மீண்டும் மீண்டும் எப்போதும் ஒரு ஆண்டின் இறுதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப்பார்க்கும் போது புத்தகம் வாசித்தது தான் அந்த ஆண்டின் பொருள் உள்ள செயலாகத் தோன்றும். இந்த ஆண்டு என்ன வாசித்திருக்கறேன் என்பதும் , என்ன எழுதியிருக்கிறேன் என்பது முக்கியமானது. முன்பெல்லாம் டைரியின் பின்புறம் எழுதி வைப்பேன். இப்பொழுது அந்த நல்லப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மீண்டும் தொடங்க வேண்டும். எப்பொழுதும் போல வாசிக்காத ஒரு நாள் இல்லை என்பது நிறைவளிக்கிறது. எழுத்தாளர் அஜிதனின் முதல் நாவலான மைத்ரியை என் பிறந்தநாளன்று வாசித்தேன் என்பது சட்டென்று நினைவிற்கு வருகிறது. அன்றே நாவல் பற்றி பேரெழிலின் சங்கமங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது புரவி இதழில் வெளியாகியது. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் நாவல் வெளியான உடனே வாசிப்பது இது தான் முதல் முறை. அதுவே மனதிற்கு பரவசமாக இருந்தது. அதுவுமில்லாமல் அஜிதனை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்து நாவல் பற்றி பேசியதும் நிறைவளிக்கிறது. புத்தம் புதிதாக எழுதுபவர்களை பார்ப்பதே உற்சாகமளிக்கும் என்று அன்று உணர்ந...