப்பீடும் சுவாரசியமாய் இருக்கிறது!

15.இசை பற்றி படிப்பினையாக எதுவும் எனக்குத் தெரியாது. இசை கேட்கறது மட்டும்தான். நாவல் முடித்தபின்னர் எந்த வாத்தியத்தையும் பக்கவாத்தியம் என்று சொல்லமுடியாது; ஒவ்வொன்றும்  அதனதன் இயல்பில் முழுமையானது, முதன்மையானது என்று தோணுச்சு

நல்லாயிருக்கு. அப்படித் தோணுச்சா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாவல்ல நான் எங்கேயும் இப்படிச் சொல்லல இல்லையா? இருந்தாலும் உங்களுக்குத் தோணியிருக்கு.

தனியாவர்த்தனம் என்று ஒன்று உண்டு. தாளவாத்தியங்கள் மட்டுமே வாசிக்கப்படும் சந்தர்ப்பம்.  தபலா என்ற ஒரே தாளவாத்தியத்தின் கருவிகளைக் கோத்து   ராகங்களை  வாசிப்பதை ‘தபலா தரங்’ என்று சொல்வார்கள். வெவ்வேறு சுர அமைப்புள்ள பீங்கான் கிண்ணங்களில் நீர் நிரப்பி ஜலதரங்கம் வாசிப்பது மாதிரி.  பத்து முதல் பதினாறு தபலாக்களை வைத்து இசைக்கறது. ’மன்னாதிமன்னன்’படத்தில் ‘ஆடாத மனமும் உண்டோ’ என்ற பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் தபலா தரங் வாசிக்கற மாதிரி நடிச்சிருப்பார். ஹிந்துஸ்தானியில் யாழ் மாதிரி ‘ஸ்வரமண்டல்’ என்ற தந்தி வாத்தியம் இருக்கு. தம்பூரா போல, வாய்ப்பாட்டுக் கலைஞர் மடியில் வைத்து மீட்டுவார் – சுருதியை உத்தேசித்து.  அந்தக் கருவியை வைத்து ராகங்களை முழுசாக வாசித்த ஒரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது... ஸ்ரீகாந்த் தாக்கரே என்று ஒரு கலைஞர் வாசித்திருக்கிறார். 



16.நாவல்பற்றிய உரையாடல்:

“மேடையைவிட்டு இறங்கி விட்ட தனியன் நான்” என்று தனஞ்செயன் தன்னைப் பற்றி அவன் வாழ்வின் சிக்கலான காலக்கட்டத்தில் நினைத்துக்கொள்வான். அது கவித்துமான வரி சார். தனஞ்செயனோட அக-புற உலகம் பற்றி, அவனைப்பற்றி, மொத்தமா ஒரு வரியில் எழுதின மாதிரி இருந்தது. நாவலே அந்த வரிதான் என்று தோணுது. மறுவாசிப்பில் நேற்று அந்த வரி இரவு முழுவதும் மனத்திலேயே இருந்தது.  நாவலோட உணர்வுத்தளம் இந்த ஒரு வரியில் இருக்கு. நீங்க பேசும்போது இசையை உணர்த்தக் கூடியவைகள் பற்றிச் சொன்னீங்க. இந்த வரியில் மொழி அப்படியா மாறுகிற தருணம் நிகழ்ந்திருக்குன்னு நினைக்கிறேன்.

நல்லாருக்கு.

தனஞ்செயன் பாடும்போது ஒரு ஜ்வாலைஸ்தம்பம் மனதில் தோன்றும். அதை நெருங்க முடியாமல் சுற்றிச்சுற்றி வருவான். அது என்னவாக இருக்கும் சார்…

சில விஷயங்களைக் கோட்டுருவாக யோசித்து வைத்திருப்போம். அதை எழுதுவோம். சில விஷயங்கள் எங்க இருந்து வருதுன்னே தெரியாது. எழுத்து இழுத்துக்கொண்டு போகிற திசையில் போகும்போது அது தட்டுப்படும். எழுதின பிறகு மறந்துரும். இந்த வரிகளெல்லாம் நினைவுபடுத்தினதால நினைவிற்கு வருது. இதெல்லாம் ஆழ்மனத்தோட அதீதக் கற்பனைகள். ஒருமுறை என்னுடைய நண்பனும் நானும் ஒரு இசைப்பகுதியை ஒன்றாக இருந்து கேட்டோம். மேற்கத்திய இசைத் துணுக்கு அது. அதைக் கேட்கும்போது அவன் சொல்றான்… ’ஒரு பெரிய கோவிலுடைய ஒவ்வொரு கதவாத் திறந்து ஒவ்வொரு சந்நிதியாகப் போற மாதிரி இருக்குடா’. எனக்கு அப்படித் தோணல. நான் அந்த சத்தத்தைத்தான் கேட்டேன். அவன் உள்ளுக்குள்ள அதைக் காட்சியாக மாற்றிப் பார்த்திருக்கான். சிலபேருக்கு அப்படி நடக்கும் போல…

தனஞ்செய்யோட தங்கை அபர்ணா கன்னியாஸ்திரியா மாறினபிறகு ஒரு ரயில்நிலையத்தில் தனஞ்செயனை சந்திப்பாங்க. இரண்டுபேரும் அடையாளமே மாறியிருப்பாங்க.’எங்க போன சோட்டூ நீ?’ என்று அபர்ணா கேட்கற தருணம் மிகவும் நெகிழ்ச்சியானது. இனம்புரியாத இழப்புணர்வை அளிக்கக்கூடிய இடம்.

எனக்கும்தாம்மா. இதை நீங்க நினைவுபடுத்தும்போது நானும் உணர்ச்சிவசப்படறேன். ரொம்ப ஆசையாக எழுதினது அந்தப் பகுதி. நீங்க சொல்ற இந்தத் தருணத்திலேயும் அதே எமோஷன் இருக்கத்தான் செய்யுது! எல்லா நாவல்லையும் எழுதின ஆளுக்கு அந்தரங்கமாக இப்படி  ஒரு இடம் இருக்கும்.

நாவலை வாசிக்கும்போது கதாபாத்திரங்களை நம்மில் இருந்து பிரிச்சு உணர முடியவில்லை. அதனால அந்த இடம் வலிமையானதாக இருக்கு. நானும் தனஞ்செய்கிட்ட ’எங்க போன சோட்டூ நீ?’ என்று கேட்டேன்னுதான் சொல்லணும்.

அப்படியும் இருக்கலாம். இல்லையென்றால் அந்த உணர்வுத்தளத்தின் வழியாக அந்தக் கதாபாத்திரம் கூடவே போக ஆரம்பிக்கறோமோ என்னவோ!

தனஞ்செய் அம்மா ஜெயாவால் நடப்பட்ட வேம்பு ஒன்று விருட்சமாகி வீட்டின் முன்னால் நிற்கும். ’அதில் இருக்கிற கசப்பெல்லாம் என்னுடையது’ன்னு அம்மா சொல்வாங்க…

எல்லா அம்மாவும் சொல்லக்கூடியதுதானேம்மா…!

இருந்தாலும் நீங்க அந்த உணர்வை நெருங்கி அதை ஒரு விருட்சமாக்கி நிறுத்தியிருக்கீங்க. அந்தப் பெண்ணுடைய, ஒரு தாயுடைய, கசப்பை ரூபமா மாத்தியிருக்கீங்க. அதை இறுதியா தனஞ்செயன் கடந்து போகும்போது எப்படி அவனால போகமுடிஞ்சதுன்னு எனக்குத் தோணுச்சு… அந்த இருட்டிலேயும் தலைக்குமேல் அம்மா ஸ்தூலமா நிக்கிறாங்களே…

இப்ப எனக்கு ஒண்ணு தோணுது. அந்த மரத்தோட கிளைகளில் ஒன்றாக தனஞ்செயனும் மாறிட்டானோ! அவனோட கசப்பையும் அதுல கொண்டு சேர்த்திட்டான்...

தனஞ்செயனோட மைனாவதிப்பாட்டி ஏழு வயதில் மணமாகி பத்து வயதில் தனியாளானவங்க. அவங்க ‘மீராபஜன்’ பாடிக்கிட்டே இருப்பாங்க. அதை வாசிக்கறப்ப இசை எத்தனை கருணையானதுன்னு தோணுச்சு… இவ்வளவு நீண்ட வாழ்வில், அந்த அளவிற்கே நீண்ட தனிமையில், அந்த பஜன்கள் பாட்டிக்கு எத்தனை பெரிய துணை…

கண்டிப்பா. அதனாலதான் அதெல்லாம் இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் இருந்துக்கிட்டே இருக்கு.

யாருமே இல்லை என்கிற இடத்தில் அந்த பஜன் ஏதோஒன்றாக அவங்களுக்கு இருக்குல்ல சார்.

ஆமாம். மீராபாயோ, கபீரோ அவங்க உடலை நீங்கிப் போயிட்டாங்க. ஆனால் அந்தவரிகளில் தங்களோட ஆன்மாவை இறக்கி வச்சிருக்காங்க. நாம தனியாக இருக்கும்போது, நம்மகூட அந்தப் பாடல்கள் மூலமா இன்னொரு ஆன்மா நம்முடன் இருக்குன்னுதானே அர்த்தமாகுது.

என்ன அறிவார்த்தமா பேசினாலும், எல்லாத் தர்க்கங்களுக்கு அப்பாலும், அது தேவையா இருக்குல்ல சார். இசை அப்படியானதா இருக்குல்ல…

அறிவார்த்தத்தால ஒரு சுக்கும் பிரயோஜனமில்ல கமலதேவி. 

இந்த நாவல் முழுவதும் இசைஇசை என்று சுற்றி வருது. இசைபற்றியே பேசுது. நாவலே இசைதான். இந்த மைனாவதிப்பாட்டியோட வாழ்க்கையில், அந்த இசை மேலும் அழுத்தமாக, இசை என்பதற்கான நியாயத்தைச் செய்கிறதா எனக்குத் தோணுச்சு சார்.

கண்டிப்பா. இப்ப ஒரு விஷயம் தோணுது. இசையறிவே இல்லாத ஒரு சாதாரணப் பாமரப் பெண்மணிக்கு இசை இவ்வளவு பெரிய உறுதுணையாக இருக்கு. இசையின் நுட்பங்கள் அனைத்தும் கைவரப் பெற்ற ஒருத்தனுக்கு அது பிரயோஜனமில்லாமப் போயிடுது பாத்தீங்களா… அது ஒரு ஆச்சரியம்தான்.

ஆமாம் சார். எனக்கும் அதே கேள்விதான். அதைத்தானே நீங்க எழுதியிருக்கீங்க. நீங்க ஆண்டாள் பற்றிச் சொல்லவந்தீங்களே… மீராகிட்டப் போயிட்டோம்…

மீரா,ஆண்டாள் மாதிரியானவங்க இந்தப் பணியைத்தான் செய்யறாங்க. இந்த மாதிரியான அணுக்கத்தை, ஆறுதலை நமக்குக் கொடுக்கறாங்க.

 



17.உங்களுக்கு எழுதற மனநிலைக்கு இசை உதவுகிறதா?

என் வீட்டில் எல்லா அறைகளிலும் இசை கேட்கறதுக்கான ஏற்பாடுகள் வைத்துள்ளேன். காலையில் எழுந்ததும் அதை முடுக்கிவிட்ட பின்தான் பல்தேய்க்கவே போவேன்!. எழுதும்போதும், சாப்பிடும்போதும், குளிக்கும்போதும், தூங்கறதுக்கு முன்புவரை இசையுடன்தான் இருக்கிறேன். எழுதுவதற்கு என்று தனியாகப் பாட்டுக் கேக்கறதில்லை. பாட்டு கேட்கும்போது எழுதவும் செய்யறேன்.

பாட்டு என்றால் பாரம்பரிய இசை மட்டுமில்லை. டி.எம்.சவுந்தரராஜனை ரொம்பப் பிடிக்கும். பி.சுசீலா என்னோட தேவதை. அவங்களோட பழைய பாட்டுகளை ரொம்ப ஆசையாகக் கேட்கிறேன். பாட்டு கேட்கறது எனக்குப் பிடிச்ச விஷயம். நான் அதை எந்தநேரமும் செய்துகொண்டிருக்கிறேன்.


18.உங்களை பாதித்த ஆளுமைகள்...

கர்நாடக சங்கீதத்தில் மதுரைமணி, டி.கே.பட்டம்மாள், எம்.டி.ராமநாதன். இந்தத் தலைமுறையில் சஞ்சய் சுப்ரமணியன் என் அபிமானக் கலைஞர். என்.ரமணியோட புல்லாங்குழல் ரொம்பப் பிடிக்கும்.

இந்துஸ்தானியில் நிறைய இருக்காங்க. 

பீம்ஸென் ஜோஷி எனக்குக் கடவுள் மாதிரி .சி.ஆர். வியாஸ் தகப்பன் மாதிரி;எப்பவும் ஆறுதல் தருகிறவராக இருக்கார். மனம் சரியில்லை என்றால் அவரைத்தான் கேட்பேன். இப்போது பிரபாகர் காரேக்கர். இவர் இதமாக பெரியண்ணா மாதிரி கூடவே இருக்கார்! ‘அதனால என்னடா… எல்லாம் பாத்துக்கலாம்’ன்னு தைரியம் சொல்வார். 

எழுத்தில் என்றால் முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கேன்.

விடலைப் பருவத்தில், சுஜாதாவும் கல்கியும்தான். அதைக் கடந்ததும் வேற வேற எழுத்தாளர்கள் மடியில் போய் உட்கார்ந்துகொண்டேன்.


19.இந்த உலகத்தொற்றுக் காலத்தில் உங்களின் எழுத்து…

இப்பொழுது வேறுவழியே இல்லை. படிக்கவும் எழுதவும்  மட்டுமே செய்யறேன். நிறைய எழுதியிருக்கேன். அடுத்தடுத்து வெளியிடற திட்டம் இருக்கு.

20.நீங்க எழுதவந்த காலகட்டத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் இலக்கியத்தில் ஆதாரமாற்றம் எதாவது நடந்திருக்குன்னு நினைக்கிறீங்களா…

கண்டிப்பா இருக்கு. நான் எழுதவந்த காலத்தின் நாயகர்கள் மிகமிக ஆழமான சிந்தனை உடையவர்கள். மிக எளிமையான மொழியில் எழுதினார்கள். இப்போது, எளிய சிந்தனைகளை குழப்பமான மொழியில் எழுதுகிறதாகத் தோன்றுகிறது. மொழியுடைய அழகு கொஞ்சம்கொஞ்சமாக் காணாமப்போறது கண்முன்னாடி நடக்குது. மொழித்தூய்மை பற்றி நான் பேசவில்லை. அது அவசியம் என்றும் நினைக்கவில்லை. மொழிஒழுங்கு என்று ஒன்று இருக்கிறது. மொழியோட அமைப்பே அதுதான். அதனுடைய அழகும் ஆழமும் கெடுகிற மாதிரித் தோன்றுகிறது.

ஆனால் நான் புதியவர்கள் அனைவரையும் படிச்சிட்டதாகச் சொல்ல முடியாது. நான் படித்தவரை உள்ள அபிப்ராயம்தான் இது. இதை அனைவர் மீதுமான விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை...


21.இத்தனை ஆண்டுகள் இலக்கியத்தில் உள்ள மூத்தவராக, இளம் படைப்பாளிகளுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா?இளம் படைப்பாளிகளை வாசிக்கிறீங்களா?

இளம் படைப்பாளிகளை வாசிக்கிறேன். பெயர் சொல்லக்கூடாது என்ற பிடிவாதம் உண்டு.

இப்போது எழுதறவங்க நிறையப் படிக்கறது இல்லை என்று தோன்றுகிறது. பழைய ஆட்களைப் படித்திருந்தால் இவ்வளவு சொற்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் மலிந்த எழுத்து உருவாகி இருக்காது. 

பொதுவெளியில் மொழியைப் பேணும் கடமை இரண்டு தரப்பிடம் இருக்கிறது. ஒன்று பத்திரிகையாளர்கள்; மற்ற தரப்பு, எழுத்தாளர்கள். அவர்களே மொழியைக் கைவிட்டால் அது யாரிடம் போய் நிற்கும்.

22.அதற்கான வழிகாட்டுதலாக நீங்க என்ன சொல்வீர்கள்….

இந்தத் தலைமுறை எழுத்துகளையும், ஃபேஸ்புக்கையும் படிப்பதுடன் சேர்த்து, பழைய ஆட்களையும் படிங்க. பாரதி, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி என்று முழுமூச்சாப் படிங்க. அதிக நாள் எடுக்காது. இரண்டு வருஷத்துக்குள்ளாகக் கணிசமாகப் படித்துவிட முடியும். பாடப்பகுதி மாதிரிப் படிங்க. அதிலிருந்து சில நடைமுறைகள் தெரியவரும்.

23.இப்ப என்ன எழுதறீங்க…

நடுவில் நின்றுபோயிருந்த நாவலைத் திரும்ப ஆரம்பித்திருக்கிறேன்.  சிறுகதைகளும், குறுங்கதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அபூர்வமாக,  சில கவிதைகள் எழுதியிருக்கேன்! அப்புறம், கொஞ்சம் கவிதை மொழிபெயர்ப்புகள்...








Comments

Popular posts from this blog

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

பசியற்ற வேட்டை