பெருங்கனவின் வெளி
[2018 அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரை. ஆனால் விமர்சனமாக ஆகவில்லை. வாசிப்பனுபவமாகவே நின்று விட்ட கட்டுரை] பெருங்கனவின்வெளி நாவல் :கொற்றவை எழுத்தாளர் :ஜெயமோகன் கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள்,அச்சங்கள்,நம்பிக்கைகள்,மனநிறைவுகள்,அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒர...