இற்றைத்திங்கள் அந்நிலவில் 9
[பிப்ரவரி 2024 சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை] சந்தனம் வாடும் பெருங்காடு நல்வெள்ளியார் நான்கு அகப்பாடல்கள் பாடியுள்ளார். தலைவியும் தோழியும் திணைப்புனத்தில் காவலிற்கு இருக்கிறார்கள். அங்கு வரும் மணிப் பூண் அணிந்த தலைவன் தலைவியிடம் பணிந்து பேசி தன் காதலை அறிவிக்கிறான். மறுக்கும் தலைவியின் மனதிடத்தை வியந்து திரும்பி செல்கிறான். அடுத்தநாள் தலைவி இப்படி சொல்கிறாள்.. ‘ இகுபெயல் மண்ணின் நெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடியகூறி’ [அகநானூறு 32] பெய்யும் மழையில் கரையும் மண் போல அவனால் என் மனம் கரைவதை கண்டு கொண்டானோ என்று பதறி மறுத்தேன் என்று வருத்தத்துடன் கூறுகிறாள். அதற்கு தோழி… இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா… என்கிறாள். அடுத்தப்பாடலில் ஒரு த...