நான் செய்த நேர்காணல்களை 'தும்பி அறியும் பெருங்காடு ' என்னும் நூலாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது. வாசகசாலை நண்பர்களுக்கு அன்பு. நூலிற்கு நான் எழுதிய என்னுரை. எழுதியவர்களுடன் ஒரு உரையாடல் நண்பர்களுக்கு… இந்த நூலில் உள்ள நேர்காணல்களில் முதல் மூன்று நேர்காணல்கள் கொரானா உலகத்தொற்றின் இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. நேர்காணல்கள் புரவி அச்சிதழ், வாசகசாலை இணைய இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. இந்த நூலில் நேர்காணல்கள் வெளியான காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்கள். இவை இரண்டாயிரமாவது ஆண்டிற்கு பின்னர் எழுதப்பட்ட படைப்புகள். 2006ல் வெளியான கானல் நதியும், 2010ல் வெளியான துயிலும் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்கள். நீலகண்டம், பேய்ச்சி, கங்காபுரம் என்று மூன்று நாவல்களும் 2019ல் வெளிவந்துள்ளன. இந்த மூன்று நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்கள். தொன்மத்தையும், நாட்டார் தெய்வங்களையும், வரலாற்றையும், நவீன கால சிக்கல்களையும் பேசும் நாவல்கள். காயாம்பூ 2021லும் ஹரிலால் 2022லும் வெளிவந்துள்ளன. காயாம்பூ _ குழ...