[வாசகசாலை 2023 செப்டம்பர் 2 இதழில் வெளியான கட்டுரை] கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை அங்கங்கே ஊன்றி வட்டமான பட்டிகள் அமைப்பார்கள். ஆடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பட்டிகளின் அளவு இருக்கும். லாந்தர் விளக்குகள், கைத்தடிகள்,முரட்டு சால்வைகளுடன் இருப்பதே பட்டிக்காரர்களின் கலை. சில நாட்களுக்கு ஒருமுறை அந்த தற்காலிகப் பட்டிகளை இடம் மாற்றுவார்கள். இப்படி வயல் முழுவதையும் வளப்படுத்தியப்பின் விதைப்புக்காலத் தொடக்கத்தில் தங்களின் மேய்ச்சல் கோலுடன் ஆடுகளின் பின்னால் கிளம்பிவிடுவார்கள். சாயுங்காலமானால் ஆடுகளுக்கு தண்ணீர்க்காட்டி ஆடுகளை பட்டிகளில் அடைப்பார்கள். குட்டியிட்ட ஆடுகள் பட்டிகளுக்கு வெளியே படுத்திருக்கும். கிணற்று மேட்டில் உள்ள தொட்டியில் குளிப்பார...