சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தழும்பிக்கொண்டிருந்தது. மழைகால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழிந்தது. ஊரே காவிரி ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதும் தொடர்ந்து வெளியேறுவதுமாக பொய்கையின் கலங்கல் தெளிந்து கொண்டிருந்தது. நடேசனை எதிர்பார்த்து சுப்பு காத்திருந்தான். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர இவ்வளவு நேரமா? முதல் முறை சந்தித்ததிலிருந்தே சுவாமிமலை தரிசனம் பண்ணனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தி காற்றும், வரும் தண்ணீரும், வெளியேறும் தண்ணீரும் சேர்ந்து கொள்ள பொய்கை தன்னைத்தானே சுழற்றிக்கொண்டு அலையடிக்கத்தொடங்கியது. நடேசனின் நாவலில் வரும் முசிறி காவிரியும் ,கரைவேலி கிராமங்களும் மனதில் வந்து போயின. ஆலங்கட்டி மழைவிழ சிறுவர்கள் ஆலங்கட்டிகளை பிடிக்க மழைக்குள் ஓடுவது அழகான தொடக்கம். வானத்திலிருந்து ஆலங்கட்டி கையில் விழுந்து பார்த்துகொண்டிருக்கும் போதே அது கைசூட்டில் கரைவதை போன்ற விவசாய வாழ்க்கையை அந்த நாவல் மூலம் வாசிப்பவருக்கு ...