Skip to main content

சக்யை சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரையும் என்னுரையும்

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அப்பொழுது எனக்கான வலைப்பூவை உருவாக்கவில்லை. இந்த நினைவை எழுதக்காரணம் அது அழகிய நினைவு என்பதே. இந்த மனிதர்களை நிகழ்வுகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும். மறதி குறித்த பதற்றம் எழுத நினைத்ததை உடனே எழுத செய்கிறது. மறதி வராமலும் போகலாம் என்ற சாத்தியமும் கொண்டதே வாழ்க்கை.






ஜனவரி ஒன்றாம் தேதி பின்காலையில் அந்த மின்னஞ்சல் வந்தது. வீட்டிலுள்ள ஒன்பது பேரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். தங்கையின் திருமணத்திற்காக முதல்நாள் வாங்கிய பட்டுப்புடவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். முதல்நாள் ஜவுளிவாங்கும் அலைச்சலில் என்னுடைய அலைபேசி, பயல்கள் எவனுடைய பேண்ட் பாக்கெட்டிலோ இருந்தது. அவன் என்னை யார் அழைக்கப்போகிறார்கள் என்று சைலண்ட்டில் போட்டிருக்க வேண்டும். அன்று ஜவுளிக்கடையில் வீட்டின் கூட்டத்துடன், உறவுகளின் கூட்டமும் இணைந்திருந்தது. யாரடி நீ மோகினி திரைப்பட திருமண ஜவுளி வண்டி கணக்காக நள்ளிரவில் திரும்பும் போதும் அலைபேசி யாரிடமோ இருந்தது. சென்ற வாரம் இதேபோல தம்பியின் (சின்னய்யாவின் மகன்) திருமணபத்திரிக்கை படைக்க குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோதும் அலைபேசியை வீட்டிலேயே வீசிவிட்டு சென்றுவிட்டேன். 'அது திரும்ப என்னிடம் வந்து தானே ஆவனும்' என்று முறைத்திருக்கலாம். வெளியில் செல்லும் போது எனக்கு அலைபேசி பெரும்சுமை.

இறுதியாக ஜவுளிகளை கணக்குப்பார்த்து வைத்துவிட்டு உறங்கப்போகும் போது "இந்த மொபைல் யாருது?" என்று கேட்டு என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. வாசகசாலை கார்த்திகேயன் அழைத்திருந்தார். ( அப்படித்தான் அவர் பெயர் அப்பொழுது நினைவில் இருந்தது) ஏனெனில் ஏற்கனவே நம் வாழ்வில் கார்த்திகேயன்கள் அதிகம். கார்த்திகேயன்கள் கதை ஒரு நீண்ட கதையாகும். என்றாலும் எழுதலாம். அதற்குத்தானே இந்த அனுபவக்குறிப்பை தொடங்கியது. கார்த்திகேயன் அத்தனை முறை அழைத்திருந்தார். பார்த்ததும் 'பக்' என்றிருந்தது. அந்தக்குளிரிலும் கைகளில் மெல்லிய ஈரம் படர்ந்தது. 

என்னுடைய அண்ணன் பெயர் கார்த்திகேயன். பெரியம்மா பையன் என்றால் நமக்கு அண்ணனுக்கு மேலே அன்பும் செல்லமும் நெருக்கமும் அதிகம். கமலாகார்த்தி என்றே நாங்கள் அம்மாச்சி ஊரில் சேர்த்து அழைக்கப்படுவோம். அந்த அளவிற்கு பாசமலர் சீன். அதன் பிறகு என்ன? மறுபரிசீலனை இன்றி கார்த்திகேயன்கள் அனைவருமே அண்ணாதான். அதற்கேற்றாற் போல வகுப்புத்தோழன்,கல்லூரி,வாசகசாலை என்று வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் பயணப்படும் பெயர். சமவயதாக இருந்தாலும் அண்ணன் என்றே அழைப்பேன். கல்லூரியில் இதற்காக பலமுறை பலரால் கேலி செய்யப்பட்டிருக்கிறேன். அனேகமாக தினமும் 'அண்ணன் இன்னும் வரலையா...உங்கண்ணனுக்கு உடம்பு சரியில்ல தெரியுமா...உங்கண்ணன் ஒருபிள்ளைக்கிட்ட பேசிக்கிட்ருக்கான் இதெல்லாம் கேக்க மாட்டியா' என்று எதையாவது கேட்டு பசங்கள்  கேலி செய்து கொண்டே இருப்பார்கள். சக்யை க்கு அட்டைப்படம் வரைந்தவர் கூட கார்த்திகேயன் தான். இரண்டாவது நூலான 'குருதியுறவு' விற்கு பின்னட்டை வாசகங்கள் எழுதியவர் எழுத்தாளர் கார்த்திக்புகழேந்தி. எதிர்வரும் வழியில் எந்த திருப்பத்தில் இன்னும் எத்தனை நேசர்கள் இருக்கின்றனரோ. இந்தப் பெயரை வைத்து பெரிய புனைவே எழுதிவிடலாம் போல.

மேல் பத்தியில் என் முதல்புனைவுநூல் கோபமாக பல அழைப்புகளுடன் நிற்கிறது. வீட்டில் அனைவரும் உறங்கும் அந்தப்புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாசகசாலை கார்த்திகேயனின் சலிப்பான, சற்று கோபமான வாய்ஸ்நோட் அறிவுறுத்தியபடி வெடிச்சத்தங்களும், தெருப்பயல்களின் கூச்சல்களும் கேட்க, சக்யை க்கான என்னுரை,சமர்ப்பணம் எழுதிக்கொண்டிருந்தேன்.

புத்தாண்டின் முன்பகலில் முன்னே எங்கோ அந்தரத்தில்விட்ட எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் முன்னுரையும் சந்தடிகளுக்கிடையில் கிளிக் என்று அழைத்தது. புடவைகளின் நிறத்தை பல்புகளால் மாற்றிவிட்ட பேச்சுகள் வரவேற்பறையின் புத்தாண்டு பட்டிமன்ற ஒலிக்கு மேலாகக் கேட்டுக்கொண்டிருந்தது. நான் ஓரமாக எனக்கென நான் எடுத்திருந்த பச்சைநிற காட்டன்புடவையை மடியில் வைத்தபடி முன்னுரையை வாசித்தேன். முதன்முதலாக என்கதைகளைப் பற்றி சொல்வனம்,பதாகை ஆசிரியர் குழுக்களுக்கு அடுத்து ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை வாசித்தேன். நான்கு கதைகள் பிடித்திருப்பாக சொல்லியிருக்கிறார். சரிதான். நாசுக்காக இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை சொல்கிறார். மற்றவைகளின் சாதகபாதகங்களை எடுத்து வைத்திருக்கிறார். மீண்டும் வாசிக்கிறேன்.

"ந்தா...கமல்...ஏ கமலு...காதுல விழயா... என்ன பண்ற நீ...  வரவர நீயும் ஃபோனேயே தேய்க்கற...கெட்டப்பழக்கம். நல்லாருந்த பிள்ளையும் இப்பிடியாயிருச்சே..."

"சனி கால்ல ஏறி தலைவரைக்கும் விடாது. இந்த ஃபோனெல்லாம் அப்படித்தான். கேக்கற கேட்டு பொண்ணுங்க ஜவுளி வேலைய முடிங்க..."

வரவேற்பறையே நிறங்களாக விரிந்திருந்தது.

"ந்தா...என்னோட புத்தக..." என்ற என் குரல் எப்பொழுதும் போலவே அணுகுண்டுகளுக்கு நடுவில் ஓலைப்பட்டாசாகியது. அதையும் எப்பொழுதும் போலவே என்தங்கை காதில் வாங்கிவிட்டாள். பரவசத்தோடு வாங்கி வாசித்தாள். நல்லா எழுதியிருக்காருல்ல...என்று சிரித்தாள். அவள் கண்களில் மெல்லிய ஈரம் இருந்தது.


முன்னுரை

எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்.





ஒளிவேட்கை கொண்ட நிலவறை

இணைய இதழ்களில், சமூக ஊடகங்களில் மட்டுமே எழுதி பிரசுரமாகும் போக்கு சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அப்படி உருவாகும் தொகுப்புக்களில் அரிதாகவே நல்ல மொழியும் களமும் கூறுமுறையும் கொண்ட கதைகள் திகழ்கின்றன. அண்மைய ஆண்டுகளில் அப்படி தொய்வின்றி ‘பதாகை’ ‘சொல்வனம்’ இதழ்களில் எழுதி கவனத்தைப் பெற்று வருபவர் கமல தேவி. ‘வாசகசாலை’ வழியாக அவருடைய 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. மென்மேலும் சிறந்த கதைகளை அவரிடமிருந்து எதிர்நோக்குகிறேன். 

ஒரு எழுத்தாளரின் ஆக்கங்கள் வழியாக நாம் அடியாழத்தில் அவருக்கு ஒரு ஆளுமையை உருவாக்க முயல்வோம். அவரைப் பற்றிய புற தகவல்கள் வழியாக அந்த ஆளுமை உருவாக்கம் முழுமை பெரும். அவருடைய கதைகளை மதிப்பிடும்போது தவிர்க்கவியலாமல் எழுத்தாளனின் வாழ்வும் ஆளுமையும் குறுக்கீடு செய்யும். கதைகளின் வழியாக வாசகன் எழுத்தாளனின் அக உலகிற்குள் செல்கிறான். அவர் காட்டும் வாழ்வுடனும், அவருடைய வாழ்க்கை கேள்வியுடனும் தனக்கொரு தொடர்பு ஏற்படும்போது வாசகன் எழுத்தாளனின் அக அலைகழிப்பை தனதாகவும் உணர்கிறான். உண்மையில் இதற்கப்பால் ஒரு எழுத்தாளனைப் பற்றி அவனுடைய தனிவாழ்வைப் பற்றி அறியவேண்டியதில்லை. கமல தேவி அவருடைய கதைகளின் வழியாக மட்டுமே பரிச்சயமானவர். அவர் யார், என்ன வயது, என்ன பணி, எங்கு வசிக்கிறார் எனும் எந்த வாழ்க்கைத் தகவல்களும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் காட்டும் அக உலகம் அவரை எனக்கு நெருக்கமாக ஆக்குகிறது. 

அவருடைய கதைகளின் நிலம் என்பது அதிகமும் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்தது. காவேரி நதி ஒரு முக்கியமான பாத்திரமாக பல கதைகளில் ஊடாடுகிறது. அவருடைய கதை மாந்தர்கள் பெரும்பாலும் 2000 களில் பதின்மத்தை கழித்தவர்கள். அவருடைய ‘சொல்பேச்சு கேட்காத கரங்கள்’ கதை தொடுகைக்கான ஏக்கத்தையும் தொடுவதில் உள்ள தயக்கத்தையும் பற்றி பேசுகிறது. ஒருவகையில் இதை அவருடைய கதையுலகின் மைய இழையாக விரித்தெடுக்கலாம். அன்பிற்கான ஏக்கமும் அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு கதைகளின் ஊடாக, வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார். எதிலும் முழுக்க நனைந்துவிடக் கூடாது எனும் கூரிய சுயப் பிரக்ஞை கதைகளில் வெளிப்படுகிறது. குற்றால அருவியில் குளிக்க விரும்பும் அதே வேளையில் தனக்கென ஒரு சிறு குடையை விரித்துக்கொண்டு அருவிக்கு செல்பவர் எனும் மனச் சித்திரம் தோன்றியது. இந்த உருவகமேகூட அவருடைய ஒரு கதையில் ஆடி மழையில் நனைவதைப் பற்றி அவர் எழுதியதன் நீட்சிதான். “குடைக்குள் அடங்காத காத்தும் மழையும்.எந்தத் திசையில் நின்றாலும் நனைந்து விடுவோம்.” உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்துகொண்ட காதலர்கள் அப்போது மீண்டும் நெருங்குகிறார்கள். 

கமல தேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்டிகள், தாத்தாக்கள் மற்றும் வாசிப்பு பரிச்சயம் அற்ற தோழிகள் போல் உள் முரண்களற்ற வாழ்வு வாய்க்காதா என ஏங்குபவர்கள். அவ்வகையில் கமல தேவியின் பாத்திரங்கள் நவீனத்துவ இலக்கிய போக்கு உருவாக்கிய பாத்திரங்களின் நீட்சி. ஆனால் கமல தேவியின் பாத்திரங்கள் சுய வெறுப்பு அல்லது சமூக வெறுப்பை நோக்கி பயணிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு மிக முக்கியமான காரணம் அவர் கதை மாந்தர்களில் வெளிப்படும் தீவிர விலகல் மனப்பாங்கு எனச் சொல்லலாம். உணர்சிகள் மீதும் ஐயம் கொண்டு அதையும் ஒரு ஜானுக்கு அப்பால் விலக்கி நிறுத்துவது. ஜெயகாந்தனின், தி. ஜானகிராமனின் பெண் பாத்திரங்களின் நீட்சியை தாக்கத்தை கமல தேவியின் பாத்திரங்களில் காணமுடியும். ஒரு வகையில் அவர்கள் ‘சிந்திக்கும் கதைசொல்லிகள்’. அவர்களின் தாக்கத்தின் வழி வெறுப்பைக் கடந்து மானுட இணக்கம் மற்றும் மானுட அன்பு ஆகியவற்றை நோக்கி அவருடைய கதைகள் பயணிக்கின்றன. ஆனால் அந்த பயணத்தில் எந்த நாடகீய அம்சமும் இல்லை என்பதால் அவரிடம் வண்ணதாசனிடம் வெளிப்படும் அன்பின் நெகிழ்ச்சி புலப்படுவதில்லை. “இந்த மனுசங்க அன்புக்கு பயப்படுற கூட்டம்” ஆனால் அது ஏன், எப்படி அதைக் கடப்பது என்பதே அவருடைய தலையாய கதைபோக்காக இருக்கிறது. வாழ்க்கை என்பது வெறும் வன்பொருளாக (hardware) சார்ந்ததாக மென்பொருள் (software) அற்றதாக மாறிக்கொண்டிருக்கிறதே என எழுதுகிறார்.    

வாழ்வின் சின்னச்சின்ன அசைவுகளை, மனச் சலனங்களை, நுட்பமான கண்டடைதல்களை கதையாக்கும்போது உள்ள சவால் என்பது சில நேரங்களில் கதையில் எதுவுமே நிகழாமல் ஆகிவிடும் அபாயம் உண்டு. ‘இப்படிக்கு’ போன்ற கதைகளை அப்படியான முயற்சியாக கொள்ளலாம். வேறு சில கதைகளிலும் இந்த சிக்கல் உண்டு என்றாலும் பல கதைகளில் இதை அடைய முனைந்திருக்கிறார். கதை மாந்தர்கள் பெரும்பாலும் ஒரே வார்ப்பில் உள்ளார்கள். அல்லது ஒரு சுயத்தின் வெவ்வேறு பிரதிநிதிகள் பாத்திரமாக உள்ளார்கள். ஒரு கதையில் விரிசலான ஆடியில் இருவேறு பிம்பங்களாக கதைசொல்லி பிளவுபடுவார். ஒன்றில் மகிழ்ச்சியாகும் மற்றொன்றில் துயரமாகவும் (கிரகண பொழுது). இவற்றைக்கொண்டு கமலதேவி கதைகளை தன்னுள் நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியாக எழுதுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். 

கமலதேவியின் மொழி செதுக்கப்பட்ட மொழி. குறிப்பாக உரையாடல்கள் அவருடைய மிகப்பெரிய பலம். இயல்பான உரையாடல்களில் கூட ஒருவித பூடகத் தன்மையை கொண்டு வர அவரால் முடிகிறது. “ஒத்த ஊத்தும் அத்துப்போன கிணறு என ஏதுமில்லை” எனும் வரி தொடுகையை சார்ந்த பின்புலத்தில் முற்றிலும் வேறோர் தளத்தில் பொருள் கொள்கிறது. அகத்தை எழுதும்போது புறம் அகத்திற்கான வாயிலாக இருக்க வேண்டும் என விழைகிறார். நீல. பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலைப் பற்றி ஜெயமோகன் எழுதும்போது அகத்தின் தூல குறியீடுகளாக முழு நகரமும் உருவானதை சுட்டிக் காட்டுகிறார். எந்த புற விவரணையும் கமல தேவியின் கதையில் வெறும் விவரணையாக நின்றுவிடுவதில்லை. குளிரும், மழையும், வெயிலும், வறட்சியும், கிரகணமும், இருளும், ஒளியும் அக அடுக்குகளுக்கான கரவு பாதைகள். குளம் சலனமற்று கிடக்கிறது ஆனால் அது மொத்தமும் நீராவியாகிக் கொண்டிருக்கிறது என்றொரு வரியை உறவுச் சிக்கலின் பின்புலத்தில் புரிந்துகொள்ளும்போது அபார வாசிப்பை அளிக்கிறது. உரையாடல்களில் வெளிப்படும் அறிவுக்கூர்மை அவருடைய பலமும் பலவீனமும் கூட. உரையாடல், புற விவரணை ஆகிய இரண்டையுமே அகத்தை சுட்டுவதற்கான வழிமுறையாகவே கமல தேவி கதைகளில் கையாள்கிறார். 

   இத்தொகுதியில் இரண்டு கதைகள் தொன்மம் சார்ந்த பின்புலத்தில் எழுதப்பட்டவை. இவற்றில் வெளிப்படும் அவருடைய மொழி வேறு கதைகளில் இருந்து தனித்து மிளிர்கிறது. ஆண்டாள் பாசுரங்களும், கம்ப ராமாயணமும், திருவாசக பதிகங்களும் வெவ்வேறு கதைகளில் கதையின் அடர்வை கூட்டுவதற்கு பயன்பட்டுள்ளன. அவருடைய மரபு இலக்கிய வாசிப்பை சுட்டுவதாக உள்ளன. பள்ளி, கல்லூரி, பணியிடம், பேருந்து பயணம் என அன்றாடம் சார்ந்து உருவாகக் கூடிய சின்னஞ்சிறிய உலகில் வசிக்கும் கையளவு மனிதர்களுடனான உறவும், உறவுச் சிக்கலும் கதைகளின் பேசு பொருளாகின்றன. இத்தொகுதியில் ‘மித்ரா’ ‘சொல்பேச்சு கேட்காத கரங்கள்’, ‘சுழலில் மிதக்கும் பூ’ ‘சக்யை’ ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. ஒவ்வொரு கதைகளைப் பற்றியும் விரிவாக விமர்சன நோக்கில் எழுத வேண்டும். இரண்டு மூன்று கதைகளைத் தவிர்த்து பிற கதைகள் அனைத்துமே நல்ல வாசிப்பை அளித்தன. உலகின் மீதான தயக்கமும், அச்சமும், ஐயமும் கொண்ட கதைகளின் வழியாக கமல தேவி இவ்வுலகம் ஒன்றும் அத்தனை இருண்மை ஆனது அல்ல எனும் நிலைக்கு பயணப் பட்டிருக்கிறார். அடுத்தடுத்த கதைகளின் வழியே கவனிக்கப்படும் எழுத்தாளராக பரிணமிப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. 

சுனில் கிருஷ்ணன் 

1.1.19  


என்னுரை


சிறுபுல்லின் தாகம்
என் கதைகள் நான் என்சகமனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள விழையும் என்னை பாதித்த சகமனிதர்களின்,சகஉயிர்களின் வாழ்க்கை.அவை வெறும் புனைவும் அல்ல, நிகழ்வும் அல்ல.இப்படியிருக்கலாம் என்றும் நினைத்தவைகளும்,இப்படி இருந்தால் எப்படி இருக்கும்! என்று நினைத்தவைகளும், சில நேரங்களில் இப்படியுமாக இருந்தவை.
                                                                         நட்புடன்,
                                                                          கமலதேவி



சக்யை வெளியாகிய வாரத்தில் எடுத்தப்படம். நினைவிற்காக என்னுரையுடன் இணைக்கிறேன்.
 

 






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...