எழுத்தாளர் பெருமாள் முருகன் [சென்னை மாநில கல்லூரியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 அகவை நிறைவு என்ற கருத்தரங்கத்தில் அவர் படைப்புலகம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு 'நனவிலியின் நிலம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரை] அழிகாட்டு சித்திரங்கள் இலக்கியம் எழுதப்படுவதன் அடிப்படைகளாக உள்ள விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு பதிலாக ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதிலிருந்து மனித மனதின் அறிந்து கொள்ள முடியாத ஒரு விழைவு என்பது வரை பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. கண்முன்னே ஓடும் ஆற்றில் நொடியில் கரையும் மண்கட்டி போல கரையும் காலம் மனிதருக்குள் ஏற்படுத்தும் பொருளின்மையை எதிர்கொள்ள மனிதஇனம் கலை ஓவியம் எழுத்தை உண்டாக்கிக்கொண்டது என்பதும் ஒரு அடிப்படை. காலத்தில் திளைக்க இசை. இசையின் மூலம் எந்த காலத்திலும் திளைக்கமுடியும். எழுத்தும் கலைகளும் காலத்தை பிடித்து வைத்து ஆடி திரும்பிக்காட்டும் முயற்சி என்று சொல்லலாம். காலமென்றான பிரபஞ்சத்தின் முன் மனித பிரக்ஞையின் ஆகப்பெரிய எத்தனம் கலைகளும் இலக்கியமும். எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல் முற்றம்,கூளமாதாரி ஆகிய ம...