நான் செய்த நேர்காணல்களை 'தும்பி அறியும் பெருங்காடு ' என்னும் நூலாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது. வாசகசாலை நண்பர்களுக்கு அன்பு. நூலிற்கு நான் எழுதிய என்னுரை.
எழுதியவர்களுடன் ஒரு உரையாடல்
நண்பர்களுக்கு…
இந்த நூலில் உள்ள நேர்காணல்களில் முதல் மூன்று நேர்காணல்கள் கொரானா உலகத்தொற்றின் இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. நேர்காணல்கள் புரவி அச்சிதழ், வாசகசாலை இணைய இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. இந்த நூலில் நேர்காணல்கள் வெளியான காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்கள். இவை இரண்டாயிரமாவது ஆண்டிற்கு பின்னர் எழுதப்பட்ட படைப்புகள்.
2006ல் வெளியான கானல் நதியும், 2010ல் வெளியான துயிலும் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்கள்.
நீலகண்டம், பேய்ச்சி, கங்காபுரம் என்று மூன்று நாவல்களும் 2019ல் வெளிவந்துள்ளன. இந்த மூன்று நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்கள். தொன்மத்தையும், நாட்டார் தெய்வங்களையும், வரலாற்றையும், நவீன கால சிக்கல்களையும் பேசும் நாவல்கள்.
காயாம்பூ 2021லும் ஹரிலால் 2022லும் வெளிவந்துள்ளன. காயாம்பூ _ குழந்தையின்மை சிக்கலை தற்கால மருத்துவத்துறையுடனும் சமூகச் சூழலுடனும் அணுகுகிறது. ஹரிலால் _ தந்தை மகன் உறவின் நாவல். நீலகண்டமும் இந்த நாவல்களின் பேசுபொருளின் இன்னொரு கிளை.
துயில் _ நோய்மை மூலம் வாதைகளின் வழியே மெய்மையை தொட்டுப் பார்க்கும் நாவல். மனைமாட்சி _ மாறிவரும் காலகட்டத்தில் ஆண் பெண் உறவுகள் மற்றும் குடும்ப அமைப்பை பற்றிய நாவல். கானல் நதி இசைக் கலைஞனின் அலைகழிப்புகள் மற்றும் இசை என்ற கலை சார்ந்த நாவல்.
எழுத்தாளர் கா. சிவாவின் நேர்காணல் அவருடைய சிறுகதைகள் மற்றும் அவரை எழுத வைக்கும் தூண்டுதல்கள் பற்றிய பதில்களைக் கொண்டது.
இந்தப் படைப்புகளை கொரானா காலகட்டத்தில் தொடர்ந்து வாசித்தேன். படைப்புகளை மையமாகக் கொண்ட இந்த நேர்காணல்கள் படைப்புகளை மேலும் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும், படைப்பாளிகளையும் அவர்களின் பார்வையையும் நாம் தெரிந்து கொள்ள உதவும்.
பெரிய காட்டில் பறந்து திரியும் சிறு தும்பியின் நினைவிலிருக்கும் மழை நாட்களில் சுவைத்த தேன்துளிகளும், மழை நனைத்த காடும் போல இந்த புனைவுகளை வாசித்த நாட்களும் நேர்காணல்களைச் செய்த நாட்களும் இனிப்பானவை. அதே சமயம் தீவிரமானவை.
நேர்காணல்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த படைப்பாளிக்களுக்கு அன்பு. நேர்காணல்களை வெளியிட்ட புரவி, வாசகசாலை, சொல்வனம் இதழ்களுக்கு நன்றி. தொகுப்பாக வெளியிடும் வாசகசாலை பதிப்பகத்திற்கு நன்றி.
இந்த நூலை எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்த நேரத்தில் சங்க காலத்திலிருந்து சம காலம் வரையுள்ள மூத்த படைப்பாளிகளை வணங்குகிறேன். இளைய படைப்பாளிகளுக்கு அன்பு. படைப்புகள் மீதுள்ள மாறாத பிரேமை இலக்கியத்தின் மீதான பிரேமையாகிறது. இலக்கியத்தின் மீதுள்ள பிரேமை வாழ்வின் தீர்ந்து போகாத பிரேமை. இந்தப் பிரேமையே வாழ்வை இனியதாக்குகிறது.
என் பெற்றோருக்கு அன்பும் வணக்கங்களும். அவர்களால் எழுதுகிறேன். எப்போதும் உடனிருக்கும் தங்கை நிவேதிதாவிற்கு அன்பு.
அன்புடன்,
கமலதேவி
kamaladevisakyai@gmail.com
பா.மேட்டூர்
15/11/2025

Comments
Post a Comment