சரியாக பத்துஆண்டுகளுக்கு முன் 2014 ஜனவரியில் கன்னியாகுமரிக்கு சென்றோம். உறவுகளில் ஒரு இருபது பேர் சேர்ந்த பயணம். அண்ணன் மகனிற்கு திருச்செந்தூரில் மொட்டை போடுவதாக வேண்டுதலை முடித்துக்கொண்டு நாகர்கோயில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி குமரியம்மன் கோயில் மற்றும் விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம் காமராஜர் நினைவகம் காவிரி பூம்பட்டினம் போன்ற இடங்களுக்கு சென்றோம். சிறுவயதிலிருந்து பள்ளி கல்லூரி சுற்றுலாவில் ஐந்தாறு முறை இந்த இடங்களுக்கு சென்றுள்ளேன். கொற்றவை வாசித்தப்பின் காவிரி பூம்பட்டிணம் கடற்கரையில் செயற்கை அலைதடுப்பு கற்களில் அமர்ந்திருந்த போது மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். காலத்தின் மடியில் தன் செல்வங்களை ஒப்படைத்து அமர்ந்திருந்த கிழவி போல காவிரி பூம்பட்டிணம் அமர்ந்திருந்தது. நாலங்காடி அல்லங்காடி சதுக்க பூதம் எல்லாம் இங்கு தானே இருந்திருக்கும் என்று சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அதே போல திருச்சேந்தூர் தேரிகாட்டு செந்நிலம் மனதை வியாப்பித்திருந்தது. விவேகானந்தர் பாறைக்கு படகில் ஏறி லைஃப் ஜாக்கெட்டை மாட்டியதும் மனம் துறுதுறு என்று இருந்தது. வள்ளுவரையும் விவேகானந்தர் பாறைய...