Skip to main content

இந்தியா டுடே இலக்கியஇதழ்

                  கண்ணனை அழைத்தல்   

1994 ஆம் ஆண்டு இலக்கியஆண்டுமலர்

இந்தியாடுடேவின் இந்தஇதழும்,முன்னால் பிரதமர் இந்திராகாந்தி பற்றிய முழுஇதழ் ஒன்றும் எனக்கு மிகவும் ப்ரியமானது. இந்தப்புத்தகத்தின் தாள்கள் ஔிமங்கி,சிதையத்தொடங்கி விட்டன. ஒருஇதழ் இத்தனை ஆண்டுகள் வாசிக்கும்படி இருப்பதே வியப்புதான்.

ஒரு மேமாதத்தில் பழையபுத்தகங்களை பிரித்து வைக்கும் போது அய்யா இதை எடுத்துக்கொடுத்தார். 

எழுத்தாளர்கள் எஸ்.ரா,ஜெயமோகன்,இரா.முருகன்,கோமல் சுவாமிநாதன்,சி.சு.செல்லப்பா,கல்யாண்ஜீ,கலாப்ரியா,யுவன்,தெளிவத்தை ஜோசப், அம்பை,வாஸந்தி என்று நீளும் இந்த இதழின்  படைப்புகளின்,படைப்பாளர்களின்  இலக்கியமுக்கியத்துவத்தை அன்று அறியவில்லை.


புலிக்கட்டம்,அனந்தசயனம் காலனி,நஞ்சு,சிலிகன் வாசல்,ஆயிரம்கால் மண்டபம்,பீலி மேலே போகிறது,வேறு வேறு,பார்வைகள்,வாடிவாசல் என்ற குறுநாவல்,காதில் வெண்டைக்காய் என்ற நாடகம் என்று அனைத்துமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் படைப்புகள்.
இந்த இதழில் எழுத்தாளர் அம்பையின் 'பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்' என்ற இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தக்கதை. முதன்முதலாக நான் வாசித்த அம்பையின் எழுத்தும் கூட.

எழுத்தாளர் அம்பை


அம்பையின் இந்தக்கதை எனக்கு அம்மா,அம்மாச்சி,பெரியம்மா,பக்கத்துவீட்டு அம்மா,அத்தை,அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது.இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்கள்  அம்மாச்சியும்,சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும்,படித்த அக்காவும்,வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.


 இந்தக்கதையில் வரும் குமுதாம்மா சமையலறை, சமையல் இவற்றிலிருந்து, உணவை ஆதாரமாக வைத்து, தான்இருக்குமிடத்தில் அன்பால்  தனக்குப்பிடித்த சூழலை கட்டியெழுப்பிக்கொள்கிறார்.

கணவரின் வேலைநிமித்தம் ,மூன்று பிள்ளைகளின் வாழ்வின் பொருட்டு மாநிலங்கள் மாறி ,நாடுமாறி வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான வாழ்க்கை.சுவையான உணவை ,மருந்தாகும் உணவை மற்றவர்களுக்காக அளிக்கும் அந்தக்கரங்கள், வாழ்வின் சுவையை உணவை கொடுப்பதன் வழி  சொல்கின்றன.



ஒருபிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக்கொண்டு,குமுதாம்மா விவாகரத்தான மகளுக்காக வெளிநாடு செல்கிறார்.அங்கே தினமும் மகள் உணவிட ஒரு அணில் கூட்டத்தை,வாழ்க்கை வேகத்தில் அவள் மறந்திருந்த பாரதிபாடல்களை,சுவையான உணவுகளை,பக்கத்துவீட்டாரை அவள் வாழ்வில் நுழைத்துவிட்டு அவளின் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை சுவையாக்கிவிட்டு வருகிறாள். 

‘காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் பாதத்தின் அடியே ஸ்திரமான தரை இல்லாதது போல உணர்ந்தாள்’ என்று கதையில் ஒருவரி வரும்.பெரும்பாலும் வாழ்வின் ஏதோ ஒருகட்டத்தில் இப்படி உணராத பெண்கள் இல்லை.ஆண்களுக்கும் இப்படியிருக்கலாம்.அதை கடந்து நடக்க, புறமாகவும் அகமாகவும் பிடிமானங்கள் தேவையாக இருக்கின்றன.

இந்தக்கதையில் வரும் குமுதாம்மாவின் மகளுக்கு பாரதியின் கவிதைகள் அப்படியானவகளாக இருக்கின்றன.வாழ்வின் உண்மையான தளத்தில், யாரும் உடன்வர இயலாத தனிமையில் துணையாக வருபவைகளை அந்தஅம்மா மகளுக்கு நினைவுபடுத்திவிட்டு செல்கிறார்.



(ஓவியங்கள் :சந்துரூ ,இந்தியா டுடே ) 

எங்களின் தமிழாசிரியர் எங்களிடம், “எவ்வளவு பெரிய வேலையிலிருந்தாலும், குடும்பத்திலிருந்தாலும், பிள்ளைகளுக்கான நேரம் போக கொஞ்சம் புத்தகம் வாசிங்க,” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். இன்று அவருக்கு பெரியநெருக்கடிகள் இல்லை என்பதால் பிள்ளைகள் புன்னகையுடன், “எங்க நேரம்? உங்களமாதிரியா?” என்கிறார்கள். என்றாலும் அடுத்த சந்திப்பிலும் சொல்வார். 

நான் வேலைக்கான தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த நாட்களில் அம்மாச்சியுடன் வயல்வீட்டில் பலநாட்கள் இருந்தேன். வீட்டிலிருந்து கிழக்கே இரண்டுகிலோ மீட்டர் தொலைவில் கண்முன்னே விரியும் பச்சைமலைக்குன்றை நோக்கி,  வெற்றுபார்வையுடன் நீண்டநேரம் அமர்ந்திருக்கும் என்னிடம் அம்மாச்சி, “புளியம்பழம் பொறுக்க போலாம் எந்திரிகண்ணு.காமாட்டு வயல்ல தண்ணி பாஞ்சுருச்சான்னு பாத்துட்டுவாம்மா,எந்திரி.. மலையாங்காட்டுல பெரண்ட நல்ல சதைப்பிடிப்பா இருக்கும் கிள்ளிட்டு வரலாம்,”என்று பிடித்து இழுத்துக்கொண்டு செல்வார். அம்மாக்கள் வாழ்வினை நோக்கி நம்மை செலுத்துவதற்காகவே பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தக்கதையில் குமுதாம்மா தன்கணவனை இழந்து, நாத்திக குடும்பமான தன் இன்னொரு மகளின் வீட்டில் தங்குகிறார். அங்கு புத்தகத்திற்காக அடித்தப்பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவின் தெய்வங்களை அமர்த்துகிறார். மீண்டும் அங்கும் சுற்றியுள்ளவர்கள் மேலான அன்பை உணவென்னும் அக்கறையால் பொழிகிறாள்.




அவளின் வீணையை மல்லாக்க வைப்பதற்கு போதுமான இடமில்லாத வீடு.அது நின்றுகொண்டே இருக்கிறது. அவர் சமையலில் தன்னை கரைத்துக்கொள்வதை ஒரு யோகம் போல செய்வதாக கதை உணர்த்துகிறது. ஆனால் முன்பெல்லாம் அவள் எங்கு சென்றாலும் திரும்ப வருவதற்கு அவள்வீடு இருந்தது. இப்போது அது இல்லாததால் தனிமையில் சோர்வடைகிறார்.

தன் கடைசிகாலத்தில் அம்மாச்சி எங்களுடன் இருந்தபோது அவரின் ஏக்கம் தெரிந்தது. அவரின் இறந்த பின்நாட்களில் தான் அவரின் அன்றாடத்தின் மனிதர்களை நாங்கள் அறிந்தோம். எவ்வளவு நெருங்கிய உறவென்றாலும் அன்றாடவாழ்வில் இருப்பதில்லை. மின்கம்பம் வேலை செய்பவர்கள் ,பள்ளிக்கு சென்றுதிரும்பும் மலையடிவாரத்துப்பிள்ளைகள்,சுள்ளிகள்  பொறுக்க வருபவர்கள் என்று அம்மாச்சி தனக்கான மனிதர்களை அங்கே சேர்த்து வைத்திருந்தார்.

வாழ்வு எவ்வளவு நவீனமானாலும்,எங்கு பறந்தாலும், மனம் அத்தனை விரைவில் தன் ஆழத்தை மாற்றிக்கொள்வதில்லை போலும். இன்றும் வேறுஊருக்கு குடிபெயர்ந்தவர்கள் ,தன்ஊருக்கு செல்வதை வாழ்வின் இறுதிகாலத்து விருப்பமாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் தானே?

இந்தக்கதையில் குமுதாம்மாவிற்காக அவர்வசித்த வீட்டை வாங்கித்தர மகள்கள் முடிவடுப்பதோடு கதை முடியும். ஒருஇல்லம் என்பதும் ஒரு ராஜ்ஜியம் போலத்தான்.  அதன் அரசிகள் அதில் அன்றி மனம் நிறைவதில்லை என்பதை இந்தக்கதை சொன்னாலும் கதையின் முழுபரிமாணம் வேறு.

எங்கு சென்றாலும் பராசக்தி முதலியோருடன் இருக்கும் குமுதாம்மா, தன்மகள் குடும்பத்தின் இறைமறுப்பை  ,அதைப்பற்றிய கேள்வியின்றி தன்சகமனிதரை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறார்.

வீட்டின் சமையலறையிலிருந்து எல்லாஉயிர்களுக்குமான நேசம் ,ஔியின் கீற்றுபோல பாய்ந்து அவரின் வாழ்வையும் தன்னளவில் வெளிச்சமானதாக மாற்றுகிறதாக தெரிகிறது. 

“கிருஷ்ணா ரா….” என்று அந்தஅம்மாள் காக்கையையோ,அணிலையோ சோறு வைக்க அழைக்கிறாள். கிருஷ்ணா ரா ….என்ற அழைப்பின் மூலம் தன்வாழ்விற்குள் இனிமையை இழுத்துக்கொள்கிறாள். எங்கள் பகுதியில் வாசலில் காலையில் கண்ணனின் பாதங்களை தினமும் வரையும் போது, “கண்ணா வா..,”என்று நினைக்கும் வழக்கமுண்டு. கண்ணன் என்ற உருவகம் அன்பு,இனிமை என வாழ்வின் நேர்மறையான சுவையாக கொள்ளப்படுகிறது.இந்தக்கதையிலும் ஒரு அன்னை, தன்செயல்களத்தின் ஜன்னல் இடைவெளியில் தெரியும் பிரபஞ்சத்தின் இனிமையை அழைக்கிறாள்.

இதை எழுதுகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கிருஷ்ணமதுரம்’ என்ற வாழ்பனுவக்கட்டுரை நினைவிற்கு வருகிறது.அதில் இனிப்புபூரணமிட்ட போலியை  ஜெயமோகனுக்குக்கொடுக்கும் ராதாபக்தர், “ உடம்ப பாத்துக்க கிருஷ்ணா,” என்று சொல்வார்.ஒருநேரத்து உணவளிப்பவர் நமக்கு சொல்லாமல் சொல்வது அதைத்தான். நாமும் சகமனிதருக்கு, பிறஉயிர்களுக்கு உணவளிக்கையில் அதையே செய்கிறோம்.கிருஷ்ணமதுரம் என்ற கட்டுரை இந்தஅளவில் ஒருபரிமாணத்தில் மட்டும் நிற்கும் ஒன்றல்ல.

உணவு சமைக்கும் ஒவ்வொருவரும் விருப்பத்தோடு உண்ணபவரை கண்டு மனம்நிறைகிறார்கள். முதல் கவளஉணவை எடுத்து விவசாயிக்கு நன்றி சொல்லி, அவர் எங்கிருந்தாலும் தன்குடும்பத்தோடு நல்லாருக்கனும் என்று நினைத்தபின்பு உணவுண்ணும் வழக்கம் எங்களுக்கு எப்படியோ சிறுவயதிலிருந்து உண்டாகியிருந்தது. அதனால் என்ன நடந்துவிடப்போகிறது? என்பது வேறு.  உணவைவிளைப்பவர் ,அதை சமைப்பவர்கள் நன்றாக நடத்தப்படுவது இன்று குறைந்திருக்கிறதாகத் தோன்றுகிறது.

அதனாலேயே வீட்டில் சமைப்பது இன்று சுமையாகி இருக்கிறது.அம்மாச்சி ஒரு விவசாயி..அவர் சமையலில் சலித்துப்போகவில்லை. காரணம் தாத்தா வேலைகள் செய்து கொடுத்தார். முன்பு அம்மாவுக்கு சமையல் காலை நேர போராட்டமாக இருந்து, இன்று சலிப்பாக மாறியிருக்கிறது. காரணம் அய்யா நேரத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.அவர் எந்தவகையிலும் உதவிசெய்யாதவர்.இன்று அக்காவுக்கு சமைப்பது என்பது வேண்டாவெறுப்பு. காரணம் படித்துவிட்டு, வேலைக்கு செல்லும் வாய்ப்பில்லாத குடும்பசூழலில் சமைக்கும் கசப்பு அவளுக்கு. திருமணமானப்பின்னரே சமைக்க பழகியிருக்கும் தங்கைக்கு அதுசவால். நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் தாத்தாவின் அதே மனநிலை இன்றைய இல்லத்தரசர்களுக்கு வந்திருப்பதால், அந்தசவாலில் தானும் பங்கெடுத்து “கிருஷ்ணா ரா,” என்று புன்னகைக்கிறார்கள்.

நடைமுறை வாழ்விலிருந்து சற்று விலகி நடக்கும் போது, சமூகம் தனியே போகாதே என்று வன்மையாகவோ, மென்மயாகவோ நம்மை கண்டிக்கிறது. ஆனால் அரிதாக ஒன்றிரண்டு ஆட்கள் சேர்ந்து நடக்காமல் கொஞ்சம் தள்ளி நடந்தா என்ன..நாங்க இல்லையா என்ற நம்பிக்கையை தருக்கின்றனர். அப்படி இந்தக்கதையில் இந்தஅம்மா தன்பிள்ளைகளின் வாழ்வில் குறிக்கிடாமல் ,அவர்களின் வாழ்வைப்பார்த்தபடி ,அவர்கள் தடுமாறும் நேரங்களில் கைப்பிடிக்கிறாள்.

மீண்டும் பிள்ளைகள் இவளின் ஆதாரம் நழுவும் நேரத்தில் கைநீட்டுகிறார்கள். இந்த வாழ்வறம் இன்று கொஞ்சம் நழுவும் நேரத்தில் இந்தக்கதை வாசிக்கபட வேண்டிய ஒன்று. இது யாராவது சொல்லித்தான் தெரியவேண்டுமா? என்றால் இன்றைய உலகமயமானவாழ்வில் பொருளியல் தேடலில் தன் வாழ்வே தனக்கு சுமையாகும் காலத்தில், தனிமனித பதற்றம் காரணமாக ,அறியாமல் கடிவாளமிட்ட நம் மனதிற்கு இதுபோன்ற கதைகள் தேவைப்படுகின்றன.

வாழ்வின் எதார்த்தம் என்பது நம்பிக்கை போலவே நம்பிக்கை இன்மையும், இனிமையை போலவே கசப்பும், நிறைவைப்போலவே வறுமையும் நிறைந்தது என்பதால் “செயல் செய் பார்த்தா” என்று சொல்லி புன்னகைக்க கண்ணன் ஏதோ ஒரு வடிவில் தேவைப்படுகிறான். இந்தக்கதையில் வீடு, பக்கத்துவீடு என்ற எல்லையிலேயே எந்தநாட்டிலும் இருக்கும் குமுதாம்மா, தன் செயலின் மூலமே வாழ்வை நிறைவாக ஆக்கிக்கொண்டு, மற்றவர் வாழ்விற்கும் சுவை தருபவராக  இருக்கிறார்.

அம்மா தனிமனுஷி இல்லை. அவள் ஒரு ஸ்தாபனம் என்று கடைசியில் குமுதாம்மாவை  அவரின் மகள் சொல்வாள். இன்றுவரை இல்லத்தரசிகள் ஒவ்வொருவருமே ஒருஸ்தாபனமே.

பொறியியல் படித்த இல்லத்தரசியான எங்கள் அண்ணி குழந்தைகள் பிறப்பிற்கு பின் தனக்காக தையலை தேடிக்கண்டடைந்தாள்.அந்த ஒருதுளி அவளின் பெருங்கடலை இனிமயாக்குவதை சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்.

தனக்கான ஒன்று, மனிதர்க்கு என்றும் தேவைப்படுகிறது .இந்தக்கதையில் அந்தஅன்னைக்கு அவளுக்கான சிறு ஒருஇல்லம். அந்த இல்லம் ஒருகுறியீடு மட்டும்தான். தனக்கான ஒன்றை கண்டடையாத வாழ்வில் எத்தனை இருந்தாலும் அடியில் ஓட்டையான பானைதான் வாழ்வு.

பெண்கள் சமையல் ,வீடு, குடும்பம்  என்பதில் தன்நிறைவுடன் செயல்படும் காலம் மாறி தனக்கான வேலை,தனக்கான விருப்பத்தேர்வுகளில் மனம் நிறைவு காண்கிறது. இதெல்லாம் அறியாமல் தன்இயல்பிலேயே அப்படி நிறைவுகாணும் ஆளுமை ஒன்றை அம்பை காட்டுகிறார்.

ஆனால் இன்று மீண்டும் படித்த இல்லத்தரசிகள் கணிசமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதை பெண்களைப் பார்த்து கனிவுடன் புன்னகைக்கும் ஒருஅன்னையின் புன்னகையாக எனக்குத்தோன்றும். இன்று பசங்களுக்குமே  இந்தக்கதை சிலவற்றை சொல்கிறது என்று தோன்றுகிறது.

 ஒரு தனிமனுஷியின் வாழ்வில் அனைவரையும் போல அமையும் வழக்கமான செயலில், அவர் காண்டடையும் மனநிறைவை சொல்லி மனிதரின் அடிப்படையான நடைமுறை விஷயத்தைப் பற்றி பேசுகிறது . அந்த மனுஷி தன்னை அந்தத்தளத்திலிருந்து சற்று மேலெழுந்தவராக அதே செயலினால்  தன்னை மாற்றிக்கொள்கிறார். ஒருகதை தன்னை வாசிப்பவரால் உருமாறுவது..பொருள்கொள்ளப்படுவது.அம்பையின் புன்னகை எனக்குப் புரிவதால் நானும் புன்னகைக்கிறேன்.முகம் காண புன்னகைக்கும் சேய் என.


(பகிர இன்னுமிருக்கிறது.....) 

                                                                                                                            


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...