எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் அவர்களின் புனைவுலகம் குறித்த கருத்தரங்கத்தை சிற்றில் இலக்கிய அமைப்பு மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து நடத்தியது. இதற்கான நாவல் அரங்கில் நானும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் பேசினோம். என்னுடைய முதல் உரை. என்னால் பிறர் கவனிக்கும்படி பேச முடியுமா? என்று எப்போதுமே எனக்கு ஒரு ஐயம் உண்டு. எனக்கு மற்றவர்களின் கவனத்தை மேலோட்டமாக தொட்டு திருப்பும் அளவுக்கூட குரல் வளம் இல்லை. என் முதல் தொகுப்பு வெளியான மகிழ்ச்சியை இல்லாமல் செய்தது என்னுடைய ஏற்புரை. புத்தகம் வெளியானதை விட ஏற்புரையில் சரியாக பேசவில்லை என்பதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து திரும்பு வழி முழுக்க அதே நினைவு. அந்த ஏற்புரையை நான் இன்னும் பார்க்கவில்லை. யாருக்கும் பகிரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கேட்டார்கள். அதே போல கிருபா விருது வாங்கும் போதும் கிருபாவின் படைப்புலகம் குறித்து சில வரிகளே பேசினேன். விஷ்ணுபுரம் விழாவில் உரையாடல் அரங்கு என்பதால் சரியாக பேசினேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுரேஸ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் நான்கையும் வாசித்து இரண்டுவாரங்களுக்கு முன்ப...