[கவிஞர் யூமாவாசுகி கவிதைகள் குறித்து....]
இரவின் குளம்புகள்
வெற்றுக்குடல் மிதிக்கும்
குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவை
குதறும் நாயாகிறது பசி
_கவிஞர் யூமாவாசுகி
கவிதை ‘தன்னிலை’ வடிவமாக இருப்பதால் மொழியின் உக்கிரமான வடிவமாக இருக்கிறது.
கவிஞன் அனைத்திலும் தானாகிறான். கடவுளைப்போல அல்லது இயற்கையை போல. அவன் உருகும் எலும்பாகவும், நிணமாவும் இருக்கும் நேரத்தில், ஒரு மலராகவும் கனியாகவும் இருக்கிறான்.
கவிஞர் யூமாவாசுகியின் தொடக்ககால கவிதைகள் மங்கலான ஒரு நகரத்தையும், சந்துகளையும் கொண்டது. இதை பின்புலமாக விரித்து அங்கு அகப்பட்டுக்கொண்ட மென்மையான ஒரு புறாவை நம்மால் காணமுடிகிறது. அந்தப்புறா பசித்திருக்கிறது. அந்தப்புறா பயம் கொண்டிருக்கிறது. அந்தப்புறா வேட்டைக்குள்ளாகிறது. அந்தப்புறா தன்னை குருதியும் சதையுமாக அம்பின் நுனியில் கொண்டு வைக்கிறது.
‘எப்போதாவது
இவ்வழியே வரும் வாழ்க்கை
இடறி இதில் விழும்போது
வசப்படுத்திவிடத்தான் காத்திருக்கிறேன்
அம்மா….
என்னை நினைத்துக்கொள்’
இதை போன்று அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் போன்ற கவிதைகளில் பசியும், தனிமையும் அலைகழிக்கும் சித்திரத்தை காணமுடிகிறது. முதலில் வழி தேடும் புறாவின் தத்தளிப்புகள் இந்தக்கவிதைகளில் உள்ளன. அடுத்தடுத்த கவிதைகளில் தீவிரமான அலைகழிப்புகள் உள்ளன.
‘ரத்தத் திரையடிக்கும் கடலிது
என் பிடறி பிடித்து
இரும்புக்கரங்கள் அழுத்துகின்றன
நரம்புகள் புடைக்கும் உச்ச பலத்தோடு
தாழ்த்தும் கரங்களைத் தொட்டுணர்கிறேன்’
அகத்தையும் புறத்தையும் பிணைக்கும் ஒரு நினைவுவெளியை தன் கவிதைகளில் கவிஞர் படைக்கிறார்.
மனித உடலை ஒரு பயணத்திற்கான பாதையாக்குகிறது ‘வழிக்குறிப்புகள்’ என்ற கவிதை. மனித உடல் காலத்தின் உருவகமாகிறது. அந்தக்கவிதையில் நரம்புகள் நாணல் வெளிகளாகிறது. குருதி ஆறாகிறது. எலும்புகள் பாலமாகிறது. கபாலமேடு இளைப்பாறும் பாறையாகிறது. இந்தக்கவிதையின் பேசுபொருளான அதிகாரமும்,வலியும் யுமாவாசுகியின் பல கவிதைகளில் கையாளப்பட்டுள்ளது. கவிஞர் காலகாலமான தொடர்ந்து வரும் அதிகாரத்தின் மறுபக்கத்தை வெவ்வேறு உருவகங்களில் எடுத்து வைக்கிறார். அதிகாரத்திற்கு பலியாகும் ஒன்றின் குருதி அது.
‘உங்கள்
உபாயங்களுக்குள் செலுத்தப்பட்டு
என் திசையழிந்து போயிற்று.
என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு
இதைச்சொல்ல அனுமதியுங்கள்.
உங்களையும்
நான் நேசிக்கிறேன்’
என்று அடிப்பட்ட புறா திசை திரும்புகிறது. புறா வழியிலேயே, அந்த அம்புகள் எங்கிருந்தோ எய்யும் வேடனுடையவை மட்டுமல்ல என்று உணர்கிறது. அந்த ஆயுதம் தன் நகங்களிலும் உள்ளது என்று தன்னையும் உற்றுப்பார்க்கிறது. தன்னுடைய நகங்களால் தன்னை தானே குத்திப்பார்க்கிறது. வேட்டையாடப்பட்ட குருதியையை விட தன் நகங்களின் குருதி அதிக வீச்சுடன் வெளியேறுவதைக் கண்டுகொள்கிறது.
‘அகண்டவழிப் பேரிருளின்
ஒப்பற்ற கவர்ச்சி அழைக்கிறது’
இந்தக் கவிதையில் இருளை நோக்கிய விழைவு உள்ளது. அந்தப்புறா தன் அகத்தின் அழைகழிப்புகளுக்காக ஒரு இருள் மூலையை தேடுகிறது.
‘அம்மா…..
பசியின் ஒவ்வொரு வருகையும் முதன்முறை
வீட்டுக்கு வரும் மிக நெருங்கிய விருந்தினனைப் போல
பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது
வெறும் சிகரெட் புகையால் மூழாகடிக்கப்பட்ட அது
சேகரித்த குரோதம் முற்றி
பழி தீர்க்கக் குடலில் துளைகளிடும் என்றாவது.
எழுதுவதற்கொன்றுமில்லை’
ஒரு கட்டத்தில் பசி சூறைகாற்றாக மாறி சுற்றி வளைக்கிறது. யூமாவாசுகியின் கைகளில் பசி எத்தனை விதமான உருவகமாகிறது!
‘சூறை! சூறைதான் அது.
சுற்றி வருகிறது சூறை…
…தாடியுடைய சூறையொன்று
வாகனங்களுக்கிடை புகுந்து
முழு வயிறும் பற்றிப் பசி எரிய
எங்கோ போகிறது வேகவேகமாய்’
ஒருகட்டத்தில் பசியின் வடிவமாகவே மனிதனை, உயிர்களை உணர்ந்து கொள்ளும் கவிதைகள் இவை. சிலகவிதைகளில் அம்மா..என்று அழைத்து ஏன் எழுதுகிறார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. அந்த அம்மா இந்தக்கவிதைகளில் அம்மாவாக மட்டுமில்லை. அது பசியை முறையிடும், பகிர்ந்து கொள்ளும் கருணையின் வடிவாக கவிதைகளில் மாறுகிறது. தன் பசி, பிற உயிர்களின் பசி என்ற கோடு அழியும் போது அந்த அம்மா என்ற உருவகமும் பிரபஞ்சத்தை நோக்கி எழுகிறது.
‘எழுத்திடையே பசியெடுக்கும்போதுதான்
இருந்திருக்க வேண்டிய
என் சோற்றைத் தேடுகிறேன்.
நான் மீண்டும் கடவுளாகும்படி
ஒரு கவிதை கட்டாயப்படுத்துகிறது.
நான் எழுதப்போகிறேன்.
முடிந்தப்பின்
இந்தப்படகினுள் பார்க்கும் போது
எச்சரிக்கை
என் சோற்றுத் தட்டு வந்திருக்க வேண்டும்’ என்ற கவிதையை வாசிக்கும் போது பாரதி கண்சிமிட்டினார்.
‘பொழிகின்ற பெருமழையில்
என் உப்புமூட்டை கரைகிறது
சிறிது சிறிதாய்.
அமைத்த தடுப்புகளையெல்லாம்
தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
கேட்டவர்க்கு கொடுத்திருக்கலாம்
கடந்த கோடையிலேயே’
இப்படியாக தன் ரணங்களுக்கான மருந்தை கண்டுகொண்டு அதன் பின்னே செல்கிறது. இந்த இடத்தில் யுமாவாசுகி என்ற கவிஞரின் கவிதை வெளி சிறகுவிரிக்கிறது. அது மெல்ல வானத்தில் தஞ்சமடைகிறது. கூடுகள் பாதுகாப்பில்லாத அதற்கு வானமே தஞ்சமாகிறது.
‘தாயிடமும் திரும்பத் தகுதியில்லாதபடி
களங்கப்பட்டுப்போனேன் என்று
மௌனமாய்க் குமுறியவனுக்கு
கடைசிஅழைப்பு இதுவே..
அதன் பிறகே நான் திரும்பிப் பார்த்தேன்
நீதானே? என்றது குழந்தை
ஆம் என்றேன் நான்.
தூக்கச்சொல்லி கை விரித்தது.
அள்ளி அணைத்துக்கொண்டேன்
கனவின் கடைசி நொடியில் ஒரே ஒரு முத்தம்
விடிந்தது.
காலையில் மனம் தெளிந்திருந்தது’
யூமாவாசுகியின் கவிதைகளில் குழந்தை கவிதைகள் உயிர்த்தெழுதலாக இருக்கிறது. அத்தனை இக்கட்டான மனச்சந்துகளில், இருள் மூலைகளில் பயணப்படுகையிலும்,தனக்கான ரயிலை தவறவிட்டப் பின்னரும் ஒரு புன்னகையாக எஞ்சி நிற்பது இந்தக்கவிதைகள். குழந்தை கவிதைகளை வாசிக்கும் போது குழந்தையேசுப்படிமம் மனதில் அங்கங்கே தோன்றியது. இவரின் கவிதைகளில் வரும் குழந்தைகள் ‘அருளும்குழந்தைகள்’. அவற்றின் புன்னகையும், இருப்பும் காயப்பட்ட ஒன்றிற்கு மருந்தாகிறது. மீண்டும் மீண்டும் குழந்தைகளிடம் தஞ்சம் புகும் அடிபட்ட ஆன்மா இந்தக் கவிதைகளில் உள்ளது.
அந்தக்குழந்தைகளும் அன்றாடத்தில் வதைபடும்போது,
‘தாயே என்னை கொன்று பழிதீர்க்க
உனக்கேன் தெரியவில்லை’ என்று கேட்கிறது. அந்தக்குழந்தைகளுக்காக மன்றாடுகிறது.
‘கடவுளே
வீழ்ச்சிகளிலிருந்து துசும் படாதபடி நேரடியாய்
என் கரங்களில் மெத்தென
எப்படி அவர்களை ஏந்திக்கொள்வேன்’
என்று கேட்கிறது.
பின் ஒரு சிறு இடைவெளியில் துயரங்கள் அற்ற பொழுதில்,
‘குடிசையுள் இருளிலிருந்து
வெளித் திண்ணைக்கு ஓடி வந்த சிறுமி
மழை விட்டுவிட்டதா என
கை நீட்டி மேலே பார்த்தாள்.
என்னதான் சொன்னதோ வானம்.
உள்ளே ஓடிச்செல்கிறாள்
புன்னகையுடன்’
என்று குழந்தையுடன் சேர்ந்து களிக்கிறது. இந்தக்கவிதைகளில் அம்மா என்ற உருவகம் போலவே குழந்தைகள் என்ற உருவகமும் இந்தப்புறாவின் சிறகுகளாக இருக்கிறது.
ஒரு கவிஞரின் முழுத்தொகுப்பை வாசிக்கும் போது நம்மால் ஒரு உலகை புனைந்து கொள்ள முடிகிறது. யூமா வாசுகியின் கவிதைகளில் சிபியின் கைகளில் சென்று சேர்ந்த காயம்பட்ட புறாவின் சித்திரம் உள்ளது. அந்தப்புறாவை அன்பு காக்கிறது. அவர் தன்னில் இருந்தே தனக்குள் அடைக்கலமாகிறார்.
அந்த மனமே,
‘எனக்கொரு சின்னஞ்சிறு மகள் பிறந்தாள்
நானும் கடவுளுக்குரிய தகுதியடைந்துவிட்டேன்’ என்று சொல்கிறது.
‘உலகலாவிய கரங்கள் வேண்டுமெனக்கு
எல்லோரையும் அணைத்து மகிழ.
எல்லாப் பறவைகளின் சிறகுகளிலும்
என் கண்கள் இருக்க வேண்டும்,அனைவரையும்
ஒருசேரக்காண்பதற்கு.
போகுமிடமெல்லாம் காற்றென்
குரலையும் கொண்டு போனால்
எல்லோருக்காகவும் பாடுவேன்’ என்ற இடத்தில் வந்து மறுபடியும் ஒரு திரும்புதல் நடக்கிறது.
கவிஞர் ஈடாக தன்னையே தான் வைக்கிறார். எப்போதும் தன்னை அரிந்து துலாத்தட்டை நிகர் செய்பவன் கவிஞன். இந்த துலாத்தட்டில் வைக்கப்படும் அன்பிற்கு நிணத்தின் மணம்.
‘நிமித்தப் பேருலகில் ஊட்டம் பெறும் நெடுவாழ்வில்
மலரக்கூடவில்லை எனக்கு
உன்போல் ஒருமுறை’
என்று மலர்தலின் துடிப்பு அல்லது பறத்தலுக்கான துடிப்பு இந்தக் கவிதைகளில் ஔியாக உள்ளது. அந்த ஔி என்பது இயல்பாகவே அன்பின் ரூபம் எடுக்கிறது.
‘சகலமும் என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவுகளால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப்பார்த்தது’
தொலைவான ஓரிரவு என்ற இந்த கவிதையில் ‘உன்’ என்பது முன்பு சொல்லிய அம்மா,குழந்தை போன்றே சகஉயிர்கள் என்ற உருவகமானது அந்தப்புறாவின் சிறகசைப்பாக மாறுவதை உணரமுடிகிறது. அம்மா,குழந்தை,உலகத்து உயிர்கள் என்ற மூன்று உருவகங்கள் இணைந்து யூமாவாசுகியின் கவிஉலகை, அகமும் புறமும் பின்னிய அவரின் நினைவு உலகை ஔி கொள்ள செய்கின்றன. கவிஞன் எங்கிருந்து தொடங்கினாலும் எந்த வெளியில் பறந்தாலும் வந்து அமரும் கிளை இது.
கவிஞர் யூமாவாசுகியை இந்த நேரத்தில் வணங்குகிறேன். அவருக்கு என் அன்பு.
Comments
Post a Comment