Skip to main content

வாடிவாசல்

 [2024 ஜனவரி நடுகல் இணைய இதழில் வெளியான கட்டுரை]

எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல்.  மதுரை பக்கமிருக்கும் ஊரில் நடக்கும் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வே அதன் கதை. 

ஜல்லிக்கட்டிற்காக ஆட்களும் காளைகளும் சங்குவாடியை நோக்கி ஒரு வெயில் மதியத்தில் கிளம்பி சாரி சாரியாக வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. பொழுது அணையும் நேரத்திற்காக கும்பல் காத்திருக்கிறது. 

காளைகளை ஜல்லிக்கு விடும் வாடி வாசல் அருகே கூட்டம் இடித்துக்கொண்டிருக்கிறது. வாடிவாசலின் வலதுபுறம் ஊன்றப்பட்ட பனை மரத்தின் பக்கத்தில் திட்டிவாசலில் பிச்சி நிற்கிறான். அவன் ஒரு மாடுபிடி வீரன். அவனுடைய சகா மருதனும் உடன் இருக்கிறான். அவர்களுக்கு அருகில் நிற்கும் ஜல்லிக்கட்டு பார்வையாளரான கிழவர் அவர்களுக்கு பேச்சு துணையாகிறார். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பார்க்கும் அவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.

செல்லாயிசாட்டு முடிந்து ஜல்லிக்கட்டு துவங்கப்படும் வழக்கம் முதல் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வை சார்ந்த அனைத்து தகவல்களும், நுணுக்கங்களும்  கதையில் உண்டு.

பிச்சி மனதிற்குள் காரி என்ற காளையை பிடிக்கும் தீவிரத்துடன் காத்திருக்கிறான். ஒவ்வொரு மாடு வரும் போதும் காரியா? என்று பார்க்கிறான். அது வாடிப்பட்டி என்ற ஊர் ஜமீன்தாரின் காளை. காரி திமிழை ஆட்டிக்கொண்டு வருதில் இருந்து கதை தீவிரம் கொள்கிறது. அதற்குள் மருதனை பற்றி தெரிந்து கொள்ளும் கூட்டத்திற்கு காரி வந்ததும் ஆவல் பற்றிக்கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் காரியை அடக்கும் போட்டியில் இறந்து போன அம்புலியின் மகன் பிச்சி.

தந்தையின் ரத்தத்தை இதே களத்தில் கண்எதிரில் பார்த்தவன் மருதன். காரியை பார்த்ததும் தகப்பனின் பசும்ரத்தத்தின் வாடை அவன் நாசியில் அறைகிறது. அப்போது சட்டென்று அவனுள் மனிதனின் ஆதிவன்மம் ஒரு தெய்வம் போல சன்னதம் கொள்கிறது. காட்டுக்குள் மனிதன் விட்டுவந்த மிச்ச சொச்சம். 

யாரும் அதுவரை கைத்தொட்டு அணையாத காளை அது. அது வாடிவாசலில் வந்து நிற்கும் இடம் தமிழ் புனைவெழுத்தின் அசலான ஒரு தருணம். ஏன் அந்தத்தருணம் நம்முள் அதிர்வை ஏற்படுத்துகிறது என்றால் செல்லப்பா அது வரை நிதானமாக கதை சொன்னது அந்தத்தருணம் வருவதற்காகவே.

 அதன் பின் அந்த சிவந்த அந்திப்பொழுது வேகம் கொள்கிறது. அந்த சங்குவாடிக் களத்தில் நிற்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் காரி ஒரு விதிர்ப்பை ஏற்படுத்துகிறது. கண்முன்னே யமதர்மரை கண்டதைப்போல ஒரு நடுக்கம் அனைவருக்குள்ளும் பரவுகிறது. அதுவரை நின்ற மாடுபிடிவீரர்கள் வாடிவாசலை விட்டு பத்திரமான இடத்திற்கு நகர்ந்து கொள்கிறார்கள்.

செல்லப்பா அந்தத்தருணத்தை இப்படி சொல்கிறார்.

‘நின்னுக்குத்தி காளை இது’

ஜல்லிக்கட்டில் பொதுவாக சில மாடுகளே வாடிவாசலில் வந்து நின்று கண்சுழற்றி மனிதர்களை பார்க்கும். மற்றமாடுகள் சட்டென்று கடந்து ஓடுவதில் குறியாக இருக்கும்.  ஜனத்திரளை ஒற்றையாய் நின்று எதிர்கொள்ளும் மனதிடம் உள்ள காளை மீதே அத்தனை பேருக்கும் கவனம் இருக்கும். சொல்லப்போனால் இந்த மாதிரி சில காளைகளை பார்ப்பதற்காகவே இந்தக்கதையில் வரும் கிழவனார் மாதிரி தொடர்ந்து ஒரு கும்பல் ஜல்லிக்கட்டு பார்க்க சென்று கொண்டே இருக்கிறார்கள். பிடிவீரன் இல்லாமல் அசால்ட்டாக பார்த்துவிட்டு செல்லும் காளையை காண்பது ஒரு பரவசம்.

இது பண்பாட்டு பெருமிதம் என்று வைத்துகொண்டாலும் பிழை இல்லை. நம் விவசாய வாழ்வின் பரவசமான தருணங்களில் ஒன்று… அரும்பெரும் காளையை அன்னாந்து பார்ப்பது . நம் மனதில் ஊறிப்போன ஒன்று.

காட்டை விட்டு வரும் போது மனிதன் ஏன் மாட்டையும், நாயையும் கைகளில் பிடித்துக்கொண்டு வந்தான். மாட்டை அடக்கி பழக்கியது விவசாயவாழ்வின் பண்பாட்டின் பெரிய நிகழ்வு. அச்சமும், வேட்கையும், பரவசமும் நிறைந்த நிகழ்வு. இன்று வரையும் கூட ஒரு மாட்டை வளர்ப்பவனுக்குள்ள மனநிலை வித்தியாசமானது. நம் கைகளுக்குள் மாடு நிற்பது எத்தனை பரவசம். மாடு மனிதனையும் மனிதன் மாட்டையும் புரிந்து கொள்ளுதலே மாடுவளர்ப்பு.

காரியின் திமிழை பிடித்து அதன் கொம்பில் உள்ள உருமாலை மருதன் உருவியப் பின் மருதன் அமைதியாகிறான். ஆனால் காரி கூட்டத்தில் புகுந்து அதகளம் செய்து  ஆற்று மேட்டு மணல் தன் கொம்புகளால் குத்தியபடி நிற்கிறது. ஏதோ ஒரு சாக்கு கிடைத்ததைப்போல ஜமீன்தார் துப்பாக்கியால் அதை சுடுகிறார். குருதி வழிய உருண்டை விழிகளுடன் மணலில் சரியும் காரி வாசகப்பரப்பில் பொதுவாக ஆணவத்தின், அதிகாரத்தின் விளைவாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு பிரதியை இப்படி நேரடி பொருள்படும் படி வாசிப்பது ஒரு வகையானது. இந்தக்குறுநாவலிற்கு நாம் நம் பண்பாடு ,அன்றாட விவசாய வாழ்வு சார்ந்தும் மற்றொரு வாசிப்பை அளிக்கமுடியும்.

கதையில் இந்த நிகழ்வை ஜல்லிக்கட்டு என்றே செல்லப்பா குறிப்பிடுகிறார். மாடு அணைதல் என்ற சொல்லை ஏறுதழுவுதல் என்ற சொல்லின் நீட்சியாகவே பார்க்கிறேன். அணைதல், தழுவுதல் என்பதிலிருந்து அடக்குதல் என்ற இடத்திற்கு வந்திருப்பதன் சித்திரம் கதையில் உள்ளது. 

நம் பண்பாட்டில் ஏறுதழுவுதல் ஒரு செல்ல விளையாட்டு. காட்டு மிருகத்தை வீட்டு விலங்காக, தொழில் உதவியாளராக பழக்குதல். மிருகத்தை சகபாடியாக மாற்றி தன் வாழ்வுடன் பிணைத்துக் கொள்ளுதல். விவசாயத்தின் பலனை பெறும் போது உழைப்பு பங்காளியான காளையை வணங்கி, அழகுபடுத்தி ,விளையாடுதல். துரத்தி கட்டியணைத்தல். திமிழில் உள்ள மாட்டின் ரோசத்தை அணைத்தல். பாய்வதில் வேங்கை உள்ளது போல,’மத்தகத்தில் யானை உள்ளது போல ,திமிழில் உள்ளது காளையின் மனம். சிங்கத்தின் பற்களை, நகங்களை போல களையில் உதறலில் உலுக்குதலில் அதன் பலம் உள்ளது. அதை தொட்டு அடைக்கிய பரவசம் மனதனுக்கு உண்டு. அதை விளையாட்டாய் மாற்றி தொட்டு விளையாடும் விளையாட்டை ஜல்லிக்கட்டாக மாற்றி.வைத்திருக்கிறோம்.

‘மிருகத்தை ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டு விட்டு ,பிறகு அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றிக் காட்டத்துணிவது ‘ என்று ஜல்லிக்கட்டை பற்றி செல்லப்பா எழுதுகிறார். எனில் அதற்கான பயிற்சியும், நடத்தும் முறையும் எப்படி இருக்கும் என்றும் நாம் யூகிக்கக்கூடியதே. இந்த இடத்திலேயே ஒரு திரிபு உள்ளதை நாம் கவனிக்கலாம். மீண்டும் காளையை காட்டு மிருகமாக்கும் ஒன்று இதில் உள்ளது.

இரண்டு பனைமரத்துண்டுகளால் அமைக்கப்படும் வாடிவாசல் என்பதே இங்கு ஒரு குறியீடு.  திட்டிவாசல் வரை மாடு நிற்கும் இடம் தொழுவம். வாடி வாசலை தாண்டினால் அது மாடுபிடி களம். வாடிவாசல் என்பது ஒரு எல்லை. அது காட்டிற்கும் வீட்டிற்குமான ஒரு எல்லை போன்ற ஒன்று. 

சங்குவாடிக்கு காரியை ஒரு சிறுவன் பிடித்துக்கொண்டு வரும் சித்திரத்தில் கதையின் ஆன்மா உள்ளது. அது வரை குழந்தையாக இருந்தது அவன் கையிலிருந்து பிரிந்த பின்னரே காளையாகிறது. வெறி கொள்கிறது. ரத்தம் பார்க்கிறது. 

கதையின் முடிவில் செல்லப்பா அந்த சிறுவனை காண்பிப்பதில்லை. கைத்தொட்டு வளர்ப்பனுடையது காளை. அதை வாங்கி வெற்றியில் பெறுமை காண்பவருக்கு உண்மையில் காளை என்பது என்ன.? இங்கு காளை என்பது ஒரு பண்டம். ஜல்லிக்கட்டில் நம் அடிப்படையே மாறுகிறது இல்லையா.?

ஏறு தழுவும் போது அவன் காளையுடன் அவன் விளையாடுகிறான். அதை பரவசப்படுத்தி தானும் பரவசமாகிறான். அது ஒரு அன்பில் திளைத்தல் நிலை. காயம் பட்டாலும் மிகச்சிறியது தான். ஆனால் இதில் அப்படி இல்லையே…யாரோ வளர்த்த பிள்ளை. யாரோ வாங்கி எங்கேயே அதை விட்டு ரோசப்படுதுவதில் என்ன பரவசம் இருக்க முடியும். கதையில் எங்குமே பரவசத்தை ஆசிரியர் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கதை முழுவதும் அச்சமும், குருதியும், மரணமும், கேலியும், தூண்டுதலுமே உள்ளது. எனில் செல்லப்பா சொல்ல விரும்புவது என்ன?

இதில் முதலில் செல்லாயி காளை என்று கோவில் காளை விடிவாசலில் விடப்படும். அதன் மீது யாரும் கைவைக்க மாட்டார்கள். அதை ரோசப்படுத்த துணிய மாட்டார்கள். அதுவும் வாடிவாசல் வழி வந்து யாரையும் எதுவும் செய்யாமல் ஆற்று மேட்டை நோக்கி ஓடிவிடும். அதற்கான தேவை உள்ளது. அதை போன்று காளைகளை வளர்த்து சாகசம் செய்வது அடிப்படை இல்லை என்று தோன்றுகிறது. காலப்போக்கில் வந்த மாற்றத்தின் உக்கிரத்தை , நியாயம் இன்மையை கதை காட்டுகிறது.

காரியை பிடித்தபடி வாடிவாசலில் நுழையும் சிறுவனில் இருந்து நாம் கதையை.மறுபடி வாசித்தோம் என்றால் இந்தக் குறுநாவலை இன்னும் பரந்த தளத்தில் வைக்கமுடியும்.






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...