Skip to main content

அகத்தின் வெளிச்சம்

ஒரு வாரம் போல மழை. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நேற்று வரை அடை மழை. பக்கத்துவீட்டு அம்மா யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்தால் 'வானம் நெனைச்சு நெனச்சு பெய்யுது' என்று வைதுகொண்டிருந்தார். வயல் வேலை எதாவது இருக்கும். 


மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள்.

 திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல. 


ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளடங்கியது. சமையல் அறைக்குள் சென்றால்.. அதற்கும் உள்ளே உள்ள  மிக சிறிய அறை. வெளியே அப்படி ஒரு அறை இருப்பதே தெரியாது. 

அண்மையில் ஒரு கட்டுரையில் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்ட்டின் பற்றி வாசித்தேன். சமையலறைக்கு அருகில் அவருடைய எழுதும்மேஜை இருந்தது என்று அறிந்த போது வியப்பாக இருந்தது. 
ஆனால் என் சிறிய அறையை ,சிறிய அறை என்று உணரமுடியாதபடி செய்வது பெரிய ஜன்னல். 

நல்ல வெளிச்சமும் காற்றும் உள்ள வீடு.  வீட்டின் வெளிச்சமிக்க அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் உள்ள வெளிச்சமும் சின்னய்யா தந்தது என்று நினைத்துக்கொள்வேன். எழுதும் அறையில் ஜன்னலில் பாதியை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறேன். பின்பக்க சந்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம். அப்படியிருந்தும் வெளிச்சம் குறையாத அகத்தளம் என்னுடைய வாசிப்பறை.

காலையில் வாசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுந்தது. மூன்று நாட்களின் அடைமழை முடிந்த வெளிச்சம். உடனே மாடிக்கு சென்றேன். குளிர்காற்றில் சூரிய வெளிச்சத்தில் முல்லைச்செடி குதூகலமாக பூத்து அசைந்து கொண்டிருந்தது. நெல்லம் வயல்களில் தேங்கிய தண்ணீரை சூரிய வெளிச்சம் பெரிய தகடு போல காட்டியது. நெல்லம்பயிர்கள் வேர்பிடித்திருக்கக்கூடும்.
தெருவில் உள்ள சிறு கோயிலில் இருந்து இசை கடிகாரத்தில் ஏழு மணிக்கான பாசுரம் ஒலிக்கத்தொடங்கியது. இன்று மூன்று ஊர்களுக்குப்பொதுவான எதுமலையானுக்கு பொங்கல் வழிபாடு. குதிரை ஏறிய மீசை வைத்த பெருமாள்.

எப்போதும் உள்ள கார்த்திகை மாத மனநிலையில் புதிதாக ஒரு கூடுதல் அம்சம் இந்த இசைக்கடிகாரம். முதலில் இந்த இசைக் கடிகாரம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் காலை ஏழுமணிக்கு ஒலிக்கும் பாடல்கள் இலக்கியத் தரமானவை. ஒரு நாளின் கூடுதல் சுவையாக சேர்கிறது.

 வீட்டின் மூலை முடுக்குகளில் இருள் உண்டு. ஆனால் வீண்மீன்களை காட்ட ஜன்னலும் உண்டில்லையா...
கீழே இறங்கினால் அன்றாட வாழ்வும் கஸ்ட்ட நஷ்டங்களும் உண்டு. இரவு உறங்கப்போகும் போது கூட வீட்டை பற்றிய பலமான யோசனை இருந்தது. ஆனால் இலக்கியமும், இந்த வெளிச்சமும் உயிர்ப்பளிப்பவை. வாழ்க்கையில் அனைவருமே எல்லாவிதமான எதிர்மறை விஷயங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அடைத்து கட்டிய வீடு போல. ஆனால் நம் ஜன்னல்கள் எவ்வளவு பெரியவை. மனதை போல. அதிலிருந்து கொஞ்சம் இலக்கியம் வழியாக ஏறி சென்றால் வானம்.






 

[இதுதான் நான் எடுத்து பதிவேற்றும் முதல் காணொளி துண்டு. இப்போது தான் வலைப்பூவில் நம்முடைய சொந்த காணொளிகளை பதிவேற்றலாம் என்று கண்டுபிடித்தேன். புகைப்படங்களை பதிவேற்றும் இடத்திற்கு அடுத்ததாகதான் இதற்கான வசதியும் இருக்கிறது. அன்றாடம், அரசியல்,உறவு சிக்கல்கள்,வேற்றுமைகள்,கசப்புகள் என்று எல்லா எதிர்மறை அம்சங்களும் எல்லோருக்கும் உண்டு. அதை கடந்து நமக்கு கொஞ்சம் மனம் விரியவேண்டியதிருக்கிறது. 

இலட்சியம் நேர்மறை எல்லாமே க்ரின்சா? 

 போரே வாழ்வாக  இருந்த சங்ககாலத்திலும் தலைவியின் மாமை நிறமுள்ள மாங்கொழுந்தை தலைவன் கண்டான். தன் தேர் மணி ஒலிக்காது தேரை செலுத்த சொன்னான். குறிஞ்சி பூப்பதை கண்டான். பொருள் தேடி பாலைவழி நடக்கும் போதும் தாழை மணத்தை ரசித்தான்.

 ஆனால்உண்மையான கசப்பிற்கு மதிப்பு உண்டு. கசப்பை எல்லா கனிகளிலும் இயற்கையே சேர்ப்பதில்லை. குறிப்பிட்ட வெகு சிலவற்றில் மட்டுமே கனிகளில் கசப்புண்டு. உண்மையில் எட்டிக்காய்க்கு மதிப்புண்டு. அதை வேறு எதிலும் போலியாக இயற்கை கலப்பதில்லை.

உதாரணத்திற்கு இன்று ஒரு பள்ளிக்கூட வாத்தியார் பையன்கள் தன்னை பேசும் அசிங்கமான வார்த்தைகளை நேரடியாக கேட்க வேண்டியுள்ளது. அதற்காக அவர் அப்படியே எரிச்சலாக இருந்தால் உண்மையில் சீக்கிரம் சாக வேண்டியது தான். இன்று மதீப்பீடுகள் விழுமியங்கள் மிகவும் அவல நிலையில் உள்ளன. ஒரு உச்சத்திற்கு பிறகு மீண்டும் மாறலாம்.

 தனிமனிதனின் மனநிறைவிலிருந்து தான் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உயிர் கொள்ள முடியும். நிறைவு என்பது அறுபது வயதில் இல்லை. அன்றாடத்தில் உள்ள சின்னஞ்சிறியவற்றில் உள்ளது. நாம் இன்று இழந்து சிரமப்படுவது இதைத்தான் என்று தோன்றுகிறது ]

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...