இற்றைத்திங்கள் அந்நிலவில் 8

 [2024 பிப்ரவரி  சொல்வனம் இணையஇதழில் வெளியாகிய கட்டுரை]

வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்


காக்கைப்பாடினியார் நச்செள்ளை குறுந்தொகையில் ஒரு பாடலும், புறநானூற்றில் ஒரு பாடலும், பதிற்றுப்பத்தில் ‘ஒருபத்தும்’ பாடியுள்ளார். 

திண்தேர் நள்ளிகானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே  [குறுந்தொகை 210]

தலைவன் தோழியிடம் தான் பிரிந்து சென்ற காலத்தில் தலைவியை நலத்துடன் பார்த்துக் கொண்டதற்காக நன்றி சொல்கிறான். அதற்கு தோழி இந்த தொண்டி நாடு முழுவதும் உள்ள பசுக்கள் தந்த நெய்யுடன்,சேரநாடு முழுவதும் கழனிகளில் விளைந்த சோற்றை கலந்து பலிசோறாக வைத்தாலும் அந்த காக்கைக்கு தகும். ஏனெனில் அது தினமும் நம் இல்லத்தில் கரைந்து உன் வரவை அறிவித்ததாலேயே அவள் நலத்துடன் இருந்தாள் என்கிறாள். இந்தப் பாடலில் நாட்டு வளமும், மக்களின் அன்றாட வாழ்வில் தொடரும் நம்பிக்கையும் சொல்லப்பட்டுள்ளது. காகத்தைப் பாடியதால் நச்செள்ளையார் காக்கைப்பாடினியார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.


போர்க்களம் சென்ற மகன் புற முதுகுகாட்டி ஓடினான் என்று கேள்விப்பட்டுகிறாள் ஒரு தாய். நரம்புகள் துருத்திக்கொண்டிருக்கும் மெலிந்த தோள்களை உடைய முதியவள் அவள். என் மகன் பகைக்கு பயந்து புறமுதுகு காட்டி ஓடியிருந்தால் அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன் என்று சொல்லிவிட்டு, கையில் வாளுடன் போர் முடிந்த அந்தியில் பதைத்த மனதுடன் போர்க்களத்திற்கு செல்கிறாள். போர்க்களம் முழுதும் சிதைந்த உடல்கள். ஒவ்வொரு உடலாக திருப்பிப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம்பட்டு இறந்திருப்பதைக் கண்டதும் அவனை பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியை அடைகிறாள். 

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே [புறநானூறு: 278]

இந்தப்பாடல் தோல்வி அடைந்த படையின் வீரச் சிறப்பிற்காக பாடப்பட்டிருக்கலாம். நேர்நின்று போரிடுவது வீரம் என்ற சங்ககால  விழுமியதிற்கான பாடல் இது.

பதிற்றுப்பத்து என்பது பத்து சங்ககால மன்னர்களை பற்றிய நூறு பாடல்களை உடைய சங்க இலக்கிய நூல்.  ஒரு மன்னனை பாட்டுடை தலைவனாகக் கொண்டு பத்துப்பாடல்கள் பாடப்பட்டுள்ளது. காக்கைப்பாடினியார் ஆறாம் பத்து  பாடியுள்ளார். 

முதல் பாடலான ‘பதிகத்தில்’ தண்டகாரண்ய காட்டில் உள்ள ஆடுகளைக் கொண்டு வந்து சேரமன்னன் தன் நாட்டுமக்களுக்கு வழங்கியதால் ஆடு கோட்பாட்டு சேரலாதன் என்று அழைக்கப்பட்ட நிகழ்வு பாடப்பட்டுள்ளது. மன்னனின் சிறப்பு பெயருடன் ஆறாம் பத்து தொடங்குகிறது.

இந்தப்பாடல்களின் ஒட்டுமொத்த உணர்வுநிலை ‘பெறுமிதம்’.  மன்னனை வாழ்த்திப்பாடுதல் பதிற்றுப்பத்தின் அடிப்படை. ஒரு பாடல் 5 முதல் 57 வரிகள் வரை பாடப்படுகிறது.



இதில் முதல் பாடல் ‘வடு அடு நுண் அயிர்’ என்று குறிப்பிடப்படுகிறது. மன்னனுடைய மென்மையும் வன்மையையும் கூறும் பாடல். பொதுவாக பத்துப்பாடல்களிலும் மன்னனின் தலைமை பண்பாக வலிமையும்,மென்மையும் இணைத்தே சொல்லப்படுகிறது.

வாள் நகை இலங்குஎயிற்று

அமிழ்துபொதி துவர்வாய்,அசைநடை விறலியர்,

பாடல் சான்று நீடினை உறைதலின்

வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என

உள்வர் கொல்லோ,நின் உணராதோரே

அலைவீசி முழங்கும் கடலும்,சுரபுன்னை சோலைகளும், அடுப்பம் மலர்கள் மலர்ந்த கடற்கரையும், வண்டுகள் விளையாடிய தடம் பதிந்த அழகிய நெய்தல் நிலம் அது. அங்கு  தேன்நிறைந்த மலர்களால் அமைந்த நறவம் பந்தலில் தங்கி அழகான விறலியர் பாடி ஆட அதை விரும்பி கேட்பவன் நீ. அத்தகைய நீயே போர்க்களத்தில் பகைவர்களுக்கு மாபெரும் கூற்றாக  [இறப்பின் தெய்வம்]  நிற்கிறாய்.

மாற்றுஅருஞ் சீற்றத்து மாஇரும் கூற்றம்

வலை விரித்தன்ன நோக்கலை

கடியையால் நெடுந்தகை செருவத் தானே

இரண்டாவது பாடல் சிறு ‘செங்குவளை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சேரலாதனின் கைவண்மையை பாடும் பாடல் இது.

நல் அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை,இரைஇய

மலர்பு அறியா எனக் கேட்டிகும்; இனியே

சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து

முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆகச்

சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ…

கடல் கடந்து செல்லும் படைகொண்ட உன் வீரத்தால் பகை நாட்டினரை வெல்லும் கரம் கொண்டவன் நீ. அத்தகைய வலிய கரம் மகளீருடன் ஆடும் துணங்கை கூத்திற்கும் முதல் கை யாக எழும்.  அதற்காக ஊடல் கொள்ளும் உன் அரசி உன் மீது வீசுவதற்காக எடுத்த தாமரைக்காக தணிந்து நீளும் கரமும் அதே வலிய கரம் தான். போரில் வாளாகவும், காதலில் மலராகவும் மாறும் சேரமானின் கைவண்ணம் வாழ்க என்கிறார்.

எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்

கொள்வல் முதலைய குண்டு கண் அகழி

இந்தப்பாடல் :குண்டுகண் அகழி’ எனப்படுகிறது. நாட்டின் அரணாக உள்ள அகழியின் சிறப்பு பாடப்படுகிறது. எந்திரங்களில் பூட்டப்பட்ட அம்புடைய வாயிலும்,முதலைகள் உள்ள அகழியும் உடையது உன் மூதூர். வென்ற எதிரிகள்  பின் தொடர முடியாத பலம் பொருந்திய நாடு இது. பகை நாட்டை வென்ற அரசன்  யானைகளை அகழி வாயிலில் விடாமல் சுற்றிக்கொண்டு வேறு வழியில் அந்த பெரும் கோட்டைக்குள் நுழைகிறான். ஏனெனில் அவனுக்கு பணிந்து வருபவை மதம் கொண்ட யானைகள். அவை கடம்ப மரத்தில் பூண் செய்த அகழி மதில்களை தன் மத்தகத்தால் அழிக்கும். அத்தகைய படையுடன் சென்று பகைவரை பணிய செய்து திரைப்பொருள் கொண்டு வரும் மன்னவன் அவன்.

அடுத்தப்பாடல் ‘நில்லாத்தானை’ என்று குறிப்பிடப்படுகிறது. 

ஏவல் வியம்கொண்டு இளையவரோடு எழுதரும்

ஒல்லார் யானை காணின்

நில்லாத் தானை இறைக்கிழ வோயே

யானைப்படையை கண்டாலும் தயங்கி நிற்காத படையை கொண்ட தலைவன் நீ. உன் புகழ் மங்காது வாழ்க என்று காக்கைப்பாடினியார் சேரனை வாழ்த்துகிறார். அத்தகைய உன் வீரத்தை மூங்கில் போன்ற தோள்களையும், மழைக்கண்களையும்[ ஈரம் கொண்ட கண்கள்] இளமுலையும் கொண்ட விறலியர் பாடல்களாக  பாடுகின்றார்கள்.  அவர்கள் வறுமை நீங்கும்படியும், உன்னை பாடும் எங்களுக்கான பரிசிலையும் அளிப்பவன் நீ . பகைவர் நிலப்பரப்பை குறைக்கும் போர்முரசுகளையும்,யானைகளை கண்டு அஞ்சி நில்லாத படை [ நில்லா தானை] கொண்டவன் நீ.

வாரார் ஆயினும் இரவலர் வேண்டி

தேரில் தந்துஅவர்க்கு ஆர்பதன் நல்கும்

நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்

 நற்குணங்கள் நிறைந்தவளின் கணவனே.. என்று இந்தப் பாடல் தொடங்குகிறது. சான்றோர்களை பாதுகாப்பவன் நீ. வெற்றி கொள்பவனன் நீ. உன்னை காண வந்தேன். சத்தமிடும் கடலின் வழியே வந்த கலங்களை பாதுகாக்கும் பண்டக சாலை உனது. வீரர்களுக்கு கவசமும் நீயே. பொருள் வேண்டுவோரை தேடிச் சென்று அளிப்பவன் நீ. யாவர்க்கும் உணவளிப்பவன் நீ. இனிய பேச்சுடைய எங்கள் தலைவனே…பகையை அழித்தவனே…மூம்மாரி பெய்து உன் நாடு செழிப்பதாக என்று பாடல் முழுவதும் வாழ்த்தும் சொற்களால் எழுதப்பட்டுள்ளது. பரிசில் கேட்டு புரவலனை வாழ்த்திப்பாடும் பாடல் இது.

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

வீந்துஉகு போர்க்களத்து ஆடும் கோவே

முரசு முழங்க உழிஞை பூவை சூடி போர்க்களத்தில் தன்னை மறந்து வெற்றிக்களிப்பில் ஆடும் தலைவன் அவன்.

ஒள்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்

இரவலர் புன்கண் அஞ்சும்

ஊடல் கொண்ட காதல் பெண்களின் ஔிகொண்ட கண்களுக்கு அஞ்சாதவன் சேரன். இரந்து வருபவர்களின் நிலையைப் பார்த்து அஞ்சுபவனாக இருக்கிறான் என்று அரசனின் குணநலனை இந்தப்பாடலில் புலவர் பாடுகிறார்.

ஏந்துஎழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை

வானவரம்பன் என்ப

உழவர்களில் ஏர்க்காலில் மணிகள் இடறும் சேரநாடு இவனுடையது. வாள் நுனி எழுதிய தழும்புகளை உடைய, எப்போதும் போரை விரும்பும் வீரர்களின் தலைவன் இவன். வில் தொழிலும், சொல்லும் பிழைபடாத அவன் வானத்தை எல்லையாகக் கொண்ட வானவரம்பன். அவன் புகழை பாடி ஆடுங்கள் விறலிகளே…என்றும் அவன் நமக்கு நிறைவை தருவான் என்று அரசனின் கொடை திறத்தை செல்வ வளத்தை சொல்கிறார்.

பாடுசால் நன்கலம் தரூஉம்

நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே

மாசி மாதத்தின் நீண்ட குளிர் இரவில் பாணர்கள் பரிசில் வேண்டி நீ இருக்கும் இடம் நோக்கி உடல் நடுங்க வருகிறார்கள். உலகத்து உயிர்கள் எல்லாம் இருள் நீங்கி ஔி பெறுமாறு சூரியன் உதிக்கும் நாட்டை உடையவனே..உன் பலம் அறியாது உன் முன் நின்று தோற்ற மன்னர்களையும் எங்களைப்போல காப்பதும் உன் கடமை. சினம் தணிவாயாக . உன் வெற்றி என்றும் வாழ்வதாக என்று முடியும் இந்தப்பாடல்,அன்று ஒரு புரலவர் மன்னனுக்கு அறிவுரை கூறும் நிலையில் இருந்ததை சொல்கிறது. 

அரம்போழ் கல்லா மரம்படு தீம்கனி

அம்சேறு அமைந்த முண்டை விளைபழம்

 மன்னன் மென்மையான இயல்புடைய மகளீர் கூட்டத்தின் நடுவே நறவு என்ற ஊரில் இருக்கிறான். ஆயுதம் கொண்டு அரியப்படாத முழுபழங்கள் கனிந்த காலத்தில்  அவன் ஊரை நோக்கி செல்கிறோம். பழுமரம் போன்ற அவனிடம் நாம் என்ன கேட்டாலும் தருவான். போர் வருவதற்குள் பாணன் மகளே விரைந்து செல்வோம் என்ற பாடலோடு ஆறாம் பத்து முடிகிறது.

இந்தப்பாடல்கள் ஒரு உதாராண அரசனாக சேரலாதனை முன் வைக்கின்றன. குடிமக்களை குழந்தைகள் போல பாதுகாக்கும் அரசனுக்கான கனவு இந்தப்பாடல்களில் உள்ளது. பதிற்று பத்தின் நூறு பாடல்களும் இத்தகைய தன்மை கொண்டவையே. எப்படி எழுதினாலும் இலக்கியத்தில் புனைவு அம்சத்தை தவிர்க்க முடியாது. இதில் உள்ள அரசனுக்கான கனவுதன்மை இந்தப்பாடல்களை அழகாக்குகின்றது. பதிற்றுபாடல் முழுவதுமே இப்படியான பெருந்தலைவனுக்கான பலவித கனவுகளின் தொகுப்பாக உள்ளது. வானவரம்பன் என்று காக்கைபாடினியார் சொல்வது அவன் ஆட்சி எல்லை மட்டுமல்ல அவனின் பிரதாபங்கள், குணநலன்கள், வீரதீரங்கள்,மெல்லியல்புகள் என்ற அனைத்தையும் சேர்த்த ஒன்றையே அவர் பாடல்களில் முன்வைக்கிறார். 

பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர்  காக்கைபாடினியாார்.  இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது [அவன் சூடிய மாலை கண்ணி எனப்படுகிறது. அது அவன் வெற்றி மற்றும் சிறப்புகளின்  குறியீடு].

 மன்னர்கள் தவறும் போது அதை எடுத்து சொல்பவர்களாக புலவர்கள் இருந்துள்ளனர். இத்தனை வீரநாயக பாடல்களுக்கு மத்தியிலும், பகையை மன்னிக்க சொல்லக்கூடிய அருள் புலவர்களுக்கு இருப்பதை உணர்ந்தே மன்னர்கள் புலவர்களை தனக்கு சமமாகவும், தனக்கு அறிவுரை கூறும் மேலானவர்களாகவும் உணர்ந்துள்ளார்கள்.
















Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்