நீரென எழும் காலம் எங்கும் நீர் நிறைந்து நப்புத்தட்டி முடங்கிக் கிடக்கிறது ஊர். தட்டியெழுப்ப எண்திசைகளிலிருந்தும் எழும்சாமிகள் உடுக்கையோடும் முழவுகளோடும் தெருக்களில் நடமாடும் இரவுகளில்… அவன் குளிரென எழுகிறான். ஒவ்வொரு வீடாக திண்ணையில் அமர்ந்து இற்றுப்போனவைகளை சேர்த்துக்கட்டி வடக்குநோக்கி விரைகிறான். சாமிகள் செய்வதறியாமல் வழிவிட்டு நிற்கின்றன. ஊரெங்கும் பரவிக்கிடக்கும் ஈரக்குளிரை இருளோடு போர்த்திக்கொண்டு ஒலிக்காத தண்டைகளுடன் நடந்து செல்கிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஊர் தன்னை உலுக்கிக்கொள்கிறது. ...