Posts

Showing posts from June, 2024

ஈராயிரமாண்டு மனநிலை

Image
 எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் 'அப்பாவின் குரல்' கதையை சென்ற ஞாயிறு காலையில் வாசித்தேன். அம்மா விடியற்காலையில் துறையூரில் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டார். சமையல் அறை பேச்சரவம் இன்றி அமைதியாக இருந்தது. பத்து நாட்களாக தினமும் அந்தியில் பெய்யும் மழை காலை நேரத்தை இதமாக்கிக் கொண்டிருக்கிறது. நேற்றும் அதற்கு முன்தினமும் நல்ல மழை. சமைக்கும் போது 'அப்பாவின் குரல்' கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பின் வீட்டு நந்தினி குரூப் 4 தேர்விற்கு கிளம்பி அவள் அம்மாவிடம் சொல்லிக்கொள்ள வந்திருந்தாள். அடுத்தத்தெருவில் அவளின் கணவன் வீடு. எத்தனைப் பெண்கள் அடுப்படியில் தன் கணவனிடம் கேட்ட தகாத சொல்லை நினைத்து நினைத்து வெதும்பியிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. பெண்ணை நடத்தை சார்ந்து கீழ்மை படுத்த,காயப்படுத்த சொல்லப்படும் இரண்டுசொற்களை இந்தக்கதையின் நாயகன் தன் மனைவியை பார்த்து தான் சொல்லிவிடக்கூடாது என்று நினைக்கிறான். அப்பா அம்மாவை திட்ட பயன்படுத்தும் அந்த சொற்கள்  அம்மாவின் ஆழத்தை எந்த அளவுக்கு பாதித்தது என்று புரிந்திருப்பவன்.  அவன் தன் மனைவியை திட்டுவதற்கு அந்த சொற்களை பயன்படுத்தாமலிருக்

எழுதாப்பயணம் : லஷ்மி பாலகிருஷ்ணன்

Image
                [2019 சொல்வனம் இணைய இதழில்  வெளியான கட்டுரை]                        நானென்பதும் நீயென்பதும்  அதுவென்பதும் நூல்:எழுதாப்பயணம் ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன் வாசிப்பனுபவம்:கமலதேவி ஆற்றோரமாக இருந்த மரங்களை தழையுரத்துக்காகக் கழிக்கும் போது அடிமரத்திலிருந்து வளைந்து நெளிந்து கோணலாக வளர்ந்த தென்னங்கன்றை வெட்டிவிடலாம், நாளைக்கு விலைபோகாது, காய்ப்பு எப்படின்னு சொல்லமுடியாது என்று மரமேறி சொன்னார்.பின்நாட்களில் அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தாத்தாவிடம், “பொழுதுக்கும் உத்துஉத்து பாத்துக்கிட்டிருக்காம தட்டிவிடுங்க கெண்டியாரே..” என்று சொல்லுவார்கள். பத்துஆண்டுகளாக சரியாக மழையில்லாத பச்சைமலை அடிவாரத்தின் அந்தப் பகுதியில், தென்னைகள் காய்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன.வளைந்தமரம் தாக்குபிடித்து தன்னாலியன்ற சிறுசிறு காய்களை காய்த்து நிற்கிறது.இயற்கையின், உயிரின் இயல்பை நம்மால் ஒருபோதும் வகுத்துவிட முடியாது என்பதற்கான சாட்சிகள் நம் அருகில் இருந்து கொண்டேயிருக்கின்றன. எழுதாப்பயணம் என்ற இந்தநூலை வாசிக்கும் போது என்மனம் அந்தமரத்தை இணைத்துக் கொண்டது. மனிதர்கள் இயல்புமாறலை அதிகமாக கவனிப்பவர்களாக இருக

இலையுதிர் காலத்து மழை

Image
[2023 ஜூலை 1 தமிழினி இணைய இதழில் வெளியான கதை] இலையுதிர் காலத்து மழை  இந்த இரவு என்றில்லை ஒவ்வொரு இரவுமே இப்படித்தான் இருக்கிறது. இரவை கழிக்க வேண்டும். பகலை கடக்க வேண்டும். இரவில் என்னவாகும் என்று இந்த நகரத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பதட்டம். சாமானிய மக்களின்  தினப்படி வாழ்வில் அரசியல்  தீவிரமானால் அந்த நாட்டுமக்கள் நல்ல வாழ்க்கை  வாழவில்லை என்று அப்பா சொல்வார். அப்பா கொந்தளிப்புகளை விரும்பாத மனிதர். இளம் வயதில் அவர் மீது எனக்கு அத்தனை எரிச்சல் இருந்தது. என்ன மனிதர் இவர்? சப்பாத்திகளும் வெண்ணையும் முட்டைகளும் மேசையில் இருந்தால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணமும், அம்மாவுக்கு ஒரு முத்தமும் தரமுடிந்தால் இவர் இயேசுவுக்கு முன் ஆயிரம் முறை மண்டியிட்டு கண்ணீர் சிந்துவார் என்று அண்ணன்களிடம் ஒரு முறை சொல்லி சிரித்தேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த நாடே அதைத்தான்  நினைக்கிறது. தந்தைகளின் சொற்களை காலம் தன் நெஞ்சில் பொறித்துவைத்து பிள்ளைகளிடம் காட்டுமோ  என்னவோ!  “மானசீகமான ஒரு நிலநடுக்கம் நாட்டில் நிகழ்ந்துவிட்டது,”  என்று செர்கே இதே இடத்தில் சென்ற ஆண்டு ஒருநாள் சொன்னான்.  சட்டென்ற ஒரு அசைவை உணர்