ஒரு வாரம் போல மழை. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நேற்று வரை அடை மழை. பக்கத்துவீட்டு அம்மா யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்தால் 'வானம் நெனைச்சு நெனச்சு பெய்யுது' என்று வைதுகொண்டிருந்தார். வயல் வேலை எதாவது இருக்கும். மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள். திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல. ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்...