இந்தியாடுடே இலக்கியஆண்டுமலர் சிறுகதை 2
எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம்
பைத்தியக்காரப்பிள்ளை என்ற சிறுகதையை எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். இக்கட்டான காலக்கட்டங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள் நிறம் இழக்கின்றன. இந்தக்கதை வறுமையில் தாய் மகனின் உறவை விசாரிக்கிறது.
கும்பகோணத்தின் சௌராஷ்ரா தெருவின் நெருங்கிய குடியிருப்பு ஒன்றின் அதிகாலையில் கதை தொடங்குகிறது. நாலறை மணிக்கு எழுந்த ராஜம் சந்தடி செய்யாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு காபிகடைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா விழித்துவிடுகிறாள்.
அவன் எழுந்ததிலிருந்தே அம்மா மீதான சலிப்பில் ஏன் இப்படி இருக்கிறாள்? இவள் ஒரு அம்மாவா என்றே எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து பத்துபிள்ளகளை பெற்ற அம்மா. பத்தாவது பிள்ளை பிறந்ததும் குடித்தே இறந்து போகும் அப்பா.
எப்பொழுதும் பிள்ளைகளை திட்டவும் பேச்சால் அவமானப்படுத்தவுமாக வேலைவாங்கும் அம்மா. இந்தக்கதை வறுமை பீடித்த வாழ்வில் தாய்மகனின் அன்பை பரிசீலிப்பதாகவோ தாய்மை சார்ந்த கேள்வியை எழுப்புவதாகவோ கொள்ளலாம்.
கும்பகாணத்தின் சௌராஷ்ரா தெரு என்றதும் நமக்கு தி.ஜாவின் பாபுவின் யமுனா நினைவிற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. தி.ஜா காட்டாத கும்பகோணத்தின் மற்றொரு முகம். அதே மகாமகம் குளம். அதே மாதிரியான தற்கொலை எண்ணத்துடன் செல்லும் இளைஞன். இவன் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை அம்மா அவமரியாதையாக பேசிவிட்டதற்காகவும்,தன்னை தன்கடமை உணர்வை, பொறுப்புணர்வை உதாசீனம் செய்யும் அம்மாவை அழவைக்கவும் தன்னை மாய்த்துக்கொள்ளும் இளைஞனின் தற்கொலை செய்துகொள்ளும் அந்தநாள்தான் கதை.
காலையில் எழுந்ததிலிருந்து மிக மெல்ல அவனின் மனஅழுத்தம் தொடங்கி வலுப்பெறுவதும்,அவன் அதை விலக்கி விலக்கி தவிர்க்க முயன்றும் பழையநினைவுகளும் சுயபச்சாதாபமும் இணைந்து அதை மூடுவதுமான போராட்டம் கதையில் கைக்கூடியுள்ளது. இறுதியில் தங்கையிடம் ஒருரூபாய் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் போதுதான் வாசிப்பவர்களுக்கே ஒருபதட்டம் ஏற்படும். இயல்பாக தோன்றும் தற்கொலை உணர்வு அனைவரும் எப்போதாவது கற்பனை செய்து பார்ப்பதுதான்.
அதிலிருந்து உண்மையான அதை நோக்கி மனம் செல்வதை கதை இயல்பாகத் தொடுகிறது. எண்பதுகளின் இளைஞர்கள் கதை. அதிலும் மூத்தஆண்பிள்ளைகளுக்கு அன்றிருந்த குடும்பபாரம். மேலும் அன்றிருந்த மனநிலை. மூத்தப்பிள்ளை என்றால் தந்தைக்குப்பிறகு பொறுப்பேற்க சமூகமும்குடும்பமும் அவர்களை தள்ளுகிறது அல்லது அதை ஒரு இன்றியமையா கடமையாக கட்டமைக்கிறது. அதை எதிர்கொள்பவர்களை இன்று புரிந்து கொள்வது கடினம்.
அந்தத் தலைமுறையின் எச்சங்களான முதியவர்களை இன்று காண்கிறேன். அவர்களின் வாழ்க்கை மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது. பிள்ளைகளிடமும் ஏச்சு,இளையவர்களும் எரிச்சலுமாக அவர்கள்அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்கள் 'லௌகிகத்தின் ஏமாளிகள்' என்று நான் சொல்வேன். இன்னும் மீறிசென்று அடுத்தத்தலைமுறை மிதித்தேறிய தோள்களைக் கொண்ட வலியவர்கள் என்றும் சொல்லலாம். பொதுவாக அந்தத்தலைமுறையின் இளம்வயதின் மனநிலையை காட்டும் இந்தக்கதை உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மனிதமனம் எதிர்பாராது தன்னை மாய்த்துக்கொள்ளும் உளநெருக்கடி என்றைக்கும் உள்ள மானுடசிக்கல் என்பதால் அதை எந்தமிகையும் இன்றி இந்தக்கதையில் வெளிப்பட்டுள்ளது.
Comments
Post a Comment