விடைபெறுதலும் தொடக்கமும் 2022 ஜனவரியில் என்னுடைய நான்காவது சிறுகதை தொகுப்பான கடல் வெளியானது. என்னுடைய சிறுகதை தொகுப்பில் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பு கடல் என்று நினைக்கிறேன். வாசகசாலையின் ஸ்பாட் லைட் நிகழ்வில் விமர்சகர் ஜா.ராஜகோபாலன் கடல் தொகுப்பை குறித்த முக்கியமான உரையை வழங்கினார். வழக்கம் போல இந்த ஆண்டும் தொடர்ந்து மாதம் ஒரு சிறுகதை வெளியானது . இரண்டு மாதங்கள் இரண்டு மூன்று கதைகள் வெளியாகின. வெந்தழலால் வேகாது கட்டுரை தொடருக்காக தொடர்ந்து கி.ராவையும் அழகிரிசாமியையும் வாசிக்கிறேன். நிதானமாக ஒரு நாளைக்கு இருகதைகள் என்று வாசிக்கிறேன். துணை நூல்களாக அழகிரிசாமி கி.ராவிற்கு எழுதிய கடிதங்கள்,கி.ராவின் சங்கீத நினைவலைகள்,பெண் எனும் பெருங்கதை,முரண்பாடுகள் என்ற நாடகம்,கரிசல் காட்டு கடுதாசி மற்றும் கி.ராவின் உரைகளை, பேட்டிகளை யூடியூபில் பார்க்கிறேன். இந்த நேரத்தில் அழகிரிசாமியின் கொலாக்கால் திரிகை என்ற ஆவணப்படத்தை பார்த்தது முக்கியமானது. எப்போதும் ஒரு எழுத்தாளரின் நூலை முடித்தப்பின் அடுத்ததாக என்ன என்று பார்ப்போம். இந்த நண்பர்கள் இருவரையும் ஒரே நேரத்தில...