Skip to main content

மாயை : சிறுகதை

       [2020 ல் எழுதிய சிறுகதை]

                                                                      மாயை

சிலநாட்களாக பெய்து கொண்டிந்த மழையால் ஆறு பெருகி ஏரிகளில் வாய்க்கால்களில் ஓடைகளில் நிறைந்து அலையடித்துக் கொண்டிருந்தது.இருட்டிற்குள் நீரின் மினுமினுப்பு மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்திருந்த பாரிஜாதத்தின் கண்களிலும் அதே ஈரமினுமினுப்பு.

இருவரும் நேரம்காத்து ஏரிக்கரையில் நின்றார்கள்.ஏரிக்காற்று தயங்கித்தயங்கி நகர்ந்து சென்றது.மேட்டிலிருந்து நோக்க தெருவின் கோடியில் பந்தல் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.சிவராசு வண்டியின் இருக்கையை தட்டியபடி சட்டென்று பேச்சை துவங்கினார்.

“பாரி…பாரிஐாதம்..”

 கிழக்கு பக்கம் திரும்பியிருந்த பாரிஜாதம் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஒற்றை வைரம் மூக்கில் ஔிரும் முகம் கண்டு அவர் கண்களை சுருக்கிக்கொண்டார்.சிரித்தாலும் புன்னகைத்தாலும் அழுதாலும் வராத முகவசீகரம் சோகத்தின் மென்மையில் இவளுக்கு வந்துவிடும்.அவளுக்கு பின்புறம் கிழக்குவானில் பச்சைமலைத்தொடரின் பின்னிருந்து மந்தமான சூரியஔி பரவத்தொடங்கியது.

“அவரு சரியில்லன்னு கேள்விப்பட்டது நெசந்தான். வரப்பு வெட்டுக்கு இங்கருந்து வந்த ஆள் சொன்னான்.நீ நிதானிக்கனும்..மனுஷருக்கு என்னமும் நடக்கலாமில்லியா..ம்.. ”என்றபடி கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து வண்டியை நகர்த்தினார்.

சட்டென்று வானம் இருண்டு மழை வரும் போல இருந்தது.அவர்கள் கரையிலிருந்து இறங்கி நடந்தார்கள்.பாரிஜாதம் மெதுவாக நடந்தாள்.தெரு வெறிச்சோடிக்கிடந்தது.ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்தாள்.தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.கம்பீரத்திற்கென்ற அழகு அவளுடையது.அது திமிர் என்றும் அகங்காரம் என்றும் பிழைபட்டு கொண்டிருப்பது இந்தத் தெருவில் தான்.பந்தலிடப்பட்டிருக்கும் வீட்டை அடுத்திருந்த வளைவில் நான்காவது வீடு அவளுடைய பிறந்தவீடு.ஊர்முழுக்க சொந்த பந்தங்கள்.

சித்தான் வீட்டுவாசலில் மின்விளக்கை எரியவிட்டு கையில் வாளியுடன் நின்ற தங்கம்மாள், “ பாரி நல்லாருக்கியா..யாராச்சும் செத்தாதான் பொறந்த ஊர எட்டிப்பாப்பியா..நேத்து ராத்திரி உங்கண்ணன், பாரி எழவுக்கு வரும்..பாத்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னுச்சு,”என்றாள்.

“பொறந்தவன் வீட்டு விசேசத்துக்கு வரலேன்னா சொல்றோம்..வைங்க,”

“ வீட்டுல பெறந்த பிள்ளைய அழைக்காமையா விசேசம் வச்சிருவோம்,”என்று சிரித்து, “என்ன அண்ணி ஆள் குழஞ்சு போயிட்ட..குரலுகூட சரியில்ல…ஒடம்ப்பாரு..”என்றாள்.

பாரிஜாதம்,“அங்க பாத்துட்டு வூட்டுக்கு வாரேன்,”என்றபடி நடந்தாள்.சிவராசு திரும்பி பாரிஜாதத்தை பார்த்தார். நெசந்தான். நீரில்லாமல் வெள்ளாமை வதங்கிய வயல் கணக்காக இருந்தாள்.

சிவராசு பந்தலுக்கு மேற்கே நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளுக்கு அருகில் சென்றார். ஸ்வாதி தாவணியை இடையில் செருகியடி ஓடி வந்து வண்டியை வாங்கி நிறுத்தினாள். வண்டியை தொட்டுத்தொட்டு பார்த்துக்கொண்டு சாவியுடன் வந்தாள்.

“ம்மா...வண்டிய முடிஞ்சமட்டும் ஓட்டு.நாளைக்கு குடுத்தா போதும்,”என்று சாவியை நீட்டினார். தயக்கத்துடன் சிரித்து சாவியை வாங்கிக்கொண்டாள்.அவளை பார்க்கும் பொழுது அத்தை வீட்டிற்கு வரும் நாட்களில்... மாமா மாமா என்று சுற்றி வரும் சிறுவயது பாரிஜாதம் நினைவிலிருந்து எழுந்து வந்தாள்.

 சிவராசு பாரிஜாதத்தை காரணமில்லாமல் அழைத்துக்கொண்டே இருப்பான்.“போடா..மாமா,”என்று அடிக்கடி கோவத்தில் சொல்வாள். அத்தை அடிக்கவருவாள்.சிவராசு குறுக்கே நின்று, "தெரியாம சொல்லிட்டா விடு அத்த," என்பான்.

அவள் பெரியப்பிள்ளையானதற்கு தென்னம்கீற்றால் குடிசை கட்டும் போது கைதவறி மட்டையை விட்டான்.உள்திண்ணையில் அமர்ந்திருந்த அவள், “மாமா..என்னடா பண்ற..”என்று வாயில் கைவைத்து சிரித்தாள்.

ஆளாளிற்கு பாரிஜாதத்தை 'இப்பவே வாய்க்கொழுத்தா எப்பிடி கரைசேக்கறது, என்று பேசத் தொடங்கினார்கள்.அம்மா கலங்கிய கண்களுடன் 'எத்தனவாட்டி சொன்னேன்டீ' என்கிற பாவனையில் அவளைப் பார்த்தாள்.

மிரண்ட கண்களில் கண்ணீர் வழிய பட்டுப்பாவாடை சட்டையில் அமர்ந்திருந்த பாரிஜாதத்தை பார்த்த சிவராசு வேகமாக, “இப்ப என்ன சொல்லிருச்சு.என்னத்தானே என்னடான்னு கேட்டுச்சு.உங்கள பேசலையே..”என்றான். அம்மா, அத்தைகள் கூட்டம் வாயில் கைவைத்து நமுட்டு சிரிப்புடன் அமைதியானார்கள்.ஆனால் அதற்கு பின் பாரிஜாதம் மறந்தும் கூட வாடா போடா என்று அழைக்கவில்லை.

சிவராசு உள்ளே நுழைந்து குளிர்பதனபெட்டியில் உடலாய் கிடந்த மாமனை பார்த்துவிட்டு வெளியில் கிடந்த நாற்காலியின் அமர்ந்தார்.மெலிந்த கரிய உடலை நாற்காலியின் ஒருபுறமாக சாய்த்துக்கொண்டார்.தோளில் கிடந்த பருத்தித்துண்டை எடுத்து மடியில் போட்டுக்கொண்டார்.

ஸ்வாதி பாவாடையை ஒருபுறம் தூக்கி செருகியபடி  கையில் தேநீர்கோப்பைகள் நிரம்பிய தட்டுடன் வந்தாள்.கால்கொழுசின் அசைவில் அவளின் நடையின் துறுதுறுப்பு தெரிந்தது.குனிந்தபடி அவள் கால்களையே பார்த்து கொண்டிருந்தார்.அவள் அருகில் வந்து நின்றதையும் அறியவில்லை.

“சின்னதாத்தா..டீ எடுத்துக்கங்க,”என்றாள். ஒரு காகிதகோப்பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பந்தலில் வாழைமரம் கட்டுபவர்களின் சத்தத்தால் திரும்பினார்.வாழையிலைகள் தலைப்பாகையை தடவிச்செல்ல ரகுராமன் உள்ளே நுழைந்தார்.அங்கிருந்தவர்கள் அனைவரும் நடந்து வரும் ரகுராமனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இறந்தவர் மகன்பழனியும், அவனின் பங்காளி வரிசையும்  வருகிறவர்களுக்கு ‘கை’க்கொடுப்பதற்காக இருகைகளாலும் துண்டை ஏந்தியபடி நின்றார்கள். அருகில் கிடந்த காலி நாற்காலிகளை நோக்கி ரகுராமன் வந்ததும் சிவராசு எழுந்துகொண்டார். 

“தம்பி..உக்காருங்க…”என்று தன்துண்டால் நாற்காலியைத் துடைத்துவிட்டார்.ரகுராமன் அமர்ந்ததும், “பாப்பா…டீ கொண்டா,”என்பதற்குள் சிவராசுவின் கையிலிருந்த கோப்பையை அவர் பிடித்து எடுத்துக்கொண்டார்.

ரகுராமன் அருகிலிருந்த நாற்காலியை இழுத்து சிவராசுவைப் பார்த்து, “இதுல..போட்டுக்குங்க,”என்றார். 

“நான் ஒக்காந்துக்கறேன்..ஒக்காந்துக்கறேன்.நீங்க எடுக்காதிய..”என்று அமர்ந்து கொண்டார்.

ரகுராமனின் கண்கள் தொலைத்த பொருளை தேடும் சிறுவனின் கண்கள் என அலைபாய்ந்து கொண்டிருந்தன.நாற்காலியை அவ்வப்போது தட்டிக்கொண்டிருந்தார்.

சிவராசுவுக்கு மேள சத்தத்தில் நெஞ்சு அதிர்ந்து கொண்டிருந்தது.தலைப்பாகை கட்டி, முழுக்கை வெள்ளைசட்டை வேட்டி, கைக்கடிகாரம், கருப்பு பட்டா செருப்புடன் நமிர்ந்து அமர்ந்திருந்த ரகுராமனை கண்டு சிவராசு படபடப்பாக திரும்பிக்கொண்டார்.

சட்டென்று இளவயது ரகுராமன் பந்தலினுள் நுழைந்தான்.கண்களை கசக்கிக் கொண்டார்.நடந்து அருகில் வந்து ரகுராமனிடன், “ய்யா..வீட்டுக்கு போலாங்கய்யா..வாங்க..தலையில கட்டியிருக்க துண்டை எடுங்க,”என்று கையைப் பிடித்தான்.அவர் உதறிவிட்டார்.

“இருக்கட்டுந் தம்பி...அவர் பாட்டுக்கு மனுஷங்கள பாத்துக்கிட்டு இருப்பாரு,”

அவன் சிவராசுவின் வலப்பக்கம் அமர்ந்தான்.

“சாரோட பையனுங்களா தம்பி..”

“ஆமாங்க..”

“பி.எச்.டி யா என்னமோ படிக்கறதா சொன்னாங்களே….”

அவன் சங்கடமாக திரும்பி, “அதவிட்டாச்சுங்க..வேலைக்கு பரிட்ச்சை எழுதறேங்க..”என்றான்.

பக்கத்திலிருந்த கிழவி, “பரம்பர பழக்கம்..ஒறவுமுற சொல்லாம..யாரோன்னு பேசறயே..ரகுராமனுக்கு மவன்னா இவுகள அய்யான்னு கூப்பிடு,”என்றாள்.

இவன் படக்கென்று வேகமாக, “இன்னிக்கு ஒறவுமுறன்னு சொல்லுவீங்க..நாளைக்கு சின்னதா எதான்னாலும் அவன் யாருடா நமக்கும்பீங்க…”என்றான்.

“எதுக்கு கோவப்படறீங்க…”

“இல்லீங்க..உங்கமேல மரியாதை இருக்கு.ஆனா ஒறவு சொல்லி கூப்பிட்டா ஒறவாயிருமா சொல்லுங்க,”

“அதவிடுங்க தம்பி.அய்யாவுக்கு டாக்டரு என்ன சொல்றாங்க..”

அவன் முகத்தில் சலிப்போ எரிச்சலோ ஏதோ ஒன்று நிறைந்தது.தினமும் யாராவது இந்தக்கேள்வியை கேட்டுக் கொண்டிப்பார்களாக இருக்கும்.ரகுராமனின் வீட்டுஆள்  நேரடியாக கையில் கிடைத்ததால், தன் மனதிலிருப்பதை சிவராசுவால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

“அல்சைமர்..”

“என்னது தம்பி?…எப்ப குணம் தெரியுமா?”

“இது மறதி நோய்ங்க…மாத்திரை குடுத்துருக்காங்க..”

“ம்..எதனால இப்படின்னு எதாச்சும் சொன்னாங்களா…”

“பரம்பரையா வருங்களாம்.அலைச்சல்,சத்தான ஆகாரம் இல்லாதது,டென்சன்,பயம்,ரத்தகொதிப்பு….சொல்லிக்கிட்டே போறாங்க..இதுதான்னு இல்லீங்க,”

“விதிக்கு ஆயிரம் பேருங்க…”

அவனருகில் வந்த ஸ்வேதா, “மாமா..டீ..”என்றாள்.

அவன், “இங்கபாரு பாப்பா..அண்ணன்னு கூப்பிடனும் சரியா..” என்றான்.சிவராசு அவன் கோபத்தை கண்டு புன்னகைத்தார்.ரகுராமனின் மனைவி வந்ததும் ரகுராமனும் எழுந்து இறந்தவர் உடல் கிடந்த இடத்திற்கு சென்றார்.

பையன் அம்மாவுடன் செல்லும் அய்யாவைப் பார்த்தான்.கல்லூரி முதலாமாண்டில் விடுதியில் அவனை பார்க்க வந்தார். சரண் இவன் தோளில் அடித்து, “உங்கப்பா கில்லிங் ஹேன்சம் டா..”என்றான்.கண்கள் திரையிட எழுந்து சென்று பந்தலிற்கு வெளியே நின்றான்.

பாரிஜாதம் சித்தப்பாவின் உடல் அருகே கிடந்த முக்காலியில் அமர்ந்திருந்தாள்.ரகுராமன் இறந்தவரை பார்த்தபடியே நின்றார்.ரகுராமனின் மனைவி பாரிஜாதத்தைக் கண்டதும் தடுமாறி பின் அவள் அருகில் சென்றாள்.பரிஜாதம் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

பாரிஜாதம் களைத்தக் குரலில், “நாஞ்செஞ்ச பாவமென்ன அறியேனே..முள்ளுல ஏத்தி நிக்கவைக்கும் மகராசா..என்ன பாவத்துக்குன்னு ஒருவார்த்த சொல்லிடுமய்யா,”என்று இன்னொருத்தியையும் பிடித்தபடி அழுதாள். ரகுராமன் அவர்களை பார்த்துக்கொண்டு நின்றார்.

வெளியே சிவராசு தன் சட்டை பையிலிருந்த மாத்திரையை ஸ்வாதியிடம் கொடுத்தார். பாரிஜாதத்திற்கு கொடுக்கும் படி சொல்லிவிட்டு மனசாகாமல் பின்னால் சென்றார்.

பாரிஜாதம் புறவாசல் வழி வெளியே வந்து வீட்டின் பக்கவாட்டில் நின்றாள்.கறவை மாரி வீட்டுப்படலில் வெண்மையிலும் நீலத்திலுமாக சங்குப்பூ பூத்திருந்தது.

பள்ளி செல்லும் வழியில் ஒரு நாள், “ரகு அந்தபூ பறிச்சுத்தாயேன்,”என்றாள்.

“அத தலையில வைக்கமாட்டாங்க பாரி…”

“நானு புத்தகத்துக்குள்ள வச்சுக்கிறேன்..அழகா இருக்கு,”

அவள் பெரியப்பிள்ளையானதும் அப்பா பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டார்.அந்த ஆண்டில் ரகு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துகொண்டு வந்து தருவான்.அவன் ஒன்பதாவது படிக்க வைரிசெட்டி பாளையத்திற்கு செல்லத் துவங்கியதிலிருந்து அவனை தூரத்திலிருந்து பார்ப்பதோடு சரி. வீட்டில் ரகுவின் தங்கையுடன் தாயம் விளையாட செல்வாள்.

பி.யூ.சி விடுமுறையில்தான் அத்தனை அருகில் நாள்முழுதும் நடமாடிக்கொண்டிருந்த ரகுராமனை நன்றாக பார்த்தாள்.அடர்ந்த முடி நெற்றியில் விழும்.அவனை பார்க்கும் போதெல்லாம் சாமி சிலருக்கு மனசையும், உடம்பையும் ஒரே கணக்காக தருகிற அதிசயம் நடந்துருது என்று பாரிஜாதத்திற்கு தோன்றும்.இளம்வயதில் மரத்திலிருந்து விழுந்து உடைந்த இடதுகையின் வளைவு அவனை முழுமையாக்காமல் விட்டது.


அந்த ஆண்டு திருவிழாவிற்கு ரகுராமன் நாடகத்தில் கண்ணனாக வேடமிட்டான்.மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து குழல் ஊதிக்கொண்டிருந்த கண்ணனின் இருபுறமும் பாமாவும் ருக்மணியும் பின்னலை ஆட்டியபடி நின்றார்கள்.தேவர்உலகிற்கு சென்றுவந்த கண்ணன் உள்ளங்கையில் இளம் பச்சை இலைகளுடன் உறங்கும் குழந்தை என சிறுகன்று அமர்ந்திருந்தது.அதன் துவட்டம் கண்டு மண்ணில் நடந்தவன் நிமிர்ந்த இடத்தில் அதை நட்டான்.அது ருக்மணியின் தோட்டம்.அது வளர வளர ருக்மணியின் அதீத மலர்ச்சி கர்வமானது.பாமா உள்ளுக்குள் சோர்ந்திருந்தாள்.கண்ணனின் பார்வை கண்டு மரத்தின் கிளைகள் திரும்பிக்கொண்டன.

அவன் கனிவின் நீர் கொண்டு வளர்ந்து ,புன்னகையின் இளம் வெயில் கண்டு பூத்தது பவளமல்லி.பாமாவின் முகச்சிவப்பு காம்பாக ,இவன் வெண்ணிற புன்னகை இதழ்களாக பவளமல்லி பின்இரவில் பூத்தது. அதிகாலையில் பாமாவின் தோட்டத்தில் பூக்கள் உதிர்ந்து பரவின.ருக்மணி அடிமரத்தில் சாய்ந்து கண்ணீர்விட்டாள்.அந்தக்கண்ணீர் துளிக்கு வைரத்தின் ஔி.அந்த ஔியில் பிரகாசமானது தோட்டம்.அன்பின் புன்னகையும் கண்ணீரும் மலரும் தோட்டம் அது.அதில் எதற்கும் பேதமில்லை.திரைவிழுந்ததும் பின்னிருந்து வந்தவன் பாரிஜாதத்தின் கண்ணன். 

பதின்வயதின் அன்பு உதிக்கும் வெளிச்சத்திலேயே தன்னை காட்டிவிட்டது.ரகுராமின் அம்மா வாளிக்கயிற்றை எடுத்து விளாசியதில் பத்துநாட்களாக காய்ச்சலில் கிடந்தான்.ஒருநாள் பாரிஜாதத்திடம் பேசியதற்காக விளக்குமாறால் அம்மா அடித்ததை பொறுக்காமல் தெற்குவயலிற்கு ஓடினான்.பின்னாலேயே பக்கத்துவீட்டு அம்மாசி ஓடிவந்தான்.கயிற்றை மரத்தில் போட்டு கழுத்தில் மாட்டியவனை கட்டிப்பிடித்து, “வேணாண்ணே..”என்று அழுதான்.

கொத்துவேலைக்கு செல்லும் அய்யாவுக்கு மதியசோறு கொடுக்க சென்ற ரகுராமிடம் அய்யா, “நம்ம தனியாளுங்க தம்பி.அவங்க சாதிசனத்துல பெரிய கூட்டம்.நமக்கு வீட்ல ரெண்டு பிள்ளைக இருக்கு.அதுகள வெளியவிடாம வளத்தாச்சு.வேணாம் தம்பி..பிள்ளைகளுக்கு மரியாதை கொறவு வந்ததுன்னா குடும்பம் அழிஞ்சு போயிரும்,”என்றார்.

அதுவரை அவனுக்கு இருந்த தைரியம் கரைந்து ஒன்றுமில்லாமல் போனது.அவன் தெய்வங்கள் அவன் மீதிருந்த தங்களின் கரங்களை எடுத்துக்கொண்டதற்காக அழுதான்.காட்டிலும் மேட்டிலும் பசிதாகத்துடன் கிடந்தான்.

"சும்மா வீட்லயே கிடக்காதண்ணே," என்று அம்மாசி மூட்டை தூக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.படிச்ச பிள்ளையை வேலைசெய்யவிடாமல் கணக்கெழுத வைத்துக்கொண்டார்கள்.

ரகுராமனின் கணிதஆசிரியர் அவனுக்காக ஆசிரியப்பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தார். மதிப்பெண்அடிப்படையில் தேர்வாகியிருந்த கடிதம் வந்தது.அவன் மாமா வீட்டிற்கே வந்து முசிறிக்கு பக்கத்திலிருக்கும் புள்ளம்பாடியில் நடந்த நேர்முகத்திற்கு அவனை அழைத்து சென்றார்.

அவன் தோற்றத்தை கண்ட பேராசியர் மீனாட்சி,“நல்லா படிக்கறப்பையன் .முதல் மார்க்குல வந்திருக்க.இப்பிடி இருக்கக்கூடாது.இனிமே நீ ஒரு ஆசிரியர்.முறையா உடுத்தனும்..பேசனும்..நடந்துக்கனும்,”என்று தலையில் கைவைத்தார்.அந்தத் தொடுகை அவனை மாற்றியது.அவன் நெஞ்சிற்குள் அது என்றும் இருந்து கொண்டேயிருந்தது.

மாயனூரின் புறப்பகுதியில் கருவேலங்காட்டின் ஒரு பகுதியை அழித்து பயிற்சிப்பள்ளி கட்டியிருந்தார்கள்.காவிரி பாயும் நிலத்தின் வரண்ட முகம்.இரண்டு கட்டிடங்களில் ஒன்று விடுதி.சாயுங்காலம் வெளியில் அமர்ந்து ,அந்த முள்வெளியை பார்த்தபடி இருப்பான்.ஒருநாள் கருவேலங்காட்டை பார்த்துக் கொண்டிருக்கையில் சமையல்கார அண்ணா பதட்டமாக ரகுராமனை அழைத்தார்.

“தம்பி…ஒரு வயசுப்பொண்ணு உன்னபாக்கனுன்னு வந்திருக்கு.வாடன் சார் ஒருபாட்டம் விசாரிச்சார்..உன்னைய பாக்கனுன்னு சொல்லுது,”

நடைபாதையின் முடிவில் கருவேலம் மரத்தடியில் புதுப்புடவையில் பாரிஜாதம் நின்றிருந்தாள்.வெயில் தீயென எரிந்தது.கழுத்தில் புதிய தாலியின் மஞ்சள் நிறம்.தலையில் வைத்து தூங்கி கசங்கிய மல்லிகையைப் போல முகம்.ரகுராமன் வருவதை உணர்ந்தும் குனிந்தே நின்றிருந்தாள்.சென்ற கடிதத்தில் அவனுக்கு தங்கை பாரிஜாதத்தின் திருமணம் பற்றி எழுதியிருந்தாள்.

முன்னால் வந்து நின்றும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.ரகுராமனுக்கு வியர்த்து வழிந்தது.

“இங்க எப்படி வந்த பாரி…”

“அங்க இருக்கப்பிடிக்கல…”

“அறிவிருக்கா உனக்கு. ஊருல உன்னப்பத்தி என்ன சொல்வாங்க.காலத்துக்கும் வச்சு ஊசியில தைக்கறாப்ல,”

“என்ன எங்கியாச்சும் கூட்டிட்டு போயிரு..உன்னப்பாக்காம இருக்க முடியல.இதுக்கு பேசாம செத்துப்போறேன்..”என்று முந்தானையால் முகத்தை மூடி அழுதாள்.

ரகுராமன் வேட்டியை எடுத்து முகத்தை கண்களை துடைத்துக்கொண்டான்.மதியவேளையின் அமைதி நிலத்தை எடையென அழுத்தியது.

“பாரி…இங்கப்பாரு அழாத..”

“நான் உங்கூட இல்லன்னு ஏன் நெனக்கிற.நான் எப்பவும் உன்ன மறக்கமாட்டேன்.நீயும் மறக்க வேணாம்.ஊருக்கு வந்தா பாத்துக்கலாம்.பக்கத்தில தானே..”

“ம்..நெனச்சுக்கிட்டே இருப்பியா..”

“ஆமா..”

அவள் முகம் தெளிந்தது.

“சிவராசு அண்ணன் எனக்கும் அண்ணன்தான்.சின்னதுலருந்து உங்கவீட்ல வச்சு பார்த்து பேசி பழகியிருக்காம்.அது ரொம்ப பாவம்,”

“பாவமா…”

“ஆமா பாரி..எங்கய்யா ஏகாதேசிக்கு தெருமுக்குல கதை சொல்றப்ப சொன்னது உனக்கு நெனப்பில இல்லையா.ஆம்பிளக்கு கட்டினவ விட்டுட்டு போறத விட பெரிய அவமாரியாதி இல்லன்னு..”

“ஆமா..பாவந்தான்..”

“அண்ணன் கூட இருந்துக்க.நம்ம அய்யா அம்மா மாறித்தான் அவுக அப்பாவும் அம்மாவும் கெடுபிடியானவங்க.அவர நீ கோவிச்சுக் கூடாது.எம்புட்டு வசதிக்காரவங்க.நீ நல்லா இருக்கலாம்.எங்கவீட்ல நல்ல சோத்துக்கே கஸ்ட்டம்,”

“ம்.சரி.ஆனா..உன்னத்தான் பிடிச்சிருக்கு,”

ரகுராமன் புன்னகைத்தான்.

“என்ன மறக்கமாட்ட தானே..”

அவள் தலையில் கைவைத்து மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.அவள், “ நானும்,” என்றாள்.

“எப்படி வந்த..”

“மாமா..அங்க பஸ் நிக்கற எடத்துல இருக்கு..”

பாரிஜாதம் கண்களை துடைத்துக்கொண்டாள்.

“பாரி..பாரி..மாத்திரை போட்டியா,”என்றபடி சிவராசு வந்தார். பறைகளின் ஒலி ஓங்கிக் கேட்டது.வாய்க்கரிசி எடுப்பதற்கான சமிக்கை.பாரிஜாதம் வேப்பம்மரத்தடி கல்லில் அமர்ந்தாள்.அவள் உடல் குலுங்கியது.

“அதுக்கு என்னைய தெரியல மாமா..யாரோன்னு பாக்குது..”என்று நெஞ்சின் மீது கிடந்த சேலையை இறுக்கிப்பிடித்தபடி சிவராசின் முட்டிக்கால்மீது சாய்ந்தாள்.சிவாராசு துண்டை எடுத்து கண்களை துடைத்து கொண்டு பாரிஜாதத்தின் முதுகில் தட்டியபடி, “சாவு வீட்ல உசுரோட இருக்கறவுகள நெனச்சி அழக்கூடாதுய்யா ..”என்றார். அலைபாயும் கண்களுடன் இவர்களை பார்த்து புன்னகைத்தபடி ரகுராமன் தன்மகனுடன் கறவை மாரி வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தார்.








Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...