[சென்னை மாநில கல்லூரியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 அகவை நிறைவு என்ற கருத்தரங்கத்தில் அவர் படைப்புலகம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு 'நனவிலியின் நிலம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரை]
அழிகாட்டு சித்திரங்கள்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல் முற்றம்,கூளமாதாரி ஆகிய மூன்று நாவல்களின் அடிநாதமும் வளரிளம் பருவம் என்ற ஒரே ராகத்தின் வெவ்வேறு வடிவங்களைப் போல. ஏறுவெயில் படிப்படியாக உச்சஸ்தாயிக்கு சென்று நிற்பது. நிழல் முற்றம் தொடக்கம் முதலே ஹை பிச்சில் இருப்பது . கூளமாதாரி கதம்பமான ராகமாலிகா போன்றது. தனிப்பட்டஒருவரே கூட தன்னுடைய வளரிளம் பருவத்தை தான் கையாண்ட விதத்தை இறுதி காலம் வரை முக்கியமான விஷயமாக சொல்வார்கள். ஏனெனில் அந்த பருவம் உயரத்திலும் ஆழத்திலும் தூரத்திலும் எல்லைகள் அறியாத கனவுப்பருவம். ஒரு விதை கால் ஊன்றி கைநீட்டி இந்த பிரபஞ்சத்தை தொட்டுவிடலாம் என்ற கனவுடன் தான் முளைக்கிறது. அந்த கனவு இல்லை என்றால் முளைப்பதே சாத்தியப்பட்டிருக்காது என்று தோன்றுகிறது. வளர்வதற்கு எல்லைகள் தெரியலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால் முளைப்பதற்கு எல்லைகளில்லாத ஒரு கனவு தேவைப்படுகிறது. அந்த கனவு பருவத்தின் வெவ்வேறு நிறங்களை இந்த நாவல்கள் அளிக்கின்றன.
ஏறுவெயிலில் பொன்னய்யாவின் வளரிளம் பருவத்தின் நிலமும் மனிதர்களும் சமூகமும் நாவலாகியிருக்கிறது. மேட்டு நிலத்தில் பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டவர்களின் கைகளிலிருந்து நிலம் வீட்டுவசதி வாரியத்திற்காக கைமாற்றப்படுகிறது. மேட்டாங்காட்டில் வீடு கட்டிக்கொண்டு ,கேழ்வரகு சோளம் பனை போன்றவற்றை நம்பி வாழ்க்கை சுழற்சியை அமைத்து கொண்டவர்களுக்கு ஊருக்குள் சென்று வாழ்வை அமைத்து கொள்வது சவாலாக இருக்கிறது. அந்த வாழ்வியல் சிக்கலை நடுவயதினர், பதின்வயதினர், வயோதிகர்கள் என்று மூன்று பருவத்தில் உள்ளவர்களும் சந்திக்கிறார்களன. நடுவயதினர் வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். நிலத்தால் வந்த பணத்தில் அடுத்த முயற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் வளரிளம் பருவத்து பொன்னய்யனும் ,அவனுடைய தாத்தா பாட்டிகளும், அவர்களின் நாயும் இந்த மாற்றத்தை மனதிற்குள், வாழ்விற்குள் சென்று அமைய சிரமப்படுகிறார்கள்.
பொன்னய்யன் வளவுக்குள் இருக்கும் வீட்டிற்கு வராமல் மேட்டாங்காட்டையே சுற்றி வரும் நாயை பிடிப்பதற்காக துரத்தி அலைவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அந்த நிலத்தில் உள்ள வீடுகளையும் தாவரங்களையும் அழித்து சமப்படுத்தும் காட்சியின் வழியே அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை காட்டப்படுகிறது. பொன்னய்யனின் ஆழ்மனதில் விழும் அடியாகவும் இந்த காட்சி இருக்கிறது. அந்த நிலம் முகம் மாறுவதை அவன் நுணுக்கமாக நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதே போல நிழல் முற்றம் நாவலில் இதே வயதுள்ள சக்திவேல், பூதன் போன்ற வளரிளம் பருவத்து சிறுவர்கள் தங்களுக்கான நிலம், வீடற்று திரையரங்கம் என்ற அந்தரமான ஒரு வாழ்விடத்தில் அலைகழிகிறார்கள். பசி அவர்களை எந்தநேரமும் துரத்துகிறது. கூளமாதாரி நாவலிலும் இதே வயதுள்ள கூளையன், வவுறி, நெடும்பன், செவுடி போன்றவர்களுக்கும் பசி ஒரு தவிர்க்க முடியாத வலியாக இருக்கிறது. ஆனால் திரையரங்கத்து சிறுவர்கள் விட்டில்கள் போல மாய்கிறார்கள்.
ஆனால் ஏறுவெயில் நாவலில் அப்படி பள்ளியும் படிப்பும் வீடும் அமைந்த வளரிளம் பருவத்தினரும் நிழல்முற்றம் நாவலில் வரும் சிறுவர்களைப் போலவே தீமைகளுக்குள் தாங்களாகவே செல்கிறார்கள். உண்மையில் ஆண் குழந்தைகளின் மனப்பாதைகளை, அவர்களின் சிக்கல்களை அப்பட்டமாக சொல்வதின் மூலம் இந்த நாவல்கள் அந்த சிக்கல்கள பற்றிய வெவ்வேறு தருணங்களை காட்டுகின்றன.
ஒப்பீட்டளவில் கூளமாதிரியில் வரும் சிறுவர்களின் உலகம் எவ்வாறோ ஔிமிக்கது. அங்கு அரவணைத்துக்கொள்ள இயற்கை தன் விரிந்த கைகளுடன் அவர்கள் முன் நிற்கிறது. பனையோ, கிழங்குகளோ, கடலைசெடிகளோ அவர்களின் வயிற்று தீ அவர்களை எரிக்கவிடாது காக்கின்றன. நிழல் முற்றத்து சிறுவர்கள் சுரண்டல்களை மட்டும் சந்தித்து அதனால் அவர்களே எரிந்து போகிறார்கள். கூளமாதாரியிலும் அது உண்டென்றாலும் அவர்களின் தலைமீது குடையாக பனையும், வெளியும், நிலமும் இருக்கின்றன. கூளமாதாரியில் படிப்படியாக கூளையன் அடையும் மனவிரிவு இந்த மூன்று நாவல்களின் உச்சமான பகுதி என்று சொல்லலாம். நிழல் முற்றத்தில் தீமையில் கலங்கும் மனம் இங்கு மெல்லிய கண்ணீரில் ஆசுவாசத்தை அடைகிறது
உதாரணமாக கூளமாதாரியிலும், நிழல் முற்றத்திலும் தங்களால் தவிர்க்கவே முடியாத சூழலில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள் அடையும் அனுபவத்தை சொல்லலாம். நிழல் முற்றத்தில் தப்பிக்கவே முடியாதபடி சக்திவேல் Child abuse ற்கு ஆளாகும் இடத்தையும்,கூளமாதாரியில் தன்னுடைய பண்ணையக்காரரால் ஒரு சிறு தவறுக்காக கிணற்றுக்குள் இருளில் அந்தரத்தில் கயிற்றில் கட்டி கூளையன் தொங்கவிடப்படும் இடமும் முக்கியமானது. இருவரும் ஒருவிதத்தில் தாங்கள் சந்திக்கும் சூழலால் panic attack க்கிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் சந்திக்கும் மனநிலை சார்ந்த சவால்கள் என்ன என்று யாருக்குமே புரிவதில்லை. நிழல் முற்றத்து சக்திவேல் நாவலின் இறுதியில் புதைசேற்றுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் உணர்வை நமக்கு அளிக்கிறான். ஆனால் கூளையன் தன்னை சூழும் இருளை மிதித்து மேலேறி ஆளுமையின் உச்சமான ஒரு பகுதியை எட்டுகிறான். பயம், தயக்கம், விளைவுகளை உதறி அவன் தான் உணர்ச்சிவசப்பட்டு தண்ணீரில் அமிழ்த்திய செல்வத்தை தேடி நீரில் பாயும் போது நாவல் ஔி நோக்கி தன்னை திரும்பிக்கொள்கிறது. இருநாவல்களுமே அடிப்படையில் ஒன்று தான். நாவலின் களம் சார்ந்து ஒன்று இருளிலும், ஒன்று வெளிச்சத்திலும் சென்று முடிகிறது.
மேலும் விவசாயம் என்பதற்கும், வணிகமும் பொழுதுபோக்கும் இணைந்த தொழில் என்பதற்கும், இயற்கை என்பதற்கும், பொழுதுபோக்கு என்பதற்கும் இடையேஉள்ள ஒளியும் இருளுமான வேறுபாட்டை இந்த நாவல்களில் பார்க்கமுடிகிறது. என்னதான் சினிமா கலை என்று சொன்னாலும் கூட அதில் வணிக அம்சமே சதவிகிதத்தில் கூடுதல் என்பதை மறுக்க முடியாது. ஒன்றின் அடிப்படையே அதன் குணாம்சத்தை, விளைவை தீர்மானிக்கிறது. விவசாயமும் இன்று பகுதியளவில் தொழில் என்றாலும் கூட அதில் வணிக அம்சம் குறைவு இல்லையா? பெருமாள் முருகன் இந்த இருநாவல்கள் சார்ந்து வைக்கும் சித்திரங்கள் நம்மை அடிப்படைகளில் உள்ள நன்மை தீமை பற்றிய விசாரணைக்குள் செல்லவைக்கிறது. அதன் மூலம் இரு வாழ்க்கை சார்ந்த சாளரங்களை திறக்கமுடிகிறது. அதன் மூலம் சமூகத்தில், மனித ஆழ்மனதின் ஒரு அடுக்கை அப்பட்டமாக்குகிறார்.
மேற்சொன்ன விஷயங்களில் ஏறுவெயிலில் உள்ள பாதை வித்தியாசமானது. பதின்வயதின் இயல்பிலேயே உள்ள தன்மை, பணத்தைக்கொண்டு மனிதரை பயன்படுத்தி, தன் இச்சைகளை நோக்கி செல்லும் பண்பு குடியிருப்பு பகுதி பையன்களின் இயல்பிலேயே உள்ளது. இங்கு குடும்பத்தையோ, சமூகத்தையோ நாம் கேள்வி கேட்க முடியுமா என்று தெரியவில்லை. தன்னளவிலேயே உள்ள விழுமிய குறைபாடு அல்லது மதீப்பீடுகள் பற்றிய எகத்தாளங்கள் உள்ள பதின்வயதின் தன்மையை இந்தப்பகுதி காட்டுகிறது. காதலோ காமமோ தீமையாவதில்லை. அது மனித இயல்பின் ஆதாரங்களில் ஒன்று. அதை அடையும் விதங்களும் அதை பற்றிய பார்வைகளுமே தீமை என்பதற்குள் வருகிறது. தீமை தனிநபர் சார்ந்தது அல்ல. அது இயல்பாகவே வன்முறைக்குள் செல்லும். இன்னும் ஆழமாகப் பார்த்தால் தீமை என்பதை விட மனிதநேய குறைபாடு என்றும் சொல்லலாம். ஆனால் அதில் பொன்னய்யாவின் மனம் ஒரு புதிய வெளிச்சத்தை பதின்வயதில் உணர்கிறது.
பதினாறு வயது பையன்கள் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் காலம் அது. கூட்டாக படிப்பதாகக் காட்டிக்கொண்டு விலைமகளை அவ்வபோது தேடிப்போகிறார்கள். அதிலிருந்து விலகியிருக்கும் பொன்னய்யாவை சீண்டி அங்கு அழைத்து செல்கிறார்கள். இருளில் சற்று தூரத்தில் கேட்கும் குரல் அங்கிருந்து அவனை துரத்தியடிக்கிறது. அவனை இடுப்பில் தூக்கிக்கொண்டு காடுமேடெல்லாம் திரிந்து கொஞ்சிய குரல் அது. கிட்டத்தட்ட தாய் போன்றவள். பொன்னய்யா குடும்பத்திற்கு வீடும் வயலும் பண்ணையமும் இருந்த நாளில் அங்கு வேலை செய்பவரின் மகள் ராமாயி. நிலம் கைவிட்டு போனபின் அவர்களை சார்ந்து வாழ்ந்தவர்களுக்கும் போக்கிடமும் பிழைப்பும் இல்லாமல் ஆகிறது. வறுமையின் கொடுமையால் ராமாயி அந்த சூழலுக்கு வருகிறாள்.
ராமாயி ஏன் இப்படி ஆனாள்…நான் ஏன் இவர்களின் சீண்டலிற்காக அங்கு சென்றேன் ..தாயிடமா…? என்று எரியும் மனதை கிணற்றில் போட்டு நனைத்து, மனதையும் உடலையும் கழுவ முயலும் அந்த சிறுவன் நம்மை தொந்தரவு செய்வபன். அவனுக்கு சகவயதினர் தரும் சீண்டல்கள் முக்கியமான ஒரு விஷயம். அந்த சீண்டல் தீமையின் அம்சம். அந்த சீண்டல் வெறும் சீண்டல் அல்ல. அதுதான் மனிதனாகி வந்தவனை மீண்டும் விலங்காக மாற்றி அழிப்பது. பாலுணர்வு சார்ந்த விஷயங்களில் மட்டுமல்ல இந்த சீண்டலின் விளையாட்டு அதிகாரம், ஆணவம், ஆதிக்கம் என்று அனைத்திலும் ஆதார இயக்கவிசையாக செயல்படுவது. அதற்கு தப்பிப்பவர்கள் பொன்னய்யா போன்ற சிலரே.
இந்த மூன்று நாவல்களில் உள்ள சிக்கல்கள், இருள் வெளிச்சம் போன்றவற்றிலிருந்து எழுத்தாளரின் தோன்றாதுணை என்ற கட்டுரை தொகுப்பிற்கு அழுத்தமான ஒரு கோடு போட முடிகிறது. எழுத்தாளரின் அம்மா பற்றிய நினைவு தொகுப்பு இது. இதில் உள்ள தாய் தன் மகனிற்கு நீரச்சத்தை போக்குகிறார். தன் அன்பின் சிறகணைப்பிற்குள் மகனை வைத்துக்கொள்கிறார். அச்சமும் தயங்கங்களும் உள்ள மகனிற்காக புளியமரங்கள் நிற்கும் சாலையின் திருப்பம் வரை முகம் காட்டி நிற்கிறார். இருப்பின்மையிலும் நான் இருக்கிறேன் என்று ஆழமாக மகனின் மனதில் பதிக்கிறார். இந்த தாய்மை என்ற விஷயம் மேற்சொன்ன மூன்று நாவல்களில் என்னவாக இருக்கிறது? இந்த மூன்று நாவல்களுமே இதன் அடிப்படையில் இயங்குவதை நாம் மறுக்கமுடியாது. இங்கு தாய் என்பதை தாய்மையாக மாற்ற வேண்டியிருக்கிறது. நிழல் முற்றம் நாவலில் உள்ள சிறுவர்களைப்போல தாய் இல்லாத நிலையில், அல்லது ஏறுவெயில் வரும் பையன்கள் போல தனி ஒரு தாயால் பிள்ளைகளை கையாள முடியாத போது, சூழலில் செயல்படும் விசைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நிழல் முற்றத்தில் தாய் மற்றும் தாய்மைக்கான சூழல் இல்லை. இந்த நாவலில் தாய்மை அம்சமும் எங்குமே இல்லை. அதனால் அங்கு இயல்பாகவே பிறழ்வுகளும், சுரண்டல்களும் தீமைகளும் அரங்கேறுகின்றன. ஏறுவெயிலில் பொன்னையாவிற்கு தன் தாய் போதுமானவராக இல்லை. ஆனால் அங்கு அவன் ஆளுள்ளத்து நன்மை, பாட்டி, தலைமேல் நிற்கும் நிலா, இயற்கை என்று கலவையான ஒரு அம்சம் அவனுக்கு கிடைக்கிறது. அவன் அதைப் பற்றிக்கொள்கிறான்.
கூளமாதாரியில் அத்தனை பெரிய வானமும், இயற்கையும், வெயிலும், ஆடுகளும்,அவற்றின் பூங்குட்டிகளும், நாயும், விளையாட்டு நண்பர்களும், பனையும், பாறையும், கிணறும் தாய்மை அம்சம் கொள்கின்றன. இங்கும் காமம் விளையாடப்பார்க்கிறது. ஆனால் நிழல் முற்றத்தின் தீமை போல அல்ல. இங்குள்ளது உயிரியல்பு. இந்த மூன்று நாவல்களும் அவற்றுக்குள்ளேயே பேசுபொருள் சார்ந்த ஒத்திசைவை கொண்டுள்ளன. கூளமாதாரியில் வரும் பண்ணையார் கூட பனம்கிழங்கு விதைப்பில் வரும் பணத்தை கூளையனிடமிருந்து வாங்குவதில்லை. அவனுக்கு பனம் கிழங்கு விதைக்க கற்றுத் தருகிறார். புன்னகையுடன் அவன் ஆர்வத்தை பார்க்கிறார். நிழல்முற்றத்தில் இந்த சிறு ஈரம் கூட இல்லை.
சிறார் உலகின் சிக்கல்களும் அதற்குண்டான நேர்விசைகளும் நாவல்களிலேயே உள்ளன. நிழல் முற்றம் தவிர. நிழல்முற்றம் ஒரு ஆழமான காயத்தை, தொந்தரவை மட்டும் நம் முன் வைத்துவிட்டு விலகி விடுகிறது. இந்த மூன்று நாவல்களையும் சேர்த்து ஒன்றாக வாசிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த நாவலில் வரும் மேட்டுகாட்டு வாழ்க்கையில் பரிச்சயம் உண்டு. பச்சை மலையின் ஒரு குன்றடியில் களத்து வீட்டு வயலில் அம்மாச்சி தாத்தா வாழ்ந்தார்கள். ஊருக்குள் செல்ல கால்மணி நேரத்துக்குமேல் நடக்க வேண்டும். எங்களுக்கு அந்த ஊர் அறிமுகமே இல்லை. அம்மாச்சி வீடு என்றால் குன்றடியில் வயல்கள். ஆங்காங்கே பெரிய களமும் வீடும், ஆடு மாடு, தொழுவம் பட்டிகள், தென்னைகள், கொட்டாய்கள் உள்ள கண்எட்டும் வரையுள்ள பரந்த நிலம். கூளமாதாரி, ஏறுவயலில் உள்ள நிலமும் சமூகவாழ்க்கையும் வட்டாரவழக்கும் எனக்கு பரிட்சயமானது. எனக்கு இளம் வயதிலேயே சில சமூகங்களுடன் கிராம வாழ்க்கை சார்ந்த பரிட்சயம் உண்டு. விடுமுறைகளுக்கு உறவுகளின் ஊர்களுக்கு சென்று ஒரு மாதம் போல தங்கி வந்தது தான் காரணம். அப்படி அம்மாச்சி வயல்வீட்டின் குன்றடி வாழ்க்கை இந்த நாவல்களில் வருவதை போன்றது என்பதால் அந்த மக்களின் ஈரமான ஆழமான ஒரு பகுதியை உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் நான் அறிந்த சமூகங்களுக்குள், மனிதர்களுக்குள் இருக்கும் ஈரத்தை காணும் வாய்ப்பு பெற்றவள் என்பதால் அங்கிருந்தே மனிதர்களை, சமூகங்களை புரிந்து கொள்ள எத்தனிக்கிறேன். ஆட்டுப்பட்டி போடும் ஆட்களும் ,அவர்களின் குழந்தைகளும் நிலகிழார்களும், அந்த வீட்டு பெண்களும், சிறார்களும் சிறுமிகளுடனும் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. எழுத்தாளர் எழுதியிருக்கும் காலத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு பின் அது போன்ற சூழலின் மனித உறவுகளும், மதிப்பீடுகளும், சகமனித ஃபாவமும் மாறிவிட்ட நிலையில் இந்த நாவலை வாசிக்கிறேன். தலைகீழாக மாறவில்லை என்றாலும் கூட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த நாவல்களை வாசித்து முடித்தப்பின் மனிதர்களுக்குள் உள்ள சீண்டல்களின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
உதாரணமாக கூளமாதாரியில் செல்வம் கிணற்றில் கூளையனை தண்ணீரில் திரும்பத்திரும்ப அமுக்கிவிடுவது. ஏறுவெயிலில் பொன்னய்யாவை சகவயதினர் சீண்டும் இடங்கள். கூளமாதாரியில் பண்ணயக்காரரை, சக பண்ணையக்காரர் பழிஉணர்வுடன் வார்த்தைகளால் சீண்டும் இடங்கள் முக்கியமானது. இந்த நாவல்களை வாசிக்கும் போது சீண்டல் என்பது வன்முறையை தூண்டும் அடிப்படைகளில் ஒன்று என்று உணரமுடிகிறது. எந்த பக்கமானாலும் சூழல் மாறும் தருணத்தில் அதனை குலைக்கும் சீண்டல்களை நாம் அனுமதிக்கலாகாது என்றே மறைமுகமாக எழுத்தாளர் சொல்வதாக உணர்கிறேன். இந்த நாவல்கள் சமூக நாவல்கள் என்பதாலும், இயல்புவாத நாவல்கள் என்பதாலும் இதை சொல்லவேண்டியிருக்கிறது.
ஏறுவெயிலில் புதிதாக குடியேறிய வீட்டிற்கு வராமல் வாழ்ந்த நிலத்தையே சுற்றி வந்து சாகும் நாய் ஒரு ஆழமான குறியீடு. அது பொன்னய்யாவின் மனம் தான். இறுதியில் இறந்த நாயின் அழுகிய சடலத்தின் நாற்றத்திற்கு முகம் சுளிக்கக்கூடாது என்ற பிடிவாதத்துடன் நாயை தலையில் தூக்கிக்கொண்டு சென்று பொன்னய்யா புதைக்கிறான். அவன் கிட்டத்தட்ட தன் வளரிளம் பருவத்தை கடந்து செல்லும் பருவம் அது. தன் சமூகம் சார்ந்த, சூழல் சார்ந்த, தன் மனம் சார்ந்த அழுகிய பகுதிகளை புதைப்பது போன்ற செயல் அது. அவனுள்ளே உள்ள நேயமும், நன்மை மீதான பிடிவாதமும் துளிர்விடும் இளமையின் தொடக்கத்தில் நாவல் முடிகிறது.
நிழல் முற்றத்தில் அவனுடைய மனநலம் சரியாக இருக்கிறதா? பிறழ்ந்திருக்கிறதா? என்று ஊகிக்க முடியாது. அந்த முற்றத்தில் இருள் அடர்ந்து கொண்டிருக்கும் சித்திரம் நமக்கு கிடைக்கிறது.
கூளமாதாரி கொடுப்பது அன்றாடத்தில் இல்லாத ஒரு வெளிச்சம். நாவலின் முடிவில் கூளையன் வளரிளம் பருவத்தின் உச்சமாக தன்னுள் சட்டென்று எழுந்த வன்மத்தை கடந்து, பயத்தை கடந்து, தயக்கமில்லாமல் நெஞ்சுரத்துடன் நீரில் பாயும் இடம் நாவலின் உச்சமான ஒரு பகுதி.
வறல் பகுதியில் கூளையன் தன் வளவுக்கு செல்லும் போது அவன் சமூகத்தை சார்ந்த பெண்கள் கூள…மாதாரி ஏ…கூள மாதாரி என்று அவன் பெயருடன் சமூகத்தின் பெயரையும் சேர்த்து சொல்லி சிரிக்கும் போது நமக்கும் ஒரு புன்னகை வருகிறது. இங்கு சமூகப்பெயர் ஒரு பெருமையாக இன்னும் நினைக்கப்படும் என்றால் கூளமாதாரி என்பது எத்தனை மகத்தான பெயர். அவன் உணரும் மனவிரிவே அவன்.
அதைத் தான் நம் அய்யன் தக்கார் தகவிலார் என்பது அவரவர் உச்சத்தால் காணப்படும் என்றும், எந்த உயிருக்கும் துன்பமிலைக்காதவன் அறவான் என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும் எழுத்தாளரின் நாவலில் வரும் நிலமும் வெளியும் பனையும் ஏரியும் நிலவும் கிணறும் நம் மனதில் இனியதாக எஞ்சுகிறது.
இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து வளரிளம் பருவத்தவர், சிறுவர்கள்,பையன்கள், குழந்தைகள் என்று மாற்றி மாற்றி குறிப்பிடுவதை கவனித்திருக்கலாம். அவர்களுக்குள் காமமும் வன்மமும் முகம் காட்டினாலும் கூட அந்த வயதினரை எங்கு வைப்பது என்பது எப்போதும் சிக்கலானது. கூளமாதாரியில் சட்டென்று தோன்றும் காதல் கூட குழந்தை தனமானதாக உள்ளது. அதனால் தான் அவன் கிணற்றுக்குள் தன்னால் அழுத்திவிடப்பட்ட செல்வத்தை காப்பற்ற கிணற்றில் பாய்கிறான். குழந்தைகளால் பூரணமாக மன்னிக்கமுடிகிறது. அல்லது பூரணமாக மன்னிப்பது குழந்தை.
ஏறுவெயிலில் பொன்னய்யாவின் பாட்டியிலிருந்து, கூளமாதாரியில் வவுறி, செவுடி போன்ற பெண்குழந்தைகள், கூளையனின் பாட்டி வரை இந்த நாவல்களில் உள்ள பெண்கள் உழைக்கும் பெண்கள். அவர்களின் உலகம் சிறியது. வாழ்க்கை செல்லும் போக்கில் அடித்து செல்லப்படுபவர்கள். ஆனால் தோன்றாத்துணையில் வரும் அம்மாவின் சித்திரம் அந்த நிலத்தின் வலிமையான பெண்ணை நமக்கு அளிக்கிறது. பெண் விவசாயி என்பது எத்தனை பெரிய வலிமையான சித்திரம் என்பது விவசாய பின்புலம் உள்ளவர்களுக்கு சரியாக விளங்கக்கூடும். இயற்கையுடனான போராட்டத்தில் பெண். அவளே ஒரு முழு விவசாயி. எழுத்தாளரின் படைப்புலகில் தோன்றாத்துணை முக்கியமான புத்தகம். வாசிக்க ஒரு எளிய பெண்ணின் சித்திரம் என்று தோன்ற வைக்கும். ஏனெனில் தனக்கான ஆசைகளோ ,லட்சியங்களோ, சிந்தனைகளோ இல்லாத பெண் என்று இன்று வாசிப்பவர்கள் முடிவுகட்டிவிட வாய்ப்புண்டு. ஆனால் அந்தஅம்மாள் நிலத்துடன், மரங்களுடன், குடும்பத்துடன் கொண்ட போராட்டமான வாழ்க்கை முக்கியமானது. தந்தையிலிருந்து கணவன் பிள்ளை என்று வரிசையாக அவரை நம்பிக்கை இழக்க வைக்கிறார்கள். கோரமான ஒரு விபத்திலிருந்து மீண்டு விடுகிறார். ஒரு விவசாயிக்கு அந்த வலிமை உண்டு. இறுதி வரை அவரிடம் உள்ள மனஉறுதி வியப்பானது. அதை டிமென்ஷியாவால் கூட கலைக்கமுடியவில்லை. அவரில் உள்ள சுயம்[Self] தனித்துவமானது. நம் ஊரில் அதை வைராக்கியம் என்பார்கள். ‘தன் கையை ஊன்றி தானே எழுந்திருச்சாள்[ன்]’ என்று கவித்துவமாக பழமாழி நம்மிடம் உண்டு. ஒரு விவசாயியால் அது முடிவது தான்.
அடுத்தது கூளமாதாரியில் வரும் சிறுமி வவுறி. வவுறி வந்தால் அந்த வெறிசோடிய மதியபொழுதின் நிலம் உற்சாகமாக மாறிவிடும் என்று கூளையன் அவளைப் பற்றி நினைப்பான். ஆடு மேய்க்கும் வேலைக்கு இடையில் எப்போதும் விளையாடும் இயல்புள்ளவள். இந்த விளையாட்டுகள் அவர்களின் உலகை சோர்வில்லாமலாக்குகிறது. நிழல் முற்றத்தில் இந்த விளையாட்டு இல்லை. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்றாலும் கூட முழு பெரியவர்கள் போல விளையாட்டுதனமில்லாமல் இருப்பதால் அவர்களை போதை பழக்கம் தன்பக்கம் இழுக்கிறது.
அழிகாடு என்பதும் கூட வளரிளம் பருவம் போல நடுப்பாதை. செழித்த வயலும் அல்ல. காய்ந்த வயலும் அல்ல. அடுத்த பருவத்திற்கு உரமாகும் காடு. சிலஇடங்களில் பச்சை. சில இடங்களில் காய்ச்சல். சில இடங்களில் பட்டுப்போன செடிகள். சில இடங்களில் வெறும் நிலம். அங்கங்கே விதைகள் என்று பச்சை துளிர்த்தும், அழிந்தும் கொண்டிருக்கும் காடு. அத்தனையும் சருகாக விட மாட்டார்கள். பச்சை இருக்கும் போதே உழுது நீர் பாய்ச்சி நொதிக்க விடுவது வழக்கம். அழிகாடு என்பது விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல. இயற்கை சார்ந்தது. பெருங்காடுகளில் அழிகாடு என்பது நடந்து கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு. அனைத்திலும் புதுபித்தலுக்கு முன்பான, வளர்ச்சிக்கு முன்பான நிலை அது. அழிகாடு ஈரம் இல்லாமலானால் அந்த நிலம் பொட்டலாக மாறக்கூடும். அந்த பொட்டல் நிழல்முற்றத்தில் உள்ளது. எதுவும் பொட்டலாகிவிடக்கூடாது என்பதோ, எதுவும் பொட்டலில்லை என்பதோ தான் இலக்கியத்தின் அடிப்படையும், விழைவுமாக இருக்கிறது. நல்ல அழிகாடு என்பது சருகும், பச்சையும், அழுகலும் நிறைந்தது. அதை உழுது விதைத்தால் வெள்ளாமை களம் நிறைக்கும். அது போலவே வளரிளம் பருவமும். அந்த பருவத்தை மூன்று நாவல்களின் மூலம் ஆழமாக சொல்லிய எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு வணக்கங்களும் அன்பும். அந்த வாழ்க்கை முறை இன்றில்லை. ஆனால் அதே சிக்கல்கள் இன்று தீவிரமடைந்துள்ளன. என்றுமுள்ள சிக்கல்கள் அவை.
கூளமாதாரி நாவல் புழுதி, கொழிமண், வறல் என்று மூன்று பகுதிகளாக உள்ளது. ஒரு வாசகியாக எனக்கு உளஎழுச்சியை தந்த பகுதி கொழிமண் பகுதியில் வரும் மழைகாட்சி. பெருமாள் முருகன் எனும் படைப்பாளி இந்த மூன்று நாவல்களில் எய்திய உயரம் என்று நான் உணர்கிறேன்.
மேட்டாங்காட்டில் பட்டி போட்டிருக்கிறார்கள். நள்ளிரவு. ஆங்காங்கே உயரமான பனைகள் காற்றில் அலைகழிகின்றன. மேகங்கள் கூடி விண்மீன்களையும் மறைத்துக்கொள்ள மேலும் இருள் செறிகிறது. பலமான காற்று வீசுகிறது. இரு சிறுவர்கள். இருவருக்குள்ளும் பிறப்பாலும், சமூகத்தாலும், பொருளாதாரத்தாலும் நிறைய வேறுபாடுகள். ஒருவன் பண்ணையக்காரரின் மகன். இன்னொருவன் அவன் வீட்டில் கூலிக்கு வேலை பார்ப்பவன். ஒரு சிறுவன் மற்றவனை மறந்தும் கூட வாடா போடா என்று அழைப்பதில்லை. ய்யா என்று அழைக்கிறான். அவன் கட்டிலிலும் இவன் கீழே மண்ணிலும் சாக்கு விரித்து படுத்திருக்கிறார்கள். சட்டென்று வானத்திற்கு கிறுக்குப்பிடித்துவிடுகிறது. காற்றும் மின்னலும் இடியும் மழையும். இருவரும் பட்டியை ஆடுகளை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். ‘ய்யா கயித்த பிடி…ய்யா பயப்படாத’ என்று ஆள்கார சிறுவன் ஆணையிடுகிறான். கையில் பிறந்து சிலநாட்களே ஆன பூங்குட்டி. மழையின் ஆவேசத்தில் பட்டி காற்றில் தெறித்து பறக்கிறது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. பெருமழை. சிறுவர்களுக்குண்டான பயம் வேறு. ஆடுகள் திசைக்கொன்றாக ஓடி பனையடி, தாவரங்கள், பாறைகளுக்கிடையில் பதுங்கிக்கொள்கின்றன. இருவரும் வெட்டவெளி அத்துவானத்தில் நிற்கிறார்கள். மின்னல் இடி மழை தீவிரமாகிறது. நிற்க முடியாமல் அப்படியே நிலத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். ‘ய்யா..பயப்படாத’ என்கிறான் ஒரு சிறுவன். உடனே அடுத்தவன் அவன் மடியில் படுத்துக்கொள்கிறான்.
நெஞ்சணைப்பில் ஒரு பூங்குட்டியும், மடியில் ஒருவன் உயிர்பயத்திலும் படுத்திருக்க அவன் முதுகை அணைத்துபிடித்தபடி இந்த சிறுவன் மழையை, இருளை, மின்னலை பார்த்து சிரிக்கிறான். இதை எழுதும் போது கட்டுரையில் முன்னர் சொல்லிய தாய்மையை நினைத்துக்கொள்கிறேன். அது பெண் சார்ந்தது அல்ல. இதனால் இங்குள்ள தீமையை சரி செய்ய முடியலாம். இந்த நாவல்களில் உள்ள வளரிளம் பருவத்தின் ஆகப்பெரிய துணை அது என்று தோன்றியது. அது சமூகத்தால், யாரென்று தெரியாதவரால், சகமனிதரால் என்று அனைவராலும் குழந்தைகளுக்கு அளிக்கமுடியக்கூடிய ஒன்றுதான். அந்த சுனையை மூடியிருக்கும் கற்களை இந்த நாவல்கள் அடையாளம் காட்டுகின்றன.
எழுத்தாளரின் அறுபதாவது வயது ஆண்டில் அவரை வணங்கி அவரின் இக்கட்டான சூழலில் அவருக்கு சொல்லப்பட்ட வரிகளுடன் இந்தக்கட்டுரையை நிறைவுசெய்றேன். அறுபதாவது வயது என்பது நமக்கு ஒரு பிறப்பு போலவே முக்கியத்துவம் வாய்ந்தது.
‘எழுத்தாளன் தன் தன்னறமாகிய எழுத்தில் உயிர்த்தெழட்டும். [ "Let the author be resurrected to what he is best at. Write." ] ‘
எழுத்தாளருக்கு வணக்கங்களும் அன்பும்.




Comments
Post a Comment