கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அப்பொழுது எனக்கான வலைப்பூவை உருவாக்கவில்லை. இந்த நினைவை எழுதக்காரணம் அது அழகிய நினைவு என்பதே. இந்த மனிதர்களை நிகழ்வுகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும். மறதி குறித்த பதற்றம் எழுத நினைத்ததை உடனே எழுத செய்கிறது. மறதி வராமலும் போகலாம் என்ற சாத்தியமும் கொண்டதே வாழ்க்கை. ஜனவரி ஒன்றாம் தேதி பின்காலையில் அந்த மின்னஞ்சல் வந்தது. வீட்டிலுள்ள ஒன்பது பேரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். தங்கையின் திருமணத்திற்காக முதல்நாள் வாங்கிய பட்டுப்புடவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். முதல்நாள் ஜவுளிவாங்கும் அலைச்சலில் என்னுடைய அலைபேசி, பயல்கள் எவனுடைய பேண்ட் பாக்கெட்டிலோ இருந்தது. அவன் என்னை யார் அழைக்கப்போகிறார்கள் என்று சைலண்ட்டில் போட்டிருக்க வேண்டும். அன்று ஜவுளிக்கடையில் வீட்டின் கூட்டத்துடன், உறவுகளின் கூட்டமும் இணைந்திருந்தது. யாரடி நீ மோகினி திரைப்பட திருமண ஜவுளி வண்டி கணக்காக நள்ளிரவில் திரும்பும் போதும் அலைபேசி யாரிடமோ இருந்தது. சென்ற வாரம் இதேபோல தம்பியின் (சின்னய்யாவின் மகன்) திருமணபத்திரிக்கை படைக்க குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோதும் அலைபேசியை ...