இற்றைத்திங்கள் அந்நிலவில் : 16
[2024 அக்டோபர் சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரை]
தளிர் பெருமரம்
ஔவையார் அகநானூற்றில் நான்கு பாடல்கள் பாடியுள்ளார். நான்கும் பாலைத்திணை பாடல்கள். பிரிவ பாடும் தலைவி கூற்றுகள். ஓங்கிய மலைகளையும், வரண்ட காடுகளையும் ,மணல் வெளிகளையும் கடந்து தலைவன் பொருள் தேடி செல்கிறான். தலைவி தன் நிலத்தை விட்டு வெளியே சென்றவள் இல்லை. கதைகளாக மற்றவர் சொல்லக் கேட்கும் தலைவி தன் ஊகத்தாலும், கற்பனையாலும், கனவாலும் விரித்துக்கொள்ளும் நிலவெளி இந்தப்பாடல்களில் உள்ளது. தலைவியின் மனதில் விரியும் நிலமும், பிரிவு சார்ந்த உணர்வுகளும் பாடல்களாகியுள்ளன.
பிடவம் பூக்களையும், வேங்கை மலர்களையும் காணும் தலைவிக்கு தலைவன் நினைவு வருகிறது. அவன் செல்லும் வழியில் புலிகள் இருக்கிறது. அதுவும் குட்டிகளை ஈன்று பசியுடன் இருக்கும் புலி. அந்தப் பெண்புலியின் இணையான ஆண் புலி தன் ஐந்துபொறிகளும் உச்சநிலையில் விழித்திருக்க இரைக்காக காத்திருக்கும் காட்டு வழியில் தலைவன் சென்றுள்ளான் என்று தலைவி பதறுகிறாள்.
ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறு வகுத்தன்ன
ஊன்பொதி அவிழாக் கோட்டுஉகிர்க் குருளை
மூன்றுஉடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர்அளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
பொறிகிளர் உழுவை போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவுஅயர்ந் திசினால் யானே….
அகநானூறு _ 147
பிறந்து ஓரிரு நாட்களே ஆன புலிகுட்டிகள் அவை. அவற்றின் கால்களில் தசைமடிப்புகளில் இருந்து நகங்கள் இன்னும் வெளிவரவில்லை. அவற்றை ஈன்ற தன் இணையின் பசியை உணர்ந்து இரைக்காக காத்திருக்கும் ஆண்புலியின் வேட்டைஇயல்பையும் ,தலைவன் சென்ற வழியையும் நினைத்துக்கொண்டு அழகு சிதைய இப்படி வருந்தி அச்சம் கொண்டு அவன் நினைவாகவே நாட்களை கழிக்கின்றேன். இதை விட காதலனை தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல நானும் சென்றிருக்கலாம் என்று தலைவி அச்சம் தாளாது சொல்கிறாள். இந்தப்பாடல் தலைவனை பிரிந்த தலைவியின் கொடும்கனவாகவும் இருக்கலாம். பாடலில் உள்ள அச்சத்தின் வரிக்கு வரி ஆழமாவதை காண முடிகிறது. முதலில் புலியை பற்றிய வர்ணனை, பின்னர் அது குட்டிகளை ஈன்று பசித்திருப்பது என்றும், ஆண்புலி தன் வேட்டைஇயல்பின் உச்சத்தருணத்தில் கூர்ந்து நிற்கும் காட்சியின் உக்கிரத்தையும் வாசிப்பவர் உணரமுடிகிறது.
உயர்ந்த கொல்லிமலையின் உச்சியில் அடர்ந்த காட்டிற்குள் உள்ள அருவியைப்போன்றது தன் காதல் என்கிறாள் இன்னொரு தலைவி. அதை தான் எவ்வளவு மறைத்து வைத்த போதும் அதன் இயல்பாலேயே அது வெளிப்பட்டுவிட்டது. பறம்பு மலை முற்றுகைக்கு ஆளான போது அதில் வாழ்ந்த குருவியினம் காலையில் இரை தேடச்சென்று மாலையில் முற்றிய கதிர்களுடன் கூடுதிரும்பியதைப் போல பொருள் தேடிச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் திரும்பி வருவான் என்று நினைத்தது அவள் மடநெஞ்சம். இரவுவந்தால் சிள்வண்டுகள் ஒலிப்பதைப்போல எந்தநேரமும் வணிகர்களின் உப்பு வண்டியின் மணியோசை கேட்கும் வழியில் தலைவன் செல்கிறான். வற்றிய குளத்திலிருந்து நீர்நோக்கி செல்லும் மீன போல அவனிடம் சென்று சேர மாட்டேனா என்று தலைவி தன் மனதிடம் புலம்புகிறாள்.
வறன்மரம் பொருந்திய சின்வீடு உமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரன்இறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே
அகநானூறு 303
சிவந்த இலவம் பூக்கள் மரம் நிறைத்து பூத்திருக்கும் காலத்தில் தலைவன் பொருள் ஈட்ட சென்றுள்ளான். அந்த இலவம் பூக்களை போல சிவந்து காயும் சூரியனின் வெப்பத்தை உணரும் தலைவி, தலைவன் செல்லும் வழியை நினைத்துக் கொள்கிறாள். காட்டாறு தான் செல்லும் வழியில் உள்ள தாழ்ந்த மரக்கொம்பினை உலுக்கி மணல் வெளியில் பூக்களை விரிக்கும். அந்த தண்மையான மணல் வெளியில் இருப்பதை போல இந்தக்கோடையில் அவர் என்னுடன் இருந்திருந்தால் கோடை மழைகாலமாகியிருக்கும் என்று நினைக்கிறாள். ஆனால் தலைவன் இன்றி நான் மட்டும் கண்வெள்ளம் வீழ்த்தி சென்ற பூவாய் இருக்கிறேன் என்கிறாள்.
வானம் ஊர்ந்த வயங்குஔி மண்டிலம்
நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் அம்காட்டு
இலைஇல மலர்ந்த முகைஇல் இலவம்…
அகநானூறு 11
கூதளங்கொடி போல வெண்குருகு கூட்டம் வானில் பறக்கிறது. தலைவனை பிரிந்த தலைவியின் சோர்வு கண்டு ஊரார் அலர் பேசுகிறார்கள். ஊர்க்காரர்கள் பேசும் அலர் தளிராகி, கிளையாகி, பெருமரமாகி வளர்கிறது. அது அரும்பு விட்டு மலர்ந்து மணம் பரப்பும் காலத்திலும் தலைவன் வரவில்லை என்று தலைவி சொல்கிறாள். உண்மையில் ஊரார் அலர் பேசுவதால் அவள் மனதில் தளிர்விட்ட காதல் பெருமரமாகி பூக்கிறது.
விசும்பு விசைத்து எழுந்த கூதளங்கோதையின்
பசுங்கால் வெண்குருகு வாப்பாறை வளைஇ
ஆர்கலி வளவையின் போதொடு பரப்பப்
புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்…
அகநானூறு_ 273
இந்தப்பாடல்களில் உள்ள தலைவிகள் வெவ்வேறு பருவத்தில் உள்ளவர்கள்.
காந்தல் போல சிவந்த சூரியனின் எரிக்கும் வெயிலை கண்டு தலைவனை நினைத்து வருந்துபவள் அரிவை பருவத்தினளாக இருக்கலாம்.
குட்டிகளுடன் பசித்திருக்கும் வேங்கை உலவும் காட்டு வழியில் வெள்ளிவீதியாரைப் போல தன் தலைவனை தேடிச் செல்ல விரும்புபவள் பேரிளம் பெண்ணாகவே இருப்பாள்.
அருவிச்சத்தத்தை போல தன் காதலை ஊரிடமிருந்து மறைக்க முயன்று தோற்பவள் அரிவை பருவத்தினளாக இருக்கக்கூடும்.
கூதளங்கொடி போல வெண்குறுகுகூட்டம் வானத்தில் பறந்தது என்று சொல்வதன் மூலம் தன் காதல் அலரால் விசையுற்று பறக்கிறது என்று சொல்பவள் மடந்தை பருவத்து சிறு பெண். அந்த பருவத்திலேயே எதிரும் புதிருமாக இருக்கமுடியும். ஊர் பேசும் பேச்சாலேயே தன்னுள் இருந்த துளிர் தளிர்த்தது. அவர்கள் பேசிப்பேசியே அது பெருமரமாகிப் பூத்தது என்று சொல்பவள் துடுக்கான மடந்தை பருவ பெண்ணாகவே இருக்கக்கூடும்.
இந்த நான்கு பாடல்களும் தலைவனின் பிரிவை பேசுவதாக இருந்தாலும் இவற்றின் தொனி வேறு வேறு. ஒன்று ஆபத்தை நினைத்து அச்சத்தில் தலைவனுக்காக பதறுகிறது. ஒன்று கோடை கால வெம்மையை கண்டு உளம் துடிக்கிறது. மற்றொன்று காதல் வெளிப்பட்டதை நினைத்து வருந்துகிறது. அடுத்தது வானில் தன் பட்டம் ஊரறிய பறப்பதை கண்டு களிக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு அழகு என்றாலும் கூட காதலின் அந்த தூயமடத்தனத்தில் திளைத்து, அன்னாந்து வானத்தை பார்த்து ஆம்பல் கொடி போல பறக்கும் தன்காதலை கண்டு களிக்கும் சிறுபெண்ணின் மனம் ஒரு காடு. அது இலைகளின்றி செறிந்து கொண்டிருக்கும் தளிர் பெருமரம். அதில் தளிர்களெல்லாம் மலர்களே.
ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை
ஆரோர் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாண்இல் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர்அரும்பு ஊள்ப்பவும் வாரா தோரே
அகநானூறு 273
Comments
Post a Comment