பெருங்கனவின் வெளி
[2018 அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரை. ஆனால் விமர்சனமாக ஆகவில்லை. வாசிப்பனுபவமாகவே நின்று விட்ட கட்டுரை]
நாவல் :கொற்றவை
எழுத்தாளர் :ஜெயமோகன்
கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள்,அச்சங்கள்,நம்பிக்கைகள்,மனநிறைவுகள்,அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒரு மனதின் தருணத்தில் காவியங்கள்,காப்பியங்கள் எழுதப்பட்டிருக்கலாம்.யாரோ அறிய முற்படக்கூடும் என்ற நினைப்பே அதை சுவையுள்ளதாக மாற்றச்செய்கிறது.
கடல் அனைவருக்கும் அலையாக தெரிகையில் அதை மனதின் புறவடிவாக காணும் மனம் அந்தகணத்தை கடத்த விழைகிறது.அப்படியாக ஒருசமூகப்பண்பாட்டின் சிந்திக்கும் மனம் அல்லது மனங்கள் அல்லது மூளைகள் மேலதிகமாக அழகியல் உணர்வும்,காருண்யமும்,மொழித்திறனும்,தொடர்ந்த முயற்சியும் மேற்கொள்கையில், அறியும் ஒன்றை கடத்த பெருங்கதையை சொல்கிறது அல்லது எழுதுகிறது.
பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை,முன்னவர்கள் அதுவரைக் கொண்டுவந்து சேர்த்த வெளிப்படுத்தும் தோரணைகள்,முக்கியமாக வெளிப்பாட்டு சாதனங்கள் கதைசொல்லல் முறையை, வடிவத்தை தீர்மானிக் கின்றன.என்றாலும் அதைமீறிய சாதனைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன.எல்லைகளை மீறி,மீறியே இதுவரை வந்திருக் கிறோம்.ஆனால் இலக்கியம் போன்ற காலாதீதமான ஒன்றில் எல்லைமீறல் என்பதை விரிவாக்கம் என்றே கொள்ளப்படுகிறது.அது எப்போதும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்றே நினைக்கிறேன்.இது நாவலின் ஆசிரியரால் நாவல் கோட்பாட்டு என்ற அவரின் நூலில் குறிப்படப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரம் என்ற தமிழ்காப்பியமானது தமிழ்நிலத்தின் முக்கியமானக்கூறுகளை ஒட்டுமொத்தமாக சொல்ல எழுதப்பட்ட காப்பியம். அன்றிருந்த செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும் கூட மிகவிரிவாக எழுதப்பட்டது.பள்ளியில் எழுத்திற்குப்பிறகு அறிவது திருக்குறள்.அதன்பின் ஒருசொல்லாக அறிமுகமாகும் சிலப்பதிகாரம் கண்ணகியை,மாதவியை,கோவலனை நம் வாழ்வில் இணைத்துவிடுகிறது.இம்மூவரையும் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்டவர்களாக இல்லையெனினும் இந்தசாயலில் கண்முன்னே கண்டுக்கொள்கிறோம்.
நம் சிறுவயதிலிருந்து ஒவ்வொரு வகுப்பையும்,வயதையும் கடந்து வருகையில் அவர்கள் நிறம்,திடம் கொள்கிறார்கள்.முதலில் கண்ணகி எளிதில் பதிந்துவிடுகிறாள்.மாதவி வரை வருவதற்கு ஒருநீண்ட காலகட்டம் தேவைப்படுகிறது.நம் அமைப்பு ஒருகாரணம்.பெண்குழந்தைகள் கடிவாளம்கட்டியவர்களாக இருப்பதும் ஒருகாரணம்.இதுக்கூட பிழையாக இருக்கலாம்.இன்றைய பள்ளிக்குழந்தைகள் நேற்றையப் பள்ளிக்குழந்தைகளை விட தெளிவானவர்கள்.மீண்டும் கோவலன் வரை வருவதற்கு வீட்டில்,உறவுகளில், அக்கம்பக்கத்தில் சிலவாழ்க்கைகள்,சங்கஇலக்கியத்தின் அகம் என்று நிறைய தேவைப்படுகிறது.இவ்வாறு நான் சொல்வது என் புரிதலை சார்ந்து மட்டும் .
வாயிலோயே...., என்று நீளும் மதுரைக்காண்டத்தின் வரிகளோடு கல்லூரித்தேர்வு முடிந்தப்பின் சிலப்பதிகாரம் தன் பயணத்தை நிறுத்திவிடுகிறது.உண்மையில் அந்தவயதிற்கு பிறகுதான் படித்து புரிந்து கொள்ள முடியக்கூடிய நூலாக சிலம்பை நான் கருதுகிறேன்.
அதன்பின் நான் முயற்சி செய்து உரைநூலை வைத்துக்கொண்டும்,தமிழ் அகராதியை வைத்துக் கொண்டும் போதிய வாசிப்பை அளிக்காமல் முடித்த சிலப்பதிகாரம் மனதில் குற்றஉணர்வை தந்து கொண்டேயிருந்தது.செய்யுள் வாசிப்பை பள்ளியில் எளிமையாக்கியிருந்தால் அல்லது கற்கும் ஆர்வம் இருந்திருந்தால் இந்தவாசிப்பு நன்றாக இருந்திருக்கும்.ஏறக்குறைய ஆங்கிலமும்,செய்யுளும் தெரியும் ஆனா தெரியாது நிலைதான்.
கொற்றவையை தபாலில் வாங்கிய அன்று அதைப்பற்றி தெரிந்த ஒன்று நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பது மட்டுமே.நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பதே மிக வசீகரமாக இருந்தது.உடனே வாங்கத்தூண்டியது.இதையாவது ‘வாசித்து’ விட வேண்டும் என்ற ஆற்றாமை.முதல் பக்கத்திலேயே நானும் குறைச்சலில்லை என்று புத்தகம் சவால் விட்டது.அப்படியே மூடி வைத்துவிட்டு காடுநாவலை எடுத்துவிட்டேன்.கண்முன் தலைமாட்டிலேயே உறங்கி சலித்தாள் கொற்றவை.
வேறுவழியில்லை தினமும் முடிந்தவரை என்று பாடப்புத்தகமாய் நினைத்து ஒருகருக்கலில் எடுத்தேன்.சாணித்தெளிக்கும் ஓசை,பட்சிகளின் கிச்கிச்,காகங்களின் அட்டகாசங்ளோடு சேவலின் குரல் அறைகூவலாய் ஒலிக்க கொற்றவை எழுந்தாள்.நீரென, நெருப்பன, நிலமென உருகொண்டாள்.மீண்டும் அந்தப் பழைய பள்ளி செல்லும் பெண்ணானேன்.பொன்னியின் செல்வனை விடுமுறை நாட்களில் எழுந்ததும் துவங்கி வீட்டில் லைட்டை அணைக்கச்சொல்லித் திட்டுவது வரை வாசித்து திளைத்த அவள்.மீண்டும் முழுவதுமாக என்னை புத்தகத்திற்கு அளிக்கமுடிந்தது குறித்து எனக்கு வியப்பு.கல்லூரியின் இறுதிநாட்களில் வாசிப்பில் ஒருசலிப்பு விழுந்திருந்தது.நம்மால் வாசிக்க முடியவில்லையா என்ற கோபமும்,பயமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.புத்தகங்கள் எல்லாம் கண்முன்பு ஆற்றில் அடித்துச்சல்லப்படுவது போன்ற கனவுகள் வரும் அளவிற்கு.
யாரோ ஒரு முகம் பெயர் தெரியாதவர், தோழியின் அண்ணனின் நண்பன் தோழிக்கு கொடுத்த எஸ்.ராவின் புத்தகத்திலிருந்து தொடங்கியது இதுவரையான இந்தப்பயணம்.
கொற்றவையின் மொழி கல்கோணா மாதிரி.கல் தான்…கல்அல்ல இனிப்பானது.ஊறவத்து உண்ண வேண்டியது.ஆனால் சப்பிக்கொண்டிருந்தால் சப்பென்று ஆகிவிடும்.கவிதை கவிதை என்று சொல்லிக் கொண்டிருப்பது வேறு.கவிதையை உணர்வது வேறு.
கொற்றவையின் வரிகள் கவித்துவமானவை.கொற்றவையின் மொழியே என்னை மிகவும் கவர்ந்தது.சும் மாவே எந்தப்பக்கத்தையாவது எடுத்து வாசித்துக் கொண்டிருக்கலாம்.மழையைப் பார்ப்பதைப் போல.புரிய வேண்டும் என்பது அடுத்தநிலை. ‘எல்லாப் பெயர்களும் பெயரற்றவனின் பெயர்களே’ என்ற வரிக்கும் கொற்றவைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை தானே.
மலையுச்சியேறிய முக்கண்ணனும்,கடலுல் இறங்கிய ஆழிவண்ணனும் தமிழ்சூழலில் எழுந்துவருகிறார்கள்.நம் முன்னோன் பிரபஞ்சத்தை,இயற்கையை எதிர்கொள்ளும் ஆதிமனதின் ஆளுள்ளத்து அச்சங்கள் அதைமீறி எழுந்து அச்சமென்னும் இருளின் மத்தகத்தின் எதிரே நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளும், அறிதல் போரில் தன்னை இழந்து அறியும் உண்மை.
மனிதமனத்தின் முதல் தத்துவ விதை.மனிதகாலகட்டத்தின் குழந்தைப்பருவம்.அந்தப் பருவத்திற்குரிய மனிதனின் அச்சம்,வியப்பு,விதையென உறங்கும் தனிமை,இட் எனப்படும் விலங்குமனநிலை அதை எதிர்கொள்ளும் ஒருதனித்த உள்ளத்தை கொற்றவை தன்மொழியால் அந்தஆதி உணர்வுகளை உணரச்செய்கிறது.உடன் வரும் தமிழ் அமுதென தெளிந்து எழுகிறது.தன்உணர்வுகளுக்கு ஒலிக்கொடுக்கிறான் அல்லது தன்னைசுற்றியுள்ள ஒலியிலிருந்து தனக்கான ஒலியை தேர்ந்தெடுக்கிறான்.
தமிழ் எறமுடியாத சிகரங்களைக் கடக்கும் ஒற்றைக்கொம்பு கலைமான் என உடன் வந்துகொண்டிருக்கிறது.அனைத்திலிருந்தும் அறிய முற்பட்ட அறிவன் அவன் மனிதன் என்பதை கொற்றவை பழம்பாடல் சொன்னதாக சொல்கிறது.குலக்கதை சொன்னதாக சிறுகுடிகள் இணைந்து குலங்கள் உருவாகியதை, நீரால், எரிமலையால் அழிந்ததை சொல்கிறது.மெல்ல மெல்ல நீர் குமரிக்கண்டத்தை உட்கொள்வதன் சித்திரம் வளர்வதன் மூலம் தமிழின் இந்நிலத்தின் மக்களின் பழமையை சொல்கிறது.அன்றிலிருந்து இந்நிலம் இன்றுவரை குமரியை வடகோட்டை எல்லையாகக் கொண்டு மாறாதிருப்பதன் மாயத்தை சொல்கிறது.
தமிழின், அதன்மக்களின் புனைவுவரலாறாக நாவல் விரிகிறது.விரிந்த நிலத்தின் பின்ணனியில் மொழியையும் மக்களையும் வைக்கிறது.அந்த நிலப்பரப்பு சிதறி மக்கள் தோணியேறி பலதீவுகளில் நிலங்களில் மீண்டும் எழுவதைக் காட்டுகிறது.ஒரு மாயசுழி போலவா, சுழலும் புதிர்க்கட்டம் போலவோ நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
மீண்டும் கடல்முனையில் அதே நகரம் அதேமக்கள், அதே செழிப்பு ,வாணிகம், ஏழடுக்கு மாளிகையில் கண்ணகி எழுந்துவருகிறாள்.பூம்புகார் எனும் பெரும்வணிகநகர் அதன் அனைத்து வண்ணங்களுடனும்,ஒலிகளுடனும்,அலைகளின் ஓதத்துடனும் நம்முன்னே தன்னைக் காட்டுகிறது.மீண்டும் வெயில் காயும் நிலத்தில் மதுரை.அதுஉருவாகி எழுந்தப்பின் உருவாகும் அரசியல் சிக்கல்களுடன் மீண்டும் வருகிறது.
வறுமுலைகள் முழங்கால் வரை தொங்க வரையாட்டி மீது வழிகாட்டும் அந்நிலத்தின் வழிவந்த பெண், மண்மகள் அறியா பொற்பாதங்களுடன் மணவாழ்வில் நுழைகிறாள்.
அனைவரும் அறிந்த கண்ணகி, மாதவி, கோவலன் கதை நாவலுக்குரிய விரிவில் பலவண்ணங்களில் எழுந்து வரும் சித்திரம் நம்மையும் அந்நிலத்தில் வாழச்செய்கிறது.இதில் மாதவியை கோவலன் பிரியும் தருணம் கோபத்தை ஏற்படுத்துகிறது.சிலப்பதிகாரமாக இருக்கும்போது கோவலன் கண்ணகியிடம் மீளும் தருணம் என்றிருந்தது இந்தவாசிப்பில் கோவலனின் முகம் தெரியும் தருணமாக இருக்கிறது.இது நாவல், காப்பியத்திலிருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று.ஆளற்ற தெருவில், இரவில் தன்இல்லம் நோக்கி நடந்துவரும் கோவலனின் சித்திரம் மனதில் நிற்கிறது.
இந்நாவல் உருவாக்கும் நீலி என்ற வழித்துணை பாத்திரம் குறிப்பிடத்தக்கது.அது கண்ணகியின் பிறிதொரு வடிவம்.புதுவாழ்வு தேடிச் செல்லும் வலுவான தெளிந்தமனதின் புறவடிவம்.அதிகார மோதல்கள் நிகழும் மதுரையின் சித்திரம், புறநகர்பகுதியின் சித்திரம் என நாவலில் பழைய தமிழ்நகரத்தின் பலசித்திரங்கள் நம்மை அழகிய கனவுக்குள் ஆழ்த்துபவை.சங்கமக்களின் நிகழ்த்துக் கலைகள் நாவல் முழுக்க அழகாக எழுகின்றன.
கோவலனின் கொலைக்குப் பின் மனம்தடுமாறிய கண்ணகியின் எழுகை நாவலில் மூலம் போலவே வேறுவகையில் உணர்வு பூர்வமாக எழுந்துவந்து நம்மை ஆட்கொள்கிறது.மீண்டும் மதுரை நெருப்பால் அழிகிறது.மதுரை ஏதோ ஒருவகையில் அழிந்து பின் எழுவதை ஒட்டுமொத்த மேலோட்டமான சித்திரமாக என் மனம் எடுத்துக்கொண்டது.
நாவலில் வாழ்வியல்,மெய்யியல் உண்மைகள் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.ஐவகை நிலங்களில் நாமும் பயணம் செய்கிறோம்.நாவல்முழுவதும் பெண்தெய்வங்கள் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.இதன் மூலம் இன்றைய சமூகமனம் தூண்டப்படுவது நாவல் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தது.
செங்குட்டுவன் அடர்கானகத்தில், நதியில், மலையருவிகளின் பயணம் செய்யும் பகுதி அழகிய ஆர்வமூட்டும் சித்திரம்.இளங்கோவடிகள்,மணிமேகலை கதைகள் நாம் அறிந்தவைகளை மீறி முற்றிலும் வேறுதளத்திற்கு செல்கின்றன.
மீண்டும் கடற்கரையின் கருமையில் அலைகளின் முன்னே,இந்தநூற்றாண்டு மனிதனின் தாயின் நினைவோடு முடிகிறது நாவல்.புத்தகத்தை வாசித்து வைக்கையில நாவல் முழுவதுமே அன்னையைப்பற்றிய பெருங்கனவு தானா? என்று பெருமூச்செழுகிறது.நிலம்,நீர்,காற்று,நெருப்பு என அனைத்திலும் உறைவதும் தாய்மையா என்று மனம் நினைக்கிறது.ஆதன் மலையேறி அறிவது ஆதி என்னும் அன்னையையா? கடலினுள் நுழைந்தவன் ஆழத்தில் அறிந்ததும் அதையேவா? தென்திசையில் ஒற்றைக்காலில் நிற்கும் கன்னி பேரன்னை எனில் பெருந்தாய்மை என்பது கன்னிமையா? என்று மனம் அலைகழிகிறது.எங்கோ ஆழத்தில்,ஏன் என்ற காரணங்களில்லாது,எப்படி என்ற தெளிவில்லாது,வெறும் உணர்தலாக மட்டும் என்னில் தென்முனையில் நிற்பவளை உணர்ந்து கொண்டேன்.வாசிக்கும் பெண்கள் அனைவருக்கும் இப்படித் தோன்றும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.
இந்தநாவலால் தாய்மை என்பது தத்துவமாகும் ரசவாதம் நிகழ்கிறது.இது உணர்த்துகிறது…தாய்மை என்பது நிச்சயம் பெண் சார்ந்தது மட்டுமல்ல.அது ஒரு பிரபஞ்சம் போலொரு பேருண்மை என.கன்னிமனம் என்பது பெருந்தாய்மை.அவள் ஒருமகவுக்கு தாயாகுகையில், தாயாகமட்டுமாகிறாளா என்று நினைக்கையில் கி.ராஜநாராயணின் கன்னிமை என்ற கதை மனதில் எழுகிறது.அதை உணர்ந்த நம் முன்னவர்கள் கன்னியை தென்முனையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.கன்னி நிலம் தன்னில் விழும் விதைகளுக்கும் உடல் தரகாத்திருப்பது. அறுவடைக்குப் பின் முற்றிலும் தன்நிலைக்கு மீள்வது எனில் கன்னிமை உலகு உய்வதன் பெரும்சக்தியா? என்று மனம் கேள்விகளை அடுக்குகிறது.
கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.
நாவலை வைத்தப்பின் அதன் மொழி நம்மை முற்றிலும் சூழ்ந்து கொள்கிறது.அதிலிருந்து விடுபட நாட்களாகும்.எழுத்தாளர் என்னும் தந்தையின் கையைப்படித்துக் கொண்டு இறந்தகாலத்திற்குள் அல்லது காலமென்னும் சுழற்சிக்குள் முன்னோர்களின் வெளிக்கு இந்நாவல் மூலம் செல்கிறோம்.அதற்காக அவருக்கு என்னுடைய ப்ரியங்கள்.
தட்டு நாவல் பக்கம் சாய்ந்திருக்கிறது.இந்நாவல் எழுதியவரை வணங்குவதன் மூலம் தென்திசை முன்னவர்களை வணங்கி இந்தநிலத்தின் ஆதிவாழ்வை உணர்ந்து சிலைக்கிறேன்.கண்சிமிட்டி அன்றாடவாழ்விற்காக எழுகிறேன் என்றாலும் நாவல் வாசிப்புக்கு முன்பு இருந்த நான் அல்ல இந்தநான்.இரண்டாவது வாசிப்பில் இதை எழுதுகிறேன்.அடுத்தவாசிப்பில் புதியவாசல்கள் திறக்கக்கூடும்.மீண்டும் எடுப்பதற்காக வைக்கும் போது பெருஞ்செல்வத்தை கையில் வைத்திருக்கும் தலைமுறை நாம் என்ற பெருமிதத்தோடு அச்சுஊடகத்தை நன்றியோடு நினைக்கிறேன்.
Comments
Post a Comment