‘சக்யை’ என்னுடைய முதல் தாெகுப்பு. ஜனவரி 2019 ல் வெளியாகியது. மூன்றாவது தொகுப்பான 'கடுவழித்துணை' க்கு பிறகு முதல்தாெகுப்பிற்கு முகமறியா வாசகியின் பகிர்வை காண்பது நிறைவளிக்கிறது. கோமதிக்கு என் அன்பு.
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : கமலதேவி
‘வாசக சாலை’ வெளியீடு
கமலதேவி அவர்களின் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பூடகம் பேசுபவை. நேரடியாகக் கதை சொல்லலைப் பின்பற்றியவை ஆனாலும் ஆழமான வாசிப்பை வேண்டுபவை.
பாய்ச்சல் நடையில் மொழி கதைகளில் ஓடுகிறது.. பெரும்பாலான தருணங்களில் இந்தத் தாவிப் பாய்ந்து கதை சொல்லும் தன்மையால் கதைப் போக்கினில் நாம் தடுமாறிக் கொண்டு சமநிலைக்கு வருவதற்காக மீண்டும் கடந்து போன வாக்கியங்களுக்கு வந்து விரும்ப வேண்டியுள்ளது..
கதாசிரியருக்குத் தமிழ்த் தொல்லிலக்கியங்களில் ஆழ்ந்த புரிதலும் பழக்கமும் இருப்பது அவரது மரபுசார் சொல்லாடல்களில் வெளிப்படுகிறது..
எழுத்தாளர் சிறந்த கதைசொல்லி என்பதற்கு கதைக் களங்களும் கருக்களும் கட்டியம் உரைக்கின்றன.
கதாசிரியரே முன்னுரைப்பது போல¸’ அவரைப் பாதித்த மனிதர்களின் கதைகள்.. அவற்றை நிகழ்வென்றும் புனைவென்றும் அடையாளப் படுத்தலாகும்’. ஆம்..நிகழ்புனைவுகள்…
கமலதேவி சித்தரிக்கும் பெண்கள் அலாதியான துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் நடை பயிலுகிறார்கள்.. தொகுப்பிலுள்ள 16 கதைகளில் சில பற்றி…
ஜென்சி டீச்சர் (நெடுஞ்சாலைப் பறவை) நீர் ஒட்டாத தாமரை இலையாய் துறவற்ற துறவியாய் பணிமுடித்து ‘எத்தனை பேரையோ கைதூக்கிவிட்டு’ திருப்தியுடன் நகர்கிறாள்..அடுத்த என்ன என்ற கேள்வியை அவள் வலுவாகப் பின்தள்ளினாலும் அது முன்வந்து உறுத்துகிறது..
“முழுசாச் செய்யணும்னா தனியாத்தான் இருக்கணும்”¸ ஜென்சி டீச்சரைப் போல…
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரை விட்டேற்றியாக எதிர்கொள்ளும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் மிளிரும் மிகத் தேர்ந்த பாத்திர வார்ப்பு கார்த்தி (உள்புண்)..
மதிப்பு மிகுந்த அரசு அதிகாரிப் பணியை கல்யாணப் பந்தலில் உதறிவிடுவதற்கில்லை என்பதைக் குறிப்பாலும் சொல்லாலும் உணர்த்திவிடும் பாங்கு அற்புதம்..ஆனாலும் பார்க்கவந்த பிள்ளை சலனத்தைக் கிளப்புவதை புறந்தள்ளிப் பார்க்கிறாள்..
அன்னை தந்தை இருந்தும் அவள்¸ “ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி”
வெள்ளையம்மாள் (சக்யை) 15 ஆம் நூற்றாண்டுப் பெண்மணி;..முஸ்லிம் படையெடுப்பில் தப்பிக்க திருவரங்கன் ஒளிந்து உலாப் போய்விட¸ திருவரங்கம் சின்னாபின்னமாகித் தவிக்கிறது..அரங்கன் போன இடம் அறிய தொடர்ந்து முஸ்லிம் தளபதியின் தாக்குதல்கள்..வெள்ளையம்மாள் தன் அழகால் நளினத்தால் பெண்மையின் ‘சக்யை’யால் (சாதுரியத்தால்) தளபதியைக் கேபாபுரத்திலிருந்து தள்ளிவிட்டுத் தானும் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டு திருவரங்கத்தை காப்பாற்றுகிறாள்…
‘அரங்கனின் சேவகி விண்ணேகினால் கிடைக்கும் மடப்பள்ளி நெருப்பும் துளசிமாலையும் அவளுக்குக் கிடைத்தன.’ அது மட்டுமா..அரங்கனின் கிழக்குக் கோபுரம் அவள் பெயரைத் தாங்கி ‘வெள்ளைக் கோபுர’மாய் நிற்கிறதல்லவா…
வீட்டு வாயிற்படியில் கழுத்தறுபட்டு கிடக்கும் ரேவதியும் (தெருவெங்கும் அவள் நடமாட்டம்)அவள் சடலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மனச்சிதைவுக்குள்ளாகி மரணமுறும் வேம்பும் துணிச்சலோடு துயரத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்..
சங்கரியும் சாந்தினியும் (நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று) அப்புறம் சாந்தினியின் கணவன் ராஜுவும் ஓருவர் பின் ஒருவராய் கதை சொல்லி கடைசியாக கதாசிரியரே வந்து கதையை முடிக்கும் கதை நடை அழகு.. இந்த நடையை விளங்கிக் கொள்ள கொஞ்சம் ஆரம்பத்தில் தடுமாறினேன் என்பதையும் சொல்லவேண்டும்... இது சாந்தினி கதையா.. ராஜுவின் கதையா.. ஆனால் தொகுப்பிலுள்ள நல்ல கதை...சாந்தினி கணவனைப் பிரியும் முடிவில் கதை தொடங்கி விடுகிறது... கதை முடியும் போது இவர்கள் சேர்ந்து வாழ்வதே சரி எனப் பட்டது..
'ராஜு அன்பானவர்' - சங்கரி
'ரொம்ப... அது மட்டும் போதுமா' - சாந்தினி
'ஆளோடு ஆளா இருக்கையில் என்ன பயம்..? - ராஜு
மெய்யாயி அம்மாயி ( செங்காந்தளின் ஒற்றை இதழ்) தாண்டவன் பெரியப்பா வீட்டைத் துறந்து போனபின்னும் நம்பிக்கையை கைவிடாத மனுஷி...
' என்ன பண்ணினாலும் ரெண்டு பொழுதுல புல் எட்டிப் பாத்துராது..?'
'புல்லு பூக்குது பாரு.. நல்ல பட்டம்.. விதைக்குறதெல்லாம் தப்பாம முளைக்கும்..'
கமலதேவியின் ஆண்கள் மட்டுமென்ன.. அவர்களும் தாமரையிலைத் தண்ணீர்தான்.. ஒட்டாமல்தான் இருக்கிறார்கள்..
யது (இப்படிக்கு) யாருக்கும் தொந்தரவில்லாத வாழ்தலை நன்கு தீர்மானித்துக் கொண்டவன்..
இலங்கை அரசன் இராவணன் (சிதை) கூட எரிந்து போன இலங்கை நகரின் சாம்பல் நாற்றத்தில் சாம்பாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்வதை மொழி அழகுடன் சொல்கிறார் கமலதேவி…
நிதான வாசிப்பைக் கோரும் கதைகள்..நிகழ்வுகளைக் கடத்தும் கவித்துவமான உரையாடல்களோடு கூடிய நல்லதொரு தொகுப்பு...
-Gomathisankar Gosar
Comments
Post a Comment