எழுதாப்பயணம் : லஷ்மி பாலகிருஷ்ணன்

                [2019 சொல்வனம் இணைய இதழில்  வெளியான கட்டுரை]                       

நானென்பதும் நீயென்பதும்  அதுவென்பதும்

நூல்:எழுதாப்பயணம்

ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன்

வாசிப்பனுபவம்:கமலதேவி


ஆற்றோரமாக இருந்த மரங்களை தழையுரத்துக்காகக் கழிக்கும் போது அடிமரத்திலிருந்து வளைந்து நெளிந்து கோணலாக வளர்ந்த தென்னங்கன்றை வெட்டிவிடலாம், நாளைக்கு விலைபோகாது, காய்ப்பு எப்படின்னு சொல்லமுடியாது என்று மரமேறி சொன்னார்.பின்நாட்களில் அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தாத்தாவிடம், “பொழுதுக்கும் உத்துஉத்து பாத்துக்கிட்டிருக்காம தட்டிவிடுங்க கெண்டியாரே..” என்று சொல்லுவார்கள்.

பத்துஆண்டுகளாக சரியாக மழையில்லாத பச்சைமலை அடிவாரத்தின் அந்தப் பகுதியில், தென்னைகள் காய்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன.வளைந்தமரம் தாக்குபிடித்து தன்னாலியன்ற சிறுசிறு காய்களை காய்த்து நிற்கிறது.இயற்கையின், உயிரின் இயல்பை நம்மால் ஒருபோதும் வகுத்துவிட முடியாது என்பதற்கான சாட்சிகள் நம் அருகில் இருந்து கொண்டேயிருக்கின்றன.

எழுதாப்பயணம் என்ற இந்தநூலை வாசிக்கும் போது என்மனம் அந்தமரத்தை இணைத்துக் கொண்டது. மனிதர்கள் இயல்புமாறலை அதிகமாக கவனிப்பவர்களாக இருக்கிறார்கள்.அதிலும் மனிதருக்கு ஏற்படும் இயல்புமாறல் உற்றவருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.நாம் உருவாக்கிக் கொண்ட சமூகஅமைப்பு நம்மிடம் கேட்கும் குறைந்தபட்ச தகுதி நிர்ணயத்தின் விளைவு.தவிர்க்க இயலாதது.

கல்விஉளவியலில் வயதின் அடிப்படையில், இந்தவயதில் இதை செய்திருக்க வேண்டும் என்ற ஒரு அட்டவணை உண்டு.அதை படிக்கும் போது ஒருதிடுக்கிடல் உருவாகும்.நம்மை அந்த இடத்தில் வைத்துப் பார்ப்போம்.

கல்வியியல் கல்லூரியில் சேர்ந்த புதிதில் நான் என் உளவியல் ஆசிரியரிடம், “இந்த ஏஜ் டைம் டேபிள் சரியா சார்?எனக்கு சரின்னு தோணல..அது எப்படி எல்லாருக்கும் ஒரே டைம்டேபிள் ஒத்துவரும்?”என்றதும் அவர் சாயுங்காலம் அலுவலகத்திற்கு வருமாறு சொன்னார்.கல்லூரி முதல்வர் அவர்.

அங்கு நாலைந்து பேராசிரியர்கள் இருந்தார்கள்.கைகளை கட்டியபடி நின்றேன். “இந்தக்கொடுக்குதான் ‘தனிமனிதனிடம் சமூகம் சார்ந்த எதிர்பார்ப்புகள்’ டாப்பிக்கை ஏஜ் டைம் டேபிள்ன்னு சொன்ன ஆளு,”என்றார்.

பேராசிரியை, “ ஆர்ட்ஸ் ஆண்டு சயின்ஸ் காலேஜ் இல்ல…இங்க டிசிப்ளின் அவசியம்..வராண்டாவில சார கூப்பிட்டிருக்க.எதுனாலும் கிளாஸ்ல கேக்க வேண்டியது தானே..”என்றார்.

 “இனிமே கேக்கமாட்டேன் சார்.இந்த வயசில இது முடியலன்னா நீ ஃபிட் இல்லன்னு சொல்லமுடியுமா சார்...”என்றேன்.

சிறிது நேர அமைதிக்குப்பின் கணினிஅறிவியல் ஆசிரியர், “நீங்க அப்படி ஏன் பாக்கறீங்க..நாம வயசுக்குரிய பயம், தயக்கம் காரணமா எஸ்கேப் ஆகப்பாப்போம்..நீச்சலுக்கு தள்ளிவிடறாப்ல தான்..”என்றார்.

நான், “ இந்த டைம் டேபிள எப்படி எடுத்துக்கறது சார் ,”என்றேன்.

மீண்டும் கணினிஆசிரியர் சிரித்தபடி, “ நீங்க ஃபிட் இல்லன்னு தோணுதா?அந்த லிஸ்ட்ல உங்களுக்கு அறுபது பர்செண்ட்டேஜ் வருதான்னு கணக்கு பாக்கறீங்களா? ”என்றார்.

நான் விழித்தபடி தலையாட்டினேன்.

“ நாங்கப் படிறப்பவும் இப்படிதான்… காட்டிக்காம மேனேஜ் பண்ணனும்.எல்லாரும் சொல்றாப்ல பயப்படாத மாதிரி நடிக்கறது தான்.அட்டவணை வேற வாழ்க்க வேற.. ”என்றார்.

“ பின்ன லிஸ்ட் எதுக்கு சார்? ”

தமிழய்யா, “ படிக்கப்படிக்கப் புரியும். .. குழப்பிக்காத..ஆர்வக்கோளாரு சார், ”என்று சிரித்தார்.

என் சுருங்கிய முகத்தை கவனித்த உளவியல் ஆசிரியர், “ எல்லாத்துக்கும் இங்க அட்டவணை இருக்கு.முடிஞ்சஅளவு அதுக்கு சரியா ஓடனும்மா..இப்பதான் புதுசுன்னு நினக்காத.மனுசன் நேரத்தைக் கணக்கு பண்ணினப்பவே தொடங்கினது.. ”என்றார்.

வெளியில் வரும் போது கணினி ஆசிரியர், “ கைகட்டி நிக்கனுன்னு அவசியம் இல்ல.இதெல்லாம் ஒரு கேள்வியா.. ”என்றார்.

“…” 

“ க்ளாஸ்ல உங்களுக்கு சீனியர் நிறைய இருக்காங்க.அவங்களோட பேசுங்க.பிள்ளைங்கள புரிஞ்சுக்கதான் படிக்கறோம்..ஆனா முதல்ல நம்மளதான் புரிஞ்சுப்போம்.அந்த குழப்பம்தான் உங்களுக்கு..லைப்ரரியில ஆசிரியருக்கான உளவியல் புக் இருக்கு. எடுத்துப்பாக்கனும்.ஆசிரியராக படிக்கறோன்னு ஒருநாளைக்கு பத்துதடவையாச்சும் மனசுல சொல்லிக்கனும்.இன்னும் சின்ன பிள்ளயில்ல..ஃபீல் த ரெஸ்பான்ஸிபிலிட்டி..அதுதான் முதல்படி, ”என்று சிரித்தபடி கடந்து சென்றார்.ஃபீல் த ரெஸ்பான்ஸிபிலிட்டி என்ற வார்த்தை கல்வியியல் கல்லூரிகளில் அதிகம் சொல்லப்படுவது.

 குறைபாடுடைய குழந்தைகளின் பிரச்சனையே வயதுக்கேற்ற உடல்மன வளர்ச்சி இல்லாதது என்பதை மேற்சொன்ன அனுபவத்துடன் இணைத்தால் சாதாரணமாகவே சராசரி ஆட்களிலும் இந்தக்குறைகள் குறைந்த சதவிகிதத்தில் இருக்கின்றன என்பது தெரியும்.

ஆசிரியருக்கும் மேலான நிலை பெற்றோர் என்ற பொறுப்பு..ஃபீல் த ரெஸ்பான்ஸிபிலிட்டி ..இந்தநூலில் ஆட்டிசம் உள்ள குழந்தையின் பெற்றோராக அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வதற்கு முந்தைய சிக்கல்களை ஒருதீற்றலாக லஷ்மி எழுதியிருக்கிறார்.இன்று சின்னப்பிள்ளை என்றே பிள்ளைகள் வளர்க்கப்படுவதால் அந்தப் பொறுப்பை உணர்வது மெதுவாக நிகழ்கிறது.மேலும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோராக இருப்பதற்கு சக பெற்றோருடன் நட்பில் இருப்பது அவசியம் என்பதை லஷ்மி சொல்கிறார்.

வளர வளர குழந்தைகள் தன்னியல்பில் கற்றுக்கொள்வதை இந்தக்குழந்தைகளுக்கு  படிப்படியாக கற்பிக்க வேண்டியதை இந்தநூல் சொல்கிறது.முதலில் குழந்தையை மனதால் பின்தொடர்ந்து புரிந்து கொள்வதன் அவசியத்தையும்,அவர்களை மனதாற ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் சொல்கிறார்.இவை இரண்டும் சரியாக நடந்துவிட்டால் அடிப்படையான சிக்கல் முடிவிற்கு வந்துவிடும்.

ஆட்டிசக் குழந்தைகளுக்கான உணவு,பயிற்சிகள் பற்றி தினமும் கற்க வேண்டும் என்றும் அது அவர்களின் ‘நடத்தை சீராக்கலுக்கு’ உதவும் என்று சொல்கிறார்.அடுத்தது சமூகத்துடன் போராடுதல்.நம் குழந்தைகளை இந்த சமூகத்தில் மகிழ்வாக வைத்திருக்க இந்த உலகோடும்,சமூகத்தோடும் போராடிக்கொண்ட இருக்க வேண்டும் என்கிறார்.ஆட்டிசக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சியில் பெற்றோர்கள்,பயிற்சியாளர்கள்,ஆசிரியர்களின் பங்குபற்றி இந்நூல் பேசுகிறது.

இரண்டாயிரத்துக்கு முன்புவரைக்கூட மனிதஇயல்புகள் இன்றளவுக்கு குறைகளாக நினைக்கப்படவில்லை என்பதை நாம் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.இன்று சாராசரி அளவுகளை விட முன்பின்னான அனைத்தும் குறைபாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.ஒவ்வொரு செயலுக்கும் உலகியல் சார்ந்த பலன் இருந்தாக வேண்டியிருக்கிறது.

இந்தநிலையில் ஆட்டிசம் போன்ற தன்முனைப்புகுறைந்த குழந்தைகளின் நிலையைப் பற்றிய இந்த நூல் அவசியமாகிறது.இந்தக் குழந்தைகள் பெற்றோருக்கு ஏற்படுத்தும் பதற்றம்,நிலைகுழைவுகள் ,சமூகத்தின் பார்வைகள்,கற்றவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமை பற்றி லஷ்மி தன்வாழ்வின் தளத்திலிருந்து காட்டுகிறார்.

நாளை டிம்மென்ஸியா,அல்சைமர் வர வாய்ப்புள்ளவர்கள்தான் நாம் அனைவரும். இயல்புகளில் கொஞ்சம் தள்ளியிருப்பவர்கள் பற்றிய நூல்களை அனைவரும் வாசித்து புரிந்து கொள்ள முயல்வது ஆரோக்கியமான சமூகத்திற்கு அவசியமாகிறது. 

கூட்டுக்குடும்ப அமைப்பின் அழுத்தங்களை மீறி அதன் முக்கியப் பயன்கள் சில உண்டு.நோயுற்ற மனிதருக்கு,மனதளவில் முடியாதவர்களுக்கு,குழந்தைகளுக்கு கூட்டுக்குடும்ப அமைப்பு போன்ற அருமருந்து இல்லை.பத்துநபர்களாவது அவர்களின் இயல்புகளை புரிந்தவர்களாக, அவர்களின் உலகில் இருப்பார்கள்.கூட்டுக்குடும்ப அமைப்பு காலாவதியாகிவிட்ட இன்றைய சூழலில், சமூகம் அந்தப்பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது.

கணினி பிரிவு பாடமாக வந்தபிறகு நிகழ்ந்த பலமாற்றங்களில்  மிக முக்கியமான  மாற்றங்களில் ஒன்றைப் பற்றி நாம் இன்னும் தீவிரமாக பேசத் தொடங்கவில்லை.கணிதப்பிரிவில் இருந்த உயிரிலுக்கு மாற்றாக கணினி அறிவியல் வந்தப்பிறகு ,மதிப்பெண்களுக்காக அதிகம் உழைக்க வேண்டிய உயிரியல் பாடத்தை எடுப்பவர்கள் குறைகிறார்கள்.மருத்துவத் துறையில் நாட்டமிருந்தால் மட்டும் அந்தப்பிரிவை எடுக்கலாம் என்ற நிலைப்பாடு என்பது அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.

பத்தாம் வகுப்பு வரை அடிப்படை.அதற்குமேல்தான் எதாவது கொஞ்சம் தெளியும்.அந்தநிலையில் நம்மை, நம்உடலை பற்றிய அறிவை ஒதுக்குவது வாழ்வியல் அறிவுகுறைபாட்டை உருவாக்கும்.ஏனெனில் நம் சமூகத்தில் பெரும்பாலும் கல்விசார்ந்த நூல்களைத் தவிர எதையேனும் படிப்பவர்கள் எண்ணிக்கையே குறைவு.அதிலும் உயிரியல் சார்ந்த நூல்களை எடுப்பவர்கள் மிகமிகக் குறைவாகவே இருக்க வாய்ப்புண்டு.இத்தனை மருத்துவமனைகளை கட்டி நிறுத்தியிருக்கும் சமூகத்தில் உயிரியல் பாடப்பிரிவை மருத்துவத்துறை படிப்புகளுக்காக மட்டும் படித்தால் போதுமா! உயிரியல்அறிவு அடிப்படையான ஒன்றில்லையா!

உடல்சார்ந்த பட்டறிவு இருந்த காலத்தில் அவரவர் உடல்சார்ந்த தெளிவு இருந்தது.மனம் போலவே உடலும் அவரவர்களுக்கு தனிப்பட்டது.மருத்துவமனைகள் எத்தனை இருந்தாலும் நமக்கென்று நம் உடலைப்பற்றிய ஒரு ஐடியா இருக்க வேண்டும்.

நம்உடலை, அதன் இயல்பை, அதன் இயலாமைகளை புரிந்துகொள்ள முடிந்தால் எதிரிலிருப்பவர்களை கொஞ்சமேனும் புரிந்து கொள்ள ,அதன்பின் சுற்றி இருக்கும் உயிர்களை, தாவரங்களை புரிந்து கொள்ளும் மனம் வாய்க்கும்.ஒருவகையில் ஆன்மீகமும்,அறிவியலும் தொடர்புள்ளது என்றால் அதில் உயிரியலின் பங்கு அதிகம்.

அந்தவகையில் இதுபோன்ற நூல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.தன்முனைப்பு குறைந்த குழந்தைகளில் சிலர் பேரறிஞர்களாக வருவார்கள் என்ற கருத்து மட்டும் ஆட்டிசம் பற்றி நமக்கு எப்படியோ பதிந்துவிட்டது.இந்தநூலில் அவர்களின் உடல்மன இயல்புகளை ஒருஅன்னையாக மிகநுண்மையாக கவனித்து லஷ்மி எழுதியிருக்கிறார்.

லஷ்மி சிறப்புக்குழந்தைகளுக்கான ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பெரும்பாலும் சமூகத்தின் கவனத்திலிருந்து விலகியிருக்கும் கவனமறைவு பிரதேசம் அது.செயல்வழிக்கற்றல் முறை இந்தக்குழந்தைகளுக்கு ஏற்றது.பொதுவாகவே குழந்தை கற்றலுக்கான முறை அது.நம் அரசுப்பள்ளிகளில் செயல்வழி கற்றல் முறையில் நான்காம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததுதான்.

தொலைக்காட்சியில் குழந்தை மூழ்காமலிருக்க லஷ்மி பின்னால் பேசிக்கொண்டேயிருக்கிறார்.இன்று குழந்தைகளை உணவுண்ண வைக்க தொலைகாட்சியை தவிர்க்க முடியாவிட்டாலும் அதுமாதிரியான வழிமுறைகள் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் என்கிறார்.இது கற்பித்தலில் இணைப்பேச்சு எனப்படுகிறது.

இந்தநூலில் சர்வ சிக்க்ஷா அபியான் என்ற அனைவருக்கும் கல்வி திட்டம் பற்றி லஷ்மி எழுதியிருக்கிறார்.அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல் இது.ஏனெனில் இந்தமாதிரியான நூலை சிலஆண்டுகளுக்கு முன் தமிழில் தேடி சலித்திருக்கிறேன்.

கல்லூரி முடித்த ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு ஆசிரியராக  அரசுப்பள்ளியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.போட்டியில்லாத வேலைவாய்ப்பு.மிகக் குறைந்த ஊதியம்.கல்லூரியிலிருந்து நேரடியாக இந்தப்பணி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்பதே உண்மை.

ஒருவாரத்திற்குப் பின் வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.மெல்லக் கற்போர்,பலவிதக் கற்றல் குறைபாடுள்ளவர்கள்,மூளைவளர்ச்சி சார்ந்த குறைபாடுகள்,நடத்தைக் குறைபாடுகள்,நரம்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உள்ள வகுப்பறை.நான் பணியாற்றும் போது இவர்களுக்கான தனி வகுப்பறை  கிடையாது.நீண்ட வராண்டாக்கள்,மரத்தடிகள்,ஆசிரியர்களின் உணவறை என்று மாறிக்கொண்டேயிருக்கும்.

நானும் கத்துக்குட்டி.அந்தப்பிள்ளைகள் என்னைப்பார்த்தோ, பார்க்காமலோ உட்கார்ந்திருக்கையில் எனக்கு நம்முடைய பொறுப்பா? என்ற பதற்றம் தொற்றிக் கொள்ளும்.

நான் போகவில்லை என்று முடிவெடுத்தப்பின் அய்யா, “பி.எட் மாதிரி இதயும் ட்ரெய்னிங்கா பாருப்பா,”என்றார்.அவரின் அனுபவங்கள் எனக்கு உதவியாக இருந்ததன.மெல்ல மெல்ல பதினைந்து குழந்தைகளும் என்னை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார்கள்.அதற்கான முயற்சியை ஒரு ஆசிரியராக செய்துதான் ஆகவேண்டும் என்று அய்யா சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இருவாரங்களுக்கு ஒருமுறை திருச்சியில் பயிற்சி அளிக்கப்படும்.அங்குதான் அனுபவம் வாய்ந்த சிறப்புஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.பயிற்சிகள் புத்தகம் சார்ந்தவையாக இருந்தன.எனக்கு அவர்களின் அனுபவம் சார்ந்த பகிர்தல்கள் அதிகம் உதவின.ஏனெனில் பயிற்சி அளிப்பவர்கள் என்னை ஒத்த புதியவர்கள். 

பள்ளியிலிருந்து கடைசிநாள் வரும் போது எனக்கு பதட்டமாக இருந்தது.பிள்ளைகள் அவரவர் வகுப்பிற்கு அனுப்பப்பட்டார்கள்.இப்பொழுதும் அய்யா , “அவங்க சமூகத்துக்கிட்ட போய்தான் ஆகனும்..அவங்க வயசு பிள்ளைகளோடப் பழகட்டும்,”என்றார்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சிகளுக்கு இதுபோன்ற நூல்கள் துணை நிற்கும். அன்னையின் நுண்ணுணர்வால்,புரிதலால்,பேரன்பால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் பெற்றோர்களுக்கானது.சமூகத்தின் இந்தப் பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டிய நேரமிது என்று இந்தநூலின் வருகை உணர்த்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

 குழந்தைக்கு முன் அலைபாயும் கடலும், பின்னால் தந்தைக்கு நிகரான ஒருவரும் நிற்கும் படம் ஒன்று இந்தநூலில் உள்ளது.அந்தப் படம் நூலின் பேசுபொருளை கவித்துவமாக சொல்வதாக எனக்குத் தோன்றியது. 

இரண்டு ஆண்டுகளின் சிறுஅனுபவம் சார்ந்து இந்தக்குழந்தைகள் பற்றிய பொது புரிதல்கள் சில உண்டு.அவர்களுக்கு பிடித்தமான கற்றலில் மிகமிகத்தீவிரமானவர்கள்.அதில் காலநேரம் அறியாமல் மூழ்கக் கூடியவர்கள்.சராசரி குழந்தைகளுக்கு இந்த இயல்பு குறைவு.குழந்தைகள் அன்பானவர்கள் என்றாலும் இவர்கள் அன்பை வெளிப்படுத்தும் உடல்மொழி அலாதியானது.விடுமுறைக்குப் பின் அவர்களை பார்ப்பது என்பது அத்தனை பரவசமானது.நம்மை பிடித்துவிட்டால் அவர்களை பயிற்றுவிப்பது எளிது.அவர்களின் மறதிதான் சவாலாக இருக்கும்.

அந்த வெள்ளை உள்ளங்கள் நம்உலகின் கபடுசூதுகள் படறாத அதிஉள்ளங்கள். அந்த அதிமானுட பண்பே அவர்கள் வளர்ந்தபின் பெரியசிக்கலாக இருக்கிறது.என்ன செய்யலாம்? காந்தி சொல்லியது போல மனசாட்சியை கேள்வி கேட்க வைக்க வேண்டும்.அதற்கு இது போன்ற நூல்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.

இந்தநூலின் அட்டைப்படம் மிகப்பொருத்தமானது.உணர்வுபூர்வமாக நூல் சொல்லும் பொருளுடன் இணைவது.லஷ்மி எழுதுவதைப் போல சமூகத்தின் விழிப்புணர்வு பற்றிய கேள்வியை வழுவாக எழுப்ப வேண்டிய நேரம் இது.

முதலில் பொது பள்ளியில் சிறப்புகுழந்தைகள் எப்படி பார்க்கப்படுகிறார்கள்? என்பதிலிருந்து சமூகத்திற்கான பார்வைவரை நாம் பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.மக்கள் தொகை மிகுந்த,வாழ்வியல் போட்டிகள் நிறைந்த நாட்டில் கொஞ்சம் உரக்கத்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.எத்தனை சத்தத்திலும் பிரார்த்தனை பாடலுக்கு விழிப்புடன் நம் செவிகள் இருக்கின்றன.இந்தநூல் அந்தப்பாடலைப் போன்ற ஒன்று.

 


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்