இற்றைத்திங்கள் அந்நிலவில் 9
[பிப்ரவரி 2024 சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை]
சந்தனம் வாடும் பெருங்காடு
நல்வெள்ளியார் நான்கு அகப்பாடல்கள் பாடியுள்ளார்.
தலைவியும் தோழியும் திணைப்புனத்தில் காவலிற்கு இருக்கிறார்கள். அங்கு வரும் மணிப் பூண் அணிந்த தலைவன் தலைவியிடம் பணிந்து பேசி தன் காதலை அறிவிக்கிறான். மறுக்கும் தலைவியின் மனதிடத்தை வியந்து திரும்பி செல்கிறான்.
அடுத்தநாள் தலைவி இப்படி சொல்கிறாள்..
‘இகுபெயல் மண்ணின் நெகிழ்பு அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடியகூறி’ [அகநானூறு 32]
பெய்யும் மழையில் கரையும் மண் போல அவனால் என் மனம் கரைவதை கண்டு கொண்டானோ என்று பதறி மறுத்தேன் என்று வருத்தத்துடன் கூறுகிறாள்.
அதற்கு தோழி…
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே
தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா… என்கிறாள்.
அடுத்தப்பாடலில் ஒரு தோழி தலைவனிடம் தலைவியின் நிலையைப் பற்றி கூறுகிறாள்.
கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே
[குறுந்தொகை 36]
தலைவனின் நாட்டில் உள்ள அருவியும் அதன் ஓசையும் குறிப்பிடப்படுகிறது. இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. ததும்பும் அருவி.
உன் பிரிவால் அவள் கண்களும், மனமும் உன்நாட்டில் உள்ள அருவி போல ததும்பிக்கொண்டே இருக்கிறது என்று தோழி சொல்கிறாள்.
நற்றிணை 7 வது பாடல் பாலைத்திணை பாடல். பிரிந்து சென்ற தலைவனை நினைத்து துயரப்படும் தலைவி தோழியிடம் ‘மலைஉச்சியில் ஒரு சுனையில் ஊற்றுகள் சுரக்கத் தொடங்கியதால் அங்குள்ள பள்ளம் நிறைந்து வழிகிறது. பின் அதுவே பாறைகளை அடுத்த சரிவுகளில் விழுந்து ஆர்ப்பரிக்கும் அருவியாகக் கொட்டுகிறது. சரிந்து செல்லும் மலை நிலத்தின் பாறைகளை முழுகடித்தப்படி காட்டாறாகிறது. சமநிலத்தில்அந்த காட்டாற்று வெள்ளத்தில் பரிசிலின் நீண்ட மூங்கில்கள் செயலற்று போகும்படி மின்னல் மின்னி மழைபெய்கிறது. அந்த காட்டாறு பாயும் மழைச்சரிவில் விளைந்த நெல்லை உண்ட யானை சந்தனமரத்தடியில் தூங்குகிறது’ என்று சொல்கிறாள்.
சூருடை நனந் தலைச் சுனைநீர் மல்க
பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கலை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் _ தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதழ் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே [ நற்றிணை 7]
பிரிவால் வருந்தும் தலைவியின் அன்னை தலைவிக்கு முருகு பிடித்துவிட்டது என்று முருகு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறாள். சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள். முருகுஅயர்தலுக்கு ஆட்படும் தலைவியிடம் தோழி ‘நீ காதல் கொண்டதை அறியாத அன்னை முருகு அயர்தலை நடத்துகிறாள். அவளிடம் முருகனால் அல்ல அவன் தான் காரணம் என்று சொல்லலாமா’ என்று கேட்கிறாள். இந்தவரியை வாசிக்கும் போது புன்னகை எழும். அன்னை அதை அறியாதவளா என்ன? அவளுக்கு தன் மகளின் இத்தனை துயரத்திற்கு காரணமாக முருகு யார் என்று தெரிய வேண்டும். அல்லது அவனுக்கு அறிவிக்க வேண்டும். நெல் உண்டு துஞ்சும் யானை அது. வெள்ளம் எழுப்பாத யானையை தெய்வம் எழுப்பட்டும் என்று அவள் நினைக்கலாம்.
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே [நற்றிணை 47]
தலைவியின் பிரிவு ஆற்றமை துயரை தோழி ‘பொன் நேர் பசலை’ என்கிறாள். பொன்னிற்கு நிகரான பசலை. காதலால் கொள்ளும் அழகு என்றும் இருக்கலாம். காதலால் மானிட உடல் கொள்ளும் அழகை முருகு பீடித்ததாக சொல்லவும் வாய்ப்பு உண்டு. அழகு பீடித்தல்.
சுனை நீர் அருவியாகி அவளின் புறவுலகு முழுவதையும் மூழ்கடிக்கும்படி ஏன் இவ்வளவு துயரம்…?
பெருங்களிறு உழுவை அட்டென இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ [நற்றிணை 47]
நீண்ட நாள் பிரிவு அல்லது வருவேன் என்று சொல்லிய காலம் தாண்டியும் தலைவன் வராததல் தலைவி வருந்தி மனம் குழைந்து இருக்கும் காலத்தில் வரும் கனவா? அல்லது மன எண்ணங்களா? இந்தப்பாடலை பொருத்தவரை தலைவனுக்கு தீங்கு எதுவும் நேர்ந்திருக்கலாம் என்ற எண்ணமும் தலைவிக்கு இருக்கிறது. ஆறாத காயத்தின் வலி கொண்டது போல குட்டியுடன் பெண்யானை நிற்கும் சித்திரம் பாடலில் வருகிறது.
வளமான குறிஞ்சி நிலத்தில் சந்தனம் வாடும் பெருங்காடு எது? ஏன் அந்தப்பெருங்காட்டில் சந்தனம் மட்டும் வாடுகிறது? இயல்பாகவே சந்தனம் தனித்து வளரும் இயல்புடையது அல்ல. அது சார்ந்து வாழும் இயல்புடைய மரம். தலைவன் பிரிவால் தலைவி வாடியிருக்கிறாள்.
தலைவியின் அன்பின் நிழலில் இருக்கும் தலைவன் தன் தலைக்கும் மேல் சந்தனம் வாடுவதை உணராதவனாக பிரிந்திருக்கிறான். பிரிவின் துயர் சங்கப்பாடல்களில் விதவிதமாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பாடல்களில் சொல்லப்படுகிற பசலை பொன் நேர் பசலை. வாடுவதும் சந்தனஇலை. ததும்பும் அருவியும், ஆறாத புண்ணுடன் நிற்கும் பெண்யானையும், வாடும் இலைகளுக்கும் தலைவியின் கண்களும், மனமும், உடலுமாக மாறும் போது அந்தத் துயரின் பெருங்காடு வாசிப்பவர் மனதிலும் விரியக்கூடும்.
Comments
Post a Comment