[2020 ல் எழுதிய சிறுகதை] மாயை சிலநாட்களாக பெய்து கொண்டிந்த மழையால் ஆறு பெருகி ஏரிகளில் வாய்க்கால்களில் ஓடைகளில் நிறைந்து அலையடித்துக் கொண்டிருந்தது.இருட்டிற்குள் நீரின் மினுமினுப்பு மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்திருந்த பாரிஜாதத்தின் கண்களிலும் அதே ஈரமினுமினுப்பு. இருவரும் நேரம்காத்து ஏரிக்கரையில் நின்றார்கள்.ஏரிக்காற்று தயங்கித்தயங்கி நகர்ந்து சென்றது.மேட்டிலிருந்து நோக்க தெருவின் கோடியில் பந்தல் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.சிவராசு வண்டியின் இருக்கையை தட்டியபடி சட்டென்று பேச்சை துவங்கினார். “பாரி…பாரிஐாதம்..” கிழக்கு பக்கம் திரும்பியிருந்த பாரிஜாதம் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஒற்றை வைரம் மூக்கில் ஔிரும் முகம் கண்டு அவர் கண்களை சுருக்கிக்கொண்டார்.சிரித்தாலும் புன்னக...