முதல் உரை

 எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் அவர்களின் புனைவுலகம் குறித்த கருத்தரங்கத்தை சிற்றில் இலக்கிய அமைப்பு மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து நடத்தியது. இதற்கான நாவல் அரங்கில் நானும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் பேசினோம். என்னுடைய முதல் உரை. என்னால் பிறர் கவனிக்கும்படி பேச முடியுமா? என்று எப்போதுமே எனக்கு ஒரு ஐயம் உண்டு. எனக்கு மற்றவர்களின் கவனத்தை மேலோட்டமாக தொட்டு திருப்பும் அளவுக்கூட குரல் வளம் இல்லை.


என் முதல் தொகுப்பு வெளியான மகிழ்ச்சியை இல்லாமல் செய்தது என்னுடைய ஏற்புரை. புத்தகம் வெளியானதை விட ஏற்புரையில் சரியாக பேசவில்லை என்பதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து திரும்பு வழி முழுக்க அதே நினைவு. அந்த ஏற்புரையை நான் இன்னும் பார்க்கவில்லை. யாருக்கும் பகிரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கேட்டார்கள்.

அதே போல கிருபா விருது வாங்கும் போதும் கிருபாவின் படைப்புலகம் குறித்து சில வரிகளே பேசினேன். 

விஷ்ணுபுரம் விழாவில் உரையாடல் அரங்கு என்பதால் சரியாக பேசினேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சுரேஸ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் நான்கையும் வாசித்து இரண்டுவாரங்களுக்கு முன்பே கட்டுரை எழுதியாயிற்று. குறிப்புகள் எடுத்து வைத்து சில முறை சொல்லிப்பார்த்தேன். இயல்பாகவே பேசமுடிந்தது. சில முறை சொல்லிப்பார்த்ததில் முக்கியமான பகுதிகளை [ஷார்ப்பான] கண்டுகொள்ள முடிந்தது.

சின்னச் சின்ன மேடை அனுபவங்களை வைத்து என் பலவீனம் என்ன என்று புரிந்து கொள்ள முடிந்தது. மிக மிக அடிப்படையான ஒன்று....நான் சரியாக உணவு உண்ணவில்லை என்பது தான் அது. இதை சரி செய்தால் பத்து நிமிடம் சிரமமில்லாமல் பேசலாம். நான் நினைத்ததை சொல்லிவிடலாம் என்று தோன்றியது.

அன்று காலை உணவு கல்லூரியில் ஏற்பாடாகியிருந்தது. நிவேதாவின் கைப்பையில் ஒரு சிறிய ஜூஸ் பாட்டில் வைத்திருந்தாள். காலை உணவு உண்ணும் போது எழுத்தாளர் கலைச்செல்வி வலது பக்கம் அமர்ந்திருந்தார். எதிரே பரபரவென்றிருந்த எழுத்தாளர் லாவண்யா  என் தங்கையிடம் 'சாப்பாடு அதிகம்ப்பா' என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என் கவனம் முழுவதும் முன்னால் இருந்த தட்டில் இருந்தது. வைத்திருக்கும் உணவை மீதம் வைக்காமல் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைத்தபடி தேவிக்கு முதல் பிடி உணவை எடுத்து வைத்தப்பின் திரும்பினால் விக்னேஷ் ஹரிஹரன் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்[ன்].

 சாப்பிட்டு முடிக்கும் வரை இந்தப் பயலை [இது திட்டுவது அல்ல. கி.ரா சொல்வாரே அந்த மாதிரி] திரும்பிப்பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். 

பொங்கல் சாப்பிடும் போது எழுத்தாளர் சிவப்ரசாத் வந்தார். என் வலப்பக்கம் அமர்ந்தவர்....'ஒரு காஃபி மட்டும்' என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினார். கமலதேவி என்றதும் புன்னகைத்து ," சிவப்ராத்ங்க...சேலம். சத்திரத்துல இறங்கினதும் தோசை சாப்பிட்டேன்,"என்று பேசத்தொடங்கினார். என் லட்சியத்தை முடித்து திரும்பிப்பார்த்தால் கேன்டீனில் விக்னேஷ், லாவண்யா, கலைச்செல்வி தவிர மற்றவர்களை காணோம். இதுதான் சமயம் என்று மாத்திரைகளை விழுங்கிவிட்டு அரங்கிற்கு வந்தோம். வந்ததும் விழா தொடங்கி வரவேற்புரை வாழ்த்துரைகள் முடிந்ததும் அந்தப்பக்கமிருந்து நிவேதா 'ஜூஸ் வேணுமா' என்று முறைத்தாள். அவள் எத்தனை முறை என்னை அழைத்தாள் என்று கவனிக்கவில்லை. வேண்டாம் என்று சிரித்ததும் திரும்பிக்கொண்டாள். அவள் லாவண்யாவுடன் இணைந்து விருந்தினர்களுக்கு அளிக்க வேண்டிய புத்தகங்களை கவர்களில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். அதற்குள் லாவண்யாவை அக்கா அக்கா என்று அழைத்து நெருங்கியிருந்தாள். இருவரும் சேர்ந்தே இருந்தார்கள். முதல் நாளே சத்திரத்தில் லாவண்யா அவளுக்கு மல்லிகைப் பூ ஒரு முழம் வாங்கிக்கொடுத்திருந்தார்.

பூ வாங்கும் முன் என்னை திரும்பி பார்த்த லாவண்யாவிடம் ' ஸ்கூல் படிக்கையிலருந்தே கமலா பூ பறிக்காது' என்று வழக்கம் போல புதிதாக சந்திக்கும் பெண்களிடம் சொல்லும் வழக்கத்தில் சொன்னாள்.

'அவங்க எப்படியோ போகட்டும்...நீங்க வாங்க ' என்று அவளை பூக்கடைக்கு இழுக்காத குறையாக அழைத்து சென்றார். அடுத்த நாளிற்குள் அவளை 'நீ வாப்பா' என்று அழைக்கத்தொடங்கியிருந்தார்.

கல்லூரி உணவகத்திலிருந்து திரும்பும்போதும் உணவக மேசையில் தாளை வைத்து விக்னேஷ் எதோ எழுதிக்கொண்டிருந்தார். 

வரலையா என்றேன்..வரேன் போங்க என்றார். முன்னமே 'நீ என்ன மேடம்ன்னு சொல்ற.. அக்கான்னு கூப்பிடுன்னு சொல்லியிருக்கேன்ல' என்று ஒரு குட்டி சண்டை போட்டிருந்தேன். [ மேடைகளில் நல்லா பேசறப்பையன்...]

சட்டென்று திடுக்கிட்டு மறந்ததை நினைத்து கொண்டது போல அரங்கில் இடது புறம் அமர்ந்திருந்த ரம்யா 'பேசிடுவீங்கல்ல..."என்றார்.

'பேசிடுவேன்' என்றேன். 

'ஆமாமா விஷ்ணுபுரம் விழாவிலேயே பாத்தேன்," என்று அவரே அவரை சமாதானப்படுத்திக் கொண்டார்.


இலக்கியத்தில் சுனிலின் நட்பு தற்செயலான தொடர்ச்சியானது. என் முதல் தொகுப்பிற்கு யாரிடம் முன்னுரை கேட்கலாம் என்று பதிப்பகத்தாருடன் பேசும் போது, அப்போது யுவபுரஸ்கார் விருது பெற்றிருந்த,பேசும் பூனை என்ற குறுநாவலை எழுதியிருந்த அந்த எழுத்தாளரிடம் கேட்கலாம் என்று சொன்னேன். 

நான் புரவி இதழிற்காக சில முக்கியமான நேர்காணல்களை செய்துள்ளேன். கொரானா முதல் அலையின் போது 'எழுத்தாளர்களை நேர்காணல் செய்யறீங்களா? 'என்று புரவிஆசிரியர்கள் கேட்ட போது எனக்கு சுனில் கிருஷ்ணனிடம் கேட்கலாம் என்று தோன்றியது. 

அவரிடம் நேரடியாகவே 'இது தான் என் முதல் நேர்காணல்...உங்களை நேர்காணல் செய்வது எனக்கு பதட்டமில்லாமல் இருக்கும்' என்றதும் அவர் சரி என்றார்.

அவரிடம் புகைப்படம் வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. கொரானா ஊரடங்கு காலகட்டம் அது. இணையத்தில் கிடைக்கும் படங்களை தேடினோம். இறுதியாக வீட்டில் அலைபேசியில் சில படங்களை எடுத்துத்தரும் படி கேட்டேன். 

"போட்டாவுக்கு போஸ் கொடுக்கறதல்லாம் ரொம்ப கஸ்ட்டம் " என்றார்.

'எனக்கும் வரவே வராது...ஆனாலும் யோசிச்சு பாருங்க நீங்களாச்சும் கல்யாணத்துல எத்தனை போஸ் கொடுத்திருப்பீங்க. நானெல்லாம் அந்த அனுபவம் கூட இல்லாத ஆளு'என்றேன்.

சிரிப்பு பொம்மை பதிலிற்குப்பிறகு

'ஆனா என்ன பண்றது ...இரண்டு படம் மட்டும்' என்றேன். அடுத்தநாள்அவர் மனைவி எடுத்துக்கொடுத்த படங்களை அனுப்பினார்.

முதல் தொகுப்பு முதல் நேர்காணலிற்கு பிறகு முதல் உரை. 


அருகில் இருப்பவர்கள் தங்களை எளிமையாக வைத்துக்கொள்ளும் போது நமக்கும் ஒரு வசதியான சூழல் அமைகிறது.

பேசியப்பின் எழுத்தாளர் கலைச்செல்வியும் லாவண்யாவும் தலையாட்டினார்கள். 

ப்ரதிப் கென்னடி பேசிவிட்டு வந்து 'க்கா...இதுதான் முதல் முறை பேசறேன்...பரவாயில்லையா' என்றார். எனக்கு முன் அவர் மனைவி 'நல்லா பேசின...' என்று தைரியம் சொன்னார். 

விழா முடிந்து வெளியே வந்து நின்றபோது பிரபாகர் , 'சூடாமணியை முக்கியபாத்திரமா வச்சு நீங்க எழுதின வெளிச்சம் கதை வாசிச்சேன்' என்றார். இந்தவிழாவில் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

விழாமுடிந்து திருச்சியிலிருந்து எங்கள் ஊருக்கு செல்லும் கோபால் என்ற பேருந்தில் அமர்ந்திருந்தோம். எங்கள் ஊர் தான் கடைசி நிறுத்தம். கோட்டப்பாளையத்தில் தெருவெங்கும் மக்தலேனால் கோவில் திருவிழாவிற்கு கடைகள் போடப்பட்டிருந்தன. பேருந்து ஊர்ந்து சென்றது. 

'இதான் லாஸ்ட் ட்ரிப்..வடக்கு விசுவை...அக்ரஹாரம்...மேட்டூருக்கு நாளைக்கு பஸ் வராது...நாளைக்கு மறுநாள் இந்த லாஸ்ட் ட்ரிப் தான் வரும்...' என்று நடத்துனர் சொன்னார்.

'ஒரு சாக்கு கிடைச்சா எங்க ஊரை கட் பண்ணிவிட்ருவீங்களே' என்று ஒரு கல்லூரி பெண் சொன்னாள்.

'ஆமா...உள்காட்டுல ஊர வச்சுக்கிட்டு..நாங்க வராத மாதிரி பேசுவீங்க ' என்றபடி பின்பக்கம் கவனிக்க சென்றார்.

விழா புகைப்படங்களை நண்பர்களின் ஸ்டேட்டஸில் பார்த்ததும் லாவண்யாவிடம் புகைப்படங்கள் அனுப்புமாறு கேட்டேன். 


நாவல்கள் பற்றி நினைத்த முக்கியமான விஷயங்களை பேசிவிட்டேன் என்று மனம் நம்பியது. சாம்பல் பூத்த முழு நிலா நெல் விளைந்த வயல்வெளிகளுக்கு மேலே உடன் வந்து கொண்டிருந்தது. வண்ணதாசனின் 'நிலா பார்த்தல்' மனதில் வந்ததும் மனம் உற்சாகமானது. அடுத்தநாள் முதன்முதலாக தயக்கம் இன்றி என் பேச்சை பகிர்ந்தேன்.

https://youtu.be/grOLHeId9Ig?si=MTsNXUTIJzBn28mo



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி