விக்ரமாதித்தனும் வேதாளமும்
[ 2024 அக்டோபர் வாசகசாலை 100 வது இதழில் வெளியான சிறுகதை]
விக்ரமாதித்தனும் வேதாளமும்
கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன். அதன் கீழே பெரிய வலை. அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப்பிடிக்கிறேன். அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னை குனிந்து பார்க்கிறது. அதன் கண்களில் எத்தனை குளுமை. கமலா ..என்று அழைக்க நினைக்கிறேன். குரல் எழவில்லை. விழித்துக்கொண்டேன். தேகத்தை சிரமப்பட்டு அசைத்து நிமர்ந்து படுத்தேன்.
நான் படுத்திருப்பது ரயில் பெட்டியின் பக்கவாட்டு படுக்கை. ஒன்றிரண்டு படுக்கைகளில் ஆட்கள் இல்லை. வானம் வெளுக்கும் நேரத்தில் மெட்ராஸ் வந்துவிடும். அதற்குள் யாருக்காவது காகிதம் எழுத வேண்டும். பங்குனி மாதம். ஜன்னலுக்கு வெளியே பார்ப்பவருக்கு நேரங்கொடாமல் அதிகாலை காட்சிகள் ஓட்டப்பந்தயம் நடத்தின. பஸ் பிரயாணம் ஒரு சுகானுபவம். மெல்ல வெற்றிலை போடுவது போல. எரிச்சல் கொண்ட கண்கள் களைத்து வந்தது. துண்டால் வாயை மூடிக்கொண்டு இருமினேன். எதிர்சீட்டில் உள்ள பெண் சலிப்பாக திரும்பிப் படுத்தாள். மேல்படுக்கையில் இளைஞன் ஒருவன் உறங்காமல் படுத்திருக்கிறான். வேலைத்தேடி அலைபவன் போல எதையோ பறிகொடுத்த முகக்களை. நாடு சுந்திரமடைந்தும் ஒரு வருஷம் ஓடிவிட்டது.
மூச்சை இழுத்துவிட்டேன். நெஞ்சில் சுருக்கென்று வலி. நின்று வலித்து மெல்லக் குறைகிறது. வாயை திறந்து மூச்சுவிட்டேன். தோளில் வேதாளம் தொற்றிக் கொள்ள அதை சுமந்தபடி விக்கிரமாதித்த மகாராஜா நடந்தானாம். அது போல இந்த வலி வரும் போது தனியாக இருப்பதன் பயம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் என் வலது தோளில் எப்போதும் என் தோளை விட்டிறங்காத ஆதி வேதாளம் ஒன்றுண்டு. அது எந்தநேரமும் காதுக்குள் கதைசொல்லிக் கொண்டேயிருக்கும். இந்தப் புதுவேதாளம் அந்தக் கதைகளை கேட்கவிடாமல் என்னை இம்சிக்கிறது. இனாலும் மன்னனும் வேதாளமும் வேறு வேறா ? காகிதத்தை எடுத்தால் இந்த மாதிரி எட்டு பத்து திசையிலிருந்து கை நீட்டும் கவந்தனை மறந்துவிடலாம்.
குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. எதிர்சீட்டு பெண் எழுந்து விளக்கைப் போட்டு சீட்டுக்கு அடியில் இருந்த துணிப்பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்தாள். தரையில் உட்கார்ந்து புட்டியிலிருந்த மருந்தை குழந்தைக்கு புகட்டினாள். குழந்தை கண்கள் கலங்கி வழிய சிணுங்கியது.
போர்வையை நன்றாக இழுத்துப்போர்த்தி சாய்ந்து கொண்டேன். காய்ச்சல் குறைவதும் அதிகமாவதுமாக இருக்கிறது. பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்காக பூனேவில் தங்கிய சமயத்தில் காசநோய் ஏற்பட்டுவிட்டது. இருமலும் சளியும் அங்குள்ள குளிரால் வந்த பலகீனம் என்று நினைத்து இரண்டு மூன்று மாதங்கள் இருந்தாயிற்று. வசனம் எழுதித்தருவதும், தேவைப்பட்டால் நடிகர்களுக்கு உச்சரிப்பு சொல்லித்தருவதுமே வேலை. படம் முடிந்திருந்தால் சம்பளம் போட்டிருப்பார்கள். காந்தி கொலை செய்யப்பட்டதால் கலவரம் வரலாம் என்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குள் எனக்கு உடல்நிலை மோசமாகியது. பெங்களூரு கன்னய்யாவுடன் கிளம்பி வந்துவிட்டேன்.
அடியிலிருந்த சிறிய ட்ரங்கு பெட்டியை தூக்கி சீட்டில் வைத்து தபால்அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
கமலாவிற்கு எழுதலாமா? வேண்டாம். உடல் நிலை பற்றிய விஷயத்தை பக்குவமாக அவளுக்குச் சொல்ல வேண்டும். வழக்கம் போல உணர்ச்சிவயப்பட்டு எழுதினால் காரியம் கெடும். பத்து வருஷமாக தபால் இலாக்கா இல்லாவிட்டால் நானும், ‘ கனைகுரல்
பல்லி பாடு பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு…’என்று சத்திமுத்தனைப் போல நாரையிடம் புலம்பியிருப்பேன்.
உயிர் கயிறு இற்று வருவதை முதலில் யாருக்கு எழுதுவது? மனம் உண்டியலின் கடைசி அணாவைத் தேடியது. மெல்ல சிதம்பரத்தின் முகம் மனதில் தோன்றியது.
26-5-48
அன்புள்ள சிதம்பரத்துக்கு,
நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப்பையிலும் துவாரம்
விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டு கிழித்து
விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு. இங்கு வந்து வேறு
சிகிச்சை முறை அனுஷ்டிக்க உத்தேசம். கைவசம் பணம் இல்லை. பாகவதர் அனுப்ப வேண்டியது
தாமதமாகும். ஒரு நூறு ரூபா இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு. எதற்கும் என்னை 10
மணிக்கு சந்திக்க முடியுமா?
உனது,
சோ.விருதாச்சலம்
மறுபடி குழந்தை அழுது கவனத்தை கலைத்தது. அதற்கு என்னமோ வேதனை. தாய் சமாதானம் செய்கிறாள். அதற்கும் மசியாமல் அது மேலும் வீறிடுகிறது. அதற்கு என்ன நோவோ..அதை மடியில் படுக்க வைத்துக் கொள்கிறாள். அதன் நெஞ்சில் மெல்ல தட்டுகிறாள். சற்று நேரத்தில், ‘தந்தேன்’ என்று கதைகளில் கடவுளர்கள் சொன்னதும் காடும்மேடும் மறைந்து, மாடமாளிகைகள் முளைப்பது மாதிரி குழந்தை கண்ணயர்ந்தது. அதன் முகத்தில் என்ன நிம்மதி. எந்த அரக்கன் வந்தாலும் இனிமேல் அதற்கு என்ன பயம்.
கண் சொக்கி வருகிறது. மூச்சின் கொடுமையால் உடலை நிமிர்த்தி வைக்க வேண்டியிருக்கிறது. ஸ்டேஷன் வரும் வரை இந்த பாழும் உடலை சுமந்து கொண்டு உட்கார்ந்திருக்க வேணுமே என்று ஆயாசமாகிறது. அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. குழந்தையும் தாயாருடன் இறங்கிவிட்டது.
நான் இறங்கிய உடனே காடிதத்தை அங்கிருந்த தபால்பெட்டியில் போட்டுவிட்டு நடந்தேன். ரயிலடி அல்லோலகல்லோலங்களுக்கு குறைவில்லை. பெட்டிகளின் பக்கம் வரவேற்க வந்தவர்களின் கூட்டம் நெரிகிறது. வழியனுப்ப வந்தவர்கள் சற்று பின்னால் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒதுங்கி நடந்தேன். எனக்கு எதிரே கண்ணீரை கட்டுப்படுத்தியவாறு ஒருபெண் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு பொட்டு மூக்குத்தி அந்த இருட்டடித்த வெளிச்சத்தில் பளீரென்றது. மறுபடி மனசு தொல்லை பண்ணத்தொடங்கியது.
இத்தனை ஆண்டுகளாக இத்தனை முட்களுக்கு நடுவே கள்ளிச்செடி பூப்பது போல ட்ராமிலும், வெயில் பொழியும் ரஸ்தாவிலும், பசியிலும், காய்ச்சலிலும் என்னை இந்த ப்ரியமே பூக்கச்செய்தது. நாளுக்கு ஒன்று என்று நான் எழுதி போட்ட காயிதங்களை அடுக்க அங்கே அவளுக்கு ஒரு பெரிய மாடப்பிறை பத்தாது. கஸ்தூரி கட்டை அடித்து பலகை போட வேணும். சாலையில் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு மேல்சட்டை இல்லாமல் ரிக்ஸாகாரன் பாதிதூக்கத்திலிருந்தான். அவனை எழுப்பி ரிக்ஸாவில் ஏறிக்கொண்டேன். திருவல்லிக்கேணியின் மெயின் ரஸ்தாவில் நான் சொல்லிய இடத்தில் இறக்கிவிட்டான்.
குடித்தனங்களுக்கு நடுவே குறுக்கே பாதையை பிடித்து இருட்டு சந்தில் நடந்தேன். வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. கம்பத்து விளக்கில் வெளிச்சமில்லை. வீடுகளில் ஆட்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை அமைதி.
துருஅண்டிய பூட்டு அடம்பிடித்தது. சாமான்களை போட்டு வைக்க சிதம்பரம் சிபாரிசில் கிடைத்த அறை. ஒருகுடித்தனத்தின் பக்கவாட்டுஅறை. மதுரையிலும் பூனாவிலும் ஹோட்டலில் வாசம். திரைப்பட வேலையாக மாறி மாறி அலைந்து கொண்டிருக்கறேன். கதவை திறந்தும் எதுவோ பீடிக்க வந்தது போல தொண்டை அடைத்தது. அறையின் நாள்பட்ட புழுதிக்காற்று வெளியே வரட்டும் என்று ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். காலை நேரத்து மெல்லிய தண்மையில் உடல் தடதடத்தது.
சற்றைக்கெல்லாம் அடுத்த குடித்தனத்து அம்மாள் வாசல் தெளிக்க கதவை திறந்தாள்.
“பேங்களூர் போயிட்டு இவ்வளவு சுருக்கவா,”
“தங்கறதுன்னா செலவு…ஒடம்புக்கு முடியலை,”
“நாளும் கெழமையும் இங்கியே கிடக்கறேள்…ஒடம்புக்கு முடியலேன்னாவாச்சும் ஆத்துகாரி பிள்ளைன்னு இருக்கலாமோ இல்லையோ…” என்றபடி வாசலை பெருக்கிவிட்டு கோலமிட்டாள். புள்ளிகளைத் தொடாமல் சுற்றி சுற்றி ஒரு வலைபின்னல்.
“அங்கேயும் நெருக்கமான குடித்தனம். இந்த ஒட்டுவாரொட்டி ரோகம் குழந்தைக்கும் அவளுக்கும் வந்துட்டால் என்ன பண்றது..”
“அப்படி நினைக்காதீங்கோ…இப்படி இருக்கச்ச தான் மனுஷாள் வேணும்…அவா காயிதம் போட்டாளா…”
“இல்லை…”
“நீங்க இப்படி பண்ணப்பிடாது கேட்டளா…காயிதம் போடாட்டாவது வந்துருவீங்கன்னு நெனச்சுருப்பா,”
“இந்த ரோகம் பத்தி உங்களுக்கு தெரியாதா? ரக்தபீஜனுக்கு ஒப்பு வைக்கலாம்..”
அந்த அம்மாளின் முகம் இன்னும் சாந்தமாகி, “அதுக்குத்தான் ஊருக்கு போகச்சொல்றது..தனியா இருந்து அசுரனை நெனச்சுண்டு இருக்காதீங்கோ,” என்று சொல்லிவிட்டு குடிப்பதற்காக ஈயஉருளியில் தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். தண்ணீரை அடுப்பில் வைத்து காய்ச்சி தேத்தூளும் சர்க்கரையும் இட்டு வடித்துக்கொண்டு எழுதுபலகை முன்பாக அமர்ந்தேன்.
‘சிற்றன்னை’ என்று தலைப்பிட்டு எழுதிக்கொண்டிருக்கும் காயிதங்கள் வலதுபக்கம் படபடத்தன. அதற்கு அப்பாலிருந்த ட்ரங்கு பெட்டியின் மீது காகிதக்கட்டுக்கள். புழுதி தட்டியதால் ரணமான தொண்டையில் தேநீரின் மிதமான சூடு இறங்கியது. தினகரி தொட்டுவதைப் போல. பிறந்ததிலிருந்து இரண்டுதடவை தூக்கி உடலோடு சேர்த்து வைத்திருக்கிறேன். குழந்தையை நம்முடன் வைத்துகொள்ளுவது சுகம். அதனால் தான் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்கு எதோ ஒரு தன்மை கூடுதல். பக்கத்தில் நடந்து வரும் தடியன்களுக்கு எப்போதும் உர்ரென்ற மந்திமுகம்.
பின்புறம் சுவர்ஓரமாக தொங்கிக்கொண்டிருந்த வேட்டி சட்டைகளின் மெதுமெதுப்பில் சாய்ந்தபடி கடிதஉறையை எடுத்து கண்மணி கமலாவிற்கு… என்று எழுதி நிறுத்தினேன். பேனாமுனை தொட்ட இடத்திலே அசையாமல் இருக்க, பெரிய முற்றுப்புள்ளி போல மையூறிக் கொண்டிருந்தது.
…..…….கை வலிக்கிறது. நீண்ட கடிதமாக எழுத இயலவில்லை. நண்பரிடம் பணம் கேட்டிருக்கிறேன். பணம் முந்துமோ…சாவு முந்துமோ தெரியவில்லை.
உனதன்பன்.
கை விரல்களை நீட்டி மடக்கினேன். கண்ணெதிரே அடுப்பில் தணிந்தது போக கங்குகள் சிவந்து பழுத்திருந்தன. உக்கிரப்பழம். கந்தனுக்கு கிடைக்காதது. அவனை சுட்டுக்கொண்டிருந்த பழம். முருகனை வைத்து கதை எழுதலாம் என்று நினைத்தபடி தலையணையில் சாய்ந்தேன். கண்கள் தானாக மூடிக்கொண்டன. இரண்டு மூன்று நாட்கள் படுக்கையும், காப்பியும், முடிந்தால் கஞ்சியுமாக போனது.
அடுத்தநாள் நண்பகலில் சிதம்பரம் வெற்றிலையை மென்றபடி பையில் பழங்களுடன் வந்தார். ஓரமாகக்கிடந்த கோரைப்பாயை எடுத்து வாசல் நிலையின் பக்கமாக விரித்துக்கொண்டு அமர்ந்தார். நான் உள்ளே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
“அந்தப்பையில் பணம் இருக்கு. என்னால முடிஞ்சது…வித்தியாசமா நினைக்காதீர். டாக்டரை போய் பாரும். நான் இன்னும் நாலுநாளில் மறுபடி வரேன். களைப்பா தெரியறேளே…ஆகாரம் ஆச்சா”
“சீரகமிட்ட உப்பு கஞ்சி..அடுப்பு மேட்டில் மிச்சமிருக்கு பாருங்க,”
என்னை பார்த்துக்கொண்டிருந்தவர் சட்டென்று திரும்பி வாசலில் அலைந்த சிட்டுக்களைப் பார்த்தார். பின்னர் தயக்கமான குரலில் பேசத்தொடங்கினார்.
“நீங்க திருநெல்வேலிக்கு போனா என்ன? தகப்பனாரோட முட்டிக்காத மகன்கள் இந்த லோகத்தில் உண்டோ…”
“தகப்பனாரோட முட்டினது மட்டும் தான் உமக்கு தெரியும்..விவரத்தை அறியமாட்டீர்,”
சிதம்பரம் மேற்கொண்டு எதுவும்
கேட்கவில்லை.எங்கள் இருவருக்கும் நடுவே ஐன்னல் வழியே சூரியவெளிச்சம் சிறிய பட்டைகளாக விழுந்திருந்தது. வெளிச்சத்தில் தூசுகள் பறந்து கொண்டிருந்தன.
“ஐஞ்சுவருஷசத்துக்கு முன்னால ஜப்பான்காரன் குண்டு போட்டானே..அந்த நேரத்துல கமலாவையும் குழந்தையையும் ஊருலே குடித்தனம் வச்சிரலான்னு கூட்டிட்டு போனேன். அப்பாவுக்கு சொந்தமா நாலு வீடு உண்டு. முடியாதுன்னுட்டார்,”
“வெள்ளத்துல மெட்ராஸே முழுகிகிடந்தது.. மக்கள் கூட்டம் கூட்டமா திருச்சி ,கும்போணம் ன்னு மூட்டை முடிச்சுமா கிளம்பினதெல்லாம் அவருக்கு தெரியும் தானே,”
“தெரியாம என்ன? என் மனைவி பிள்ளை மட்டுமா பத்துலட்சம் ஆட்கள் வெளியேறுனாங்க..எப்படியாச்சும் அங்க வீடு கிடச்சா குழந்தையையும் அவளையும் பத்திரபடுத்தலான்னு நெனச்சுதான் கேஸ் போட்டது...”
“…..”
“பரம்பரை சொத்துன்னு ஒரு கூறு நிலம் கெடச்சதுதான் மிச்சம். வேற வழியில்லாம மறுபடி அவளை தாய்வீட்டுக்கே அனுப்ப வேண்டியதாயிடுச்சு. அவர் என்னை ஆசையா பி.ஏ படிக்க வச்சவர் தான். வக்கீலுக்கும் படிக்க வைக்கறேன்னார்,”
சிதம்பரம் குனிந்து வேட்டி முடிப்பிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்தார். முகம் இறுகியிருந்தது.
“எனக்கு அந்த வயசுல கதை எழுதனுங்கற நினைப்பு எப்படியோ மனசில் விழுந்துட்டது. அதை நினைக்கறப்ப இன்னதுதான்னு சொல்ல முடியாத ஒரு உத்வேகம்…”
சிதம்பரம் வெற்றிலையை கைகளில் வைத்துக்கொண்டு என் பேச்சிற்கு மேலும் கவனம் கொடுத்தார்.
“தெனமும் உலகத்து இலக்கியகர்த்தாக்களை திருநெல்வேலி ஜங்ஷன் கடைச் சங்கப்பலகையில நிக்க வைப்போம்..”
“அது என்னது கடைச்சங்கம்,”
“ஜங்ஷன்ல இருந்த புத்தகக்கடை.. பெண்பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்,”
“திருவனந்தபுரம் வரைக்கு போய் உமக்கு பெண் பார்த்திருக்கார் பாரும்,”
“ஆமாமா…வாஸ்தவம் தான். ஆனா அங்கே பந்துக்கள் உண்டு. அந்த வழியை பிடிச்சு போயிருப்பார். கேளும்…நான் ஜங்ஷனுக்கு போறது வரதுமா இருந்தேன். ஒருநாள் சாயங்காலமா என்னை கூப்பிட்டு ‘வக்கீலுக்கு படிக்கறேன்னா பணம் கட்றேன்.இப்படிதான் கடையில் உக்காந்து கதை பேசுவேன்னா வேலைக்கு போ…என்று தொடங்கினது தீவிரமாகிப்போச்சு,”
“அப்படி பேசினாலாவது வருமானத்துக்கு வழி பண்ணிக்கொள்ள மாட்டீரான்னு நினச்சிருப்பார்,”
தொண்டை வரண்டு எரிச்சல் கண்டது. கங்கில் கிடந்த வெந்நீரை இளம்சூடாக்கி குடித்தேன். சிதம்பரம் வெற்றிலையை மடித்து வாயிலிட்டு மென்றவாறு பேசினார்.
“அஞ்சு வருஷமா ஜப்பான்காரன் குண்டு போடுவான்…போடுவான்னு எத்தனை அமர்க்களம் நடந்தது. போர்விமானம் எப்படி பறக்கும்ன்னு ஜனங்களுக்கு பறந்து காட்டிக்கொடுத்தா. குண்டு விழுந்தா எப்படி ஔிஞ்சுக்கனுன்னு வீதிநாடகம் போடறாப்ல கூத்து காட்டினா…ஆனா என்ன ஆச்சு…”
“வரலாறுங்கறது என்ன? பயங்கரம் கேலிகூத்தா ஆகறது தானே,”
“வழக்கமான கேலிக்கு வந்துட்டேளே,” என்று புன்னகைத்து கையை தலைக்கு முட்டு கொடுத்து ரெங்கநாதர் போல சாய்ந்தார். அப்படி சாய்ந்தால் ஹாஸ்ய மனநிலை என்று வைத்துக்கொள்ளலாம்.
“நிஜத்தை சொன்னா கேலியா… அன்னிக்கு குண்டு போட்டவன் ஸ்தம்பிச்சு போனானா இல்லியா…”
“ஆமாமா..சைரின் அலரல. கரண்டு இல்ல…ரேடியோ இல்ல..நியூஸ் பேப்பர் இல்ல.. மூணுநாளு வெள்ளம் வடியல..குண்டு போட்டதே மூணுநாளைக்கு யாருக்குமே தெரியாதுங்கறது தான் விஷயமே”
“மெட்ராஸே தவம் பண்ணின்டுல்ல இருந்துச்சு..”
மறுபடி வெந்நீர் எடுத்துக் குடித்துவிட்டு படுத்துக்கொண்டேன். சிதம்பரம் வெயிலை பார்த்துக்கொண்டிருந்தார்.
“அகங்காரத்துல விழுந்த அடியில்ல அது…அவன் அன்னிக்கு திரும்பத்திரும்ப குண்டு போட்டாலும் ரெண்டு உயிரோட அவன் யுத்தம் முடிஞ்சு போச்சே,” என்றார்.
“உயிர் போறது மட்டும் தான் கணக்கா..கோடிக்கணக்கான மனுஷங்களோட அஞ்சு வருஷ நிம்மதிங்கானும்...”
“விடும்…நொந்து போயிருக்க ஒடம்பை சிரமப்படுத்திக்காதீர். அதான் பிரம்மாஸ்திரம் வேற வழியில அவனுக்கே திரும்பிடுச்சே…”
“ச்..அதுவும் சகிக்கமுடியாத மகாதுக்கம்,”
“விடுங்கோ…அந்த சமயத்துலதானே நீங்க காஞ்சனை கதை எழுதினேள்..அந்தக்கதையில உள்ள மனநிலை மெட்ராஸ்வாசிகள் அனுபவிச்சதுன்னு தோன்றது,”
“இருக்கலாம்… இங்க இருக்கறதுக்கு பயமா இருக்குன்னு கமலா சொல்லிக்கிட்டே இருந்தா. அதுவும் ஒரு காரணம்..”
சிதம்பரம் பேச்சை மாற்றினார்.
“அப்போ நம்ம ஆட்கள் பண்ணினது இன்னும் ரஸம் கூடின விஷயம்…இல்லியா,”என்று புன்னகைத்தார்.
“லட்சகணக்குல ஆட்கள் ஊரவிட்டு போனதால பூட்டுக்கு தட்டுப்பாடு வந்துருச்சே அதை சொல்றீங்களா,”
“இப்பவும் சிரிப்பு வருதே… திருட்டுபயக பூட்டியிருக்க வீட்டு பூட்டுகள களவாடினாளே ,”என்று சிரித்தார்.
எனக்கு இறுமல் கோர்த்துக்கொண்டது.
“பெங்களூரு டாக்டர் சொன்ன விஷயத்தை மனசிலே போட்டு அலட்டிக்காதேயும்…இன்னும் ரெண்டு மூணு டாக்டரை பாப்போம்,”
“எனக்கும் அந்த எண்ணம் தான்…”
என் பக்கத்திலிருந்த காகிதங்களைப் பார்த்தவர் எதையோ கேட்க நினைத்து நிறுத்திக்கொண்டார்.
“போன மாசம் கயிற்றரவுன்னு ஒரு கதை காதம்பரியில பிரசுரமாச்சு..”
“படிச்சேன்…”
“நாப்பது சொச்சம் கதைகள் கையில இருக்கு..அதே எண்ணிக்கையில பிரசுமாயிருக்கு. நாவல் ஒன்னு எழுதறேன். மூக்கப்பிள்ளைன்னு ஒரு நாவல் மனசில இருக்கு,”
“ஐஞ்சாவது சிறுகதை புஸ்தகத்துக்கு வேலை நடந்துச்சே…என்னாச்சு,”
“திருத்தம் பண்ணியாச்சு. முல்லை பதிப்பகத்துக்கிட்ட இருக்கு..அந்த புஸ்தகத்துக்கு ‘விபரீத ஆசை’ ன்னு தலைப்பு கூட உறுதி பண்ணியாச்சு..”
“எப்ப புஸ்தகம் போடுவாளாம்,”
“அவங்கள எதுக்கு தொந்தரவு பண்ணுவானேன். மெதுவா நடக்கட்டும். பணமுடைங்றதால இன்னும் பல இடங்களுக்கு கதைகள் கொடுத்திருக்கேன்,”
“இங்க ஒருத்தர் கோபக்காரர்.. இல்லேன்னா அதுக்கு எதிர்ப்பக்கம். கொல்லன் பட்டறையில சிவந்த இரும்பை தண்ணியில நனைப்பா அது ஞாபகத்துல வருது,” என்று சிதம்பரம் முகம் மலர்ந்தார்.
“நான் முன்கோபி…வேகமான பிறவி தான். ஆனா கமலாவுக்கும் எனக்கும் இந்த பதினாறு வருஷத்துல எந்த கைப்பும் இல்லை. நிஜத்தை சொல்லனுன்னா…தமிழ் லிட்ரேச்சர்ல நான் தவிர்க்கமுடியாதவன்ங்கிற தித்திப்பு என்மனசுல ஆழமா உண்டு..”
சிதம்பரம் வழக்கமான கேள்விகளை இழுக்கவில்லை.
“மற்றபடி வம்பு தும்பு வாழ்க்கைப்பாடெல்லாம் மத்தவங்க போல இந்த காலத்தோட விஷயங்கள்…”
“உங்களை பற்றி மத்தவா எண்ணம் வேற மாதிரி இருக்கே”
“என் எழுத்துல உள்ள கசப்பு, துவர்ப்பு, கேலி இதெல்லாம் இன்னைக்கு எழுதப்பட வேண்டியது. இன்னிக்கி எத்தனை கோடி மக்களுக்கு சிரமஜீவனம். அது யதார்த்தமா என் எழுத்தில் வருது,”
வெளியே காகங்களின் இரைச்சல். தொண்டையை செருமிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு வந்தேன்.
“காந்தி மரணத்தால நிறைய ஆட்களுக்கு தூக்கம் போச்சு. நம்பிக்கை போச்சு. மக்களோட நம்பிக்கை ..நம்பிக்கைன்னு கூட சொல்லமுடியாது ஆழமான ஒரு இடத்தில் பலத்த அடி விழுந்துருக்கு,”
“ஆனா நீங்க எழுதறது அது இல்லியே,”
சற்று நேரம் பேசாமலிருந்தேன்.
“இந்த காலத்தோட ஆதாரமான சாரம் என் கதைகளுக்கு அடியில் இருக்குன்னு மட்டும் தான் என்னால சொல்லமுடியும்..”
“நீங்க சொல்ற வரது என்னன்னு மங்கலா தெரியறது. ஒப்புக்குறேன்..முதல்ல நீங்க நல்ல டாக்டரா பாக்கனும்..” என்று சொல்லிவிட்டு சுவரில் நன்றாக சாய்ந்தமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டார். உடல்நலம் பற்றியும் இலக்கியம் பற்றியும் வெயில் இறங்கும் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றார். அவருக்கும் எத்தனையோ பாடுகள். துண்டை தோளில் போட்ட படி நிதானமாக தெருவில் இறங்கி நடந்தார். திண்ணையில் உட்கார்ந்தபடி அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அடுத்தநாளின் பின்காலை பொழுதில் திருவல்லிக்கேணி மெயின் ரஸ்தாவில் கொஞ்சம் ஜனநடமாட்டம் குறைந்திருந்தது. ஒன்னரை அணா போனால் போகிறது என்று ட்ராம் வண்டியில் ஏறிக்கொண்டேன். மவுண்ட் ரோடு ரவுண்டாவில் இறங்கி நடந்து ஏகதேசமாக தெற்குபக்கமாத் திரும்பும் ரஸ்தாவிலிருக்கும் டாக்டரிடம் பார்க்கலாம் என்ற நினைப்பு. வெயில் பொழிகிறது. இந்த வெயிலே ஆளை எரித்துவிடும். ஓயாத கை வலி. எழுதினால் மனம் ஓயும். இப்போதெல்லாம் ஓயாத நினைப்புகள்.
ஏழெட்டு வயது இருக்கும். இரவு போஜனத்தின் போது விளக்கு அணைந்து விட்டது. முற்றத்தில் நின்று அம்மா ஒரு காரியமாக பக்கத்துவீட்டு ஆச்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள். எழுந்து விளக்கை ஏற்ற எனக்கு நாண்டத்தனம். அரிசி சோறும், பருப்பு விட்ட ரசமும், முறுக்கவத்தலுமாக இருட்டிலேயே நான் போஜனத்தை முடிப்பதற்கும் அம்மா விளக்கு ஏற்றுவதற்கும் சரியாக இருந்தது.
“அட…நாண்டப்பயலே.. வெளக்கு பொருத்தாம இருட்டுல சோறு திங்கலாமாடே. இன்னிக்கு நீ தின்ன சோறு ஒனக்கானது இல்ல…”
“என் வயித்துக்குள்ளதானே இருக்கு,”என்று தலையை ஆட்டிக்கொண்டு வயிற்றை தடவினேன். அம்மா சிரித்தபடி தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
“ஒரு கதை சொல்லட்டா விருதா…”
“ம்…சொல்லு…சொல்லு,”
“சொக்கன்னு ஒருத்தன் இருந்தானாம். அவங்கம்மா தம் மகளோட மகப்பேருக்குன்னு ஊருக்கு போனா. அங்கியே மாசக்கணக்குல தங்கிட்டா. எண்ணெய பிடிச்ச கேடு… கையிருக்கு வாயிருக்கு எதுக்கு விளக்குன்னு இந்தக் கஞ்சப்பய சோறு தின்னும்போ கூட இருட்டுலயே தின்னானாம்…அவனுக்கு ராத்திரியானா எவ்வளவு தின்னாலும் பசி ஆறல. அடுத்தநாளு வேலை செய்ய முடியல. கூட்டாளி சோழியனுட்ட இந்தமாறி இருக்குதுன்னான். அவனும் அன்னிக்கு சாயங்காலமா சொக்கனோட வூட்டுக்கு வந்து அவன் என்ன பண்றான்னு பாத்துட்டு பொண்டாட்டிக்கிட்ட போய் சொன்னானாம். அடுத்த நாளு வேலை முடிஞ்சு வூட்டுக்கு போறப்ப ‘சொக்கா..வெளக்கு பொருத்தி சோறு தின்னு’ன்னு சொல்லிட்டு போயிட்டான்… இவனும் செஞ்சான்…”
கதை கேட்டுக்கொண்டே சரிந்து அம்மா மடியில் படுத்துக்கொண்டேன்.
“கொஞ்ச நேரத்துல ‘சொக்கா….சொக்கா சோறுண்டா…’ன்னு ஒரு குரலு. இவன் பயந்து வாயடைச்சு போனான். திரும்பவும்… ‘சொக்கா சொக்கா சோறுண்டா..’
இவன் வாயே திறக்கல.
‘சோழியன் வந்து கெடுத்தானே’ன்னு அந்த குரல் பாடுச்சாம். இனிமே சும்மா இருக்கக்கூடாதுன்னு வெளக்கை கையில எடுத்துக்கிட்டு வூட்டுக்குள்ற எல்லா பக்கமும் போறான். வெளிச்சத்துக்கு பயந்து அந்த பூதம் ஓடியே போச்சாம். அவனுக்கும் ராத்திரி பசி அடங்கிருச்சாம்”
“பூதத்தோட பேரு என்னம்மா..”
“இவன் வேற…இங்க மனுஷருக்கே ஒழுங்க பேரு இல்லியாம்…அதுக்கு பேரு இருட்டு பூதம்ன்னு வச்சுக்க. இருட்டுல அவன் பக்கத்துல ஒக்காந்து அவன் தட்டுல பாதி சோத்தை அது தின்னுருக்கு…” என்று கண்களை விரித்தாள். அம்மாவின் குட்டிக்கண்கள் விரிவதை பார்த்து சிரிப்பாக வந்தது.
இருட்டு பூதம் என்று மெதுவாக சொல்லிப்பார்த்தேன். எட்டுவயதில் செத்துப்போன அம்மா இந்த நான்கைந்து நாட்களாக தினமும் நினைவில் வருகிறாள்.
வைத்தியசாலையில் கூட்டமில்லை. இந்த வைத்தியனும் உருளைகளை குப்பியில் அடைத்து தந்தான். வரும் வழியில் கடையிலிருந்து வாழை மட்டையில் கட்டிக்கொண்டு வந்த ரசம் விட்ட சோற்றால் வயிற்றுப்பாடு தீர்ந்தது. முன்பு போல பசிஇம்சை இல்லை. இன்னது தான் என்று சொல்ல முடியாத களைப்பு.
இருட்டும் நேரம். சீமை எண்ணெய் விளக்கை ஏற்றி நிலைக்கு பக்கத்தில் வைத்தேன். அதன் நாற்றமும் புகையும் சாயுங்கால விருந்தாளியைப்போல இறுமலை அழைத்து வந்து விட்டுவிடும். உடலில் தெம்பு கூடி வருகிறது.
எழுது பலகையில் உள்ள தாள்களை எடுத்து சற்று நேரம் பார்த்துவிட்டு பெட்டிக்குள் வைத்தேன். மீண்டும் ஒரு ரயில் பயணத்திற்கான ஏற்பாடு. எதை எடுத்து வைப்பது. எதை விட்டுப்போவது என்று இந்தமுறை குழப்பம். இது வரை ஊருக்கு சென்ற பயணங்களில் எழுதிய காயிதங்களை சுமந்ததில்லை. மருந்து குப்பிகளை எடுத்துவைக்கும் போது ஒரு பழைய காயிதம் கண்களில்பட்டது. கமலாவிற்கு நான் எழுதியது. ஊருக்கு போகும்போது புத்தகத்தோடு வந்திருக்கும்.
கண்ணாளுக்கு,
எப்பொழுதும் நீயும், குழந்தை குஞ்சம்மாவும் தான் என்
மனசில் தோன்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
குஞ்சு என் உயிர். நீ என் உடல்…
இன்றாவது எனது கடிதம்
உனக்கு ஆறுதல் அளிக்குமாக. எனக்கு இங்கு நிம்மதி இல்லை. தந்தி எழுதுகையில் உனது
கலங்கிய கண்களும், முகமும் தான் தெரிகிறது. ஒன்றும் ஓடவில்லை. நான் என்னை விட்டு
ஓடினால் தான் எனக்கு நிம்மதி. தன்னை மறக்க மயக்க மருந்தால் அல்லது 'எழுந்திராத
தூக்கத்தால்' தான் முடியும்.இந்த நிலையில் நான் உனக்கு ஆறுதல் சொல்ல வருவது நொண்டி
இன்னும் ஒரு நொண்டியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டது போலத்தான். இருந்தாலும்
பொறுப்பு எனக்குத்தானே. அதனால் என் மனம் என்னைத் தின்றுக் கொண்டிருக்க உனக்கு
ஆறுதல் சொல்லிவிட முடியும் என ஆசைக்கொண்டு அசட்டுத்தனமாக முயற்சி செய்கிறேன். என்
முயற்சியைப் பார்த்து நானே சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணம்மா துக்கம்
எல்லை மீறிவிட்டதால்-இதற்கெல்லாம் நான் தான்,இந்தப் பாவியாகிய நான் தான் காரணம்
என்பதால், நெஞ்சு ஒரு புறம் என்னைக் குத்த ஓங்கி அழுது மனச் சுமையைத் தீர்த்துக்
கொள்ளவும் சக்தியற்று, இடமற்று, தனிப் பிணமாக, பேயாக அலைகிறேன். நான் உனக்குச்
செய்ய தவறிய கடமைகள் தினம் தினம் என் மனசை, மனச்சுமையை அதிகரிக்கிறது. என்னை நானே
தேற்றிக் கொள்கிறேன். எப்படி என்றாலோ நான் செய்த குற்றஞ்களுக்கெல்லாம் எனக்குத்
தண்டனை என்று. ஆனால் இந்த விஷயத்தில் என் தவறுகளுக்கு என் மேல் மட்டும் பலன்களைப்
போடாமல் நான் யாரை உயிருக்குயிறாய் மதிக்கிறேனோ அவள் புழுவாகத் துடிக்கும் படி
வைத்துப் பார்த்து உதவ வழி இல்லாமல் நின்று தவிக்கும்படி செய்து விட்டது. குஞ்சு
என் மனசில் குடியிருக்கிறாள். அவள் இனிமேல் தேவதையாகி என் வாழ்வின் வழிகாட்டியாக,
குருவாக, தெய்வமாக மாறிவிட்டாள்...
உனது,
....
கடிதத்தை பெட்டியில் வைத்துவிட்டு இரண்டு தலையணைகளை உயரமாக்கி படுத்தேன். சிதையில் படுத்திருப்பது போல உடல் காய்கிறது. ஆயாசம். பின் பெருமூச்சுகள். நினைப்புகள் மெல்ல மெல்ல அமிழ கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தது.
நெற்றியில் ஒரு தண்மையான கையின் ஸ்பரிசம். ஒரு சமயம் அழிந்த ஓவியம் போல எங்கோ காத தூரத்திலிருந்து அம்மா கை நீட்டி தொடுகிறாள். அவள் முகம் புகைமூட்டமாக இருக்கிறது. மூக்குத்தி மட்டுமே அம்மாவாக தெரிகிறது. எத்தனை இதமாக…அப்படியே காந்தும் கண்களை நிம்மதியாக மூடிக்கொண்டே இருக்கலாம். கண்களை திறக்க வேண்டியதில்லை. இல்லை இது ரொம்ப நெருக்கத்திலிருந்து ஒரு கை. மிக நெருங்கி மென்மையான வயிற்றை தலையில் இடித்தபடி குட்டிகுஞ்சுவின் கைகள். காதுகளை ஈரம் தொட விழித்துக்கொண்டேன்.
நடராஜனுக்கு ஒரு காயிதம் எழுத வேண்டும். பாளையங்கோட்டைக்காரன். திருநெல்வேலி ஜங்ஷன்கடைக்கு அடிக்கடி வருவான். சில நாட்கள் சுலோச்சனா முதலியார் பாலத்தில் சந்தித்து தாமிரபரணியை பார்த்துக்கொண்டே அந்தியிலிருந்து இரவுவரை இலக்கியம் பேசிக்கொண்டிப்போம். ஆறுமாதத்திற்கு மேலாக அவன் கடிதத்திற்கு பதில் எழுதவில்லை. விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
அன்பன் நடராஜனுக்கு,
நமஸ்காரங்கள்.
முதலில் இத்தனை தாமதித்து எழுவதற்கு நூறு மானசீகமாக தோப்புகரணங்கள். நிஜத்தில் ஒரு தோப்புகரணம் போடுவதைக் கூட இப்போது உடம்பு தாளாது.
ஏனோ பழைய ஞாபகங்கள். உடம்பும் ஒத்துழைப்பில்லை. திருவனந்தபுரத்தில் கமலா அவளுடைய தாயார் இல்லத்தில் இருக்கிறாளல்லவா…அங்கு செல்கிறேன். அங்கு வைத்தியம் பார்க்கலாம் என்று எழுதியிருக்கிறாள். இனியும் அவளை சோதிக்கும் எண்ணமில்லை. எது எப்படியாயினும் அவளுடன் சென்று இருப்பது என்று முடிவு செய்தாயிற்று. காலம் என்ன முடிவு செய்திருக்கிறதோ.
பத்திரிக்கை, தினசரி வேலைகளை விட்டுவிட்டேன். சினிமாவில் தொழில் அமைந்து வந்தது. அதற்குள் உடல் படுத்தி எடுக்கிறது. அப்பா சொன்னது இருக்கட்டும். இனி என் லஷியத்தின் நிலைமை… லஷியம்…ஆமாம்… லஷியம் தான். எழுத வேணும் என்ற லஷியம்.
சுலோச்சன முதலியார் பாலத்தில் நின்று கொண்டு நாம் பேசியது விளையாட்டுப்பேச்சு என்று இன்றும் நினைக்கவில்லை.
நம் ஊர்களுக்கு இடையே ஓடும் தாமிரபரணியை இணைத்து பாலம் கட்டுவதற்கு சுலோச்சன முதலியார் தன் மனைவியின் நகைகளை கொடுத்தார். சொத்துகளை விற்றார். மக்களிடம் தான் போய் நிதி வசூல் செய்வதா? என்று நினைத்திருக்கலாம். எதுவானாலும் அவருக்கென்று ஒரு பிடிப்பு. நமக்கும் இலக்கியத்தின் மீது அப்படி ஒரு ப்ரியம் அன்று இருந்தது. இதுவரை அதை காப்பாற்றி வந்துவிட்டேன். இனிமேல் எப்படியோ..
என் நினைப்பே நெல்லையப்பனுக்கு வழக்கமில்லை. அம்மை காந்திமதி எப்படி மறந்து போனாள் என்று நினைத்துக்கொள்வேன். அங்கு வந்து எத்தனை காலமாயிற்று.
இருந்துவிட்டு போகட்டும்
அன்பன்,
சொ. விருத்தாச்சலம்
நெஞ்சு கமறிக்கொண்டு வந்தது. குடலை பிடுங்கி எறிந்துவிடுவதைப் போல அடிவயிற்றோடு இழுத்துப்பிடித்து நிற்காமல் இருமல் வந்து கொண்டே இருந்தது. வயிற்றை பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தேன். இறுமல் குறைந்ததும் எழுந்து விளக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். ஓரமாக துப்பிய கோழை அடர்ந்த செம்மை நிறமாக இருந்தது. மீண்டும் நெஞ்சை கவ்வும் அந்த உணர்வு. வந்துவிடுங்கள் என்ற மன்றாட்டு. ஆமாம் அங்கு சென்றாக வேண்டும்.
படுக்கையில் மெல்ல படுத்தேன். ஜன்னல் வழியே ஆகாசம் தெரிந்தது. நேற்று சிதம்பரத்துடன் பேசியது நினைவில் வந்ததும் கண்களை மூடிக்கொண்டேன்.
‘எதையும் மெல்ல மெல்ல சிதைக்கறது காலத்தோட தர்மம். அதனால தான் அந்தப் படுக்கைக்கு சிதைன்னு பேரு. அதுக்கு மாத்தமா தன்னை நித்தியமாக்ற அமிர்தத்தை மனுஷன் ஏற்படுத்திக்கிட்டான். அந்த தாகம் தான் கதையும் பாட்டும் சிற்பமும் நாட்டியமுமா ஆகுது..ஔி வரும்போ நாம இருக்கனுங்கற அவசியமிருக்கா? என் சிருஷ்டிகள் இருந்தா போதாதா ஓய்…’
ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று முகத்தில்பட்டது. கண்களை திறந்து பார்த்தேன். சட்டமிடப்பட்ட இருட்டில் விண்மீன்கள் மின்னின.
Comments
Post a Comment