வாசகசாலை இணைய இதழில் செப்டம்பர் 1 ல் வெளியான கட்டுரை. கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை_28 பாடியவர்: ஔவையார் திணை: பாலை வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்தகாலத்தில் மீளாமையால் உண்டான துயரை தலைவி தோழிக்கு உரைத்தது. இயற்கை நிகழ்வு ஒன்றின் மீது உணர்வுகளை ஏற்றிக்கூறும் சங்கக்கவிதைகளில் இதுபோன்ற நேரடியான கவிதையை கண்பது அரிது. ‘நீர் வார் கண்ணை’ ‘உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி’ ‘நோம் என்றால் நோம் நெஞ்சே’ என்ற வரிகளுக்கு மத்தியில் முட்டுவேன்,தாக்குவேன் என்று உரத்துக் கூறி ‘மனதின் முச்சந்தியில்’ வந்து நிற்கும் குரல் இது. சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை. காமம் என்ற சொல் மட்டும்தான். இன்று நாம் காதல் என்றும், காமம் என்றும் பிரித்து கூறும் உணர்வுகளை இந்தப்பாடல்களில் உள்ள வரிகளை முன்பின்னாக வைத்து புரிந்து கொள்ளல...