[மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை] இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு. அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம். கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர...