[2022 மே மாத சொல்வனம் இதழில் வெளியான கதை] சிலுவைப்பாதை பள்ளி இறுதித்தேர்வுகள் தொடங்குவதற்கு இன்னும் நான்குவாரங்கள் இருந்தன. வெள்ளிக்கிழமை சாயுங்காலம் அது. இனி தேர்வுகள் முடிந்து விடுதியை விட்டு வெளியேறும் நாள் அன்றுதான் வீட்டிற்கு செல்லமுடியும் என்பதால் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் கிளம்பினார்கள். பதிவேட்டில் கையெழுத்திட நீண்ட வரிசை நின்றது. பத்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் காத்து நின்றார்கள். “நிஜமாலுமே நீ ஊருக்கு போகலியா ப்ரியா, “என்றபடி ப்ரியா பக்கத்தில் சாந்தி அமர்ந்தாள். விடுதியின் முன்பு இருந்த பெரிய வேப்பமரத்தின் அடியில் பழைய சிமெண்ட் மேடையில் இருவரும் அமர்ந்திருந்தனர். மேடையெங்கும் காய்ந்த வேப்பஞ்சருகுகள் மிகமெல்லிய காற்றுக்கும் நகர்ந்து நகர்ந்து இடம் மாற்றிக்கொண்டேயிருந்தன. சற்றுநேரத்தில் அனைவரும் வெளியேறிய மைதானம் அமைதியாக இருந்தது. எதிரே இரண்டுமாடி பள்ளிக்கட்டிடம் இளம்சிவப்பு நிறத்தில் சலனமின்றி உயர்ந்து நின்றது. ப்ரியா சாந்தியின் பக்கம் திரும்பி அமர்ந்து பேசத்தொடங்கினாள். “உனக்கு கஸ்ட்டமா இருக்குன்னு சொன்னியே...