[ எழுத்தாளர் அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபே என்ற இரு நாவல்களையும் எழுத்தாளர் தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலையும் முன்வைத்து…] இருகரைகளின் கதைகள் சமூகமாக ஓரிடத்தில் நிலைகொள்வதும் இடம்பெயர்வதும் சமூகமாக தன்னை திரட்டிக்கொள்ளும் மானுடத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. நிறைந்த கலம் வழிந்து வெளியறுவதைப்போல அல்லது ஓட்டை விழுந்த கலத்திலிருந்து வெளியேறும் நீரைப்போல ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் எத்தனிப்பும் மறுபக்கம் இடப்பெயர்வும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே பொருள்வயின் பிரிதல் உள்ளது. சிலப்பதிகாரத்தில் தன் பொருளை இழந்த கோவலன் கண்ணகியின் சிலம்பை ஆதாரமாகக்கொண்டு புதுநம்பிக்கையுடன் மதுரைக்கு பொருள் ஈட்ட செல்கிறான். அப்படி வாழ்க்கை பற்றிய கனவுடன் இடம்பெயர்பவர்களை இன்று வரை காண்கிறோம். பெரும்பாலும் பொருள்ஈட்டுதல் நிமித்தம் இடப்பெயர்வு நடக்கிறது. பின்பு போர்சூழல்,பஞ்சங்களில் மக்கள் கூட்டமாக இடம்பெயர்ந்தார்கள். அவமானங்கள் மற்றும் சூழல் வாழ்க்கைக்கு தடையாகும் பட்சத்தில் தனிமனிதன் ...