காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல. ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான். புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது. நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார். பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்....