மார்ச் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்... ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ஔி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞரை,ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது. எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல். கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாதாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று...