[2024 ஜனவரி நடுகல் இணைய இதழில் வெளியான கட்டுரை] எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல். மதுரை பக்கமிருக்கும் ஊரில் நடக்கும் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வே அதன் கதை. ஜல்லிக்கட்டிற்காக ஆட்களும் காளைகளும் சங்குவாடியை நோக்கி ஒரு வெயில் மதியத்தில் கிளம்பி சாரி சாரியாக வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. பொழுது அணையும் நேரத்திற்காக கும்பல் காத்திருக்கிறது. காளைகளை ஜல்லிக்கு விடும் வாடி வாசல் அருகே கூட்டம் இடித்துக்கொண்டிருக்கிறது. வாடிவாசலின் வலதுபுறம் ஊன்றப்பட்ட பனை மரத்தின் பக்கத்தில் திட்டிவாசலில் பிச்சி நிற்கிறான். அவன் ஒரு மாடுபிடி வீரன். அவனுடைய சகா மருதனும் உடன் இருக்கிறான். அவர்களுக்கு அருகில் நிற்கும் ஜல்லிக்கட்டு பார்வையாளரான கிழவர் அவர்களுக்கு பேச்சு துணையாகிறார். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பார்க்கும் அவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். செல்லாயிசாட்டு முடிந்து ஜல்லிக்கட்டு துவங்கப்படும் வழக்கம் முதல் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வை சார்ந்த அனைத்து தகவல்கள...